விடியும் நாளொன்றும்
விரைவாய் சுழன்றாலும்
கண்விழித்த வேளைமுதல
கண்ணயறும் வேளைவரை
கைபிடித்து நடத்திடுமே
கவியரசர் வரிகள்தான்..!
மாதிரிக்கு சில வரிகள்...
மதிப்பில் நவரத்தினங்கள்...!
மயக்கமா கலக்கமா என்றும்..
மனதிலே குழப்பமா என்றும்..
வாழ்க்கையில் நடுக்கமா என்றும்..
எழும் வினாக்கள் அத்தனைக்கும்
விடை கொடுக்கும் அவர் வரிகள்..!
மனித ஜாதியில் வரும் துயரம்
யாவுமே மனதினால் வந்த நோயடா...
ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாத நிலையினிலே... என்று
வாழ்வின் நிலை சொல்லும் வரிகள்...!
ஆசை, கோபம் ,களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம் என்றும்,
அன்பு, நன்றி,கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம் என்றும்,
மிருகம் தெய்வம் என மனிதனை
வகுத்துச் சொன்ன வரிகள் ...!
நிலை மாறினால் குணம் மாறுவான்...!
பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்...!
தினம் சாதியும் பேதமும் கூறுவான்...!
அது வேதம் விதி என்றோதுவான்... என
மனிதன் மாறிவிட்டதை சொன்ன வரிகள்...!
அது தேடி இது தேடி அலைகின்றாய்...
எது வந்து சேர்ந்தாலும் தவிக்கின்றாய்...
வாழ்வில் அவரவர்க்கு வாய்த்த இடம்
அவன் போட்ட பிச்சை, அறியாத
மானிடர்க்கு அக்கரையில் இச்சை...!
அக்கரைக்கு இக்கரை பச்சை யென
இருகரை அலையும் மனதின் வரிகள்...!
ஆயிரம் நினைவாகி ஆனந்தக் கனவாகி,
காரியம் தவறானால் கண்களில் நீராகி,
ஆசையில் கல்லாகி அச்சத்தில் மெழுகாகி,
யார் முகம் பார்த்தாலும் ஐயத்தில் தவித்து...
மௌனத்தில் விளையாடும் மனசாட்சிக்கு
மென்மையாய் வடிவம் கொடுத்த வரிகள்...!
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி என்றும்...
பேசமறந்து சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி என்றும்...
காதல் சிறகை காற்றினில் விரித்து
பறக்கும் மனைவியின் காதல் வரிகள்...!
காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே
காலமிதை தவற விட்டால் தூக்கமில்லை
மகளே...கண்ணே கலைமானே...என்று
கடைசி தாலாட்டில், 'உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே' என்றே
மறவாமல் நெஞ்சில் நிற்கும் வரிகள்...!
மண்ணுயிர்விட்டு அவனுடல் மறைந்தாலும்
மறையாதிருக்கும் அவன் மந்திரங்கள் மட்டும்.!
நிரந்தரமானவன் அவன் அழிவதில்லை..
எந்த நிலையிலும் அவனுக்கு மரணமில்லை...!
பாலா
கோவை
Leave a comment
Upload