தன் குடியை காக்க உயிர் தியாகம் செய்தவன் சேயோன். தன் குடியை தழைக்க வைத்தவள் கொற்றவை. தன் வாழ்வாதாரமே தனக்கு கடவுளானது. தன் வாழ்வாதாரத்தை காத்தவனே தலைவன். அந்த தலைவனே பின்னாளில் தெய்வம் ஆகிறான். தன் சுற்றுச்சூழலின் முக்கிய வாழ்வாதார அம்சங்களை பலவிதமான நாட்டார் தெய்வங்களாக பல விதமான வழிபாட்டு முறைகளோடு இணைத்துக் கொள்கிறான் இந்த மண்ணின் மைந்தன்.
அப்படிப்பட்ட ஒரு நாட்டுப்புறக்கலை தான் தெய்வ கொலா பூத கொலா. துளு நாட்டு மக்களின் நாட்டார் தெய்வ வழிபாட்டு முறை ஆட்டம். காந்தாரா திரைப்படம் வெளிவந்து இப்படி துளு நாட்டின் மண்ணின் மைந்தர்களின் கலாச்சாரத்தை உலகிற்கே எடுத்துச் சொல்லியது பெருமகிழ்ச்சி.
ரிஷப் ஷெட்டியின் காந்தாரா இந்த ஆட்டம் ஆடிய 60 வயது தாண்டிய நாட்டுப்புற கலைஞர்களுக்கு மாதம் ரூபாய் 2000 ஓய்வூதியம் பெற்று தந்துள்ளது மகிழ்ச்சி. ரிஷப் ஷெட்டி நடித்த சிவா கதாபாத்திரத்திற்கும் கிஷோர் நடித்த வனத்துறை அதிகாரி முரளி கதாபாத்திரத்துக்கும் நடக்கும் போட்டி ஏற்படும் மோதல்கள் விறுவிறுப்பை தூண்டியது. சத்தியமங்கலம் வீரப்பன் பற்றி வரும் வானொலி அறிவிப்பு காட்சி, நான் பார்த்த தமிழ் டப்பிங் திரையரங்கத்தில் விசில் சத்தம் பட்டாசாய் வெடித்தது. காடு மற்றும் பழங்குடியினரின் வாழ்வாதாரம் குறித்த அரசாங்க கொள்கைகள் முறையாக இருந்தாலும் அதை நடுவே இருந்து சுயநல அரசியல் செய்யும் அரசியல்வாதியை போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது அச்சத குமார் நடித்த தேவேந்திரர் கதாபாத்திரம்.
தமிழ் மண்ணின் தெருக்கூத்து கற்று ஆட என் வாழ்வில் இரண்டு முறை வாய்ப்பு கிடைத்து சரியாக பயன்படுத்தினேன். முகத்தில் செந்தூரம் அணிந்து ஆடும் பொழுது நம் முகபாவனைகளும் அதனால் பார்வையாளர்கள் மனதில் ஏற்படும் உளவியல் தாக்கங்களும் வர்ணிக்க வார்த்தைகள் அற்றது.இந்த முகத்தில் பூசப்படும் நிறங்களும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு இருக்கும் இந்த நிறங்கள் பற்றியும் தெருக்கூத்தில் பயன்படுத்தப்படும் தமிழைப் பற்றியும் ஆய்வுகள் பல இன்று நடந்து கொண்டிருக்கின்றன.
அர்ஜுனன் வேஷம் கட்டி அவரை அர்ஜுனனாகவே நம்பி காதல் செய்த பெண்கள் இருந்த காலம் கடந்து இன்று தெருக்கூத்து என்றால் என்ன என்று கேட்கும் பெண்கள் வாழும் காலம் ஆகிவிட்டது.
காந்தார திரைப்படம் எப்படி தெய்வ கொலா ஆட்டத்தை மையப்படுத்தி வந்ததோ அதைப் போலவே தமிழ்நாட்டில் தெருக்கூத்தை மையமாக வைத்து ஒரு நல்ல தமிழ் திரைப்படம் வரும் என்று நம்புகிறேன் அதில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் இந்த நாடக நடிகனுக்கு வேறு என்ன வேண்டும்!
- டாக்டர்.நந்தகுமார்
Leave a comment
Upload