பாடறிவோம் படிப்பறிவோம் எனும் ஒரு இசை குழுமம், 2020 ம் ஆண்டு, இசைப் பிரியர்களால் துவங்கப்பட்ட நிறுவனம். பெருந்தொற்று காலத்தில் ஆன்லைனில் இசை கற்றுத் தரும் அமைப்பாகத் துவங்கி இன்று பாட வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் அனைவரையும் இணைக்கும் "கடவுள் அமைத்த மேடையாக " விளங்குகிறது.
இசை மூலம் உலக மக்களை மகிழ்விக்க வேண்டும் என்ற இலக்குடன் பயணிக்கும் இவர்கள், அக்டோபர் 20 மற்றும் 21 ம் தேதிகளில், சென்னை விமான நிலையத்தில், சிங்-அ- தான் என்ற 26 மணி நேரம் தொடர்ந்து பாட கூடிய நிகழ்ச்சியை நடத்தினர். இதில் அவர்களின் உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பின்னணி பாடகர்கள் கலந்து கொண்டனர். மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காகவும், அதைக் கண்டறியும் கருவிகளை வாங்குவதற்குமான நிதி திரட்டும் ஒரு நிறுவனமான இந்தியா டர்ன்ஸ் பிங்க் உடன் இணைந்து நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
விமான பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றது இந்நிகழ்வு. இதன் நிறுவனர்களான நாகு பாய் என்கிற நாகேஸ்வரையும் மற்றும் கௌஷிக்கையும் "சிங் - அ- தான் " பற்றிக்கேட்டபோது, நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதையும் , அடுத்த முறை 100 மணி நேரம் நிகழ்த்தி கின்னஸ் சாதனை படைக்க விருப்புவதாகவும் சொன்னார்கள். அவர்கள் இலட்சியம் நிறைவேற விகடகவியின் சார்பில் வாழ்த்தி விடைபெற்றோம்.
www.learn2learn.in எனும் இணைய தளத்தில் இவர்களைப் பற்றி மேலும் அறிய முடியும்.
Leave a comment
Upload