போனால் போகட்டும் போடா..
எத்தனையோ இன்ப துன்பங்கள்? எண்ணிப் பார்க்க முடியுமே தவிர எண்ணிக்கையைப் பார்க்க முடிவதில்லை! கடலில் அலைகள் ஒன்றன்பின் ஒன்றாய் அணிவகுத்து வருவதைப்போல.. மனித வாழ்விலும் இன்ப துன்பங்கள் வருவதும் போவதுமாய் இருக்கின்றன. இதில் இன்பத்தை ஏற்கும்மனம் துன்பத்தை ஏற்க விரும்புவதில்லை. எல்லோரும் ஞானிகளா என்ன? மேலும் துயரம் என்பது மனதில் காயங்களை ஏற்படுத்திவிடுகிறது. ஆறாத ரணங்களும் அவ்வப்போது ஏற்பட்டுவிடுவதும் உண்டு. இப்படி வாழ்க்கையில் தாங்கவொண்ணாத் துன்பத்தினால் மனம் தத்தளிக்கும்போது பாடலொன்று வேண்டுமென்று பாலும் பழமும் திரைப்படத்திற்காக கதாநாயகனுக்காக கவிஞர் கண்ணதாசன் எழுத முனைகிறார். மெல்லிசை மன்னர்கள் இசையமைக்க பாடலின் பல்லவி வருகிறது..
போனால் போகட்டும் போடா..
விஸ்வநாதன் அவர்கள் பல்லவியை நிராகரிக்கிறார். லட்சக்கணக்காக மக்கள் அன்றாடம் கேட்கும் திரைப்படப் பாடலில் இப்படியெல்லாம் மரியாதை குறைவான வார்த்தைகள் வேண்டாம் என வலியுறுத்துகிறார். கவிஞரும் விஸ்வநாதனிடம் ஏம்பா.. விஜயவாடா என்றிருக்கிறது. அதைக்கூட பாடலில் பயன்படுத்தினால் விஜயவாங்க என்றா பயன்படுத்துவீர்கள்? கவிஞர், பல்லவியோ, சரணமோ எப்படி வேண்டுமென்றாலும் எத்தனை முறை வேண்டுமென்றாலும் உடனே வகைவகையாய் தரக்கூடிய கவி வள்ளல் அதே பல்லவிதான் கனப்பொருத்தம் என்கிறார் பாடல் உருவாக்கம் அன்று அதோடு முடிகிறது.
அன்றைய மாலை மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவரும் கடற்கரை மணில் அமர்ந்தபடி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது திரு.ராமமூர்த்தி அவர்கள் கவிஞர் எழுதிய பல்லவி பற்றி குறிப்பிட்டு.. ஒரு மனிதன் துயரங்களால் உந்தப்பட்டு துடிக்கும் நிலையில் உச்சமாய் வருகின்ற வார்த்தைப் பிரகடனங்கள்.. இப்படித்தான் இருக்கும் என விளக்கம் தர.. அப்படியென்றால், இசையமைப்பில் ஏதேனும் புதிய யுக்தியைக் கையாண்டு.. இப்பாடலை உருவாக்க வேண்டும் என இருவரும் முடிவு செய்கின்றனர்.
அன்றிரவு முழுவதும் விழித்திருந்து ஏதேதோ இசைக் கோர்வையைத் தேடி.. இறுதியாக ரஷ்ய இசையில்.. இறுதி ஊர்வலத்தின்போது.. வாசிக்கப்படும் பின்னணியிசை இப்பாடலின் பல்லவியோடு இணைக்க மெல்லிசை மன்னர் தேர்ந்தெடுக்கிறார். அந்த அடிப்படையில், இப்பாடலின் துவக்கத்தில் இடம்பெறும் அந்த இசையைக் கேளுங்கள். எல்.ஆர். ஈஸ்வரியின் குரலில் ஒரு ஹம்மிங்குடன் ஒரு PATHO song வரிசையில்.. உருவாக்கப்பட்ட தரமான.. மறக்க முடியாத பாடலாக போனால் போகட்டும் போடா உருவானது.
கவியரசு கண்ணதாசன் எழுதிய இருந்துபாடிய இரங்கற்பாவிலும் இடம்பிடித்த பாட்டு போனால் போகட்டும் போடா மட்டும்தான்!
போனால் போகட்டும் போடா; இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா.
ஓஹோஹோ … ஓஹோஹோ
வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது!
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது?
வாழ்க்கை என்பது வியாபாரம்; வரும்
ஜனனம் என்பது வரவாகும்; அதில்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா.
இரவல் தந்தவன் கேட்கின்றான் ; அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது; இது
கோர்ட்டுக்கு போனால் ஜெயிக்காது; அந்த
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா!
ஓஹோஹோ ஓஹோஹோ
எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருத்துவம் கண்டேனா?
இருந்தால் அவளைத் தன்னந் தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா?
நமக்கும் மேலே ஒருவனடா – அவன்
நாலும் தெரிந்த தலைவனடா! –தினம்
நாடகமாடும் கலைஞனடா!
போனால் போகட்டும் போடா!
Leave a comment
Upload