"உன்னைக் கண்டு நான் ஆட ,
என்னைக் கண்டு நீயாட,
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி"
நாம் வாசலருகே வந்து விட்டது.
பண்டிகை காலத்துக்குக்கே உரிய பரபரப்பும், வனப்பும் எங்கும் காண முடிகிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை இந்த திருவிழா காலத்தை மகிழ்ச்சியுடன் எதிர் பார்த்து காத்திருக்கின்றனர். வருடம் முழுவதும் நாம் எதிர் கொள்ளும் துன்பங்களை, கடின நேரங்களை விழாக் காலங்கள் மறக்க வைக்கின்றன, மனதில் புத்துணர்ச்சியையும் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையையும் ஊட்டுகின்றன.
ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் நிரம்பி வழிகின்றன. பிளிப் கார்ட்டும், அமேசானும் இன்ன பிற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் இளைஞர்களைக் கவர்ந்திழுத்து கோடிகளில் குவிக்கின்றன. தொலைக்காட்சியைதிருப்பினால் தள்ளுபடிகள், பரிசுமழை என்று விளம்பரங்கள் காதைத் துளைக்கின்றன. எத்தனை ஜிஎஸ்டிகள் போட்டால் என்ன, எதை நாம் வாங்காமல் விட முடியும்? இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பண்டிகைகள் பெரிதும் பங்களிப்பதை நாம் மறுக்க முடியாது
பண்டிகைகள் பெண்களுக்காகவே ஏற்பட்டவை போல, பெண்களின் பங்களிப்பு இந்நாட்களில் முழுமையாக இருக்கும். அவர்களின் கைவண்ணத்தில் வீடுகள் மிளிரும், அடுக்களைகள் மணக்கும், வாசற்புறங்களில் வண்ணக் கோலங்கள் பளிச்சிடும், பூஜை அறைகள் தெய்வீக அழகுடன் மனதைக் கொள்ளை கொள்ளும் .பெண்கள் தம் வீடுகளை மட்டுமல்ல தம்மையும் பிரத்தியேகமாக அலங்கரித்துக் கொள்ள முனைப்புடன் இருப்பார்கள். புது சேலையும், சேலைக்குப் பொருத்தமாக டிசைனர் ஜாக்கெட்டும் உடுத்திக் கொண்டு வீட்டில் மகிழ்ச்சியுடன் வளைய வருவதைக் காண முடியும். புதுப்படவையில் செல்ஃபீ எடுத்து முகநூல், வாட்சப், இன்ஸ்ட்டா கிராமில் போடுவது வழக்கமான சங்கதி.
பெண்கள் எப்போதும் அந்தந்த காலத்துக்கான பேஷனை பின்பற்றி தம் உடைகளைத் தேர்ந்தெடுத்து மகிழ்கிறார்கள். "Women express themselves in many ways" என்பார்கள். அவற்றுள் ஒன்று அவர் அணியும் உடைகள், குறிப்பாக சேலைகள். ஆயிரம் ரூபாய்க்கு சேலை வாங்கி அதற்கு பொருத்தமாக 2000 ரூபாய் செலவு செய்து, வேலைப்பாடுகள் அமைந்த பிளவுசை தைத்து அணிந்து தனித்துவம் காட்டுகிறார்கள்.
எம்பிராய்டரி செய்தது , கற்கள் பதித்தது, கண்ணாடி பதித்தது என்று அழகழகான வேலைப்பாடுகளுடன் குஞ்சங்கள் ஊசலாட ட்ரெண்டியாக டிசைனர் பிளவுஸ்களை தைத்து அணிந்துக் கொள்ள பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். சில ஆண்டுகள் முன்பு வரை கல்யாணத்துக்கு மட்டும் இம்மாதிரி வேலைப்பாடு ஜாக்கெட்டுகளை கல்யாணப் பெண்கள் தைத்து உடுத்தினர். ஆனால் இப்போது சாதாரணமாக எல்லாரும், எல்லா விசேஷங்களுக்கும் இம்மாதிரி பிளவுஸ்களையே தைக்கிறார்கள்.
குஷ்பு நடத்திய ஜாக்பாட் நிகழ்ச்சியில் அவர் அணிந்து வந்த ஜாக்கெட்டுகள் இந்த புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். அவ்வாறே ஜோதிகா பல படங்களில் எம்ப்ராய்டரி சேலைகளை அணிந்து அவற்றின் மேல் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தினார் .
பெண்களுக்கென டிசைனர் பிளவுஸ் உலகில் தனக்கென ஒரு இடம் பதித்துக் கொண்டிருக்கும் திருமதி. ரேவதி பாஸ்கரை தீபாவளி சிறப்பிதழுக்காக நேர்க்காணல் செய்தோம் .
அதற்கு முன் அவரைப் பற்றி ..
ரேவதி பாஸ்கர் வேலூரில் பொற்கோவிலுக்கு செல்லும் வழியில் 'ரேபாஸ்' என்ற பெயரில் டிசைனர் பிளவுஸ்கள், குழந்தைகளுக்கான ஆடைகள் தைக்கும் நிறுவனத்தை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக நடத்தி வரும் தொழிலதிபர். பொறியியலும், கணினியும் பயின்றவர். குடும்பச்சூழல் காரணமாக கல்வி சார்ந்த வேலைக்குச் செல்ல இயலவில்லை.
முதலில் சிறிய அளவில் வீட்டிலேயே சேலைகள் விற்கத் தொடங்கினார் . தையல், எம்ப்ராயடரி வகுப்புகள் சேர்ந்து, பயிற்சிகள் பெற்று ஜாக்கெட்டுகள் தைக்கும் டெய்லரிங் யூனிட் ஆரம்பிக்க, இவரது கைவண்ணம் மற்றும் வேலைப்பாடுகளின் தரம் பார்த்து வாடிக்கையாளர்கள் குவிந்தனர். இன்று 'ரேபாஸ்' பெண்கள் பெருமையுடன் உச்சரிக்கும் பெயரானது. கணவர் பாஸ்கர் காவல் துறை அதிகாரி. பவித்ரா , அம்ரிதா என்னும் இரு இளம் தேவதைகளின் அன்பான அம்மா ரேவதி .
இனி ஓவர் டு ரேவதி ..
" ரேபாஸ் பற்றி சொல்லுங்கள்,மேடம் " என்றோம்
"எங்க வீட்டின் மேல் மாடியில் 1800 சதுர அடி பரப்பில் அமைத்துள்ளோம். 7 எம்ப்ராய்டரி செய்பவர்கள், இரண்டு தையற் கலைஞர்கள், உதவியாளர்கள் வேலையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். நீண்ட நாட்களாக வரும் பெண் வாடிக்கையாளர்களே அதிகம் . நான் அதிக விளம்பரம் செய்வதில்லை. எங்கள் வேலைப்பாடுகளே வாய் வழி விளம்பரம் " என்கிறார் ரேவதி .
"என்னென்ன விதமான வேலைப்பாடுகள் செய்கிறீர்கள்? எவ்வளவு பணம் நிர்ணயிக்கிறீர்கள்?" என்ற போது விரிவாக பதில் கூறினார். "ஆரி எனப்படும் நூல் வேலை முதல், கண்ணாடி வேலை, ஜர்தோசி, குந்தன்,ஜெர்கான், ஸ்வரோஸ்கி போன்ற கல் வேலைகள் எல்லாமே செய்து தருகிறோம். தாம் உடுத்தும் ஜாக்கெட்டுகள் 'ரிச்' ஆக, எடுப்பாக இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். அவர்களைத் திருப்தி படுத்த முழுமையாய் உழைக்கிறோம். எல்லாமே கைத்திறனைக் காட்டும் கை வேலைகள் தாம். உபயோகிக்கும் பொருட்கள், வேலைப்பாடு, அதை செய்ய எடுக்கும் நேரம் இவற்றுக்கு தக்கவாறு தையற் கூலி நிர்ணயிக்கப்படுகிறது. குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாயில் ஆரம்பிக்கிறது. விசேடங்களுக்கு 12000 -13000 வரை கூலி தந்து தைத்துக் கொள்பவரும் உண்டு " என்றார் .
“இவ்வளவு விலை கொடுத்து தைக்கும் இந்த ஜாக்கெட்டுகளை எப்படி பத்திரமாக பாதுகாப்பது ?” என்ற கேள்விக்கு 'மடித்து வைக்கும் போது வேலைப்பாடுகள் உட்புறமாக மடித்து ஒரு துணி கவரில் வைக்க வேண்டும். அழுக்கானால் பேபி ஷாம்பு போன்ற மென்மையான பொருளில் அலசி, நிழலில் உலர்த்த வேண்டும். கைக்கு அடியில் வியர்க்கும் போது அந்த இடம் மட்டும் வெளுத்துப் போகும். அப்போது ஸ்வெட் பேட் (Sweat pad) அணிந்து கொள்ளலாம், இப்படி செய்தால் நீண்ட நாட்களுக்கு உழைக்கும் " என்கிறார் .
உடல் பருமனானால், மீண்டும் இந்த ஜாக்கெட்டுகளைப் பிரித்து பெரிதாக்கலாமாம், அதற்கு ஏற்றவாறு நேர் தையல்கள் போடப்படுகிறது என்று கூடுதல் தகவல் தந்தார். புதிதாக கம்ப்யூட்டரைஸ்ட் எம்ப்ராய்டரி செய்யும் வேலை 'ரேபாசில்' தொடங்கப்பட உள்ளது. டிசைனை ப்ரோகிராம் எழுதி தந்து விட்டால், அக்கருவி தானே துணியில் எம்ப்ராயடரி செய்து விடும். சூப்பர் இல்லே !
தான் தொடங்கி நடத்தும் பணியைப் பற்றிய உயர்வான எண்ணமும், பெருமிதமும் கொண்டு பேசுகிறார் ரேவதி. அரசர் காலத்து வேலைப்பாடுகள் தொடங்கி எம்ப்ராய்டரியின் சரித்திரத்தைப் பற்றி விரிவாக விவாதிக்கிறார். நட்டம் ஏற்படாத தொழில், ரிடையர் ஆக வேண்டி இருக்காத துறை என்றும் உயர்வாக பேசுகிறார். தொழிலாளர்களை மரியாதையுடனும், அனுசரணையுடனும் நடத்துவது பற்றி அவர் கூறும் கருத்துக்கள் சிறந்த மேலாண்மைக்கு உதாரணம்.
அவரது சிரித்த முகமும், இனிமையான பேச்சும் வாடிக்கையாளரின் தேவைகளை அறிந்து, அவர்களுக்கு ஏற்ற விதத்தில் தைத்துத் தருவதும் எந்நேரத்திலும், எதற்காகவும் விட்டுக் கொடுக்காத தரமும் ரேவதியின் வெற்றியின் ரகசியம் என்பது அவருடன் பேசும் போது நமக்குப் புரிகிறது .
தன் வெற்றிக்குப் பின்னால் தன் கணவர் இருப்பதை மறக்காமல் குறிப்பிடும் ரேவதி 'ரேபாஸ்' நிறுவனத்தின் முன்னேற்றம் பற்றி நிறைய கனவுகள் வைத்திருக்கிறார்.
பெண்களுக்கென நீங்கள் படைக்கும் வண்ண உலகில் சாதிக்க வாழ்த்துக்கள் மேடம் .
வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் .
Leave a comment
Upload