அது ஒரு கனாக்காலம் ….
1980ஆண்டு…. விடிந்தால் தீபாவளி …அதற்கு முன் நாள் வரை பெற்றோர் எடுத்து கொடுத்த துணிகளில் சட்டை தைக்க கடைசி நிமிடம் வரை டெய்லர் கடையில் கால் கடுக்க நின்று அடம்பிடித்து துணியை தைத்து கொடுக்க சொல்லி புதுசட்டை தைத்து வாங்கி வருவோம்.
தீபாவளி என்றதும் நினைவுக்கு வருவது அப்போது பெய்யும் மழை ஒருபுறம் … தீபாவளியன்று விடியற்காலை தலையில் எண்ணெய் வைத்து கங்கா ஸ்நானம் முடிந்தால் தான் புதுசட்டை போட்டுக்கொள்ள அனுமதிக்கும் பெற்றோர்கள் மறுபுறம்…இதையெல்லாம் கடந்து வந்தால் வீட்டில் உட்கார்ந்திருக்கும் பாட்டி தரும் பட்சணம் அல்லது இனிப்பு பலகாரங்கள் பாய்ந்து சென்று வாங்கி சாப்பிட்டதும் வரும் ஆனந்த உணர்வு எழுத்தில் வடிக்க இயலாது.
தீபாவளிக்கு முன்னாளில் இருந்தே பட்டாசு கடைகளில் அலைமோதும் சிறுவர்கள் புஸ்வாணம் , சங்கு சக்கரம் , ரயில் , பென்சில் , மத்தாப்பு , பாம்பு , லட்சுமிவெடி ,ஆட்டோபாம் போன்ற வெடிகளை வாங்கி வெடித்து மகிழ்ந்த தருணங்கள் ஏராளம். இதில் வெங்காய வெடியை சிறுவர்கள் கையில் வைத்து கொண்டு செல்லும் இடங்களில் எல்லாம் ஆனந்தமாய் தரையில் அடித்து வெடித்து கொண்டாடுவது மகிழ்ச்சி தருணங்களாக இருந்தது.
பக்கத்து வீட்டுக்காரர் விடியற்காலை பட்டாசு வெடிப்பதற்கு முன்பு எப்படியாவது நாம் முதலில் பட்டாசு வைத்து வெடிக்க வேண்டும் என்ற துடிப்புடன் தெருவில் புத்தாடை அணிந்து பட்டாசுகள் கொளுத்தும் போது விடியற்காலை பெய்யும் தீபாவளி மழை அப்பப்பா …அந்த கால மகிழ்ச்சியான நிகழ்வுகள் தற்போது இருக்கும் சிறார்களுக்கு இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும்.
தீபாவளி என்றாலே பட்டாசு தான் முதலில் ஞாபகம் வரும். அதுவும் சிவகாசி பட்டாசுக்கள் ரகத்திற்கு ஒன்றாக நம் சிறார்கள் முதல் முதியோர்கள் வரை கொளுத்தி மகிழ்ந்த வண்ணம் இருப்பார்கள். இதில் காதை செவிடாக்கும் வெடிகளை வெடிக்க நம் சிறுவர்கள் போட்டி போடுவதும் அந்த வெடி சப்தத்துடன் வெடித்ததும் அவர்கள் படும் ஆனந்தத்தை சொல்லி மாளாது.
இந்தியாவின் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் கிட்டதட்ட1000 பட்டாசு தொழிலகங்கள் இயங்கி வருகிறன. இங்கிருந்து நம் நாட்டிற்கு தேவையான 90 சதவீத பட்டாசுகள் தயாரிக்கும் பணிகளை இங்குள்ள தொழிலகங்களில் 8 லட்சம் பேர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படி இந்தியாவின் முக்கிய தொழிற்நகரமாக இருந்த சிவகாசி , இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் சுற்றுபுற மாசுகளை அதிகளவில் ஏற்படுத்துகிறது என்று 2018 ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சிவகாசி பட்டாசு தயாரிப்பில் அதிகளவில் பயன்படுத்தப்படும் பேரியம் நைட்ரேட் என்ற ரசாயனப் பொருளை பட்டாசு தயாரிக்க பயன்படுத்த கூடாது என உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது. இதனை உச்சநீதிமன்றம் 2021 ஆண்டு மீண்டும் தனது உத்திரவினை உறுதிசெய்தது. இதனால் பட்டாசு தயாரிக்கும் தொழிலகங்கள் அதிரடியாக தனது தயாரிப்புகளை நிறுத்தியதில் பல தொழிலகங்கள் மூடுவிழா கண்டது.
உச்சநீதிமன்ற தடையால் சிவகாசியில் ,பேரியம் நைட்ரேட் ரசாயனத்தை கொண்டு அதிகளவில் தயாரிக்கப்படும் புஸ்வானம் , பென்சில், அழகிய வர்ண ஜாலங்கள் காட்டும் சிறு தீப்பொறி பட்டாசுகள் ,100 வாலா,1000 வாலாக்கள் என்று சொல்லப்படும் தொடர் சரவெடிகள் எல்லாம் உற்பத்தி செய்ய முடியாமல் சிவகாசி பட்டாசு தொழிலகம் கிட்டதட்ட 40 சதவீதம் முடங்கி போய்விட்டது. தற்போது சிவகாசியில் 20 சதவீத உற்பத்தி மட்டுமே நடைபெறுகிறது.
சிவகாசியில் பட்டாசு தயாரிக்கும் பணியில் இந்த வருடம் 60 சதவீத தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிந்தனர். மீதி இருக்கும் 40 சதவீத பட்டாசு தொழிலாளிகள் இந்த உச்சநீதிமன்ற தடையால் பட்டாசு தயாரிக்கும் தொழிலகங்கள் மூடப்பட்ட நிலையில் வேறு மாற்று பணிகளுக்கு அதாவது கொத்தனார் அல்லது தினக்கூலிக்கு சென்றுவிட்டனர். இதனால் பட்டாசு தயாரிக்கும் தொழிலை நம்பி கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய குடும்பங்கள் எல்லாம் பட்டாசு உற்பத்தியை நிறுத்தியதால் சிவகாசி நகரே தற்போது வெறிச்சோடி போய்விட்டது என்று சிவகாசி பட்டாசு தயாரிக்கும் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
உச்சநீதிமன்ற தடையால் சிவகாசி பட்டாசு உற்பத்தி பாதிப்பானதும் , பட்டாசு உற்பத்தி செய்யும் ரசாயனங்களின் விலை ராக்கெட் வேகத்தில் கிடுகிடுவென்று உயர்ந்துவிட்டது. ஆனால் தற்போது எட்டு மணி நேரம் உழைக்கும் பட்டாசு தயாரிக்கும் தொழிலாளிக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 150 முதல் 300 வரை தான் தினக்கூலியாக கிடைக்கிறது.
பட்டாசு தயாரிக்கும் இடத்தில் மின்சாரம் இருக்க கூடாது, மின்விசிறிகள் இயங்க கூடாது . பட்டாசு தயாரிக்கும் அறைகளில் நான்கு பக்க சுவர்களில் இருக்கும் ஜன்னல்களில் வரும் சிறு காற்று மட்டும் தான் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு, இந்த பாவப்பட்ட தொழிலாளிகளுக்கு கிடைக்கும். கைகால்கள், முகம், உடல் என எங்கும் வெடி மருந்தை பூசி இருக்க, ஈயத்திலான சிலை போன்ற தோற்றத்தில் , வெகு வேகமாக ஒரு இயந்திரம் போல இயங்கும் இந்த தொழிலாளிகளை கண்ணால் பார்க்கும் போதே நமக்கும் வேதனை தொற்றிக்கொள்ளும்.
சிவகாசி எப்போதுமே கந்தக பூமி போன்ற ஒரு வெப்பமயமான பகுதி. இப்படி சீதோஷ்ண நிலை இருந்தால் தான் பட்டாசு தயாரிக்கும் தொழிலை செய்ய முடியும் என்பதால் கடுமையாக உழைக்கும் தொழிலாளிகள் எந்தவித வசதியுமின்றி தரையில் அமர்ந்து பட்டாசு தயாரித்து தங்கள் பிழைப்பை பெரும்பாலானோர் நடத்துகின்றனர்.
வெப்பமான சீதோஷ்ண நிலையில்,பட்டாசு தயாரிக்கும் போது, சில சமயங்களில் பட்டாசு மருந்துகளே ஒன்றுடன் ஒன்று உரசி பெரும் விபத்து நிகழ்ந்தால் அந்த தொழிலக கட்டிடம் வெடித்து சிதறிவிடும். அந்த சமயங்களில் கட்டிடத்தின் உள்ளே பணிபுரியும் தொழிலாளர்கள் வெடிவிபத்தில் சுக்கு நூறாகி வெடித்து சிதறும் துயர சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றது.
சிவகாசி மாவட்ட காவல்துறையினர் உச்சநீதிமன்ற தீர்ப்பினை மிகக்கடுமையான முறையில் நடைமுறை படுத்தியதால் அங்கே பல பட்டாசு தொழிலகங்கள் மூடப்பட்டன. இதனால் 1.5 லட்சம் பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்கள் பணி இழந்தனர் என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
டெல்லியில் இந்த வருட தீபாவளிக்கு தமிழகத்தில் தயாரிக்கும் பட்டாசுகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு கடிதம் அனுப்பினார். அதனை டெல்லி முதல்வர் நிராகரித்தது மட்டுமில்லாமல், டெல்லியில் பட்டாசு வெடித்தால் 6 மாத சிறை தண்டனையுடன் ரூ200 அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி கேஜ்ரிவால் அரசு அறிவித்திருக்கிறது. இதனால் சிவகாசியில் இருந்து தயாராகி சென்ற அனைத்து பட்டாசுகளும் விற்பனை ஆகாமல் முடக்கப்பட்டது.
டெல்லி அரசாங்கத்தின் உத்திரவினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி .மனோஜ் திவாரி ரிட் மனு தாக்கல் செய்து இந்த பிரச்சினையை அவசர வழக்காக நீதிமன்றம் எடுத்து "பட்டாசு வெடிக்ககூடாது" என்ற உத்திரவினை தடை செய்ய கோரினார். இதனை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்து வழக்கினை தீபாவளிக்கு பின்பு விசாரிக்கலாம் என்று தள்ளிவைத்துள்ளது.
நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட பல விஷயங்களை நாம் அப்படியே கடைபிடிக்கிறோமா என்பது பில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
சமீபத்தில் சென்னை வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திநகர் பகுதியில் காய்கறி அவரே சென்று வாங்கினார். ஆனால் அவர் காய்கறி கொண்டு போனது உச்சநீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் என்பது தான் வேதனையான செய்தியாக மீடியாக்களில் உலா வந்தது. இந்த பிளாஸ்டிக் கவர்களால் கடல் வாழ் உயிரினங்கள் வரை பாதிக்கப்படுகிறது .
பொது இடங்களில் புகைபிடிப்பது என்பது நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்டது தான். ஆனால் இன்று காணும் இடமெல்லாம் சிகரெட் புகைப்பவர்கள் பொதுஇடங்களில் புகை பிடித்து செல்வதால் காற்று மாசு மற்றும் சிகரெட் புகையால் அதை நுகர்வோருக்கும் நோய் உண்டாவதை கண்கூடாக நாம் காண்கிறோம்.
எல்லாவற்றையும் விட குட்கா புகையிலை பொருள் நீதிமன்றங்களால் தடைசெய்யப்பட்டது .ஆனால் இன்று எந்த முட்டு சந்திலும் உள்ள கடைகளிலும் குட்கா கிடைக்கிறது. எவ்வளவு குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்கிறார்கள் என்று நாம் செய்தியாக பார்க்கிறோம். இதற்கெல்லாம் தடை விதித்தும் அன்றாடம் நாம் காணும் காட்சியாக மாறிவிட்டது.
குட்டி ஜப்பானாக, தொழில் நகரமாக இருந்த சிவகாசி இதுபோன்ற நீதிமன்ற தடை உத்திரவால் தொழில்கள் நசிந்து போகும் . பஞ்சாப்-அரியானா விவசாயிகள் வயல்களில் அறுவடை முடிந்ததும் அவர்கள் கொளுத்தும் தீயால் ஏற்படும் புகை டெல்லி வந்தடைந்து காற்று மாசு ஏற்படுகிறது என்பது தான் உண்மை . தீபாவளி பண்டிகையை ஒட்டி ஓரிரு நாட்கள் கொளுத்தும் பட்டாசுகளால் டெல்லி காற்று மாசுப்படுவதில்லை என மத்திய அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனுசெய்து டெல்லியில் பட்டாசு விற்பனையை மீண்டும் தொடங்கவும் , சிவகாசி பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடைகளை அகற்றி மீண்டும் சிவகாசி பட்டாசு தொழிலகங்கள் இயங்க வகை செய்ய வேண்டும் என்பதே இங்குள்ள தொழிற்சங்கங்களின் கோரிக்கையாக உள்ளது.
உச்சநீதிமன்ற தடையால் கையால் செய்யப்படும் சரவெடிகள் முற்றிலும் செய்ய முடியாததால் சிவகாசி பட்டாசு தயாரிக்கும் தொழிலாளிகள் தற்போது தீபாவளிக்கு பிஜ்லி வெடி , பசுமை வெடிகள் தயாரித்து விற்பனைக்கு அனுப்பியுள்ளனர். பட்டாசு தயாரிக்கும் தொழிலாளிகள் பட்டாசு தயாரிக்கும் வேலைகளில் தம்மை வருத்திக் கொண்டு, எவ்வளவு சிரமப்பட்டாலும் , அவர்கள் இருப்பதால் தான் நம் பண்டிகைகளை நாம் மகிழ்சியாக, கோலாகலத்துடன் கொண்டாட முடிகிறது என்பது மிக உண்மை.
நாட்டு மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு உள்ளூர் தயாரிப்பு பட்டாசு வெடிகளை வாங்கி கொளுத்தி வெடித்தால் தான் பட்டாசு தொழிலாளிகளின் வாழ்வில் ஒளி பிறக்கும் என்பது தான் சிவகாசி பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
நீங்கள் வெடிக்கும் ஒவ்வொரு பட்டாசும், பல தொழிலார்களின் வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்றி வைக்கும் என்பதே நிஜம்!.
Leave a comment
Upload