தொடர்கள்
கதை
புருஷன் பெண்டாட்டி, சண்டை.-தில்லைக்கரசிசம்பத்

2022921200827493.jpg

"உன் ரோதனை தாங்க முடில...நான் சாமியாரா போவப் போறேன்." என்று தான் உட்கார்ந்திருந்த நாற்காலியை விட்டு எழுந்து கோபாவேசமாக கத்தினார் வேதாசலம்.

"ஏன் ஜோசியரை கூப்பிட்டு நாளுக்கெழமை பாக்குறது?" என்றபடி

ஒரு பாத்திரத்தில் புளியை வேகமாக கரைத்தவாறு அடுப்பங்கரையிலிருந்து வெளியே வந்த பங்கஜத்தின் வேகமும், முகத்தில் இருந்த கோபமும் வேதாசலத்தின் ஆவேசத்தை விட அவள் இன்னும் கோபமாக இருப்பதை காண்பித்தது மட்டுமில்லாமல், சண்டை வெகு நேரமாக நடந்துக்கொண்டிருப்பதையும் பறைசாற்றியது.

"எதுக்குடி இப்ப ஜோசியர்? அவன்தான என் வாழ்க்கைய கெடுத்த பாவி. 10 பொருத்தமும் பக்காவா இருக்குனு சொன்னதால தான உன்ன என் தலையில கட்டுனாரு எங்க அப்பா!? "என பதிலுக்கு குரைத்தார் வேதாசலம்.

"அதேதான் நானும் சொல்றேன். எந்த ஜோசியனை பாத்து என்னை கல்யாணம் பண்ணீங்களோ அவனையே கேட்டு இன்னைக்கே சாமியாரா போக வேண்டியதுதானே? செஞ்ச பாவத்துக்கு பரிகாரம் வேணாம்?"

"யாருடி பாவம் செஞ்சா?"

"நீங்க தான்.. அப்பவே எங்க தாய்மாமனுங்க சொன்னாங்க . கிளியை வளத்து பூனைக்கு கொடுக்குறீங்களே.. மாப்பிள பாக்க நல்லாவே இல்லை. குணமும் எப்படி இருக்க போதோ. நம்ம சனங்களை பாத்து சிரிக்க கூட மாட்டேங்கிறான். பங்கஜம் இருக்குற அழகுக்கும் பவுசுக்கும் போயும் போயும் இப்படி ஒரு மாப்பிள புடிச்சிருக்கீங்களே..! னு எங்க அப்பா அம்மாக்கிட்ட சண்டை போட்டாங்க தெரியுமா? அதுலேயும் எங்க அம்மாவோட கடசி தம்பி உங்க வயசுதான்.. அந்த மாணிக்கம் மாமா கூட "பங்கஜத்தை எனக்கு கொடுத்திருந்தா கூட நான் நல்லா வச்சி காபந்து பண்ணியிருப்பனே.. என்னை ஒரு வார்த்தை கேக்காம இப்ப அவசர அவசரமா இப்படி ஒரு முடிவ இன்னாத்துக்கு எடுத்த?" னு எங்க அம்மாவ கேட்டு மாலை மாலையா கண்ணீரு உட்டுச்சே! நான் தான் மாமனா இருந்தாலும் அண்ணன் தங்கச்சியா பழகிட்டோம் அதனால தான் மாணிக்கம் மாமாவ கட்டல னு சமாதானம் பண்ணேன்.

ஹும்.. மகாலச்சுமி மாதிரி இருக்குற நான்...... கடைசில

குரங்கு கையில பூமால கதையா போச்சு என் வாழ்க்கை."

"ஏண்டி..! தேங்காத்துருவி பல்ல வச்சிக்கினு மகாலச்சுமியாமில்ல.. இந்த பல்ல வச்சிக்கினு வெளிய வந்தா அவனவன் சகுனத்தடைனு தெறிச்சு ஓடுறான். ஒன்ன தாலி கட்டி நான் எங்க வூட்டுக்கு அழைச்சுட்டு போன சமயம், வாசல்ல நமக்கு ஆலாத்தி கரைச்சு எடுக்க வூட்டு வாசல்ல நாம ரெண்டு பேரும் நின்னப்ப, திண்ணையில கெடந்த எங்க அப்பத்தா " ஐயோ திருமுகமே.. ஒன் பல்லு ஒரு மொழமே"னு பொலம்புச்சே..

"அட கட்டைல போன அந்த கெழவிக்கு நல்ல கதியே கெடைக்காது. "ஏன் உங்க ஆத்தா ஒப்பாரி வைக்கிது?"னு நான் கேட்டப்ப "ஆத்தாக்கு தாத்தா நெனப்பு வந்துட்டு. அதான் ஏதோ பொலம்புது.. கண்டுக்காத!" னு அப்ப பொய்யா சொன்னீங்க? பொல்லாத கெளவி. அது இருந்த மூஞ்சி லெட்சணத்துக்கு என்னை வேற குறை சொன்னுதா? நீரும் தான் எருமமாட்டுக்கு பட்டுவேட்டி சட்ட போட்ட கணக்கா உருண்டு வந்தீரு. நான் களுத்த நீட்டல?"

"ஏண்டி..! பூனை குரங்குனு வைஞ்சது பத்தாம இப்ப எருமமாடா நானு!

நான் பூனை, குரங்குனா

அப்புறம் நீ ஏன் இவ்வளவு வருசம் குரங்கு பூனை எருமக்கூட குடித்தனம் பண்ண? இப்ப கூட கெட்டு போகல.. கிளம்பி போக வேண்டியது தானே ஒங்கப்பன் வூட்டுக்கு?"

"அதான் இப்ப நீ சாமியாராவ வூட்ட உட்டு ஓடப்போறியே!

நீ சாமியாரா போனா நான் ஏன்யா வூட்டை வுட்டு போகப் போறேன். ? அதான் ஒத்த புள்ளையானாலும் நான் பெத்த என் அருமை புள்ள சீமையிலிருந்து மாசம் மாசம் பணம் அனுப்புறானே! அத வச்சிக்கினு நிம்மதியா எனக்கு புடிச்ச சாப்பாடு ஆக்கி சாப்பிட்டுக்கினு டிவி பாத்துக்கினு நெம்மதியா இருப்பேன்"

"அடிப்பாவி மவளே பங்கஜம்.. நான் இல்லாம நீ நெம்மதியா இருப்பியா?! அப்பவே எங்க அப்பாருக்கிட்ட சொன்னேன். இந்த பொண்ணு வேணாம்னு. கேட்டாரா ? பத்து பொருத்தம் பக்காவா இருக்குனு சொல்லி என்ன பாடையில ஏத்திப்புட்டாரே!எவன் அவன் உன் மாமன்.. ? அந்த மாணிக்கம் பயலயே கட்டியிருக்க வேண்டியதுதானே. பல்லுக்கும் பல்லுக்கும் பொருத்தமா இருந்திருக்கும்".

மசான கொள்ளை திருவிழாவின் கடைசி கட்டத்தில் ஆடுகோழித்தலையை கடித்து ரத்தம் குடிக்க தயாரான, ஆவேசமடைந்த காளியை போல மாறிய பங்கஜம் " என்னா சொன்னே..?!" என்று கேட்டவாறே வேதாசலம் மேல் பாயும் சமயத்தில்

"மாப்புள.. பங்கஜம்.." என்றபடி வெள்ளை வெளேர் என்று வாயெல்லாம் தேங்காபல்லு தெரிய மாணிக்கம் மாமா சிரித்தபடி கையில் கட்டைப்பையோடு வீட்டினுள் நுழைந்தார்.

எதிர்பாராத நேரத்தில் நுழைந்த மாணிக்கம் மாமாவை கண்டு, ரயிலில் வித்தவுட் டிக்கெட்டில் பிரயாணம் செய்யும் போது டிடிஆர் திடீரென வந்து டிக்கெட் கேட்டது போல் வேதாசலமும் பங்கஜமும் திடுக்கிட்டு பேய் முழி முழித்தாலும், சடாரென்று உஷாராகி,

எலியும் பூனையுமாக இருந்த முகக்களையை சட்டென

மாற்றிக் கொண்டனர். முதலில் சுதாரித்த வேதாசலம் தொண்டையை கனைத்தவாறு முகத்தில் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு "அடடே.. மாணிக்கம் சித்தப்பா.. வாங்க வாங்க. இந்தா புள்ள.. பங்கஜம்..! யாரு வந்துருக்கா பாரு..? இப்பதான் உங்களை பத்தி பேசிக்கினு இருந்தோம். உக்காருங்க. ஊர்ல எல்லாரும் சுகமா ? என்ன இந்த பக்கம் அதிசயமா?" என்று வினவினார்.

"அது ஒன்னுமில்லை மாப்பிள! இந்த பக்கம் நெலபுலன் சம்மந்தமா ஒருத்தரை பாக்க வேண்டி இருந்துச்சு. அந்த வேலைய முடிச்சிட்டு அப்படியே உங்க எல்லாரையும் பாத்துட்டு போலாம் னு வந்தேன். பங்கஜம் கையால காபித்தண்ணி வாங்கி குடிச்சிட்டு பஸ்ஸ்டாண்டு போய் 11:30 மணி பஸ்ஸ புடிச்சு ஊரு போய் சேர வேண்டியதுதான்" என்றார் மாணிக்கம்.

அதற்குள் சமையலறைக்குள் போய் கையில் தண்ணி சொம்பு எடுத்து கொண்டு வந்த பங்கஜம்

"ஆங் .. நல்லாருக்கே .. அதெப்படி வெறும் காப்பித்தண்ணி குடுத்து அனுப்பிடுவாங்களா? மத்தியானம் இங்க சாப்பிட்டு சாயங்காலம் பஸ் புடிச்சு ஊருக்கு போலாம்

மாமா..!" என்றாள்.

வேதாசலமும் "அதானே.. வூட்டுக்கு வந்தவரை வெறும் வயத்தோட அனுப்புறதா? நல்லா இருக்கே நாயம். நீங்க உட்கார்ந்திருங்க.. இதோ வந்துட்டேன்" என்றபடி உள் அறைக்கு சென்று சட்டை மாட்டிக் கொண்டு கையில் பை எடுத்து வாசல் அருகே செல்ல பின்னாடியே பங்கஜமும் சென்றாள்.

கதவருகே நின்றபடி வேதாசலம் ரகசியமாக

"இந்தா பங்கஜம்

இள ஆட்டுக்கறினா உங்க மாமாவுக்கு ரெம்ப புடிக்குமில்ல.. கறிக்கடை பாயை ஸ்பெசலா கேட்டு வாங்கியாறேன் . நல்லா குளம்பு வச்சி, பாதியை வறுத்துடு. முட்டை அவிச்சு வை. வராத விருந்தாடி வந்துருக்காப்டி. வேற எதுனா வேணுமா?" என்றார்.

தனது மாமனுக்கான விருந்து ஏற்பாட்டிற்கு புருஷன் வேகாத வெயிலில் கடைக்கு கிளம்பியதை கண்டு கோபம் குறைந்த பங்கஜம்" இது போதும்.. வேற ஒன்னும் வேணாம். அப்புறம் இந்தாங்க குடை..எடுத்துக்குனு போங்க வெயிலு ரெம்ப கொளுத்துது. " என்ற

மனைவியின் அக்கறையில் வேதாசலத்திற்கு முழு கோபமும் குறைய மனைவியை இன்னும் சமாதானம் படுத்தும் ஆசையில் இன்னும் கிட்ட வந்து ரகசியமாக " இந்தா பங்கஜம்.. உனக்கு எறா புடிக்குமே புள்ள . அரைக்கிலோ வாங்கியாறேன். பாய் கட பக்கத்துல தான மீனுகடை." என்றார்.

"வேணா வேணா..! இன்னாத்துக்கு வெயில்ல கெடந்து அலையுற.. கறி வாங்கிக்கினு நேரா வூட்டுக்கு வந்துடு‌. மோரு சிலுப்பி வச்சிருக்கேன். குடிச்சிக்கினு மாமாவோட பேசிக்கினு இரு. நிமிசமா சமைச்சுடுவேன்" என்றாள்.

இதை கவனித்துக் கொண்டிருந்த மாணிக்கம் பரிகாச சிரிப்போடு

"என்ன பங்கஜம்? மாப்பிள கூட என்ன ரகசியம் பேசுற..? வருசம் 30 ஆச்சு. கல்யாணம் ஆனப்ப எப்படி இருந்தீங்களோ அதே போல் இன்னமும் ஒருத்தருக்கு ஒருத்தர் அதே அன்பா, அனுசரிப்பா, ஆசையா இருக்கீங்களே! என் கண்ணே பட்டுடும் போல" என்று பாசத்தோடு சொல்ல

"போங்க மாமா.. ஒங்களுக்கு எப்பவும் கிண்டலுதான்!" என்று

வெட்கப்பட்ட பங்கஜம் வேதாசலத்தை பாத்து " சரி வாங்கிட்டு சீக்கிரம் வந்துருங்க " என்று வேதாசலத்தை வழி அனுப்பி வைத்தாள்.

இப்படியாக அந்த மனமொத்த தம்பதிகளின் சண்டை , உலக வழக்கத்தின்படி விருந்தாளியின் வருகையில் சுமூகமாக முடிந்தது.