தொடர்கள்
தொடர்கள்
தெங்காஸி -எழத்து விஞ்ஞானி ஆர்னிகா நாசர்

2022921155615871.jpg

பலகையில் அமர்ந்திருந்தாள் வகிதா. அவளுக்கு எதிரே இருந்த எவர்சில்வர் சட்டியில் உயிர்இரால்கள் துள்ளத்துடித்து கொண்டிருந்தன.
ஒவ்வொரு இராலாக எடுத்து மேற்தோலை உரித்து தலைபகுதியை கிள்ளினாள். கறுப்பு நரம்பு உருவி எடுத்தாள். நுங்கு போல காட்சியளித்தது உரித்த இரால். உரித்தததை வேறொரு பாத்திரத்தில் போட்டாள்.
வகிதாவின் கைபேசி சிணுங்கியது.


‘தினமலர்’ வாசித்துக் கொண்டிருந்த நான் எழுந்து கைபேசியை எடுத்தேன் டிஸ்பிளேயில் ‘ஜெயின்லாப்தீன்’ என இருந்தது.


“செல்லக்குட்டி! உன் தம்பி பொண்டாட்டி பேசுரா…”
கைபேசியை வாங்கி காதில் இணைத்தாள் வகிதா. அழகிய முகமன்கள் பரிமாற்றம்.
“மச்சி! என் மூத்தமகளுக்கு திருமணம் முடிவு பண்ணிருக்கேன். வருகிற 25ஆம்தேதி தெங்காஸியில் கல்யாணம். கல்யாணத்துக்கு நேரில் வந்து கூப்பிட முடியல. இன்விடேஷனை வாட்ஸ் அப்ல அனுப்புறேன்.
கல்யாணத்துக்கு முந்தினநாளே வந்து கல்யாணத்தை சிறப்பிச்சுக் குடுங்க..”
“சரிங்கம்மா!”
“அண்ணன்கிட்ட போனை குடுங்க மச்சி!”
கொடுத்தாள் வகிதா.
“அண்ணன்! ஜாஸ்மினுக்கும் நிலாமகனுக்கும் போன் பண்ணி இன்விடேஷன் வாட்ஸ்அப்ல அனுப்பிச்சிடுறேன். எல்லாரும் வாங்கண்ணே!”


கைபேசியை அமர்த்திவிட்டு வகிதாவை பார்த்தேன். வகிதாவுடன் பிறந்தவர்கள் இரண்டு தம்பிகள் இரண்டு அக்காள்கள் ஒரு தங்கச்சி மூன்று அண்ணன்கள். வகிதாவின் தந்தை வாலிப வயதிலேயே
மெக்காவுக்கு போய் வந்தவர். அதனால் வகிதாவின் குடும்பத்தை ‘ஹாஜியார் குடும்பம்’ என்றே ஊரில் அழைப்பர். வகிதாவின் தந்தை யாரிடமும் கடன் வாங்க மாட்டார். யாருக்கும் கடனும் தரமாட்டார். வகிதாவின் சகோதரர்கள் சாமி சன்னதி தெருவில் செருப்பு கடை வைத்திருந்தனர்.
வகிதாவின் தாயார் ஆறடி உயரமான மாநிறமான இரும்புப்பெண்மணி. 1985ல் எனக்கும் வகிதாவுக்கும் திருமணமானது. நானும் வகிதாவும் சிதம்பரத்தில் குடும்பம் நடத்த ஆரம்பித்தோம்.
வகிதாவின் ஒரு அக்கா மதுரையிலும் இன்னொரு அக்காவும் ஒரு அண்ணனும் திருநெல்வேலியிலும் ஒரு தங்கை பாண்டிச்சேரியிலும் ஒரு தம்பி புளியரையிலும் ஒரு தம்பியும் இரு அண்ணன்களும் தென்காசியிலும்
குடும்பம் நடத்தினர்.


வருடத்தில் மூன்று தடவைகளாவது நானும் வகிதாவும் குழந்தைகளுடன் தென்காசி வந்து விடுவோம். மம்மானி அசைவ உணவு திருவிழா நடத்தி எங்களை திக்கித்திணற அடித்து விடுவார். ஐந்தருவிக்கு
காலையில் குளிக்க கிளம்புவோம். மதிய உணவு தயாரித்து மம்மானி அனுப்புவார். மாலை வரை இருந்து மூன்று நான்கு முறை குளிப்போம்.


வருடத்தில் இருமுறை மம்மானி அரிசி பருப்பு இனிப்பு சுமைகளுடன் சிதம்பரம் வந்து இறங்குவார். வகிதா தேங்காய் சோறும் விரால்மீன் குழம்பும் வைத்து அம்மாவை உபசரிப்பாள். மம்மானி விரால்மீன் தலைகளை ஒரு கைதேர்ந்த மெக்கானிக் போல பிரித்து தின்னும் அழகே அழகு.

இரவில் வகிதாவும் அவளது அம்மாவும் ஒன்றாக படுத்து ஊர்கதை உலகத்து கதை பேசுவர். பகலில் ஒருவருக்கொருவர் தலைவாரி பூச்சூடுவர்.


மாமியாரை கண்டு எல்லா மருமகன்களும் பதறி சிதறி ஓட நான் மட்டும் அவரின் இன்னொரு மகனாய் அவரின் அருகில் அமர்ந்து நான் எழுதும் கதையை பற்றி விலாவாரியாக விளக்கிச் சொல்வேன். கதைகளை
பெருமையாக கேட்பார்.


2002ல் என் மாமியார் இறந்து போனார். என் மாமனார் பெண் பிள்ளைகளுக்கு சொத்து கொடுக்ககூடாது என ஒரு வாக்குறுதியை மாமியாரிடம் வாங்கியிருந்தாராம். பூர்வீக வீட்டை இரண்டாக பிரித்து
முன்பகுதியை வகிதாவின் மூத்ததம்பிக்கும் பின் பகுதியை இளைய தம்பிக்கும் பிரித்து கொடுத்தார். கடையை விற்று சகோதரர்கள் பங்கு பிரித்துக் கொண்டனர். மாமியாரின் சேமிப்பு பணத்தையும் நகையையும் புடவைகளையும் மகள்கள் பங்கு பிரித்துக் கொண்டனர்.

தனக்கு பங்காக வந்த அம்மாவின் புடவையை கட்டிக்கொண்டு கண்ணாடி முன் நின்று கண்கலங்கினாள் வகிதா. காலம் நகர்ந்தது.

மூத்ததம்பி மாரடைப்பால் இறந்து போனான். இளையதம்பி சாலை விபத்தில் இறந்து போனான். இரண்டாவது அண்ணனும் இரண்டாவது அக்காளும் உடல்சுகவீனப்பட்டு இறந்து போயினர். மூத்த அண்ணன் சமீபத்தில் இறந்தான்.

மூத்த சகோதரியும் கடைக்குட்டி தங்கையும் இரண்டாவது அண்ணனும் வகிதாவும் மட்டும் மிச்சம்.
வகிதா தென்காசியை எப்போதுமே வாஞ்சையாக ‘தெங்காஸி’ என்பாள். தென்காசியின் மண்ணும் நீரும் சாரலும் வகிதாவின் மனதிலும் உடலிலும் ஊறி கிடந்தன.


“குட்டிம்மா… கடைசியா தெங்காஸிக்கு எப்ப போனோம்?”

“எங்க அண்ணன் மௌத்துக்கு நாம போய்ட்டு வந்தே ரெண்டு
வருஷமாக போகுது பா”

“இதே தேதில திண்டுக்கல்ல பெரித்தா பேரன் கல்யாணம். நான் திண்டுக்கல்லுக்கு போறேன். நீ தெங்காஸிக்கு போ!” திரும்பி சுட்டு எரித்து சாம்பலாக்குவது போல பார்த்தாள் வகிதா.

“நாம ரெண்டு பேரும் சேந்தே தெங்காஸி கல்யாணத்துக்கு போவோம். நீங்க திண்டுக்கல்லுக்கு கல்யாணத்துக்கு மறுநா நடக்கும் வலிமா விருந்துக்கு போங்க! .”
“சரி!”

“ஜெயின்லாப்தீன் என் மனதுக்கு பிடித்த தம்பி. அவன் மௌத்தானதை இன்னும் என் மனசு ஜீரணிக்கல. தம்பி மனைவி குடும்பம் தம்பி மௌத்துக்கு பிறகு எப்படி உறவு முறை பேணுதுன்னு ஆராயக்கூடாது. நேர்ல வந்து கூப்பிடலன்னு குறை சொல்லக்கூடாது நாம கல்யாணத்ல கலந்துக்க தெங்காஸி போரோம்!”
மதுரை வரை செல்ல திருச்செந்தூர் விரைவு ரயிலிலும் மதுரையிலிருந்து தென்காசி செல்ல பொதிகை விரைவு ரயிலிலும் முன்பதிவு செய்தேன்.

தென்காசி பற்றிய பழங்கால நாட்டத்துடன் வகிதா இரால் ஆயும் பணியைத் தொடர்ந்தாள்.
வகிதாவின் மனக்கண்ணில் கறுப்பு வெள்ளை பிரேம்களில் தென்காசி ஒளிப்படங்கள் தென்காசி ரயில் வண்டி நிலையம் நானும் வகிதாவும் இறங்கினோம்.


வகிதாவின் அண்ணன்களில் ஒருவரான கருணைராஜா காத்தமன் நபி எங்களை வரவேற்றார். அழகிய முகமன்கள் பரிமாற்றம்.

“என்ன மச்சான் என் தங்கச்சியை ஒழுங்கா பாத்துக்கிறீங்களா-”

தலையாட்டினேன்.


“கருணை! காரை காசி விஸ்வநாதர் ஆலயம் வழியாக சாமி சன்னதி தெருவில் ஓட்டு!”
ஓட்டினார் கருணை. காசி விஸ்வநாதர் கோயிலை மரியாதையுடன் பார்த்து காட்சியமைப்பை விழுங்கினாள் வகிதா.


சாமி சன்னதி தெருவில் செருப்புகடை இருந்த இடத்தில் நகைகடை இருந்தது.
ஒரு இனிப்பு கடையை சுட்டினாள் வகிதா. “இந்த கடைலதான் எங்கத்தா தினம் சாயங்காலம் அல்வாவும் மிக்சரும் சாப்பிடும்!”

கார் நகர்ந்தது.

பூர்வீக வீட்டுக்கு எதிரே கார் நின்றது. அம்மா இல்லாத வீடு சாமி விக்கிரகம் இல்லாத கோயிலாக பட்டது வகிதாவுக்கு.
கருணைராஜா வீட்டில் இறங்கி குளித்தோம். காலை உணவு உண்டோம்.
“எப்பா.. நானும் கருணையும் பைக்ல தெங்காஸியை ஒரு ரவுண்டு கத்திவர போறோம்… போய்ட்டு வரட்டுமா?”


“குட்டிம்மா… நீ படிச்ச சிஎம்எஸ் நடுநிலை பள்ளியையும் மஞ்சம்மா

பெண்கள் மேனிலை பள்ளியையும் பாத்துட்டு வா. தினம் பள்ளிக்கூடத்துக்கு நீ புட்டும் நெய்யும் தேங்காய் துருவலும் எடுத்துட்டு போவ. அதனால உன்னை உன் தோழிகள் ‘புட்டு அலிமா’ என பட்டப்பெயரிட்டு அழைப்பர். உன்னோட எழுத்தாளர் லா.ச. ராமமிர்தத்தின் மகள் படிச்சார் இல்லையா?”

“என்னோட படிச்சவர்களில் முக்கியமானவர்கள் ஜேனட் பொற்செல்வி, முருகம்மாள், கரோலின், அமுதா கணேசன், ஜெஸிமா பானு, வானதி முதலியோர்!”


கருணைராஜாவின் ராயல் என்பீல்டின் பில்லியனில் ஏறி அமர்ந்த வகிதாவுக்கு மைக்ரோ நொடியில் 45வருடங்கள் குறைந்தன. 15வது சிறுமி ஆனாள்.


“கருணை! எனக்கு பலாப்பழம் வாங்கிக்குடு”

வாங்கி கொடுத்தார். விரும்பி தின்றாள் வகிதா.

ஆயிலப்பேரி விளாங்காட்டில் புதைக்கப்பட்ட அத்தா அம்மா கபுர்களை பார்த்தாள். இறங்கி நின்று பாத்தியா ஓதினாள் வகிதா. மசூதம்மா வீட்டுக்கு போயினர். மசூதம்மாவும் வகிதாவும் கட்டிக்கொண்டனர் ஒருவருக்கொருவர் குசலம் விசாரித்துக் கொண்டனர்.


புளியரையில் இருந்த இளையதம்பி குடும்பத்தாரை போய் பார்த்தனர். தான் படித்த பள்ளிக்கூடங்களுக்குள் வகிதா பிரவேசித்தாள். உணவு இடைவேளை என்பதால் வகுப்பறைகள் காலியாக கிடந்தன. தான் படித்த
வகுப்பறையில் போய் அமர்ந்து பெஞ்ச்சை உல்லாசமாக தேய்த்தாள். பள்ளிக்கூடவாசலில் அவித்த பலாக்கொட்டை கல்கோனா, சுண்டல் ஐஸ்மிட்டாய் வாங்கிக் தின்றாள் வகிதா.

ஐந்தருவிக்கு சென்று திம்திம் என்று விழும் அருவிநீரின் அடியில் சம்மணமிட்டு மணிக்கணக்கில் அமர்ந்தாள் வகிதா.


காசி விஸ்வநாதர் கோயிலுக்குள் ஒரு பார்வையாளராக சென்று திரும்பினாள்.
இரவுதான் கருணைராஜாவும் வகிதாவும் வீடு திரும்பினர். திருமணத்திலும் நட்புகளையும் உறவுகளையும் கண்டு அளவளாவினாள் வகிதா.

-ரயிலில் சிதம்பரம் திரும்பும் போது வகிதா என் மடியில் படுத்து அழுதாள். “ஒரு பெண்ணுக்கு பிறந்த வீடு திருமணத்தின் போது பாதி நழுவியும் தாயின் மரணத்தின் போது முழுமையாகவும் காணாமல் போய்
விடுகிறது. கைநழுவின கோஹினூர் வைரம் திரும்ப கிடைக்காது. இப்ப ‘தெங்காஸி’ உருமாறி தென்காசியாய் அந்நியம் காட்டுகிறது”


“இப்படித்தான் நான் சிதம்பரத்திற்கு வேலைக்கு வந்தபிறகு என் மதுரயும் உருமாறி மதுரையாய் அந்நியம் காட்டுகிறது குட்டிம்மா!”


முணுமுணுத்தேன் நான் வகிதாவுக்கு கேட்காத ஒலியனில்.