தொடர்கள்
கதை
கிருஷ்ணன் கோவில் - சத்யபாமா ஒப்பிலி

20220630004136610.jpg

மெதுவாக, கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு வீட்டு வாசற்படியை விட்டு இறங்கினார் கிருஷ்ணய்யர். கடைசிப் படி சற்று பெரியதாக இருக்கும். இரண்டு கால்களையும் சௌகரியமாக சேர்த்து வைத்து, சற்று நிதானித்துக் கொண்டு தரையில் இறங்கலாம். மெதுவாக இறங்கினார். கிராமத்தில் வீட்டை விட்டு இறங்கினால் எதற்கும் கவலைப் படாமல் நடக்கலாம். இது சென்னை. இருபது அடி அகலம் உள்ள தெரு. ஸ்கூட்டர், சைக்கிள் என்று வரிசையாக நிறுத்தி இருக்கும்.

ஒவ்வொரு நாளும் கீழே விழாமல் வீடு திரும்புவதே ஒரு சவால் தான். அதுவும் இது மாலை நேரம். இன்னும் கடினம்.

முக்கால் வாசி அறுபது, எழுபது வயதினரின் பிரச்சனை இது. மகனுக்கவோ மகளுக்காகவோபழகிய ஊரிலிருந்து வேரோடு பெயர்த்து வேறு ஊரில் நடப்படுவர். அவர்கள் எல்லாவற்றையும் பழகிக்கொள்ளவேண்டும். அறுபது வயதுக்கு மேல் சில ஆரம்பப்பாடம். கிருஷ்ணய்யருக்கும் எல்லாம் புதிதாகத் தான் இருந்தது. திருநெல்வேலிக்கு அருகே இருக்கும் செவல் தான் சொந்த ஊர். அருகில் உள்ள அம்பாசமுத்திரம் அரசு பள்ளியில் தலமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இரண்டு மகன்கள். ஒருவன் டில்லியில் மற்றொருவன் சென்னையில். டில்லிக்கு சென்னை பரவாயில்லை என்று இளையவனோடு இருக்கிறார். அவருக்கு உறவுகள் பிரச்சனை இல்லை. ஊர் தான் பிரச்சனை.


காலிங் பெல், தண்ணீர் கேன், ஏன் வீட்டை விட்டு இறங்கினாலே சட்டை போட்டுக் கொள்வது எல்லாமே அவருக்கு புதுசு தான். எப்பொழுது பார்த்தாலும் கதவை பூட்டிக்கொள்ளவேண்டும். " அதான் பா Safe" என்பாள் மருமகள். இளயவனுக்கு ஐந்து வயது இருக்கும் போதே அவர் மனைவி இறந்து விட்டாள். பஜனை பாடுபவள். கிருஷ்ணன் கோவில் கண்ணன் சன்னதியில் பாடிக்கொண்டே சாய்ந்து விட்டாள். இருவருக்குமே கண்ணன் மேல் அலாதி பக்தி, அன்பு. அவர்களுக்கு கண்ணன் முதல் குழந்தை. அவளுக்கு கிடைத்த பேறு தனக்கும் கிடைக்கவேண்டும் என்ற ஆதங்கம் அவருக்கு எப்பொழுதுமே உண்டு. குழந்தைகள் இருவரும் திருமணம் ஆகி தனித்தனியே குடித்தனம் சென்ற பின்னும் ஊரில்தான் இருந்தார். காலையும் மாலையும் கோவில். பின் நண்பர்களுடன் அரட்டை. இரவு கோவிலில் கொடுக்கும் பிரசாதம் தான் உணவு. அவரே சமையல், தாமிரபரணி ஆற்றில் குளித்து விட்டு வரும்போதே துணி தோய்த்து விடுவார். வீடு பெருக்கவும், பாத்திரம் தேய்க்க மட்டும் செல்வி வருவாள். அமைதியாகத்தான் போய்க்கொண்டிருந்தது வாழ்க்கை, ஒருநாள் தலை சுற்றி கீழே விழும் வரை. நண்பர்கள் மகன்களிடம் சொல்ல அடுத்த 10 மணி நேரத்தில் இருவரும் வந்து உடனே குடி பெயர்வதைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டனர். தனியாக இருக்கவிடுவதில் அனைவருக்கும் பயம்.
பிள்ளைகள் நண்பர்களிடம் சொல்ல, நண்பர்கள்,

" கிருஷ்ணா, நீ போகத்தான் வேண்டும். நம்ம வாழ்கை மாதிரி இல்லை அவங்களுக்கு. எப்பொழுதும் வேகமும், டென்ஷனும் தான். நாம உதவியா இருக்கறோமோ இல்லையோ, நம்மளால அவங்களுக்கு கஷ்டம் வரக்கூடாது.நீ இங்க தனியா இருந்தா அவங்களுக்கு எப்போதும் கவலை தான பேசாம அவங்களோட கிளம்பு" என்று வற்புறுத்த, வேறு வழி இல்லாமல் கிளம்பினார். டெல்லிக்கு வரமுடியாது என்று தீர்மானமாகச் சொன்னதால் இப்பொழுது சென்னை, தாமோதரபுரத்தில்.


மெதுவாக ரோட்டின் ஓரமாகவே நடந்தார் . ஒரு ஐந்து நிமிடம் நடந்தால், ஒரு கூட் ரோட் வரும். அதன் ஓரத்தில் தான் அந்த கிருஷ்ணன் கோவில். சமீபத்தில் கட்டப்பட்ட கோவில். அவருக்கும் அவர் ஊருக்கும் இருக்கும் ஒரே தொடர்பு இந்த சிறிய கோவில் தான். ஒரே ஒரு சன்னதி. அவர் ஊரில் உள்ளது போலவே காளிங்கநர்த்தனன். செவல் கண்ணன் கொள்ளை அழகு. சிரித்த முகம், உப்பிய கன்னம், உருண்டையாய் கை கால்கள். அள்ளி கொஞ்சலாம் போல இருக்கும் எப்பொழுதுமே. இங்கு இந்த கண்ணனும் கிட்டதட்ட அவன் போல் தான். நர்த்தனத்தில் ஒரு குறும்பு கலந்த சிரிப்புடன்.


சென்னை கிளம்பிய உடன் வேகமாக கோவிலுக்குச் சென்று கண்ணனிடம் விடை பெற்றுக் கொண்டார். மானசீகமாக நீயும் என்னுடன் வாயேன் என்று குழந்தை போல் சொல்லிவிட்டு வந்து காரில் ஏறிக் கொண்டார். 70 வயது அழுகை. மனதில் ஆரம்பித்து மனதுடனே முடிந்து விட்டது.


மருமகளுக்கு அவரைப் பற்றி தெரியும். சென்னை வந்த அன்றே " வாங்கோ பா. கோவிலுக்கு போகலாம்" என்று கூறி இந்த கோவிலுக்கு அழைத்து வந்தாள். கோவிலுக்குள் நுழைந்து அவனைப் பார்த்த உடனே கண்ணில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் பெருகியது.


" உங்களுக்கு முன்னாடியே அவர் இங்க வந்துட்டார் பா. பக்கத்துல தான் தினமும் வந்து தரிசனம் செய்யலாம்"

திரும்பிப் பார்க்காமல் தலை அசைத்தார்.

அன்றிலிருந்து கிட்ட தட்ட எட்டு மாதமாய் ஒரு நாள் விடாமல் கோவிலுக்கு வருவார். அவருக்கென்று ஒரு இடம் அமைத்துக்கொண்டு ஒரு பத்து நிமிடமாவது பேசிவிட்டு செல்வார். பேசுவது கண்ணனிடம் அது எந்த நதிக்கரையில் இருந்தால் என்ன! யமுனையோ, தாமிரபரணியோ, அல்லது அடையாறோ! எல்லாம் கரைந்து அவனும் அவருமே மிஞ்சி இருப்பது போல் தோன்றும்.


சில சமயம் பேச ஒன்றுமே இருக்காது. அமைதியாக அமர்ந்து விட்டு வந்து விடுவார். அன்றைக்கு மனம் ஏதோ சஞ்சலமகவே இருந்தது. மெதுவாக ரோட்டின் ஓரமாக நடந்து சென்றார். கோவிலின் அருகில் ஒரே சல சலப்பாக இருந்தது.


" சார், விஷயம் தெரியுமா, கோவிலை இடிக்கப் போறாங்களாம்"

அதிர்ந்து போய் திரும்பிப்பார்த்தார்.

கோவிலுக்கு அருகே இருக்கும் வெத்தலை பாக்கு கடை நடத்துபவர். கவலையில் அவரும் நடு ரோட்டில் நின்றிருந்தார்.

" இடிக்க போறாங்களா? எதுக்கு?"

“எதோ ரோட பெருசாக்க போறாங்களாம்.”

ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

பெட்டிஷன் போடலாம், ஸ்ட்ரைக் பண்ணலாம் என்னவெல்லாமோ வார்த்தைகள் அவர் காதில் விழுந்தது. எட்டி உள்ளே பார்த்தார். கண்ணனின் கிரீடம் மட்டும் தெரிந்தது. உள்ளே போகமுடியுமா என்று தெரியவில்லை.

அமைதியாக வீடு திரும்பினார். நேரே தன் அறைக்கு சென்று கட்டிலில் படுத்து கொண்டார்.

" என்ன ஆச்சு பா. வந்த ஒடனே படுத்தாச்சு. இப்படி பண்ண மாட்டேளே! உடம்பு முடியலையா?" கட்டில் அருகில் இருக்கும் நாற்காலியில் வந்து அமர்ந்து ஆதரவாய் கேட்டான் இளைய மகன் ராஜு.

' ராஜு, நம்ம கிருஷ்ணன் கோவிலை இடிக்கப்போறாளாம். " குரல் தழுதழுக்க சொன்னார்.

அவன் இதை எதிர் பார்த்ததுதான். அந்த ரோடை பெரிதாக்க வேண்டுமென்றால் அந்த கோவிலை இடித்தாக வேண்டும். இது கொஞ்ச நாளாகவே பேசப்பட்டுக்கொண்டுதான் இருந்தது.

" ஆமாம் அப்பா. கேள்விப்பட்டேன்"

" ஏண்டா இப்படி?"

"நூறு வருஷத்துக்கு முந்தின கோயில்னா ஒன்னும் பண்ண மாட்டா! இது இப்போ தானே கட்டினது"

"நான் நூறு வருஷத்துக்கு முன்னாடி இல்லயேடா. கோயில்னா வெறும் சாமி சிலையும் கட்டடமும் தானா? என்னோட கேள்வி, பதில், நம்பிக்கை, வருத்தம், சந்தோஷம் எல்லாம் தானே!

" என்ன பா பண்றது. இது கொஞ்ச நாளாகவே பேசிண்டுதான் இருக்கா! எல்லாரும் சேர்ந்து எதாவது பண்ணுவா. பாக்கலாம்.

"இல்லடா! இது எல்லாமே தப்பு. கட்ட அனுமதி குடுக்கறதும் அவாதானே. ஒரு இடத்தை தெய்வ சன்னதியா மாத்திட்டு இப்போ இடிக்கப் போறோம்னு சொன்னா!

" பெருமாளுக்கு ஒன்னும் ஆகாது பா. கவலைப் படாதீங்கோ. ஏதாவது வழி வரும்.

" அது சரி" என்று சொல்லிவிட்டு அமைதி ஆகிவிட்டார்.

இரவு ஒன்றும் சாப்பிடவில்லை. ராஜூவும் கட்டாயப் படுத்தவில்லை.

மறு நாள் காலை, ராஜு பேப்பர் படிக்கும் பொழுது அருகில் வந்து அமர்ந்தார் கிருஷ்ணய்யர்.

" தூங்கினேளா அப்பா", காபியுடன் கேட்டுக் கொண்டே வந்தாள் மருமகள் சரயு.

" ஏதோ தூங்கினேன்!. என்றார்.

பின் சடக்கென்று, "ராஜு நான் ஊருக்கு போகட்டுமா?" என்றார். அவர் கேட்ட தொனியிலேயே அவரின் முடிவு இருந்தது.

" ஏம்ப்பா. இதெல்லாம் சரி ஆகிடும். பேசாம இங்கேயே இருங்கோ"

" இல்லடா, இதெல்லாம் எனக்கு பிடிக்கலை, புரியலை. ஒரு பத்து வருஷம் முன்னாடி மதுரையில் இது தான் நடந்தது. அங்க மெயின் ரோடு ஓரமா ஒரு சின்ன பிள்ளையார் கோவில் உண்டு. ஒரு மாடத்துல தான் இருப்பார். நான் எப்போ மதுரை போனாலும் பஸ் ஏற்றதுக்கு முன்னாடி அவரை நமஸ்காரம் பண்ணாமல் போகமாட்டேன். திடீர்னு பார்த்தா அவர் மாடத்தை காணலை. . அவர் மட்டும் பக்கத்து காம்பவுண்ட் சுவத்துல உட்காந்திருக்கார். அப்பறம் அவருக்கு என்ன ஆச்சுன்னு எனக்கு தெரியலை. முந்தின நாள் பாத்து இருக்கேன். மறு நாள் இல்லை. மனசு ரொம்ப கஷ்டமாக போச்சு. வேறு என்னல்லமோ அங்க வந்தாச்சு இப்போ. ஆனா எனக்கு அது ஒரு வெற்றிடம் தான்.

என்ன தைரியமா ஊருக்கு அனுப்பு. ராஜு எனக்கு வயசாயாச்சு. அவன் தான் என்ன பாத்துக்கணும். அவனுக்காக சண்டை போடற தெம்பு எனக்கில்லை. எல்லாம் சரி ஆகட்டும் அப்பறமா நான் வரேன். இப்போ என்ன அனுப்பிடேன் பிளீஸ்."

ராஜுவுக்கு புரிந்தது.

"சரிப்பா. நாளைக்கு கார்லயே கொண்டு விட்டுடறேன். ஊருக்கு ஃபோன் பண்ணிடுங்கோ"

" ரொம்ப தேங்க்ஸ் டா" சொல்லிவிட்டு எழுந்து சென்றார்.

மறு நாள் காலையில் ஊருக்கு கிளம்பும்போது,

" அப்பா இந்த பக்கம் போகலாமா? கோவிலை பாத்துட்டு போகலாம்"

" வேண்டாம் டா. நேத்திக்கே மானசீகமாக சொல்லிட்டேன். முடிஞ்சா அப்பறம் பாக்கலாம்."

கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்து கொண்டார்.

ஊர் வந்து சேர்ந்ததும், சாமானை வைத்துவிட்டு நேராக குளிக்கச் சென்றார்.

" என்ன கிருஷ்ணய்யரே! திடீர்னு வந்து இறங்கியாச்சு!" பக்கத்து வீட்டு சுப்புடுவின் கேள்விக்கு,

"சும்மாத்தான். கோவில் திறந்து இருக்கும் இல்லையா?" என்றார்.

" திறந்து தான் இருக்கும் இன்னும் கொஞ்ச நேரம். யாரு வரப்போரா! நீங்க மட்டும் தான் வந்துண்டு இருந்தேள்! எட்டு மாசமா அதுவும் இல்லை அதனால் பொதுவாக சீக்கிரம் நடை சாத்திடுவா. இனிமே நீங்க வந்தாச்சு இல்லையா கண்ணனுக்கும் துணை கிடைச்ச மாதிரி தான். " சிரித்துக்கொண்டே சொன்னார்.
கிராமத்து கோவில்கள் பொதுவாக அப்படித்தான். எப்போவாவது தான் கூட்டம் வரும்.

வேக வேகமாக கோவிலுக்குச் சென்றார் கிருஷ்ணய்யர். திரை போட்டிருந்தது கண்ணன் சன்னதியில். அமைதியாக அவர் இடத்தில் அமர்ந்துகொண்டார். ஒரு சில நிமிடங்களில் மணியோசையுடன் திரை விலகியது.

" ஓ அதான். என்னடா இன்னிக்கு குழந்தை ரொம்ப சந்தோஷமா இருக்கானேன்னு நினைச்சேன். நீங்க வரப்போறதுனால தானா!" சிரித்துக்கொண்டே கேட்டார் அர்ச்சகர்.

உள்ளே எட்டிப்பார்த்தார் கிருஷ்ணய்யர். அர்ச்சகர் விளையாட்டுக்கு சொன்னாரோ அல்லது நிஜமாகவே சொன்னாரோ அந்த மாயக்கண்ணனின் சிரிப்பு, கொழுகொழு முகத்தில் மெலிதாக எரியும் தீப வெளிச்சத்தில் எப்பொழுதையும் விட சற்று அதிகம்

இருப்பது போல் தான் தோன்றியது. கண்ணீர் மல்க நிற்கும் அவரை தொந்தரவு செய்ய விரும்பாமல் வெளியில் சென்று திண்ணையில் கோவில் சாவியுடன் அமர்ந்தார் அர்ச்சகர். இன்று சற்று நேரம் கழித்து தான் நடை சாத்துவோமே என்று சொல்லிக்கொண்டு திண்ணையில் காலை நீட்டி" கிருஷ்ணா" என்று கூறி கண்களை மூடிக் கொண்டார். உள்ளே அமைதியாக எட்டு மாதக்கதை பரிமாற்றம் நடந்து கொண்டிருந்தது.

இந்த கதையை எப்படி வேண்டுமானாலும் முடித்துக்கொள்ளலாம். இந்த கண்ணனிடம் சொல்லிவிட்டு அந்த கண்ணனுக்காக போராடச் செல்லலாம், அல்லது அவனுக்காக இங்கு தங்கி வேண்டிக்கொள்ளலாம், அல்லது திடீரென்று கோவில் இடிக்கப்பட்டு காளிங்கநர்த்தனன் பக்கத்து கோவிலில் குடி போகலாம். நான் சொல்ல முயன்றது ஒரு தனி மனிதனுக்கும் கோவிலுக்கும் உள்ள உறவு மட்டும் தான்.

கிராமத்து மக்களுக்கு கோவில் வாழ்கையின் ஒரு அங்கம். அத்தனை பேரும் குடி பெயர்ந்தும் என் தாத்தா மட்டும் எங்கள் தெருவில் தனியாக இருந்திருக்கிறார். "பெருமாள் ஒரு வேளையாவது சாப்பிடவேண்டமா" என்பார். இப்பொழுது மூன்று கால பூஜை நடக்கிறது என்றாலும் ஒரு காலத்தில் யாருமற்ற கோவிலாக அது இருந்தது உண்மை. அது போல் எத்தனையோ கோவில்கள் கிராமத்தில். ஒரு சில ஆத்மாக்களுக்காகவே கடவுளும், கடவுளுக்காகவே அந்த ஆத்மாக்களும். எதோ ஒரு சாதாரண குடியிருப்பு போல் கோவிலை கட்டுவதும் இடிப்பதும் அம்மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. தெம்பு இருப்போர் போர்க் கொடி எழுப்புவர், மற்றவர் தனக்குள்ளேயே மருகுவர். கோவிலும், கடவுளும் அவர்களும் ஒன்றே.

ஒன்றை இடித்தால் மற்றொன்று வீழத்தான் செய்கிறது.