தொடர்கள்
ஆன்மீகம்
முருக நாயனார்!! ​​​​​​​ஆரூர் சுந்தரசேகர்.

முருக நாயனார்!!
ஆரூர் சுந்தரசேகர்.

முருக நாயனார்!!


அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான முருக நாயனார் திருப்புகலூரில் வாழ்ந்த சிவனடியார்களில் முதன்மையானவர். சிறுவயது முதல் சிவபெருமான் மீதும், சிவனடியார் மீதும் பற்று கொண்டு வாழ்ந்து வந்தார். இத்தகைய சிறந்த சிவபக்தியுடைய முருக நாயனார் தினமும், அன்று மலர்ந்த பல வண்ண நறுமலர்களைப் பறித்து மாலைகள் தொடுத்து சிவபெருமானுக்குப் போட்டு வழிபடும் முறையைத் தவறாது செய்து வந்தார். மற்ற நேரங்களில் திருவைந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பார். சிவனடியார்களை மகிழ்வித்தால் எம்பெருமானே மகிழ்வார் என்று எண்ணிய முருகநாயனார் அடியார்களுக்காகச் சிறந்த மடம் ஒன்றைக் கட்டினார். இவரது திருமடத்துக்கு திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சிறுத்தொண்ட நாயனார், திருநீலநக்க நாயனார் போன்ற நாயன்மார்கள் வந்தருளியதோடு இவரது நண்பர்களாகவும் மாறினார்கள்.
திருத்தொண்டத்தொகை “முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன்” என்று இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

திருப்புகலூர் ஸ்தலத்தில் அவதரித்த முருக நாயனார்:


சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலமான தெய்வமணம் கமழும் திருப்புகலூரில் அந்தணர் குலத்தில் அவதரித்தவர் முருக நாயனார். இவர் இளமை முதற்கொண்டே இறைவனின் பாதகமலங்களில் மிகுந்த பற்றுடையவராய் வாழ்ந்து வந்தார். இவர் தினந்தோறும் சூர்யோதயத்துக்குமுன் எழுந்து நீராடி, கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ எனப்படும் நால்வகைப் பூக்களில் உரிய நறுமலர்களைப் பறித்து, அப் பூக்களால் கோவை, இண்டை, தாமம், மாலை, கண்ணி, பிணையல், தொடையல் எனப் பலவகைப்பட்ட திருமாலைகளாகத் தொடுப்பார். ஆறுகாலப் பூஜைக்கு ஏற்றவாறு தொடுத்த மாலையை திருப்புகலூரில் உள்ள வர்த்தமானீச்சரத் திருக்கோயிலில் உள்ள சிவபெருமானுக்குச் சாத்தி அர்ச்சனை செய்து, இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார்.

முருக நாயனார்!!

நாயன்மார்களுடன் நட்பு:


சிவபெருமானிடம் அளவற்ற பக்தி கொண்ட முருகநாயனார் திருப்புகலூர் வர்த்தமானீச்சரத் திருக்கோயிலுக்கு வரும் சிவனடியார்கள் வந்து தங்குவதற்குத் திருமடம் ஒன்றை திருப்புகலூரில் கட்டினார். (திருப்புகலூரில் வர்த்தமானேசுவரருக்கு எதிரே முருக நாயனாரின் சிலை ஒன்று இன்றும் உள்ளது. அவ்வூரில் உள்ள கல்வெட்டில் முருக நாயனார் கட்டிய திருமடத்தைக் குறிப்பிடும் வகையில் நம்பி முருகன் திருமடம் என்ற குறிப்பு காணப்படுகிறது) முருகநாயனார் கட்டிய திருமடத்திற்கு திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சிறுத்தொண்ட நாயனார், திருநீலநக்க நாயனார் ஆகிய நாயன்மார்களும் வந்து தங்கியிருந்து திருபுகலூர் சிவனாரை வழிபட்டுச் சென்றுள்ளனர்.
அனைவருடனும் அளவளாவி இறைபக்தியில் ஈடுபட்டதால் அவர்கள் முருகநாயனாரின் அன்பிற்கினிய நண்பர்களாகவும் மாறினர்.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் சிலநாட்கள் இங்கு வந்து தங்கியிருந்த போது தினமும் வர்த்தமானீச்சரத் திருக்கோயிலுக்கு திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரை அழைத்துச் செல்லும் பாக்கியம் பெற்றார். இதனால் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் முருகநாயனாரின் சிவபக்தியைக் கண்டு அவர் மேல் மிகுந்த அன்பு கொண்டார்.

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடன் பெருஞ்ஜோதியினுள் ஐக்கியமானார்:


திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்கு இனிய நண்பராகும் பெருமை பெற்ற முருக நாயனார் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் அழைப்பை ஏற்று, சீர்காழி அருகிலுள்ள திருப்பெருமணநல்லூரில் (ஆச்சாள்புரம்) திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் திருமணத்தில் கலந்து கொண்டார். அத்திருமணத்தின் போது எழுந்த பெருஞ்ஜோதியினுள் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடன் கூடிய அடியார் திருக்கூட்டத்துடன் பெருஞ்ஜோதியினுள் ஐக்கியமாகி முக்தி பெற்றார்.

முருக நாயனார்!!

குருபூஜை நாள்:


நாள்தோறும் அன்று மலர்ந்த பல வண்ண நறுமலர்களைப் பறித்து தன்னுடைய இடைவிடாத பூமாலை சாற்றும் தொண்டை செய்த முருக நாயனாரின் குருபூஜை வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று அவர் அவதாரம் செய்த ஸ்தலமான நாகப்பட்டினம் மாவட்டம் திருப்புகலூர் (நன்னிலத்தில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவில் திருப்புகலூர் தலம் இருக்கிறது. நன்னிலம், சன்னாநல்லூர், நாகப்பட்டினத்தில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன) அ/மி வர்த்தமானீஸ்வரர் திருக்கோயிலிலும், முக்தியடைந்த ஸ்தலமும் ஆன திருநல்லூர் பெருமணம் என்னும் ஆச்சாள்புரத்தில் (சிதம்பரத்துக்கு அருகில் உள்ள கொள்ளிடம் இரயில் நிலையத்திலிருந்து 6 கி. மீ. தொலைவில் உள்ளது.) உள்ள அ/மி சிவலோகத்தியாகர் திருக்கோயிலிலும் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.


வர்த்தமானீஸ்வரர் திருக்கோயிலில் முருக நாயனாருக்குத் தனிச்சந்நிதி உள்ளது. சிவலோகத்தியாகர் திருக்கோயில் முருகநாயனார் திருமேனி உள்ளது. இவரது குருபூஜை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

"திருச்சிற்றம்பலம்"

அடுத்த பதிவில் முனையடுவார் நாயனார்…!!