வயிற்றுக்குச் சோறிட வேண்டும்
சில ஆண்டுகளுக்கு முன் அலுவலக ரீதியாக ஓர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நான் செல்ல வேண்டி இருந்தது. அங்குச் சென்ற சிறிது நேரத்தில் மதிய உணவுக்கு மணி அடித்தது. வகுப்பில் இருந்து பட்டாம் பூச்சிகள் போல மாணவர்கள் வெளியே பறந்து வந்தனர். சத்துணவு ஊழியர் இருவர் பெரிய பாத்திரங்களை இறக்கி ஆவி பறக்கும் சோறும், குழம்பும், வேக வைத்த முட்டைகளும் பரிமாறத் துவங்கினர். அமைதியாக வரிசையில் நின்று மதிய உணவை வாங்கி கொண்டு பிள்ளைகள் சிறிய வட்டங்களில் அமர்ந்து உணவை ஆவலுடன் உண்ண தொடங்கினர். சாப்பிட்ட பிறகு குழாயடியில் மீண்டும் வரிசையில் நின்று கையையும், தட்டையும் கழுவி வருகையில் அவர்கள் முகத்தில் பசியாறிய தெளிவும், பொலிவும் கண்டேன்.
அந்தப் பள்ளியில் பயிலும் சில நூறு மாணவர்களின் இலவச மதிய உணவு திட்டத்தால் வயிறு நிறைந்ததைப் பார்க்கையில் நெகிழ்வாக இருந்தது.
தமிழக வரலாற்றில் இந்த மதிய உணவு திட்டம் ஒரு மைல்கல். கிராமப்புறங்களில் இதை ஒரு வரப்ரசாதமாகவே கருதி வருகிறார்கள். ஒரு வேளையேனும் சாப்பிட முடியாத ஏழைமக்கள், சத்துணவுக்கென்று பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதையும், அவ்வுணவு தரும் ஊக்கத்துடன் பிள்ளைகள் படித்து வருவதையும் கண் கூடாக காண முடிகிறது.
இன்று நேற்றல்ல, இலவச மதிய உணவு திட்டம் காமராஜர் காலத்திலேயே தமிழகம் முழுவதும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. 1957இல் துவக்கப்பட்ட இந்த திட்டம் கடந்த 65 ஆண்டுகளாக ஏழை மாணவர் கல்வியில் ஏற்றம் பெற உந்து சக்தியாக அமைந்துள்ளது. பின்னர் எம்ஜியார் அத்திட்டத்தை 'சத்துணவு திட்டமாக' மேம்படுத்தி எல்லா மாணவரும் நல்ல தரமான மத்திய உணவு பெற வழி செய்தார். தொடர்ந்து மதிய உணவில் முட்டை தரப்பட்டு, புரதம் மிக்க மதிய உணவு கிடைக்கிறது.
இந்த வாரத்தில் முதல்வர் இலவச காலை உணவுத் திட்டத்துக்கு கையெழுத்திட்டு ஆரம்பப்பள்ளியில் பயிலும் மாணவச் செல்வங்கள் காலையில் நிறைந்த வயிறுடன் வகுப்புக்கு செல்ல வழி செய்துள்ளார். சென்னை போன்ற நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் படிக்கும் பிள்ளைகள் நெடுந்தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. ஏழைக்குடும்பங்களில் அம்மாவும் வேலைக்குச் செல்ல வேண்டி உள்ளது. எனவே, பெரிதாக காலைச் சமையல் செய்ய இயலாத சூழல்.பல குழந்தைகள் வெறும் வயிற்றுடன் பள்ளிக்கு வருவதும், அதே நிலையில் மதிய உணவு வரை காத்திருந்து சாப்பிடுவதும் வாடிக்கை .
நல்ல உள்ளம் கொண்ட பல அரசு பள்ளி ஆசிரியைகள் காலையில் இணை உணவாக சத்து மாவு உருண்டைகள் போன்றவற்றை தம் சொந்த செலவில் வழங்கி வருவதும், பசியில் சோர்ந்து வாடி இருக்கும் குழந்தைக்கு தன்னுடைய உணவைக் கொடுப்பதும் வழக்கமாகி விட்டது. இந்நிலையில் முதல்வர் அறிவித்துள்ள இந்த இலவச காலை உணவு திட்டம் ஒரு மிகப் பெரிய வரம். இந்த ஆணையில் கையெழுத்திட்டதும் 'நான் நிறைவாக, மகிழ்வாக உணர்ந்தேன்' என்று முதல்வர் அறிவித்ததே இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை ,சிறப்பை கூறும் .
முதற்கட்டமாக 1-5 வகுப்பில் படிக்கும் மாணவருக்கு இந்த இலவச திட்டம் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது .இதில் 1545 அரசுப் பள்ளிகளில் படிக்கும் 1.14 லட்சம் மாணவர் பயன் பெறுவார்கள். இதற்காக 35.36 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 'முதல்வரின் காலை உணவு திட்டம்' என்ற பெயரில் வழங்கப்படும் இந்த திட்டத்தின் படி சூடான காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது .
உப்புமா ,கிச்சடி ,பொங்கல் என்னும் சுலப தயாரிப்பு உணவுகளே வழங்கப்படும். ரவை உப்புமா , சேமியா உப்புமா,கோதுமை உப்புமா என சாம்பாருடன் பரிமாறப்படும். அவ்வாறே கிச்சடி வகைகளும் தயாரிக்கப்படும். ரவா பொங்கல், வெண் பொங்கல் காய்கறி சாம்பாருடன் தரப்படும் . தவிர சிறுதானியத்தில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளும் காலை சிற்றுண்டியாக தரப்படும். ஒரு குழந்தைக்கு 150 கிராம் முதல் 200 கிராம் உணவும் ,60மிலி சாம்பரும் வழங்க வேண்டுமென்பது விதி.
காலி வயிற்றுடன் வகுப்பில் அமரும் குழந்தைக்குப் படிப்பில் கவனம் செலுத்த முடியாது . மதியம் வரை சோர்வுடன் இருக்கும் இந்த குழந்தைகளுக்கு புதிய வழி பிறந்துள்ளது . மாணவரின் உடல் எடை குறைவு ஊட்டச் சத்து குறைபாடு, கவனச் சிதறல் போன்றவை இந்த திட்டத்தால் களையப்பட்டு , இனி படிப்பில் முழு கவனம் செலுத்துவர். அவர் உடல்நலமும் ,மனநலமும் பாதுகாக்கப்படும் . ஆரம்ப பள்ளிகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் இந்த இலவச திட்டம் நடுநிலைப் பள்ளிகள் வரை வழங்கப்பட வேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பு .
வயிற்றுக்குச் சோறிட வேண்டும்-இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து-இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும் (பாரதி)
இந்த இலவச சிற்றுண்டி திட்டம் வெற்றி பெற நம் வாழ்த்துக்கள்
Leave a comment
Upload