தொடர்கள்
தொடர்கள்
எழுத்து அரசியல்- எழுத்து விஞ்ஞானி ஆர்னிகா நாசர்

20220629170208728.jpg

திறன்பேசியில் முகநூல் பக்கத்தை திறந்தேன்.

தஞ்சாவூர் ஹரணியின் ‘அம்மா’ கவிதை வாசித்தேன்.

கீரனூர் ஜாகிர் ராஜாவின் ஓவியத்தை கவியோவிய தமிழன் வரைந்திருந்தார்.

ரசித்தேன்.

கரடிக்குளம் ஜெயப்பாரதி பிரியாவின் நகைச்சுவையை வாசித்து சிரித்தேன்.

கே.பி.ஜனார்த்தனன் ஹாலிவுட் டைரக்டர்கள் பற்றி விவரக்குறிப்பு

எழுதியிருந்தார். ‘வாவ்’ என்றேன்.

ரிஷிவந்தியாவின் ஒற்றைவரி சிறுகதையை வாசித்து அயர்ந்தேன்.

அடுத்து எழுத்தாளர் பாரு அம்ருதாவின் பதிவு கண்ணில் பட்டது.

பாரு அம்ருதாவும் நானும் முன்னொரு காலத்தில் சங்கரலிங்கத்தின்

சிஷ்யர்களாய் இருந்தோம். உற்சாகபான உபயத்தில் நானும் அம்ருதாவும் இலக்கிய சண்டை போட்டுக் கொள்வோம்.

“நீ எழுதுறது சயின்ஸ்பிக்ஷனே இல்லை குப்பை!” என்பான்.

“நூறு வெளிநாட்டு எழுத்தாளர்களின் பெயர்களை மனப்பாடம் பண்ணிக்கிட்டு ‘நான்தான் தமிழ் இலக்கியத்துக்கு மட்டன் பிரியாணி போடுபவன்’ என பம்மாந்து பண்ணாதே. நீ வாயால் வடை சுடுபவன்!” என்பேன்.

“விடுங்கடா விடுங்கடா… அவனவன் அவனவன் வழில போங்கடா… இறுதி

வெற்றி யாருக்குன்னு பார்ப்பம்!” என்பார் சங்கரலிங்கம்.

கடற்கரை கூட்டம் முடிந்த ஒரு மாதத்துக்கு நான் பாருவுடன் பேசாமல்

இருப்பேன். பாரு போனில் கூப்பிடுவான்.

“டேய்… இன்னைக்கி கடற்கரை மீட்டிங் உண்டாம். பாஸ் வரச் சொன்னார்!”

“ஓகேடா டுபாக்கூர் எழுத்தாளா!”

“நேர்ல வா… உன் குரல்வளையை கடிச்சிடுறேன்!”

பாரு அம்ருதா பார்க்க சீனன் போல இருப்பான். மகுடி ஊதும் குரல்வளம்.

ஒருவரை பிடித்து விட்டால் ஏழாம் வானத்துக்கு உயர்த்தி பாராட்டுவான். பிடிக்கா விட்டால் பூமியின் மையப் பகுதிக்கு தாழ்த்தி மிதிப்பான். டிரஸ்ஸிங் சென்ஸ் உள்ளவன்.

தபால்தந்தி துறையில் அம்ருதா நல்லவேலையில் இருந்தான். நான் அவனை

ஒரு முறை நேர்காணல் செய்து பத்திரிகையில் வெளியிட்டேன். ‘தபால்தந்தி

துறையில் வேலை பார்ப்பதற்கு பதில் மாமா வேலை பார்க்கலாம்’ என அம்ருதா நேர்காணலில் சொல்லியிருந்தான். தொடர்ந்து அம்ருதா நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டான்.

பாரு அம்ருதா அசைவப்ரியன்.

இனிப்பான பொய்கள் பேசுவான். அவன் பேசுவது பொய் என்று அவனுக்கும்

தெரியும் எதிராளிக்கும் தெரியும். ஆனால் பொய்கள் ரசிக்கும்படி இருக்கும்.

“பாஸ்! நேத்தைக்கி ஒரு கேர்ள் பிரண்டோட தொடர்ந்து எட்டுமணி நேரம்

தாம்பத்யம் பண்ணினேன். வலிக்குது விடுடான்னு கேர்ள் பிரண்ட் கெஞ்சுனதினால விட்டுட்டேன். இல்லேன்னா கின்னஸ் உலகசாதனை நிகழ்த்தியிருப்பேன்!”

“நம்பிட்டேன்… நம்பிட்டேன்… நீ மனிதபிறவியே இல்லை தெய்வப்பிறவி!”

என்பார். சங்கரலிங்கம்.

பாரு அம்ருதாவின் இயற்பெயர் மெய்யழகன்.

பாரு கடந்த இருபது ஆண்டுகளில் ஐம்பது கட்டுரைகள் நான்கு சிறுகதைகள்

இரண்டு நாவல்கள் எழுதியிருப்பான். ஆனால் ‘பாரு தமிழ் இலக்கியத்தை இரட்சிக்க வந்த தேவமேய்யன்’ என்கிற மாயையை தன் வாய் மூலமும் அல்லக்கைகள் மூலமும் ராட்டச பலூன் ஊதி பறக்கவிட்டான்.

பாரு அம்ருதா வாசகர் பேரவைகள் முளைத்தன.

பல சீனியர் எழுத்தாளர்கள் ‘பாரு அம்ருதாதான் தங்கள் இலக்கியக் குருநாதர்’என அறிவித்தனர்.

யூரோப்பியன் கிளாஸெட்டில் உட்கார்ந்து கொண்டு பேட்டிகள் கொடுத்தான்

பாரு.

ஒரு தமிழ் சினிமா ரிலீஸ் ஆகிறது என்றால் பாரு அம்ருதாவின் விமர்சனம்

பார்த்து விட்டுதான் ரசிகர்கள் அந்த சினிமாவுக்கு போகலாமா வேண்டாமா

என்பதனை முடிவெடுத்தனர்.

எந்த கவிதை சிறுகதை நாவல் தொகுப்பு வெளியானாலும் பாரு அம்ருதாவின்

தரச்சான்று தேவை.

“நான் அலாஸ்கா சென்றிருந்த போது திடீரென இருட்டுக்கடை அல்வா

சாப்பிடும் ஆசை வந்து விட்டது. நண்பர்களிடம் சொன்னேன். 42மணி நேரம் பறந்த அல்வா என் வாய்க்கு வந்து சேர்ந்தது!”

“நான் ஆல்ப்ஸ் மலை உச்சியில் நின்றிருந்தேன். ஒரு ஜெர்மானிய பெண்

என்னை நெருங்கி ‘நீங்கதான டமில் ரைட்டர் பாரு அம்ருதா?’ என கேட்டாள். ‘ஆம்’என்றேன். ‘என்னை கட்டியணைத்து ஒரு நீண்ட ஆங்கில முத்தம் கொடுக்க முடியுமா?’ என்றாள். நானும் கொடுத்தேன்!”

“நோபல் பரிசு கமிட்டி என்னை தொடர்பு கொண்டு ‘உங்களுக்கு நோபல்

கொடுக்கலாம் என ஒரு மனதாக முடிவெடுத்துள்ளோம்’ என்றனர். ‘நோ நோ… எனக்கு குடுத்தா சில்லுண்டி எழுத்தாளர்கள் எல்லாம் ஏமாந்து போயிருவாங்க. அவங்களுக்கு குடுங்க’ என்றேன்…”

பாரு அம்ருதாவின் பொய்களால் தனிப்பட்ட விதத்தில் யாருக்கும் எந்த

நஷ்டமும் இல்லை. அதனால் பெரும்பாலானோர் அவனது பொய்களை ஆழமாக ரசிக்கவே செய்தனர்.

முகநூல் பதிவில் பாரு அம்ருதா என்ன போட்டிருக்கிறான் என பார்ப்போம்.

மை டியர் வாசக்ஸ்

நான் நலமென்றால் நீங்கள் அனைவரும் நலமே.

என்னுடைய ‘ஆயிரம் டிகிரி குளிர்’ வாசித்தீர்களா? வாசிக்காவிட்டால் நீங்கள்

உயிர் வாழ்வதே வீண்.

போனவாரம் நான் சீனா போயிருந்த போது சீன அதிபர் என்னை கட்டிபிடித்து

ஆனந்தக் கண்ணீர் வடித்தார். ‘அம்ருதா! நீங்க பெய்ஜிங்லயே தங்கிருங்க. உங்களுக்கு

4BHK அபார்ட்மென்ட்டும் இரு அழகிய சீன பெண்களும் பத்துகோடி சீன யுவன்களும் பரிசளிக்கிறேன்’ என்றார். ‘நோ தாங்க்ஸ் ஐ பீல் மோர் கம்பர்ட்டபிள் இன் டமில் நாடு’ என கூறி அவரின் ஆபரை மறுத்து விட்டேன்.

சரி விஷயத்துக்கு வருவோம்.

நான் வீட்டில் ஆறு டாபர்மேன்களை வளர்க்கிறேன். பராமரிப்பு செலவு மாதம்

ஒரு லட்சம் ஆகிறது.

பிபிஸியிலிருந்து வந்தார்கள்- என் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக

எடுக்க வேண்டுமென்று. அவர்களுக்கு நேட்டிவிட்டியோடு எடுக்க தெரியாது. அதனால் மறுத்து விட்டேன். நானே என் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக எடுக்க துணிந்து விட்டேன் இது ஒரு 4D ஆவணப்படம். செலவு இரண்டு கோடி ஆகும்.

இன்ன பிற செலவுகள் உள்ளன.

ஒரு மகன் கையில் காசில்லை என்றால் அம்மாவிடம்தானே கேட்பான்?

உங்களை விட்டால் எனக்கு வேறு யார் இருக்கிறார்கள்? வேறு எவரிடமும் வாங்கி உங்களுக்கு கண்ணியக்குறைவு ஏற்படுத்த நான் விரும்பவில்லை.

கீழே என் வங்கிக்கணக்கு விவரத்தை போட்டுள்ளேன்.

பணத்தை அள்ளி வீசுங்கள். ஆயிரம் ரூபாய்க்கு குறைந்து யாரும் அனுப்ப

வேண்டாம்.

திரு. ஆ.வே. மெய்யழகன்

சிறுசேமிப்பு கணக்கு என் ------------

கனரா வங்கி

ராதா நகர் கிளை

குரோம்பேட், சென்னை 600044

ஐஎப்எஸ் கோட் : CNR---------------

பின்னூட்டங்கள் மிகைத்திருந்தன.

* டாபர்மேன்களை வளர்ப்பதற்கு பதில் கழுதைகளை நீங்கள் வளர்க்கலாமே?

கழுதை பால் கறந்து விற்று கோடீஸ்வரன் ஆகலாம். எங்களிடம் கையேந்த

வேண்டிய அவசியமில்லை.

* யாரை பார்த்து கழுதை வளர்க்க சொல்ற? தலைவருக்காக நாங்க உயிரையும் கொடுப்போம். திரும்பி பார்க்காமல் ஓடி போயிரு.

* மாஸ்டர்! நீ ஒரு வார்த்தை சொல்லு. நான் உனக்கு என் வீட்டையே எழுதி

வைக்கிறேன். தற்காலிகமாக உனக்கு ரூபாய் பத்தாயிரம் அனுப்பி உள்ளேன்.

வாங்கிக்க வச்சுக்க. உன் வாழ்க்கை சரித ஆவணப்படத்ல கிளுகிளுப்பு காட்சிகள் இருக்கா? எட்டுமணிநேரம் பத்துமணிநேரம் தாம்பத்யம் செய்யும் ரகசியத்தை உன் ஆவணப்படத்ல வை.

* உங்களின் ‘ஷாஜஹானின் 13வது காதல்’ படித்ததிலிருந்து உங்கள் மேல்

பைத்தியம் ஆகிவிட்டேன். புருஷனை விட்டுவிட்டு ஓடி வந்தால் என்னை ஏற்றுக் கொள்வீர்களா? உங்கள் வங்கி கணக்கில் நாற்பதாயிரம் போட்டுள்ளேன்.

* எழுத்தாளர்களின் எழுத்தாளனே! தமிழ் இலக்கியத்துக்கு சிக்கன் மோமோ

ஊட்டுபவனே! உன் பிரஞ்ச்தாடி பார்த்து கவிழ்ந்துபோய் கிடக்கிறேன் நான். உன் டாபர்மேன் நாய்களை கூட்டிக்கிட்டு என் வீட்டுக்கு வந்திரு. உன்னை ராஜா மாதிரி பாத்துக்கிறேன். உன் வங்கி கணக்கில் இருபதாயிரம் போட்டுள்ளேன்.

பின்னூட்டங்கள் அனுமன் வால் போல் நீண்டிருந்தன.

மூன்று மாதம் கழித்து…

பாரு அம்ருதாவின் புதியபதிவை பார்த்தேன்.

அதில்-

மை டியர் வாசக்ஸ்! நான் நலமென்றால் நீங்கள் நலமே…

நலிவுற்ற எழுத்தாளர்களுக்கு எதாவது நிதிஉதவி செய்ய வேண்டுமென நீண்ட நாள் யோசனை எனக்கு.

அவர்களுக்கு உதவ வேண்டும் என கேட்டால் சில்லரைக்காசுகள் தான் விழும்

பெரிய அளவில் நோட்டுகள் விழாது.

அதனால் எனக்கு நிதி கேட்டு பதிவு போட்டேன். எனது ஆவணபடத்தை எடுக்க

ஃபாக்ஸ் நிறுவனம் என்னுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. எனது வளர்ப்பு நாய்களை

கவனிக்க என் மனைவியின் ஆறு இலக்க சம்பளம் போதும்.

கடந்த மூன்று மாதங்களில் 6245000/-பணம் திரண்டுள்ளது. ஆறு நலிவடைந்த

எழுத்தாளர்களை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். ஒவ்வொருவருக்கும் 1041000/- நிதி உதவி அளிக்க உள்ளோம்.

நிதி அளிக்கும் விழா விவரங்கள் இனி வரும் நாட்களில்.

“டேய் பாரு அம்ருதா! ஒரு அரசியல்வாதி அரசியல் பண்றது பெரிய

விஷயமில்லை. ஆனா ஒரு எழுத்தாளர் நீ பண்ற பாரு… சூப்பர் அரசியல்… சிம்ப்ளி

எக்ஸ்ட்ராடினரி…

எழுத்து அரசியல் பண்றதில நீ ஒரு பெர்வர்ட்டட் ஜீனியஸ்… நடத்துராஜா உன்

ராஜாங்கத்தை!” அவன் இருக்கும் திசை நோக்கி மானசீகமாக திரும்பி கும்பிட்டேன்.