அறுபத்து மூன்று நாயன்மார்களில் குறிப்பிடத்தக்கவர் குறுநில மன்னரான நரசிங்கமுனையரைய நாயனார். இவர் சிவபெருமான்
மீது பெரும்பக்தியும், திருநீறு அணிந்த சிவனடியார்கள் மீது பெருமதிப்பும் கொண்டிருந்தார். தம் நாட்டில் இருந்த சிவாலயங்களில் வழிபாடுகள் ஏதும் குறைவின்றி நடைபெற்று வருமாறு கவனித்துக் கொண்டார். வீரத்தில் சிறந்த இவர் பகைவரிடமிருந்து நாட்டினை காத்துச் சிறப்புறப் பேணி வந்ததுடன், சிவனடியார்களை வணங்கி தொண்டுகள் பல புரிவதைப் பெரும் பேறாகக் கருதி வந்தார். எம்பெருமானால் தடுத்தாட் கொள்ளப்பட்ட சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்க்கும் அரும் பெரும் பேற்றைப் பெற்றவர்.
"மெய்யடியான் நரசிங்க முனையரையற் கடியேன்"– திருத்தொண்டத் திருத்தொகை.
குறுநில மன்னர் நரசிங்கமுனையரைய நாயனார்:
பழங்காலத்தில் திருமுனைப்பாடி நாடு பல்வேறுப் பெயர்களில் அழைக்கப்பட்டுவந்தது. அவை நடுநாடு, சேதிநாடு, சனதாதநாடு என்பவை ஆகும். திருமுனைப்பாடி நாட்டை முனையரையர் என்னும் வீரம் செறிந்த மன்னர்கள் ஆண்டனர். அதனால், முனைப்பாடி என்னும் பெயர் வந்தது. அந்த முனையரையர் என்னும் மரபிலே திருநாவலூரைத் தலைநகராகக் கொண்டு திருமுனைப்பாடி நாட்டை ஆட்சி செய்தவர் நரசிங்கமுனையரைய நாயனார். வீரத்தில் சிறந்த இவர் பல மன்னர்களைப் போரில் வென்றது மட்டுமல்லாமல், சிவனடியார்களை வணங்கி தொண்டுகள் பல புரிவதைப் பெரும் பேறாகக் கருதி வந்தார்.
நரசிங்கமுனையரைய நாயனார் சிவபெருமான் மீது பெரும்பக்தியும், திருநீறு அணிந்த சிவனடியார்கள் மீது பெருமதிப்பும் கொண்டிருந்தார். தம் நாட்டிலிருந்த அனைத்து சிவாலயங்களில் வழிபாடுகள் ஏதும் குறைவின்றி நடைபெற்று வருமாறு கவனித்துக் கொண்டார். கோயில் செல்வங்களைப் பெருக்கி, அவற்றை அற வழியிலும் ஆகம வழியிலும் செலவிடப் பணித்தார். அடியார்களின் குறிப்பறிந்து தொண்டாற்றினார். அடியார்களுக்குப் பொன்னும் பட்டும் வழங்கி சிறப்பிக்கும் வழக்கம் கொண்டிருந்தார்.
திருநீறு அணிந்ததற்காக மரியாதை தந்த நாயனார்:
நரசிங்கமுனையரைய நாயனார் சிவனடியார்களுக்குச் சேவை செய்வதே இறைவனுக்குச் செய்யும் மிகப் பெரும் தொண்டு என்று கருதி வந்தார். ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரத்தின் போதும் சிவனுக்குப் பூஜை செய்து, சிவனடியார்களுக்கு உணவும், பட்டாடையும் வழங்குவார். அதனோடு நூறு பொன் காசுகளும் சிவனடியார்களுக்குத் தருவார். ஒரு திருவாதிரைத் திருநாளன்று நரசிங்கமுனையரைய நாயனார் வழக்கம்போல் அடியார்களுக்குப் பொன்னும், பட்டாடைகளும் வழங்கிக் கொண்டிருந்தபோது நெற்றியில் திருநீறு அணிந்த சிவனடியார்கள் பலர், நரசிங்கமுனையரைய நாயனாரிடம் பரிசு பெறப் பூஜைக்கு வந்து இருந்தார்கள். வந்திருந்த அடியார்கள் கூட்டத்தில் ஒருவர் தீராத நோயால் தாக்கப்பட்டு எல்லோரும் வெறுக்கத் தக்க மேனியைக் கொண்டவராய் இருந்தார். ஆனாலும் அவர் திருநீறு அணிந்து இருந்தார். அவரைக் கண்டதும் அங்கிருந்தோர் எல்லோரும் அவரை விட்டு சற்று விலகி நின்றனர். அவர் மட்டும் அக்கூட்டத்தில் தனித்து விடப்பட்டார்.
அந்த சிவனடியாரை நரசிங்கமுனையரைய நாயனார் கண்டார். திருநீறு அணிந்த அடியாரின் புறத்தோற்றத்தைக் குறித்து எந்த விதமான கவலைகளும் கொள்ளாமல், திருநீற்றுக்கு மதிப்பளித்து சிவனடியாராக ஏற்றுக் கொண்டு அவரைக் கரங்குவித்து வணங்கி ஆரத்தழுவி அகமகிழ்வோடு வரவேற்றார். அவருக்கு நூறு பொன் காசுக்குப் பதிலாக அந்த அடியாருக்கு இருநூறு பொன் காசுகள் கொடுத்து, அவரை வணங்கி, இன்சொற்சொல்லி, விடை கொடுத்து அனுப்பி வைத்தார்.
சுந்தரமூர்த்தி நாயனாரின் வளர்ப்புத் தந்தை:
ஒரு சமயம் மன்னனான நரசிங்கமுனையரைய நாயனார் திருநாவலூர் பெருமானைத் தரிசித்து விட்டு வீதிவலம் வரும் பொழுது வீதியில் சிறு தேர் உருட்டி விளையாடும் சுந்தரமூர்த்தி நாயனாரைக் கண்டார். சுந்தரமூர்த்தி நாயனாரின் அழகில் தன் உளம் பறிகொடுத்து தம்முடைய வளர்ப்புப் பிள்ளையாகக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் உதித்தது. அவரை வளர்க்கும் பாக்கியத்தைப் பெற்றோர்களான சடையநாயனாரிடமும் இசைஞானியாரிடமும் வேண்ட, சடைய நாயனாரும் அவர் வேண்டுதலுக்கு இணங்கி நம் மகன் அரண்மனையில் வளரவேண்டும் என்பது திருநாவலூர் பெருமானின் விருப்பம் போல என்று அவருடன் தங்கள் மகனை முழு மனதோடு தத்துக் கொடுத்து, அனுப்பி வைத்தார்கள்.
நரசிங்க முனையரைய நாயனார் சுந்தரமூர்த்தி நாயனாரைத் திருமணப் பருவம் அடையும்வரை சீறும் சிறப்புமாக வளர்த்தார்.
சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்:
திருநீற்றுக்குப் பேரன்புடையவராய்த் திகழ்ந்த நரசிங்க முனையரைய நாயனார் சிவனடியார்களுக்கு பணிசெய்தும், சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்க்கும் பேறு பெற்றமையாலே, சிவபெருமான் திருவடி நீழலை அடைந்து, மீளா நிலை பெற்றார்.
குருபூஜை நாள்:
சிவனடியார்களுக்கு பணிசெய்தும், சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்க்கும் பேறு பெற்ற நரசிங்கமுனையரைய நாயனாரின் குருபூஜை புரட்டாசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் அவர் அவதாரம் செய்த ஸ்தலமும், முக்தியடைந்த ஸ்தலமும் விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அ/மி. பக்தஜனேசுவரர் திருக்கோயிலில் (சென்னை - திருச்சி டிரங்க் ரோடில் விழுப்புரம் தாண்டி உளுந்தூர்பேட்டைக்கு முன்பாக, மடப்பட்டு தாண்டி, பிரதான சாலையில் உள்ள திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரிந்து எதிரே இடப்பக்கமாகச் செல்லும் பண்ருட்டி சாலையில் 2-கி. மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்) மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வூரை மக்கள் திருநாம நல்லூர் என்று அழைக்கின்றனர். இந்த கோயிலின் உள்பிரகாரத்தில் நரசிங்க முனையரையர் பூஜித்த மிகப்பெரிய சிவலிங்க மூர்த்தம் உள்ளது. இவரது குருபூஜை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
“திருச்சிற்றம்பலம்”
அடுத்த பதிவில் நின்றசீர் நெடுமாற நாயனார்…!!
Leave a comment
Upload