புழல் சிறை.
வெளிவாசலுக்கு வெளியே ஏழெட்டுபேர் செண்டை மேளம் அடித்துக் கொண்டிருந்தனர்.
நான்கு கரகாட்டக்காரிகள் சுழன்று சுழன்று ஆடினர்.
சிறைச்சாலை சம்பிரதாயங்களை முடித்துவிட்டு அன்பறிவாளனும் அவரது தாயார் பேரானந்தம்மாளும் வெளியே வந்தனர்.
அன்பறிவாளனின் ஒரு மாத தாடி எண்பது சதவீதம் நரைத்திருந்தது. அன்பறிவாளன் ஒரு அரசியல்தலைவரை சதி செய்து வன்கொலை செய்த வழக்கில் கைதானவர். கொலையில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுக்கு வெடிமருந்து வாங்கிக்கொடுத்ததாக இவர் மீது குற்றசாட்டு. அரசியல் தலைவர் கொலைவழக்கில் 41பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களில் 12பேர் தற்கொலை செய்து கொண்டனர். 29பேரில் ஏழு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அந்த எழுவரில் ஒருவர்தான் அன்பறிவாளன். பின் தூக்குதண்டனை ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டது. 31வருட சட்டநீதி மன்ற போராட்டங்களுக்கு பின் அன்பறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
மூன்று பெண்கள் அன்பறிவாளனுக்கு ஆரத்தி எடுத்தனர். ஆரத்தி எடுத்த பெண் அன்பறிவாளனின் நெற்றியில் வெற்றித்திலகமிட்டாள்.
ஒரு கார் தரைதேய்த்து நின்றது. அதிலிருந்து இரு ஆளும் கட்சி பிரமுகர்கள் இறங்கினர்.
நடக்கும் ஆடல்பாடல் கொண்டாட்டத்தை கூடியிருந்த கூட்டம் ரசித்தது.
“என்னப்பா… அன்பறிவாளன் நிரபராதி தவறாய் தண்டித்து விட்டோம் என சொல்லி நீதிமன்றம் விடுதலை பண்ணிருச்சா?”
“இல்லைப்பா… செய்த குற்றத்துக்காக 31வருட தண்டனை போதும் என கூறிதான் விடுதலை!”
“மக்களோட மனநிலை தலைகீழா மாறிப்போச்சு. முந்தியெல்லாம் குடிப்பவனை ‘குடிகாரப்பய’ எனக்கூறி ஊரை விட்டு ஒதுக்கி வைப்பர். இப்ப குடிகாரனை வீராதிவீர பராக்கிரமனாக பாவிக்கிறார்கள். ஊழல் குற்றவாளியை ‘முடிஞ்சவரைக்கும் கொள்ளையடிச்சிருக்கான் நமக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே’ என அங்கலாய்க்கிறார்கள். க்ரைம் எது வேணாலும் செய். கையில் காசு வச்சிருக்கியா? உன்னை மதிப்போம் என்கிறார்கள் மக்கள்!”
காரில் இருந்து இறங்கியவர்கள் “அன்பு சார்! உங்களை பாக்க முதலமைச்சர் காத்திருக்கிறார்!”
ஒரே நேரத்தில் இருபது ஒலிம்பிக் தங்கபதக்கங்களை பெற்ற முகக்குறிப்புடன் காரில் ஏறினார் அன்பறிவாளன். உடன் பேரானந்தம்மாளும் ஏறினார்.
பத்துக்கும் மேற்பட்ட கார்கள் முன் பின் தொடர அன்பறிவாளனின் கார் பறந்தது.
முதலமைச்சர் மாளிகை.
முதலமைச்சரின் அறைக்கு நடந்த அன்பறிவாளன் வழியில் நின்றிருந்த அமைச்சர்களுக்கு கைகொடுத்து வாழ்த்து பெற்றார்.
‘‘சபாஷ்டா புலிக்குட்டி!” மால்முருகன் வாய்திறந்து பாராட்டினார்.
முதலமைச்சரின் அறைக்குள் தாயும் மகனும் பிரவேசித்தனர்.
முதலமைச்சர் இருகைகளையும் விரித்து வரவேற்றார். “திராவிடர் பூமிக்கு இன்று வைரம் பதித்த தங்கநாள்!”
பொன்னாடையை போர்த்தி இறுக கட்டிக் கொண்டார்.
“பேரானந்தம்மாள்! நீங்கள் ஒரு புறநானூற்றுதாய். முப்பத்தியோரு வருடம் போராடி மகனை மீட்டு விட்டீர்கள்.
ஒரு பிளாட்டின மோதிரத்தை எடுத்து அன்பறிவாளனின் விரலில் பூட்டினார் முதலமைச்சர். “இது என் அன்பு பரிசு!”
“என் விடுதலைக்கு ஆயிரம் பேர் சொந்தம் கொண்டாடுவர் ஆனால் முழு முதற்காரணம் நீங்கதான்…”
அழகிய புன்னகை வெடித்தார் முதலமைச்சர்.
“அடுத்தவாரம் உங்க கட்சில சேந்துவிடவா?”
“வேணாம் வேணாம்… வெறும் வாயை மெல்லும் மீடியாவுக்கு அவல் கொடுத்தமாதிரி ஆய்டும். நீங்கள் பாட்டுக்கு அம்மாவின் பாசபெருமழையில் நனையுங்கள் தகுந்த சமயம் வரும்போது நானே கூறுகிறேன்!”
“மகிழ்ச்சி!”
முதலமைச்சர் பொன்னாடை போர்த்துவதை பிளாட்டின மோதிரம் அணிவித்து விடுவதை கட்டி அணைத்துக் கொள்வதை ஸ்டில் மற்றும் விடியோ கேமிராக்கள் விழுங்கின.
அம்மாவும் மகனும் காருக்கு திரும்பினர்.
அகிமுக கட்சி தலைமையகம்.
இரட்டைத்தலைவர்கள் மழப்பாடி ராஜாராமும், ஓ. செந்தூர் பாண்டியும் வரவேற்றனர்.
“வெற்றிதிலகம் இட்டு வந்திருக்கும் மாவீரன் தம்பி அன்பறிவாளனை வரவேற்கிறோம்!” அம்மாவும் மகனும் புன்னகைத்தனர்.
இருவரும் ஆளுக்கொரு சால்வை அணிவித்தனர்.
‘‘முதலமைச்சர் உங்களுக்கு மோதிரம்தானே போட்டார்? நாங்க பத்து பவுன் தங்கச்சங்கிலி போடுறோம்!” மழப்பாடி தங்கச்சங்கிலியை அணிவித்தார்.
“என் விடுதலைக்கு ஆயிரம் பேர் சொந்தம் கொண்டாடுவர். ஆனால் முழு முதல்காரணம் நீங்கதான். உங்க அரசு சட்டசபை கொண்டு வந்த தீர்மானம்தான் என் விடுதலைக்கு பெரிதும் உதவுச்சு!”
“நன்றி மறக்காம இருந்தா சரி!”
“அடுத்தவாரம் உங்க கட்சில சேந்துவிடவா?”
“அவசரப்படாதிங்க. பரபரப்பு அடங்கட்டும்!”
அம்மாவும் மகனும் காருக்கு திரும்பினர்.
மகிமுக கட்சி தலைமையகம்.
தலைவர் கைகோ மந்தகாச புன்னகை வெடித்து வரவேற்றார். “வாடா என் தமிழ்நாடு சே குவாரா…”
கைகோவின் வெடி சிரிப்பால் கட்டடமே வெலவெலத்தது.
“செந்தமிழ் நாட்டு தமிழச்சியே… முதலையின் வாய்க்குள் போன உயிரை மீட்டு கொண்டு வந்து விட்டாயே… உன் தீரத்தை கண்டு தலை வணங்குகிறேன்!”
பேரானந்தம்மாள் நாணி கோணினார்.
கைகோ ஒரு வீரவாளை பரிசளித்தார்.
கேமிராக்கள் போன்ஸாய் மின்னல்களை துப்பின.
அன்பறிவாளனை கட்டியணைத்து ஆனந்தக்கண்ணீர் வடித்தார் கைகோ.
“உன்னை கட்டியணைப்பது அலெக்ஸான்டரை, செங்கிஸ்கானை, கஜினி முகமதை கட்டியணைப்பது போன்ற பிரமையை தருகிறது!”
கிழக்கு கடற்கரை சாலையில் அந்த பங்களா அமைந்திருந்தது.
இடதுகையால் முழுவாயை நீவி விட்டுக்கொண்டார் பூமான். மூக்கை வலது கையால் தேய்த்துக்கொண்டார்.
“வா தம்பி வா… உன்னை பற்றி அண்ணன் பெரியஅளவில் என்னிடம் பேசி இருக்கிறார்… என்னுடைய மேடைபேச்சு பதிவுகளை தொடர்ந்து ஆறுமணி நேரம் கேட்டு விட்டுதான் உச்சநீதிமன்றம் உன்னை விடுதலை செய்திருக்கிறது. இரவு இருந்து ஆமைக்கறி வறுவல் சாப்பிட்டுவிட்டு போ!”
“இருக்கட்டும் அண்ணன்!”
ஒரு துப்பாக்கி பரிசளித்தார் பூமான்.
“அய்யய்யோ துப்பாக்கியா?”
“பயப்படாதே. இது பொம்மை துப்பாக்கிதான்!”
“மகிழ்ச்சி அண்ணன்!”
“என் கட்சியில் சேர். உனக்கு பெரிய பதவிதருகிறேன்!”
“யோசித்துக் கூறுகிறேன் அண்ணன்!”
தப்பித்தோம் பிழைத்தோம் என தாயும் மகனும் ஓடினர்.
அடுத்த ஒரு வாரத்தில்-
தாயும் மகனும் தமிழ்நாட்டில் உள்ள 769கட்சிகளின் (லெட்டர் பேடு கட்சிகள் சேர்த்து) தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அனைவரிடமும் அவர்கள் ஒரே வசனத்தை பேசினர்.
“என் விடுதலைக்கு ஆயிரம் பேர் சொந்தம் கொண்டாடுவர். ஆனால் முழு முதல் காரணம் நீங்கதான்!”’
“பேசாம உங்க கட்சில சேந்துவிடவா?”
தாயும் மகனும் பார்க்காத இரண்டே கட்சிகள் கிஜேபி மற்றும் சாங்கிரஸ்.
தமிழக சாங்கிரஸ் அன்பறிவாளன் விடுதலையை எதிர்த்து வாய்கட்டி போராட்டம் நடத்த போவதாய் அறிவித்தது.
தாயும் மகனும் கிஜேபி பிராந்திய அலுவலகத்துக்குள் பிரவேசித்தனர்.
அறிக்கை அரசியல் பண்ணும் கிஜேபி மாநிலதலைவர் வானமாமலை இறுக்கமாக இருந்தார். அவரை பார்த்து அன்பறிவாளன் “வணக்கம் தலைவரே! தமிழ்நாட்டின் எதிர்கால முதலமைச்சரே!”
இறுக்கம் கலைந்து வானமாமலை “வாங்க அன்பறிவாளன்!”
கொண்டு வந்திருந்த பொன்னாடையை வானமாமலைக்கு அணிவித்தார் அன்பறிவாளன்.
“என் விடுதலைக்கு ஆயிரம் பேர் சொந்தம் கொண்டாடுவாங்க. ஆனா முழு முதல் காரணம் கிஜேபியின் மத்திய அரசாங்கம்தான். நீங்க இம்னு ஒரு வார்த்தை சொல்லுங்க உங்க கட்சில சேந்திடுறேன்!”
கடைசி வார்த்தையை கேட்டதும் குதூகலித்து கும்மாளித்தார் வானமாமலை.
“அடுத்த வாரம் ஒரு விழாவச்சு உங்களை கட்சில சேத்துக்கிறேன். தம்பி… உங்க வயசு என்ன?”
“அம்பது!”
“எல்லாகட்சிகாரனும் உங்ககிட்ட விழுந்துவிழுந்து பேசுரானே… எவனுக்காவது உங்களுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்க தோணுதா? நீங்க என்ன ஆளுக?”
சொன்னார் அன்பறிவாளன்.
“நம்ம மகளிர் அணி செயலாளர் கூட உங்க ஆளுகதான். அவங்க மகளை உங்களுக்கு கட்டி வச்சிடுறேன்!”
“உங்க திட்டத்துக்கு செயலாளர் அம்மாவும் அவங்க மகளும் சம்மதிக்கனுமே?”
“நான் சொன்னா சம்மதிச்சிடுவாங்க!”
“ரொம்ப சந்தோஷம்!”
“உங்க கல்யாணத்தன்னைக்கே நீங்க நம்ம கட்சில சேந்துரலாம். நீங்கதான் நம்ம கட்சியோட விடுதலை பறவைகள் மறுவாழ்வு செயலாளர்!”
-சாங்கிரஸ் கட்சி தலைமையகத்துக்கு எதிரே இருபது சாங்கிரஸார் வாயில் துணி கட்டி அன்பறிவாளனின் விடுதலைக்கு எதிராக கோஷமிட்டுக் கொண்டிருந்தனர்.
அன்பறிவாளனும் பேரானந்தம்மாளும் காரிலிருந்து இறங்கி சாங்கிரஸ் மாநிலதலைவரிடம் ஓடினர். “தலைவரே! என் விடுதலைக்கு ஆயிரம் பேர் சொந்தம் கொண்டாடுவர். ஆனால் முழுமுதல் காரணம் உங்க கட்சியின் பாகுல் காந்திதான்!”
சாங்கிரஸ் மாநிலதலைவருக்கு பொன்னாடை போர்த்தினார் அன்பறிவாளன்.
“எதுக்கு போராட்டம்?”
“போராட்டமா? அன்பறிவாளன் விடுதலையை வரவேற்று மாபெரும் பேரணி நடத்துரோம்… ஹிஹி..”
வழிந்தார் சாங்கிரஸின் மாநிலதலைவர்.
Leave a comment
Upload