உலகை விட்டு 42 ஆண்டுகளுக்கு முன்னமே பெரியம்மை (smallpox) ஒழிக்கப்பட்டாலும், அதே குடும்பத்தை சேர்ந்த வைரஸ் தான் குரங்கு அம்மை வைரஸ் தற்போது உலகம் முழுவதும் மெதுவாக பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த குரங்கு அம்மை , சின்ன அம்மை போன்று உயிர்க்கொல்லி அல்ல என்பது நமக்கு ஆறுதல் அளிக்கும் செய்தி. "இன்னும் கொரோனாவே முழுசா ஒழிஞ்ச பாடில்லை.. இதுல தக்காளி ஜுரம், குரங்கு அம்மை னு விதவிதமா பீதியை கிளப்புறீங்க கொஞ்சம் இடைவெளி விட்டு அடிங்கப்பா !" என நம் மக்கள் குறைப்படுகிறார்கள். செய்திகளில் வெளியாகும் குரங்கு அம்மை பாதித்தவர்களின் புகைப்படங்கள் சிறிது பயத்தை ஏற்படுத்தினாலும் ரிலாக்ஸ் மக்களே .. உலக மக்கள் தொகை 700 கோடியில் மொத்தமாக 550 நபர்களுக்கு தான் குரங்கு அம்மை தொற்று இப்போதைக்கு இருக்கிறது.
அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த நோய் பரவிக் கொண்டிருந்தாலும் இந்தியாவில் இன்னும் வரவில்லை. இந்திய அரசும் குரங்கு அம்மை பரவாமல் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள் . தமிழகத்திலும் இந்த நோய் பரவாமல் தடுக்க சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் வழிக்காட்டல்களின் கீழ் தமிழக பொது சுகாதாரத் துறை தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி தற்போது 20 நாடுகளுக்கு மேல் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறதாக தெரிகிறது.பரவினாலும் கட்டுக்குள் வைக்க முடியும் என்பதும் நல்ல செய்தி..
இந்த வைரஸினால் பாதிக்கப்பட்ட விலங்குகள் மனிதர்களை கடிப்பது அல்லது கீறுவது போன்றவைகளால் பரவுகிறது. மனிதர்களுக்கு இடையே மூச்சு காற்று மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்ட மனிதரிடம் சுவாசக் காற்று படும்படி முகத்தோடு முகம் நெருக்கமாக இருப்பது அல்லது பாதிக்கப்பட்டவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற செயல்களால் இந்த வைரஸ் எளிதாக பரவ முடிகிறது.
உலகினில் குரங்கு அம்மை வைரஸ் முதன்முதலில் 1958 இல் நோய்வாய்ப்பட்ட குரங்குகளிடம் தான் கண்டறியப்பட்டது. 1970 இல் முதன்முறையாக மனிதனை தாக்கியது . அதன்பின் உலக நாடுகளில் பல முறை இந்த தொற்றால் மனிதர்கள் பாதிக்கப்பட்டனர் . குறிப்பாக விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு இந்த குரங்கு அம்மை பரவியது . இதுவரை ஆப்ரிக்காவில் அதிக அளவில் மக்கள் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கடந்த காலங்களில் இஸ்ரேல் அமெரிக்கா சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் இந்த தொற்று பரவியது குறிப்பிடத்தக்கது.
சமீபகாலங்களில் என்று பார்த்தால் 2003 ல் அமெரிக்காவில் 47 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டனர். அமெரிக்க அரசு , குரங்கு அம்மை தடுப்பூசி மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கைகளால் அந்த சமயம் நோயை கட்டுக்குள் கொண்டுவந்தது . உலகிலேயே அமெரிக்கா மட்டும் தான் குரங்கு அம்மைக்கு தடுப்பூசி வைத்திருக்கிறார்கள்.
குரங்கு அம்மை வைரஸால் பாதிக்கப்பட்டால் முதல் 2 வாரங்களுக்கு எந்தவித பாதிப்பும் வெளியே தெரியாது. பின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளாக
காய்ச்சல் , தலைவலி ,உடல் வலி ,சோர்வு , மயக்கம் ஆகியவை ஏற்படுகின்றன. அதன்பின் உடலில் தீவிரமாக பரவும் போது தோல் முழுவதும் தடிப்புகள் தோன்றி சிவப்பு நிற கொப்புளங்கள் ஏற்படுகின்றன.
கைகால்கள் முகம் முக்கியமாக வாய் பகுதி மற்றும் உடலின் மறைவிட பகுதிகளில் இக்கொப்புளங்கள் தோன்றுகின்றன. சீழ் பிடித்த கொப்புளங்களாகவும் மாறுகின்றன. நோயின் தாக்கம் 2 முதல் 4 வாரங்கள் வரை இருந்து பின் குணமாகி விடுகிறது.
தற்சமயம் உலகில் பரவி வரும் குரங்கு அம்மை வைரஸ் லேசான அளவிலேயே உடலில் பாதிப்புகளை ஏற்படுத்துவதால் இறப்புகள் இல்லை .
தடுப்பூசியின் உதவியுடன் 1980 களிலேயே பெரியம்மை ஒழிக்கப்பட்டாலும் இன்னும் சில நாடுகள் பெரியம்மைக்கான தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்திருக்கின்றன . பெரியம்மை வைரஸும் குரங்கு அம்மை வைரஸும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது. எனவே பெரியம்மை தடுப்பூசி இந்த குரங்கு அம்மைக்கு எதிராக 85% பாதுகாப்பு கொடுக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அப்படி ஒரு வேளை குரங்கு அம்மை கொரோனா வைரஸ் போன்று உலகளவில் விஸ்வரூபம் எடுத்தால் இந்த பெரியம்மைக்கான தடுப்பூசி நம்மை காப்பாற்றும். அதே சமயத்தில் உலகம் முழுவதும் கொரோனோ போன்று குரங்கு அம்மை பரவ வாய்ப்பில்லை என்பதால் இப்போதைக்கு எந்த கவலையும் வேண்டாம் என்பதே நல்ல செய்தி.
Leave a comment
Upload