தொடர்கள்
கதை
  சக ”வாசம் ” - பா.அய்யாசாமி

20220419170238113.jpg
டாஸ்மாக் கடை வாசலில் அய்யாசாமியும், அவரது பால்யக்கால நண்பருமான சதாசிவமும் கையில் மது பாட்டிலோடு நின்றுக்கொண்டு இருந்ததாக வந்த தகவலைக் கேட்டதிலிருந்து, மிக அதிக கோபத்தில் இருந்தாள் ருக்கு அய்யாசாமி மீது.

என்ன புதுப் பழக்கம் இது? அவரே கூப்பிட்டிருந்தாலும் இவருக்கு ஒரு இது வேண்டாமா ? அவர் மேலை நாட்டிலிருந்தவர், வருவார்,போவார் அவரின் பழக்க வழக்கம் எல்லாம் மாறி இருக்கும், நாம இந்த ஊரிலே ஜாகை இருக்கோமே,நாலு பேர் பார்த்தால் என்ன நினைப்பார்கள், இப்ப என்ன இவருக்கு கஷ்டம் ஆயிடுத்து என்று குடிக்க போயிருக்கார், வரட்டும் பிராமணன் என காந்திருந்தாள்.

வரும்போதே அய்யாசாமி,போட்டியிருந்த வெள்ளை வேட்டி சட்டை எல்லாம் மஞ்சளாகி இருந்தது,மதுவின் வாடை அவர் மீது அடித்துக் கொண்டியிருந்தது.

எதுவும் கேட்காதே,இப்போ.எனக்குத் தெரியும், நான் பண்ணினது தப்புதான்,எனக்கு தலையை வலிக்கிறது என சொல்லிவிட்டு போய் படுத்துக் கொள்ள முயன்றார் அய்யாசாமி.

ஒரே நாற்றம், புதிதாக இருந்ததோடு, அருவருப்பாகவும் இருந்தது ருக்குவிற்கு,

பாவம் இந்த மாதிரி குடிக்கின்ற மக்களின் வீட்டாரை நினைத்ததும், அரசே இந்தக் காரியத்தை செய்கிறதே என மனம் சங்கடப் பட்டது, வேட்டி சட்டையெல்லாம் மாற்ற வைத்து,மனசுக்கு கேட்காமல் தைலத்தை எடுத்துண்டுப் போய் அவருக்கு தடவிவிட்டாள் ருக்கு.
வீட்டு பணிப்பெண் பத்மாவிற்குபோன் செய்த ருக்கு, இது மாதிரி ஆனால் என்ன செய்யனும் என கேட்க,காலையிலே எழுந்ததும் அதையே மீண்டும் சாப்பிடச் சரியாகும், இது ( அவளது கணவர்)அதைத்தான் செய்யும், என்றதும், அது என்கிட்டே இல்லையே. என ருக்கு சொன்னதும், அய்யாவிற்கு இல்லாததா நானே கொண்டு வந்து தருகிறேன் என சிறிதளவு தன் கணவன் வைத்திருந்ததில் கொஞ்சம் பிராந்தியை எடுத்து வந்து ருக்குவிடம் கொடுத்து விட்டுப். போனவளிடம், இது வெளியே யாருக்கும் தெரியக் கூடாது பத்மா, ஜாக்கிரதை என கோரிக்கையும்வைத்தாள்.

இப்படி பண்ணிட்டு வந்து இருக்கே இந்த மனுஷன், இவருக்கு இத்தனை நாள் இல்லாமல், இது என்ன புது பழக்கம், எல்லாவற்றுக்கும் அந்த சதாசிவம்தான் காரணம் வரட்டும் நாளை ஆத்திற்கு மன்னி என்று கூப்பிட்டுண்டு ...அவனுக்கு இருக்கு என்றவள். கதவை அடைத்து படுத்து. விட்டாள்.

விடிந்தும், விடியாமலும் எழுந்த ருக்கு, அய்யாசாமியை ,அண்ணா! அண்ணா! மெல்ல.எழுந்திருங்கோ,இந்தாங்கோ இதை சாப்பிடுங்கோ. என எழுப்ப, எழுந்து கையில் வாங்கியவர், என்னடீ இது கருமம்? என்று திட்டியபடி, என்ன இது? என்றார்.

ஏண்ணா? நேற்று இனித்தது. இன்றைக்கு கருமமா? எனக் கேட்டாள்.

என்னடீ பிரச்சினை காலங்கார்த்தாலே உனக்கு ?என்றதும், எல்லோரும் குடித்து விட்டுதான் சண்டைக்கு வருவா, நீங்க. தெளிந்தபின் சண்டைக்கு வரேளா ? இதை எப்படி திருத்துவேன்? எல்லாம் என் தலையெழுத்து என புலம்பினாள்.

ஏய்! இப்ப என்ன ஆயிட்டு என அழுகிறாய் நீ ? என கேட்டார் அய்யாசாமி.

ராத்திரி எப்படி நீங்க ஆத்திற்கு வந்தாள் தெரியுமோ ? கேட்டாள் ருக்கு.

ஆட்டோவிலே வந்தேன்,என்றார் தெளிவாக..

ஆட்டோவிலேதான் வந்தேள், ஆனால் அலங்கோலமாக ஆடிண்டு வந்தேள், அது தெரியுமோ?

தெரியும், என்ன பண்றது என் சேர்க்கை அப்படி என்றவரிடம், அவர்தான் கூப்பிட்டாருன்னா

நீங்க ஏன் போனேள்?

நான் எங்கே டீ போனேன்? நீ என்ன நினைத்து கேட்கிறாய் என்று எனக்குப் புரிகிறது.

இதெல்லாம் தெளிவாக. இருக்கே..அப்போ தெரிந்தே தான் இப்படி பண்ணினேளா என கேட்டாள்.

ஒன்றும் நடக்கலை, கடைத்தெரு போய் வரும் போது,டாஸ்மாக்கில் வாசலில் சதாசிவம்தான் கைகளில் பல மது பாட்டிலோடு ஒரு மாதிரியாக நின்றிருந்தான், ஏற்கனவே குடித்தும் இருந்தான்,

இந்த சமயத்தில் அவன் வண்டி எடுத்து ஓட்டினால், அவன் நிலை என்னாகும் என யோசித்து அவனை கைத்தாங்கலாக பிடிக்க, கீழே தடுமாறி இருவரும் விழுந்து விட, பின் தூக்கி என் தோள்களில் அவன் கையைப் போட்டப்படி இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்தபடி நடக்க, பக்கத்தாத்து மாமா பார்த்து
விட்டு தலையில் அடித்துக் கொண்டே சென்றார்,அப்போதே தெரியும் உனக்கு செய்தி போயிருக்கும் என, பிறகு ஆட்டோவில் அமர்த்தி அழைத்து வந்தேன்,
வரும் வழியில் என் மேலே வாந்தி எடுத்து ஒரே அமர்க்களம். உதவி செய்யப் போன இடத்தில் உபத்திரவம் போல ஆயிடுத்து நேற்று இரவு, என நொந்தபடி சொன்ன அய்யாசாமி.ஆனால் இப்படி ஒரு கற்பனை நீ செய்வாய் என நான் எதிர் பார்க்கலை என்றார்.

அந்த மாமா அப்படி சொன்னதும் நான் முதலில் நம்பலைண்ணா எனக்குத் தெரியாதா? என் ஆத்துக்காரர் அப்படி இல்லை என்று,ஆனால் நீங்க வந்த கோலத்தைப் பார்த்தால் ஒரிஜினல் குடிகாரன் மாதிரியே இருந்தேள் போங்கோ, என கலாய்க்க, ஆமாம், உனக்கேதுடி அந்த கருமம், காலையிலே வாங்கிவச்சியிருந்தே ?

எல்லாம் பத்மா. கைங்கர்யம்தான்,என்றாள். ருக்கு.

செய்தி அவள் வரைக்கும் போயிடுத்தோன்னோ ?! பேஷ்...நாளை அக்ரஹாரமே என்னைப்பார்த்து சிரிக்கப்போறது, என்ற அய்யாசாமி,இனி சதாசிவன் சகவாசமே வேண்டாம் என முடிவெடித்திருந்தார்,

குடிகாரன் பேச்சு மட்டுமல்ல விடிந்தால் போவதற்கு, குடிகாரனின் நண்பனின் பேச்சும்..

மன்னி,என ருக்குவை அழைத்தபடி சதாசிவம் வரவே,

ஏண்டா இப்பத்தான் தெரிந்ததா எங்காத்திற்கு வழி ? என்றார் அய்யாசாமி,அவனிடம் நட்பு காட்ட..

இல்லைன்னா,இப்போதான் தெளிந்து இருக்கும் என்றாள் ருக்கு.

இல்லே மன்னி, ஊருக்கு திரும்பி வந்தேனில்லே, அந்த மகிழ்ச்சியில் தான்....நேற்று என தலையை சொறிந்தான்.

உண்மையான மகிழ்ச்சி உன் ஆத்தில் உனக்காக இத்தனை நாள் காத்திண்டு இருந்த உன் மனைவி மக்கள் கிட்டேதான் இருக்கு, போலியான சிறிது நேர உடல் போதைக்காக உன் உடலையும், உன் உறவுகளையும் கெடுத்துக் கொண்டு இருக்கின்றாய்,இத்தனை நாள் நீ வெளிநாட்டில்இருந்தாய், உன் ஆத்தைப் பற்றிய சின்ன கவலை உனக்கு இருக்குமானால் இந்தக் காரியம் நீ செய்யத் துணிவாயா, போதும், நிறுத்தி விடு! திருந்தி விடு! என அன்புக் கட்டளையாகச்சொன்னாள்.

மன்னி,என்னை மன்னிச்சுடுங்கோ! என வெட்கி நின்றான் சதாசிவம்.

டாஸ்மாக்கிற்கு ஒரு கஸ்டமர் குறைந்து போனார்...!