தொடர்கள்
ஆன்மீகம்
அணில் செய்த உதவி... - டாக்டர் எம்.ஏ.வேங்கடகிருஷ்ண்ன்

20210525194539836.jpeg

இராமபிரான் இலங்கைக்குச் செல்வதற்குக் கடலில் அணை கட்டியபோது, அணில் உதவி செய்தது என்ற செய்தி வால்மீகி ராமாயணத்திலோ அல்லது கம்பராமாயணத்திலோ கூறப்படவில்லை. வேறு ராமாயணங்களிலும் இந்தச் செய்தி கூறப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் தொண்டரடிப்பொடி ஆழ்வார், அருளிச் செய்த திருமாலை என்கின்ற திவ்யப்ரபந்தத்தில் 27-ம் பாடலில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஒரு சிறிய பிராணியான அணில் செய்த தொண்டைக் கூட நான் இறைவனுக்குச் செய்யவில்லையே என்று அவர் வருத்தத்துடன் கூறுவதாக அந்தப் பாடல் அமைந்துள்ளது.

“குரங்குகள் மலையை நூக்கக் குளித்துத்தாம் புரண்டிட்டோடித் தரங்கநீர் அடைக்கலுற்ற சலமிலா அணிலும் போலேன்’’ என்று அவர் அருளிச் செய்துள்ளார். கடலை அடைப்பதற்காகக் குரங்குகள் மலையைத் தூக்கிக் கொண்டு சென்றபோது, கடல்நீரில் குளித்து (மணலில் புரண்டு) கடலை அடைக்க முயன்ற கள்ளத்தனம் இல்லாத அணிலைப் போலவும் நான் செய்யவில்லையே என்கிறார் இப்பாடலில்.

இதன் விளக்கமாவது: குரங்குகளானவை, கடலை அடைப்பதற்காக மலையைத் தூக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தன. அப்போது அணிலானது கடல் நீரில் முழுகி விட்டு, அங்கே இருந்த மணலில் புரண்டதாம். அப்போது அதன் உடலில் மணல்துகள்கள் ஒட்டிக் கொண்டனவாம். உடனே அணில் மீண்டும் சென்று கடலில் மூழ்கியபோது, அந்த மணல்துகள்கள் கடலில் விழுந்து விட்டனவாம். இப்படியே பலமுறை செய்தால் கடல் முழுதும் மணல் நிறைந்து கடலைத் தூர்த்துவிடலாம் என்று எண்ணி... அணில் கடலில் முழுகுவது, மணலில் புரள்வது, மறுபடியும் கடலில் முழுகுவது என்று இப்படியே தொடர்ந்து செய்து கொண்டிருந்ததாம். இவ்வாறு எத்தனை முறை செய்தாலும் கடலை அடைத்துவிடமுடியாது என்றாலும் கூட, அணில் இப்படித் தொடர்ந்து செய்தது, இராமபிரானுக்கு நம்மாலான உதவியைச் செய்ய வேண்டும் என்ற அதனுடைய தொண்டு செய்யும் உள்ளத்தைக் காட்டுகிறதல்லவா? அப்படிக்கூட நான் ஏதும் செய்யப் பெற்றிலேனே என்கிறார் தொண்டரடிப்பொடி ஆழ்வார் இந்தப் பாடலில். அணில் பற்றிய இந்தச் செய்திக்கு இந்தப் பாடலைத் தவிர வேறு ஆதாரம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.