தொடர்கள்
கவர் ஸ்டோரி
அமைச்சரும் அணிலும்.. - ஜாசன் (மூதத பத்திரிகையாளர்)

20210525193617278.jpeg

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமைச்சர்கள் கருத்து சொல்வதற்கெல்லாம் வாய்ப்பில்லை.கடந்த அதிமுக ஆட்சியில், அமைச்சர்களுக்கு கருத்து சுதந்திரம் இருந்தது என்பதால்... அமைச்சர்கள் இஷ்டத்துக்கு கருத்து சொல்வார்கள். அதைத் தொடர்ந்து அவர்கள் பேட்டி, கேலி - கிண்டலுக்கு சிக்கி நிறைய மீம்ஸ் வரும்.

திமுக ஆட்சி வந்ததிலிருந்து தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு இருந்தது, இப்போதும் இருக்கிறது என்பது உண்மை. பொதுவாக திமுக ஆட்சியில், மின்வெட்டு முக்கிய இடத்தை பிடிக்கும் என்பது கடந்தகால அனுபவம். சென்ற வாரம் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மின்வெட்டு பற்றிய கேள்விக்கு, நிறைய புள்ளி விவரங்களை சொன்னார்... தமிழ்நாட்டில், மின் கம்பிகள் மீது விழும் நிலையில் 83 ஆயிரத்து 553 மரக்கிளைகள் அகற்ற வேண்டிய நிலையில் இருக்கிறது என்று சொன்னார். அவர் சுமார் இவ்வளவு என்று தோராயமாக சொல்லாமல்... 83 ஆயிரத்து 553 என்று அவரே நேரில் போய் மரக்கிளைகளை எண்ணியது போல் இருந்தது, அவர் சொன்ன புள்ளிவிவரம். கூடவே அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் எதுவும் நடக்கவில்லை என்று மாத கணக்கையும் ஆதாரப்பூர்வமாக சொன்னார்.

அதன் பிறகு... இந்த ஒன்பது மாதங்களாக செய்யாத பராமரிப்பு பணியை, ஜூன் 19ஆம் தேதி முதல் பத்து நாட்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் ஒட்டுமொத்த சக்தியை பயன்படுத்தி, இந்த பராமரிப்பு பணியை செய்யப்போகிறோம். மின் பராமரிப்பின் போது, மின்வெட்டு ஏற்படும். இந்தத் தகவலை முதல்வருக்கும் தெரிவித்துவிட்டேன் என்று சொன்னார். மின்வெட்டு ஏற்படும் நேரம், இடம் போன்றவற்றை முன்கூட்டியே அறிவிக்கப்படும் என்றும் சொன்னார். அப்படி தெள்ளத்தெளிவாக சொன்னவர்... இன்னொரு முறை நிருபர்களை சந்திக்கும்போது தான்... மின் கம்பிகள் மீது அணில்கள் ஓடுவதால் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி, அதனாலும் மின் தடை ஏற்படுகிறது என்று சொன்னார். அவர், முதலில் மின்தடை காரணம் பற்றி தெள்ளத் தெளிவாக சொன்னதெல்லாம் அடிபட்டுப் போய், அமைச்சர் சொன்ன அணில் கருத்துதான் மீம்ஸ் ஆக மாறி, அவரை காய்ச்சி எடுத்து விட்டார்கள் மீம்ஸ் கிரியேட்டர்ஸ். எப்படித்தான் யோசிக்கிறார்கள் என்று ஆச்சரியப்படும் அளவுக்கு, மீம்ஸ் மேலும் மீம்ஸ் என்று இன்றுவரை வந்து கொண்டிருக்கிறது.

2021052519364719.jpeg

டாக்டர் ராமதாஸ் தனது பங்குக்கு அவரது ட்விட்டர் பக்கத்தில், நக்கலாக... மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின்தடை ஏற்படுகிறது, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விஞ்ஞானம்.. விஞ்ஞானம்! சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின்தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும்... ஒருவேளை சென்னையில், அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ என்று கிண்டலடித்து இருக்கிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் ஒன்பது மாதங்களாக மின் பராமரிப்பு பணி நடைபெறாமல் மரக்கிளைகள் வெட்டப்படாமல், அவை மின்கம்பிகளில் உரசுகின்றன. அணில் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகள் மீது படுவதாலும் கூட சில இடங்களில் மின் தடை ஏற்படுகிறது என்று இதையும் ஒரு காரணமாக, நான் சொன்னேன். ஆனால், அணில் மட்டுமே காரணம் என்று நான் சொன்னது போல் சித்தரிக்கும் டாக்டர் ராமதாஸ், தன் கூட்டணி கட்சியான அதிமுகவிடம்... ஏன் பராமரிப்பு பணிகளை செய்யவில்லை என்று கேட்டிருக்கலாம். அணில்களும் மின்தடை ஏற்படுத்துகின்றன என்பது உலகில், மின்வாரியம் சந்திக்கும் சவால். இதை அவர் தேடிப் படித்து பார்த்திருக்கலாம். பறவைகள், அணில்கள், கிளைக்கு கிளை தாவும் போது மின்தடை ஏற்படுகிறது. களப்பணியாளர்கள், உயிரை பணையம் வைத்து சரி செய்து வருகிறார்கள் என்று விளக்கம் சொல்லி இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.