தொடர்கள்
கவர் ஸ்டோரி
அணிலே.. அணிலே.. - தில்லைக்கரசி சம்பத்

20210525193722107.jpeg

அணில்கள் விலங்கினத்தை சேர்ந்த “கொறினி” வகை ஆகும். பெரும்பாலும் மரத்தில் தான் வாழ்க்கை நடத்தும். 4 கோடி ஆண்டுகளுக்கு முன்னமே பூமியில் தோன்றியது.. அப்போது மனிதர்களும் இல்லை... மின்சாரகம்பிகளும் இல்லை... மின்சாரமும் இல்லை... இது அமெரிக்கா, யூரேசியா, ஆப்ரிக்காவை பூர்வீகமாக கொண்டது. உலகம் முழுவதும், 365 அணில் ரகங்கள் உள்ளன.

இந்தியாவில் இருக்கும் அணில்கள், வெளிர் சாம்பல் நிறத்தில் முதுகில் மூன்று வெள்ளை கோடுகள் கொண்டது. முன்பற்கள் சற்று பெரியதாக கூர்மையாக இருப்பதால், மரங்களில் இருக்கும் பழங்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கிறது. இப்போது மரங்களும் இல்லை.. பழங்களும் இல்லை... எனவே கரண்ட்கம்பிகளை கடித்து நாசமாக்குகின்றன‌ என்றும் சொல்லலாம். ஏனெனில், எதையாவது கடிக்காமல் இருந்தால் முன்புற்கள் நீண்டு, அரை அடிக்கு வளர்ந்து.. எதையுமே உண்ணமுடியாமல் போய், பட்டினியால் இறந்துவிடும். “அதற்கு எங்க கரண்ட் கம்பிதான் கிடைத்ததா?” என்று நம்மால் அணிலுடன் சண்டைக்கு போக முடியாவிட்டாலும்... புதிதாக பதவி ஏற்றிருக்கும் தமிழக அரசு, நாட்டில் அடிக்கடி ஏற்படும் மின்தடைக்கு அணில்களே காரணம் என்று குற்றம் சொல்கிறார்கள்.

“ராமர் பாலம் கட்ட உதவி செய்த எங்களை பார்த்து, மின்தடைகளுக்கு காரணம் என்றா சொல்கிறீர்கள்? காக்கைகள் கூட உட்காருகிறதே.. சமயங்களில் குரங்குகளை கூட காண்கிறோம்.. எப்படி எங்களை மட்டும் குறை சொல்கிறீர்கள்??” என்று அணில்கள் சண்டைக்கு வந்தாலும் வரும். அந்த அளவுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியையும், அணிலையும் வைத்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் போட்டு கலாய்த்து கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்கள். ஆறு ஆண்டுகளை தங்கள் வாழ்நாளாக கொண்ட இந்த அணில்கள், அவைகளின் பெயர் “அ” என்ற எழுத்தில் தொடங்குவதால், அதிமுக சார்புடையது என்றும்... அதனாலேயே அதிமுக ஆட்சியின் போது மின்சார கம்பிகளை அவ்வளவாக கடிக்காமல் விட்டுவிட்டு, திமுக பதவி ஏற்றவுடன் முழு வெறியுடன் கரண்ட் கம்பிகளை கடித்து வருவதாக, திமுக உடன்பிறப்புகள் வருத்தப்பட்டு கூறுவதாக கேள்வி.

ஒருமுறை அமெரிக்காவில், நாடு முழுதும் மின் தடை ஏற்பட காரணமாகிவிட்டதாம் அணில். இதனாலேயே அங்கே மின்சக்தி அமைப்புகளில் “அணில் தாக்குதல்களின்” முறைகளை பகுப்பாய்வு செய்ய APPA என்ற தொடர் கண்காணிப்பு தரவை உருவாக்கியுள்ளார்கள். ஒவ்வொரு ஆண்டிலும் மே-ஜூன் மற்றும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில், அணில்கள் மின்சார கம்பிகளை மிக அதிகமாக சேதப்படுத்தும் காலமாக இருக்கிறது.

ஒரு ஆய்வின்படி, உலகெங்கிலும் அமைந்துள்ள மின்சார மற்றும் இணையதள உள்கட்டமைப்புக்கு, உண்மையான அச்சுறுத்தல் அணில்களிடமிருந்து தான் வருகிறது. எதிரி நாடுகள் அல்லது அமைப்புகளால் ஒரு நாட்டின் மேல் தொடுக்கப்படும் இணையப் போர்களைக் காட்டிலும், இந்தச் சாதாரண அணில்கள் மின்சார இணையதள உள்கட்டமைப்பிற்கு, அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.