புது நகர்ப்பிரவேசம்..!
தன்னுடைய நாற்பத்து ஏழாவது வயதில் (1639-ம் ஆண்டில்) ஆக்ராவிலிருந்து டெல்லிக்கு மொகலாய சாம்ராஜ்யத்தின் தலைநகரை மாற்ற முடிவெடுத்தார் ஷாஜஹான். அதற்குமுன் ஆட்சிபுரிந்த எவருக்கும் இல்லாத அளவுக்குக் கற்பனாசக்தி வாய்க்கப் பெற்றிருந்த சக்ரவர்த்திக்கு ஆக்ரா நகரம் பிடிக்கவில்லை. ‘‘பெரிய அளவில் ஓர் ஊர்வலம் செல்வதற்கு வசதியாக அகலமான வீதிகள்கூட இங்கு இல்லையே..!’’ என்று அரசர் அவ்வப்போது அலுப்புடன் சொல்வதுண்டு.
தவிர, ஆக்ரா கோட்டையும் அரண்மனையும் மன்னரின் கண்களுக்குச் சிறியதாகத் தெரிந்தன. இந்தியாவின் தலைநகராக இயங்கத் தகுதி பெற்றது - தொன்றுதொட்டு சிறப்பு வாய்ந்த டெல்லிதான் என்று கருதினார் ஷாஜஹான். டெல்லிக்குப் போய்ப் பார்த்தாலே, ஹுமாயூனும் ஷெர்ஷாவும் கட்டிப் பழசாகிப் போயிருந்த கோட்டைகளும் மாளிகைகளும் பாதுஷாவின் முகத்தைச் சுளிக்க வைத்தன.
‘‘வேறு வழியில்லை. டெல்லியில் யமுனை நதிக்கரையில் ஒரு புத்தம் புதிய தலைநகரை உருவாக்குங்கள்!’’ என்று ஆணையிட்டார் ஷாஜஹான். உடனே பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் களத்தில் குதிக்க, ஒன்பதே ஆண்டுகளில் கம்பீரமாக உயிர் பெற்றெழுந்தது ஷாஜஹானாபாத் - இன்றைய (பழைய) டெல்லி!
ஷாஜஹான் புதிய தலைநகரை உருவாக்கத் தேர்ந்தெடுத்த இடம் - நதியோரமாக இருந்த பிரமாண்டமான காட்டுப் பகுதி. 1639-ம் ஆண்டு, ஏப்ரல் 29-ம் தேதி ஆஸ்தான ஜோதிடர்களால் நல்ல நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட, டெல்லி கவர்னர் கைராத்கான் ‘ஆரம்பிக்கலாம்!’ என்று ஆணையிட, கரகோஷம் விண்ணைப் பிளந்தது. உஸ்தாத் ஹீரா, உஸ்தாத் ஹமீத் என்னும் இரு கட்டடத் தொழிலாளிகள், புதிய கோட்டைக்காக நிலத்தைத் தோண்டுவதற்காக மண்வெட்டியை உயர்த்திக் கீழே இறக்கினார்கள் (குடிசைகள் அமைத்து, அந்த இரு தொழிலாளிகள் தங்கியிருந்த இடத்தில், பிற்பாடு உருவான இரு தெருக்கள் இன்றளவும் அவர்கள் பெயரில் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது!).
இரு வாரங்கள் கழித்து ஷாஜஹான், தன் கைகளால் புதிய அரண்மனைக்கான அடிக்கல்லை நாட்டினார். கூடவே, அஸ்திவாரத்துக்கான பெரும் பள்ளத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் சிலர் கொண்டு வரப்பட்டு, அவர்களின் தலைகள் சீவப்பட்டு, உடல்கள் பள்ளத்தில் வீசப்பட்டன. சம்பிரதாயமாகத் தரப்பட்ட இந்தப் பலிகளைத் தொடர்ந்து, மளமளவென்று வேலை துவங்கியது. புதிய நகரின் வெளிப்புறக் கோட்டைச் சுவரும் (சுமார் நாலு மைல் நீளம்) உள்ளே 124 ஏக்கரில் அரண்மனையும் ஏக காலத்தில் உயரத் தொடங்கின.
நகரின் பிரமாண்டமான கடைவீதியான சாந்தினி சௌக், ஷாஜஹானின் அருமை மகள் ஜஹனாராவின் நேரடி மேற்பார்வையில் உருவான ஒன்று. ஷாஜஹான் காலத்தில் சாந்தினி சௌக் கடைவீதியில் அமைக்கப்பட்ட விதவிதமான கடைகளின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து ஐந்நூற்று அறுபது.
1648, ஏப்ரல் 19-ம் தேதியன்று ஷாஜஹான் யமுனை நதியில் படகில் பயணித்து, கிழக்குப் பக்கமாக செங்கோட்டையின் பின்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முழு வெள்ளியால் ஆன கதவைத் திறந்துகொண்டு அரண்மனைக்குள் நுழைந்தபோது, நகரெங்கும் ஆரவாரம், வாணவேடிக்கைகள்! தர்பாரில் மெல்லிய தங்க இழைகளால் ஆன நட்சத்திரங்களைத் தொங்கவிட்டு, ஒரு சொர்க்கலோகத்தையே உருவாக்கியிருந்தார்கள். பீரங்கிகளும் அதைத் தொடர்ந்து வாத்தியங்களும் முழங்க, சக்ரவர்த்தி கம்பீரமாக நடந்து சென்று, ஆயிரக்கணக்கான வைரக்கற்களால் இணைத்து உருவாக்கப்பட்ட, பிற்பாடு உலகப் புகழ்பெற்ற மயிலாசனத்தில் அமர்ந்தார். கோமேதகம், முத்துக்கள், வைரம், நீலம் போன்ற கற்களைக் கொண்டு செய்யப்பட்ட அழகிய மயில் பொம்மை ஒன்றைச் சிற்பிகள், அரியணையின் உச்சியில் பொருத்தியிருந்தார்கள் (பிற்பாடு ஆஸ்தான ஓவியர்கள் இரண்டு மயில்களாக வரைந்தது வேறு விஷயம்!).
புதிய அரண்மனையில் சக்ரவர்த்தி குடிபெயர்ந்ததை மக்கள் தொடர்ந்து பத்து நாட்கள் பெரும் விழாவாகக் கொண்டாடினார்கள். ஊர்வலம், நாடகம், இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் என்று டெல்லி அல்லோலகல்லோலப்பட்டது.
ஆனால்…
நாம் சென்ற அத்தியாயத்தில் குறிப்பிட்டதைப் போல் இரண்டாம் முறையாக தட்சிணப் பிரதேசத்துக்கு வைஸ்ராயாகச் சென்றிருந்த ஔரங்கசீப்புக்குப் புதிய தலைநகரம் - ஷாஜஹான் ஆட்சியில் இருந்தவரைக்கும் - ராசியில்லாமல் போனது. 1653-லிருந்து 1658 வரை செங்கோட்டையிலிருந்து தெற்கு நோக்கிச் சென்ற பல கடிதங்கள் இளவரசரை அவமானப்படுத்தும்படியாகவே அமைந்தன. அவ்வப்போது அன்னையின் கல்லறையை வணங்கப் போய்விட்டு, அங்கே தாராவும் நண்பர்களும் கூடித் திட்டங்கள் போடும் செய்தியும் வந்து கொண்டிருந்தது. பொங்கியெழுந்த எரிச்சலை வெளிக்காட்டாமல் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமை காத்தார் ஔரங்கசீப்.
மீர்ஜும்லா - கில்லாடியான ஒரு பாரசீக வைர வியாபாரி. இந்தியாவுக்கு வந்த அவர், தெற்கே கோல்கொண்டாவில் (ஹைதராபாத்) குடியேறினார். கோல்கொண்டாவின் மன்னர் குதுப் ஷாவுக்கு நெருக்கமான நண்பராகி தளபதியாகவும், பிறகு பிரதம அமைச்சராகவும் உயர்ந்தார் அவர். தனிப்பட்ட அரண்மனை, பரிவாரம், குதிரைப்படை என்றெல்லாம் வைத்துக்கொள்ளும் அளவுக்கு மீர்ஜும்லாவின் செல்வாக்கு உயர்ந்தது.
சுல்தானுக்காகப் படை திரட்டிக்கொண்டு சென்று, கர்நாடகத்தின் பல பகுதிகளைக் கைப்பற்றிய ஜும்லா, ‘‘நானே ஏன் மன்னராகக் கூடாது… எனக்கு என்ன குறைச்சல்..?’’ என்று சொல்லிக் கொண்டார். தான் வசப்படுத்திய கர்நாடகப் பகுதிகளைக்கொண்டு, ஒரு தனி ராஜ்யம் அமைக்கும் அளவுக்குப் போய்விட்டார்! விழித்துக் கொண்டு கலவரத்துக்கு உள்ளான கோல்கொண்டா சுல்தான், மீர்ஜும்லாவைச் சரணடையச் சொல்லி ஆணை அனுப்பினார். கூடவே, கோல்கொண்டாவில் இருந்த ஜும்லாவின் குடும்பத்தைப் பிணைக் கைதிகளாகச் சிறைப்பிடித்து வைத்தார். ‘இதென்ன கலாட்டா?!’ என்று திகைத்த ஜும்லா, உடனே ஔரங்கசீப்பிடம் உதவி கோரினார். இதற்காகவே காத்திருந்ததைப் போல மகிழ்ந்து போன மொகலாய இளவரசர், டெல்லியிடம் சம்பிரதாயமாக அனுமதி கோரிவிட்டு, முகமது சுல்தான் (ஔரங்கசீப்பின் மகன்) தலைமையில் ஒரு படையை அனுப்பி கோல்கொண்டாவை முற்றுகையிட்டார். பிற்பாடு, ஔரங்கசீப் படையும் ஹைதராபாத் நகரில் புகுந்து சூறையாடியது.
ஔரங்கசீப் காலடியில் கோல்கொண்டா சுலபமாகவே விழுந்திருக்கும். அதற்குள் டெல்லிக்கு விரைந்து சென்றிருந்த சுல்தான் குதுப் ஷாவின் ஆட்கள், தாரா ஷுகோவைப் பார்த்துப் பேசினார்கள். என்ன நடந்தது என்று தெரியவில்லை. மூட்டையாகத் தங்கம், வைரம் என்று கைமாறியதாகவும் ஒரு தகவல் உண்டு! அதைத் தொடர்ந்து சக்ரவர்த்தியிடம் தாரா கிசுகிசுக்க, ‘உடனே வாபஸ் வாங்கவும்’ என்று ஷாஜஹானிடமிருந்து ஔரங்கசீப்புக்கு அவசர ஆணை போனது! கோல்கொண்டா சுல்தான் மன்னிக்கப்பட்டார். அவரிடம் பெரும் அபராதத் தொகை மட்டும் வசூலிக்கப்பட்டது.
தன்னை மீறி இதெல்லாம் நடக்க, ஒளரங்கசீப்புக்கு ஏகத் திகைப்பு! வந்ததற்கு வெறும் கையோடு திரும்புவானேன் என்று எண்ணிய அவர், கோல்கொண்டா மன்னரின் மகளுக்குத் தன் மகன் முகமது சுல்தானை ரகசியமாகத் திருமணம் செய்வித்து, எதிர்காலத்தில் தன் மகன் ஹைதராபாத்துக்கு மன்னராக வேண்டும் என்று உறுதிமொழியையும் வாங்கிக்கொண்டு ஔரங்காபாத் திரும்பினார். டெல்லிக்கு வரவழைக்கப்பட்ட மீர்ஜும்லாவைப் பிரமாதமாக கௌரவித்துப் பிறகு அவரைப் பிரதம அமைச்சராகவும் ஆக்கினார் ஷாஜஹான்.
திறமை வாய்ந்த இந்த கோல்கொண்டா வீரரின் தலைமையில் ஒரு படையை அனுப்பி, ஆப்கானிஸ்தானைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசைகூட ஷாஜஹானுக்கு இருந்ததாகக் கேள்வி. ஆனால், ஆந்திராவில் இருந்து மீர்ஜும்லா கொண்டுவந்து காலடியில் குவித்த அற்புதமான வைர, தங்க ஆபரணங்களைப் பார்த்துப் பிரமித்துப் போன ஷாஜஹான், ‘‘தெற்கே இப்படி ஒரு வைரக் குவியல் இருக்கும்போது, நான் எதற்காக அசட்டுத்தனமாக ஆப்கானிஸ்தான், அது இது என்று புலம்பிக் கொண்டிருக்கிறேன்..?’’ என்று கூறினாராம்.
1656 - நவம்பர்…
பீஜப்பூர் சுல்தான் ஆதில்ஷா காலமாகவே, அதைத் தொடர்ந்து அங்கே சற்றுக் குழப்பம் நிலவியது. பீஜப்பூர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த பதினெட்டு வயது நிரம்பிய ஒரு இளைஞர், சுல்தானின் வாரிசாக அரியணையில் அமர்த்தப்பட்ட செய்தி வந்து சேர்ந்தது. ஔரங்கசீப்புக்கு அங்கே படையெடுக்க ஒரு காரணமும் கிடைத்தது!
‘‘இந்த இளைஞன் அரச குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல. இது என்ன அலங்கோலம்..?!’’ என்று முழங்கினார் டெல்லி இளவரசர். டெல்லியிலிருந்து ஒரு படையுடன் வந்த மீர் ஜும்லாவும் சேர்ந்து கொள்ள, ஔரங்கசீப் தலைமையில் மொகலாயப் படை பீஜப்பீரைச் சூழ்ந்து கொண்டது. வெற்றிக்கனியைப் பறிக்கும் வேளையில், ஔரங்கசீப் தன் தலையில் கைவைத்துக்கொண்டு அமரவேண்டி வந்தது! ஷாஜஹானிடமிருந்து (தாரா சொல்படி) ஆணை - ‘பீஜப்பூரைக் கைப்பற்ற வேண்டாம். போர் நிறுத்தம் செய்க. பீஜப்பூர் கட்டவேண்டிய அபராதத் தொகையை டெல்லி நிர்ணயிக்கும்!’ என்று. வெறுத்துப் போனார் ஔரங்கசீப்.
தலைநகரிலிருந்து தந்தை தொடர்ந்து ஏற்படுத்தி வரும் தடங்கல்களையும் - அண்ணனின் தொல்லைகளையும் இனியும் அனுமதித்துக் கொண்டிருக்கக்கூடாது என்று குமுறிய ஔரங்கசீப்பைப் பார்த்து ஒருவழியாக விதி கண்சிமிட்டியது!
‘சக்ரவர்த்தி ஷாஜஹான் திடீரென்று நோய்வாய்ப்பட்டுக் கவலைக்கிடமான நிலைமையில் இருக்கிறார்’ என்று ஒரு தகவல் வந்தது டெல்லியிடமிருந்து.
இந்த விஷயத்தை தூதுவர் சொன்ன மாத்திரத்தில், குதித்து எழுந்து நின்ற ஔரங்கசீப்பின் இதழோரத்தில் குரூரமான மகிழ்ச்சி புன்னகை தவழ்ந்தது. இடையில் இருந்த வாளை, அவருடைய கை மெள்ள வருடிக் கொடுத்தது. ‘‘பாதுஷா படுக்கையில் இருக்கிறாரா அல்லது பரலோகம் போய்விட்டு, அதை அண்ணன் என்னும் இந்த அயோக்கியன் மறைக்கப் பார்க்கிறானா?’’ என்றார் ஔரங்கசீப் இளக்காரமாக..!
Leave a comment
Upload