தொடர்கள்
பொது
அங்கப்பிரதட்சண அருணாச்சலம் மாதவி....!! - ஆர் ராஜேஷ் கன்னா

20210525165043640.jpg

திருவண்ணாமலையில்... பவுர்ணமி அன்று, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், 23-ம் தேதியன்று... நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் அங்கபிரதட்சணம் செய்ய ஆரம்பித்தார்.

சிறிது நேரம் சாலையில் அங்கப்பிரதட்சனம் செய்தவர், அப்படியே சாலையில் சில நிமிடம் படுத்தபடியே ஓய்வு எடுத்து... எடுத்து... கிரிவல பாதையின் 14 கிலோமீட்டர் தூரத்தை அங்கப்பிரதட்சணம் மூலமே சுற்றி வந்து தன் பிரார்த்தனையை பூர்த்தி செய்தார்.

கிரிவலப்பாதையில் தன்னுடைய 14 கிலோமீட்டர் அங்கப்பிரதட்சணத்தின் போது, அருணாச்சலா.. அருணாச்சலா என்ற மந்திரத்தை உச்சரித்தபடி சுற்றிவந்தார்.

ஆந்திராவைச் சேர்ந்த பீமவரத்தில் வசித்து வந்த கண்ணுமுர் மாதவி என்கிற அருணாச்சலம் மாதவி திருவண்ணாமலை கிரிவலப்பாதையான 14 கிலோமீட்டர் தூரம் சுற்றி அங்கப்பிரதட்சணம் செய்தவர்.

அருணாச்சலம் மாதவியின் கணவர் பெயர் நாராயணன் ராஜு. இவர் ஆந்திர பிரதேசத்தில் சிவில் இன்ஜினியராக பணிபுரிகிறார். தனக்கிருந்த ஒரே மகள் அருணாசல ஈஸ்வரரின் தீவிர பக்தை, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

நான் ரமண மகரிஷியின் தீவிர பக்தை. கடந்த 15 வருடங்களாக அருணாச்சலா இருக்கும் திருவண்ணாமலையில் இருந்து, ஈஸ்வர வழிபாட்டில் ஈடுபட்டு வருகிறேன். நான் ஏற்கனவே, திருவாரூர் கோயில் பற்றி தெலுங்கு மொழியில் புத்தகமாக வெளியிட்டு உள்ளேன்.

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா எனும் கொடிய தொற்று நோய் உலக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. உலக மக்களின் நன்மைக்காக கொரோனா நோய் உலகத்தை விட்டு ஒரு ஜீவராசிக்கும் துன்பம் இல்லாமல் வெளியேற வேண்டும் என்று திருவண்ணாமலை அருணாசல ஈஸ்வரரிடம் வேண்டி எனது கோரிக்கையை விண்ணப்பமாக அண்ணாமலையாருக்கு வைத்தேன். எனக்கு தமிழ் நாட்டின் மீதும், தமிழ் மக்களின் மீதும் அளவு கடந்த அன்பு உண்டு. நான் இதுவரை 4 முறை கிரிவலப்பாதையில் அங்கபிரதட்சணம் செய்துள்ளேன். அங்கப்பிரதட்சணம் செய்ய எல்லாம் வல்ல அருணாச்சலேஸ்வரர் தான் முழு சக்தியும், பலமும் தருகிறார் என்கிறார் அருணாச்சலம் மாதவி.

சாதாரணமாக கிரிவலப்பாதையில் 14 கிலோமீட்டர் காலில் செருப்பின்றி நடந்தாலே பாதம் கொப்பளம் ஆகிவிடும். ஆனால் அருணாச்சலம் மாதவி, அங்கபிரதட்சணமாக சென்ற 14 கிலோ மீட்டருக்கு பிறகு, அடுத்த நாள் நம்முடன் பேசும்போது... எந்த வித அலுப்புமின்றி இருந்தார் என்பது ஆச்சரியத்தை தருகிறது! மேலும் அவர் கூறுகையில்... தமிழக மக்கள் நலன் கருதி, தமிழகத்திலுள்ள கோயில்களுக்கு அங்கபிரதட்சணமாகவே செல்ல இருக்கிறார். அவரது இந்த முயற்சிக்கு அருணாச்சலேஸ்வரர் துணயாக இருப்பார் என்று உறுதியாக நம்புகிறார்.