தொடர்கள்
விகடகவியார்
விகடகவியார்

இந்த வாரமும் ஊரடங்கை காரணம் காட்டி, செய்திகளை வாட்ஸப்பில் தான் விகடகவியார் அனுப்பியிருந்தார்...

புஸ்வானம் ஆன மூன்றாவது அணி...

20210525233901661.jpeg

பாராளுமன்றத் தேர்தல் நெருங்க.. நெருங்க.. மூன்றாவது அணி முயற்சி அவ்வப்போது நடப்பதும், அது புஸ்வானம் ஆவதும் வழக்கமான ஒன்றுதான். தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், காங்கிரஸ் கட்சி அல்லாத மூன்றாவது அணிக்கு முயற்சி செய்கிறார். எல்லாம் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் யோசனைதான். 2024 பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க் கட்சியின் பிரதமர் வேட்பாளராக மம்தா பானர்ஜியை முன்னிலைப்படுத்துவது என்பது பிரசாந்த் கிஷோர் திட்டம். அதற்கான முன்னோட்டம்தான் இந்த மூன்றாவது அணி முயற்சி. சரத்பவார், பிரசாந்த் கிஷோர் சந்திப்புக்குப் பிறகு இந்த முக்கிய எதிர்க்கட்சிகள் கூட்டத்தை சரத் பவார் கூட்டினார். திமுக முதலில் கலந்து கொள்ளும் என்று சொல்லப்பட்டது... ஆனால், பின்வாங்கி விட்டது. காங்கிரசுக்கு அழைப்பு இல்லை என்பதுதான் இதற்கு முக்கிய காரணம். ஆம் ஆத்மி, திருணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி என்று சில கட்சிகள் கலந்துகொண்டு பேசினார்கள். கூட்டம் முடிந்ததும்... மூன்றாவது அணி எல்லாம் இல்லை, சும்மா பேசினோம்.. அவ்வளவுதான்... என்று கலந்து கொண்டவர்களே பல்டி அடித்து விட்டார்கள்.

ஜெய்ஹிந்த் சர்ச்சை...

20210525233921766.jpeg

தமிழக சட்டசபை கூட்டம் ஆளுநர் உரையுடன் கூடியது. எப்போதும்... ஆளுநர் உரையை ஏதாவது சாக்கு சொல்லி, எதிர்க்கட்சியாக இருந்தபோது அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் புறக்கணித்து, வெளிநடப்பு செய்வது இதுவரை வழக்கமாக இருந்தது. ஆனால், வெளிநடப்பு இல்லாத கூட்டத்தொடர் இதுதான் என்று வரலாறு படைத்தது, இந்த சட்டமன்ற கூட்டத்தொடர். மத்திய அரசு, ஒன்றிய அரசுதான் என்று திரும்பத் திரும்பச் சொன்னார் முதல்வர் ஸ்டாலின். இதை சபை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆளுநருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

சட்டசபையில் பேசிய திமுக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், இந்த முறை ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை இல்லை, இதனால் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது என்று குறிப்பிட்டார். சென்ற முறை ஆளுநர் உரை முடியும்போது.. நன்றி.. வணக்கம்.. ஜெய்ஹிந்த்.. என்று குறிப்பிட்டிருந்தார். இந்த முறை ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் இல்லை என்று சட்டமன்ற உறுப்பினர் பெருமையாக சொன்னார். இதை பாரதிய ஜனதா உறுப்பினர்கள் யாரும் ஆட்சேபிக்கவில்லை என்பது இன்னொரு ஆச்சரியம். ஆனால், டெல்லி பாரதிய ஜனதா இந்த விஷயத்தை வேறு மாதிரி யோசிக்கிறது... அச்சடிக்கப்பட்ட ஆளுநர் உரையில் ஜெய் ஹிந்த் என்ற வாசகம் இல்லாவிட்டால் என்ன... ஆளுநர் ஜெய்ஹிந்த் என்று சொன்னால், அதை அவை குறிப்பில் இருந்து நீக்கிவிட முடியுமா.. எனவே ஆளுநர் ஜெய் ஹிந்த் என்று சொல்லியிருக்க வேண்டும் என்று கருத்து சொல்கிறார்கள். இதுபற்றி ஆளுநரிடமும், டெல்லி தலைவர்கள் விசாரித்திருக்கிறார்கள். இந்த விஷயம் விரைவில் பெரிதுபடுத்தப்படுமாம்.

முருகன் பதவிக்கு ஆபத்து..!
20210525234404522.jpeg

அண்மையில் தமிழக பாரதிய ஜனதாவின் முக்கிய தலைவர்கள் கூட்டம் ஈசிஆர் சாலையில் அக்கறை என்ற கிராமத்தில் இருந்த சொகுசு விருந்தினர் விடுதியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தமிழக பொறுப்பாளர் சிடி ரவி, தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் செயல்பாடு பற்றி தனது அதிருப்தியை தெரிவித்தார். அப்போது சிவகங்கை மாவட்ட பாரதிய ஜனதா தலைவர்கள், எச். ராஜா தேர்தல் செலவுக்கு தந்த பணத்தை செலவு செய்யாதது பற்றியும், உள்ளூர் பாரதியஜனதா தலைவர்களை மதிக்காமல் அவமானப்படுத்தியது பற்றியும்.. தனக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள் என்பதை எல்லாம் சுட்டிக்காட்டி, தமிழக பாரதிய ஜனதா தலைவர் மீதும், மத்திய தலைமை மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகவும் சொன்னார். முருகன் மாற்றப்படலாம் என்று இப்போது மீண்டும் பேச்சு வரத் தொடங்கியிருக்கிறது.

சட்டமன்ற உறுப்பினர்களை கவனியுங்கள்...


ஆளுநர் உரைக்கான சட்டமன்ற கூட்டத் தொடரை ஒட்டி, திமுக சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் அறிவாலயத்தில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது... அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அவர்கள் கேட்டதை செய்து கொடுங்கள். இதேபோல் கட்சிக்காரர்களையும் மறந்துவிடாதீர்கள் என்று நினைவு படுத்தினார். சட்டமன்ற உறுப்பினர்களின் பிரச்சனைகள் எல்லாம் எனக்குத் தெரியும், நான் பார்த்துக்கொள்கிறேன்.. கவலைப்பட வேண்டாம் என்று சொன்னதைக் கேட்டு குஷி ஆகி விட்டார்கள் சட்டமன்ற உறுப்பினர்கள். அமைச்சர்கள் தான் பாவம்.. இவர்களை எப்படி சமாளிப்பது என்று அங்கேயே யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

தமிழிசை ஸ்டாலின் சந்திப்பு!

2021052522004044.jpeg

தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி கூடுதல் பொறுப்பாளருமான தமிழிசை சௌந்தர்ராஜன் திடீரென தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதாவது ஸ்டாலின், பிரதமரை சந்தித்த சில தினங்கள் கழித்து இந்த சந்திப்பு நடந்தது. பிரதமரின் நம்பிக்கைக்குரியவர் தமிழிசை. பிரதமர் ஏதோ சொல்லி தான், இந்த சந்திப்பு நடந்திருக்கிறது என்ற சந்தேகம் எல்லோருக்கும் வந்தாலும்... இது மரியாதை நிமித்த சந்திப்பு என்கிறார் ஆளுநர் தமிழிசை.

தேனியில் தீர்மானம் இல்லை...

20210525234646544.jpeg


சசிகலா தொடர்ந்து ஆடியோ வெளியீடு வரும். சசிகலா ஆடியோவில் யாருடன் பேசினாலும், அவர்களை ஓபிஎஸ் - இபிஎஸ் கட்சியை விட்டு நீக்கி கட்டம் கட்டுவதும், தொடர் நடவடிக்கையாக இருந்து வருகிறது. இதன் நடுவே சசிகலா ஒட்டுண்ணி, நஞ்சு, குழப்பம் விளைவிக்கும் துரோகி என்றெல்லாம் சசிகலாவை குறிப்பிட்டு சேலம் மாவட்டத்தில் எடப்பாடி தீர்மானம் போட்டார். அதைத் தொடர்ந்து வேறு சில மாவட்டங்களிலும் சசிகலாவை கண்டித்து தீர்மானம் போடப்பட்டது. ஆனால், ஓபிஎஸ் மாவட்டத்தில் அப்படி ஒரு தீர்மானம் இன்னும் போடப்படவில்லை. அது ஏன்... என்ற சந்தேகம் அதிமுக வட்டாரத்தில் இப்போது முக்கிய பேச்சாக இருந்து வருகிறது.