ரொம்ப சந்தோஷம்டா... உங்களுக்கு எத்தனையோ வேலைகள் ஊரிலே இருந்திருக்கும், இத்தனை நாள் இங்கே தங்கியிருந்து, அப்பாவோட அந்திமக் காரியங்களை திருப்தியாக செய்து முடித்திருக்கீங்க, என தனது மூத்த மகனிடமும், இளைய மகனிடமும் பேசிக்கொண்டிருந்தாள் தாய் யசோதா.
ஏம்மா, “உனக்கு உன் புள்ளைங்க தங்கினதுதான் உசத்தியா தெரியுதில்லே..? ஒரே மக நான்... இங்கே என்ன தேவையில்லாமலா வந்திருக்கேன்? என பிலுபிலுவென பிடித்துக் கொண்டாள்..” யசோதாவின் மகள் மணிமேகலை.
பொதுவாக எல்லாருக்கும் தாண்டி சொன்னேன், எதையெடுத்தாலும் குத்தமா பார்த்தே உனக்கு பழக்கமாயிடுச்சு என்றாள் யசோதா.
ஆமாம்மா... நான் நாளைக்கே கிளம்புகிறேன், வேலையெல்லாம் போட்டது போட்டபடி இருக்கு என்று மூத்தவன் மணி சொன்னதும்...
“நான் துணைக்கு கொஞ்சநாள் உன்கூட இருக்கேன்மா என இளைய மகன் அருள் ஆறுதலாகச்சொன்னதும்...”
“ஏன்? சொத்தை பிரித்து வாங்கிப் போகலாம் என காத்திருக்கியா? என கேட்டு கலகத்தை ஆரம்பித்து வைத்தாள் மணிமேகலை.”
“சொத்தா? அப்பாவிற்கு இருந்ததே இந்த வீடு மட்டும்தான், ஏதோ பேங்கிலே கொஞ்சமாக பணம் இருக்கும் அவ்வளவுதான் என்றாள் யசோதா.”
அதைப் பற்றியெல்லாம் இப்போ நாம பேச வேண்டாமே என அருள் சொல்ல...
ஏன்? நாங்கள் சென்ற பின் அம்மாவிடம் தனியாக பேசிக்கொள்ளலாம் என இருக்கியா நீ? கேட்டான் பெரியவன் மணி.
அதானே என்றாள் மணிமேகலை...
காலம், சூழல் தெரிந்துப் பேசத்தெரியாத இருவரையும் சமாளிக்க தெரியாமல் திணறித்தான் போனான் அருள்.
யசோதாவே தலையிட்டு, நாளைக்கு ஒரு நாள் மட்டும் இருந்து... வங்கி கணக்கைப் பார்த்து, அதில் உள்ள சேமிப்பு பணத்தை நீங்கள் மூவரும் எடுத்துக்கோங்க. நகை மற்றும் வீடு, என் காலத்திற்குப் பிறகு பிரித்துக் கொள்ளலாம் என தீர்வாக சொன்னாள் பிள்ளைகளிடம்.
ஜாயிண்ட் அக்கவுண்ட் என்பதால், அம்மாவிடம் காசோலை வாங்கி பணத்தை கணக்கிலிருந்து மொத்தமாக எடுத்து அவற்றை பிரித்துக்கொள்வது என தீர்மாணித்து மறுநாள் வங்கிக்கு செல்வதென முடிவு செய்தனர் மூவரும்.
நாங்கள் எல்லோரும் மூர்த்தி சாரோட பிள்ளைகள் என்று வங்கி மேலாளரிடம் தங்களை அறிமுகம் செய்துக்கொண்டவர்கள், அம்மாவின் கையொப்பமிட்ட காசோலை மற்றும் கடிதத்தைக் கொடுத்து முழு தொகையையும் கேட்டனர்.
கணக்குகளைப் பார்த்த மேலாளர்,சேமிப்பு கணக்கிலே தொகை ரூபாய் அறுபதாயிரம் இருக்கு, அது மட்டும்தானே நிறைவு செய்யணும், இல்லை...... என தயங்கியபடி கேட்கவும்..
வேறு ஏதாவது இருக்கா? என்று மேலும் ஆர்வமானாள் மணிமேகலை.
சில லட்சங்கள் வைப்பு நிதியும் அவர்கள் பெயரில் இருக்கு என்றார் மேலாளர்...
அப்போ.. அதையும் நிறைவு செய்து கணக்கில் வரவு வைத்து, பிறகு எங்களிடம் கொடுங்கள் என்று மூத்த மகன் மணி சொன்னதும்... மணிமேகலையும், அருளும் சரி என்றனர்.
சேமிப்பு கணக்கு, வைப்புநிதி, எல்லாம் சேர்த்து ரூபாய் இரண்டரை இலட்சம் ரூபாய் வருகிறது என்றதும்...
மூன்றாய் பிரித்திடுவோம்... ஆளுக்கு எண்பதாயிரம் ரூபாய் எடுத்துக்கலாம் என்றாள் மணிமேகலை.
அது முடியாது, அம்மாவிற்கு நான்தான் மாதாந்திர செலவிற்கு பணம் கொடுக்க வேண்டிருக்கும், அதனாலே பணத்தை நான்காக பிரிச்சுடுவோம் என்று கணித தீர்வு சொன்னான் பெரியவன் மணி.
எல்லா கணக்குகளையும் கூட்டி கழித்து சரி பார்த்ததில்.... ஐம்பாதியிரம் ரூபாய் உங்கள் அப்பாதான், வங்கிக்கு திரும்ப செலுத்த வேண்டியுள்ளது என்றார் மேலாளர்.
என்னது..? என அதிர்ந்த மணியிடம்...
ஆமாம், “உங்கள் அப்பா இரண்டு மாதங்களுக்கு முன் வாங்கிய தனிநபர் கடன் ஒன்று அடைக்கப்படாமல் நிலுவையில் உள்ளது, அதனை வட்டியோடு நீங்கள் செலுத்திவிடுமாறு வங்கி மேலாளர் கூறியதும்”, பின்னர் வருவதாக கூறி மூவரும் வீட்டிற்குத் திரும்பினர்.
கடன் பாக்கி பற்றி மேலாளர் சொன்னதை, அம்மாவிடம் சொன்னதற்கு... தனக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்று சொல்லிவிட... மணியும், மணிமேகலையும் மாலையே தங்கள் வீட்டிற்கு கிளம்புவதாக கூறினார்கள்.
ஏம்பா, அப்பாவின் பணம் உங்களுக்கு வேணும், அவர் பட்ட கடனை மட்டும் அடைக்க வேண்டாமா?
பணத்திற்கு வாரிசு நீங்கள் மூவரும் என்றால், அந்த கடனுக்கும் வாரிசு என்ற முறையில் நீங்கள்தானே பொறுப்பு என்று கேட்டாள் யசோதா.
இவை எதுவும் காதில் விழாத மாதிரி இருந்தனர்.
என்னப்பா அமைதியா இருக்கே? என மூத்தவனைப்பார்த்துக் கேட்டாள் யசோதா...
பின்னே, “இறுதி காரிய செலவெல்லாம் நான் செய்திட்டேன் என் கடமை முடிந்தது. மேற்கொண்டு என்னால் கடன்களை சுமக்க முடியாது” என்றான் மணி.
ஆமாம்மா, அண்ணனுக்கும் புள்ளைங்க இருக்கு அதுக்கும் செலவுகள் இருக்காதா ? நானும் என் வீட்டாரை கேட்காமல் எதுவும் செய்யமுடியாது இல்லே, என அம்மாவிடம் சொல்லி தன்னையும் தற்காத்துக்கொண்டாள் மணிமேகலை.
அம்மா, நான் அடைக்கிறேன்மா என்றான் இளையவன் அருள்.
பணங்காசு இருக்கிறவனே சும்மா இருக்கும் போது, நீ எங்கேடா போவே பணத்திற்கு? நீ ஏற்கனவே கடனில் இருக்கிறாய் எப்படிடா..? என கேட்டாள் யசோதா...
ஆமாம்மா, நான் ஏற்கனவே கடனில்தான் இருக்கிறேன், கடன் வாங்குவது எனக்கு ஒன்றும் புதிதல்ல, ஆனால் அப்பாவின் கடன் தீர்ப்பது எனது கடமை. நான் அடைக்கின்றேன்மா, நான் கஷ்டப் பட்டாலும் பரவாயில்லை, சாம்பாதித்து சிறுக சிறுக அடைப்பேன் என தீர்க்கமாகச் சொன்னவன்... நீ ஒன்றும் கவலைப்படாதே என்று கூறிய அருளை பெருமையாகப் பார்த்தார் யசோதா,
அப்புறம் என்ன? நாங்கள் புறப்படுகிறோம் என புறப்பட்ட இருவரையும் நிறுத்தினாள் யசோதா.
இதோ வருகிறேன் என உள்ளே சென்ற யசோதா...
வரும்போது ஒரு பையோடு வந்தவள், அந்தப் பையை அருளிடம் கொடுத்து, “இதில் நாலு லட்சம் பணமிருக்கு, இதுவும் அப்பாவின் பணம்தான். யார் உன்னிடம் உண்மையாக நடந்துக்கொள்கிறார்கள் என உனக்கு தோன்றுகிறதோ, அவர்களிடம் இதைக்கொடு என என்னிடம் இந்தப் பணத்தை ஒரு மாதத்திற்கு முன்னயே கொடுத்து வைத்திருந்தார் உங்கள் அப்பா” என்றாள்.
நான் கூட அவரிடம் கேட்டேன்... “எல்லாமே நம்ம பிள்ளைகள்தானே இந்த ஆய்வு எதற்கு என்று?”
பெற்றுவிட்டால் மட்டும் அவர்கள் நம் பிள்ளையா..?
நாம் பிள்ளைகளுக்கு செய்யவேண்டியது நம் கடமை. ஆனால், அவர்கள் நம்மை இறுதிக் காலத்தில் பார்த்துக்கொள்வது என்பது அவர்களின் விருப்பம் சார்ந்தது. ஆகையால்... பெற்றோரின் வலியைப் புரிந்து, அந்த வலி நீங்க வழிவகை செய்ய முன் வருபவனே உண்மையான பிள்ளை எனக் கூறினார்.
அவரின் ஆசைப்படியும், அறிவுரைப்படியும் இது அருளுக்கே உரியது, என்று கூறி அதனை அவனிடம் கொடுத்தாள் யசோதா.
அதனை வாங்க மறுத்த அருள், குணத்தால் உயர்ந்து நின்றான் குடும்பத்தினர் மத்தியில்.. தங்களிடமே இருக்கட்டும், நான் அப்பாவின் ஆசைப்படி, வங்கிக் கடனை அடைத்த பிறகு வாங்கிக் கொள்கிறேன் என்றான் முடிவாக.
Leave a comment
Upload