தொடர்கள்
கவிதை
காதல் பொது மறை - 32 - காவிரிமைந்தன்

2021011206342310.jpg

20210104161412313.jpg

காவிரி மைந்தன்

20210316100944593.jpg

இதழ்களால் இன்பம் தீட்டு!

அன்பிற்கினியவளே..

நினைவுகளில் மூழ்கடித்து என் நெஞ்சக்கரையினில் நிற்பவளே! ஒவ்வொரு நாளுக்கும் வண்ணம் சேர்ப்பது உந்தன் செயலென்று ஆனபின்பு நம் வாழ்க்கை உன் கையில்தானே!

பரஸ்பர சுகங்களைப் பரிமாறும்போது பாவை நின் அழகைக் கண்டு பரவசமடைகிறேன். ஒரு படி மேலே சொல்ல உவமைகளைத் தேடியபோதுதான் தெரிந்தது.. உன்னைவிட உவமைகள் உயரமானது அல்ல என்று!

இத்தனை வெள்ளம் இதுவரை தங்கியிருந்தது உன் உள்ளத்திலா? நல்லவேளை.. நான் வந்து மடை திறந்தேன்!

இல்லையென்றால் என்ன ஆகியிருக்கும்?

இருக்கட்டும்.. அந்தப் புண்ணியம் என் கணக்கில்!

புன்னகையோடு பூமிக்கு வந்த என் தேவதையே.. உன் பரிபாலணங்களின் கூட்டுத் தொகை எவ்வளவு என்று கேட்டேன். நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று உத்தரவு போட்டாய்.

கேட்ட மாத்திரத்தில் தந்துவிட்டால் அங்கே பெண்மை என்ன ஆவது?

புரிகிறது.. உன் ஒத்துழைப்பு இல்லாமல் என்னால் ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியாது என்பது!

இதுவரையில்லாத உணர்வலைகள் என் இதயத்தின்மீது மோதி நிற்க.. என்னையே உன்னிடம் நான் கொடுத்து ஏதாவது செய் என்கிறேன். கூட்டல், பெருக்கல், வகுத்தல், கழித்தல் எல்லாமே எனக்குள் நானாகிறேன்!

குழப்பமிது என்று கூற முடியாது.. மொத்தக் கணக்கும் உனக்காகத்தான். சர்வதேச உடன்படிக்கையில் கையெழுத்து இட்டு விடலாம் போலிருக்கிறது... உன் சந்தேக உடன் படிக்கையில் எப்படி நான் கையெழுத்திடுவது?

அதுவும் சத்தியமாக! என் கையில் என்ன இருக்கிறது?

எல்லாம் உன் கையில்தான்!

நீ அசைந்தால் நான் இசைவேன்.. என்பது இதற்கான சூத்திரம்!

காதல் மழையில் நனையும் கிளிகளுக்கு நாள் ஏது?

பொழுது ஏது?

உயிர்ப்புள்ள உன் வரிகளை எல்லாம் மனனம் செய்யும் ஆற்றல் எனக்கிருந்தால்.. நான் இந்த உலகின் தலைமைக் கவிஞன் ஆவேன்!

உனக்காகத் துடிக்கும் என் உள்ளத்தை நீ புரிந்துகொண்டால் ஒவ்வொரு நாளும் உற்சாக கோலாகலம்தான்!

எங்கே முகம் காட்டு! இதழ்களால் இன்பம் தீட்டு!

உன் முக அலங்காரம் கண்டு என் சுக அலங்காரம் பாடுகிறேன் கேள்!

சொல்லெடுத்து சுவையூட்டும் இன்பம் அதை தினம்தோறும் நான் தருவேன்!

கொத்துமலர் என் மடி சாய்ந்து கொஞ்சும் மொழி என்ன மொழி?

தத்தை தரும் சுக ராகங்கள் மெத்தையில் எத்தனை?

சித்திரைத் திருநாள் இன்று.. சீர் கொண்டு வா!

கடல் மடிதேடும் காவிரியில் களிப்பூட்டும் திருவிழா!

பண்டையத் தமிழரெல்லாம் பாரதிர நடத்திய கொண்டாட்டங்கள்!

கோவலன் மாதவியை கண்டெடுத்ததும்கூட இன்றுதான் என்று வரலாறு சொல்கிறது!

அன்னவன் கதையெல்லாம் அவசரத்திற்கு உதவாது!

பெண்மையே வா! பேரின்பம் தா!

உன் சின்ன இதழ் விரித்து சிருங்கார பொட்டு வை.. எந்த இடமும் புண்ணியம் செய்ததாகவே இருக்கட்டும். விடுபட்டால் பாவம் என்பது உனக்குத் தெரியாதா?

என்னவளே! ஏக்கங்கள் தீர்ப்பவளே!

உன்னவனாய் இவ்வுலகில் உயிருள்ள நாள் வரையில் காத்திருப்பேன்!

உன் மடியில் தலை சாய்க்க ஒரு நாள் வருமே! ஆதரிப்பாய் என்னை நீ என்பது எனக்குத் தெரியும்!

அன்றுதான் என் பொன் வானம் விடியும்!