சாதிகள் உள்ளதடி பாப்பா
குலத் தாழ்ச்சி உயர்ச்சிகள்
குறையவில்லை!...
வீதிகள் தோறும் சாதிகள்
செய்யும் சதியில் வீழ்ந்திடும்
சமுதாயம் இது பாப்பா!...
உடைந்த வளையலும்
உறைந்த இரத்தமும்
சிதறிய ஒற்றைச் செருப்பும்
தண்டவாளத் தடயமும்
சொல்லுமே காதலில்
சாதியின் இருப்பை!
காதலில் இருந்த சாதி
தேர்தலில் நுழைந்து
மோதலில் முற்றி
சாதலில் முடிந்த தால்
விளைந்ததே வேதனை !...
ஆயிரம் உண்டிங்கு சாதி
எனில் ஒற்றை சாதிக்கு
மட்டும் உள் ஒதுக்கீடு!...
இதில் எங்குள்ளது நீதி?...
சாதிக் கணக்கெடுப்பில்
சரியும் தமிழன் எனும்
சொல்லின் அடையாளம்!..
பல்லாண்டாய் பலரும்
பாடுபட்டும் ஒழியா சாதி
வேறுபாடு இன்னும்
உள்ளதடி பாப்பா!...
சாதிகள் இங்கு
உள்ளதடி பாப்பா !..
குலத் தாழ்ச்சி உயர்ச்சி குறையவில்லை பாப்பா!...
Leave a comment
Upload