ஒடிசா மாநிலம், ஜகத்சிங்கபூரை சேர்ந்த பெண் பிரமோடினி (29). இவர் கடந்த 2009-ம் ஆண்டில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தார். அப்போது சந்தோஷ் வேதாந்தா (32) என்ற ராணுவ வீரர் ஒருதலையாகக் காதலித்தார். பிரமோடினியை அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
இதில் ஆத்திரமான சந்தோஷ், கடந்த 2009-ம் ஆண்டு, ஏப்ரல் 18-ம் தேதி அவர் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தினார். இதில் பிரமோடினியின் உடலில் 80 சதவிகிதம் எரிந்து கருகி, இரு கண்களும் ஒளியை இழந்தன. இந்த மோசமான தாக்குதல் சம்பவம் நடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு, குற்றம்சாட்டப்பட்ட ராணுவ வீரர் சந்தோஷை போலீசார் கைது செய்தனர்.
ஆசிட் வீச்சால் நிலைகுலைந்த பிரமோடினி, கட்டாக்கில் உள்ள எஸ்.சி.பி. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தொடர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவரை கடந்த 2014-ம் ஆண்டில் சரோஜ் சாஹு (31) என்பவர் சந்தித்தார். ஆசிட் வீச்சு பாதிப்பில் இருந்து பிரமோடினியை மீட்பதற்காக சரோஜ் சாஹு பல்வேறு வகைகளில் உதவிகளை மேற்கொண்டு வந்தார்.
இதனால் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2018-ம் ஆண்டு, பிப்.14 - காதலர் தினத்தில் இருவரும் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். ‘ஒடிசாவின் சபக் கேர்ள்’ என அழைக்கப்படும் பிரமோடினி, தனது நண்பரும் காதலருமான சரோஜ் சாஹுவை, 2021 மார்ச் 3-ம் தேதி முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண விழாவில் அம்மாநில ஆளுநர் கணேஷிலால், மாநில கல்வியமைச்சர் சமீர் டாஷ் ஆகியோர் நேரில் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர். மேலும், இவ்விழாவில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ள 20 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் பாலிவுட் திரைப்படப் பாடல்களுக்கு நடனமாடி, தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
இதுகுறித்து பிரமோடினி கூறுகையில், ‘‘கடந்த 2009-ம் ஆண்டு முதல் நரக வாழ்க்கையும், அதனால் ஏற்பட்ட துன்பத்தையும் என்னால் சொல்ல முடியவில்லை. அத்தனை கொடுமைகளை அனுபவித்தேன். ஆசிட் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, மீண்டும் எழுந்திருப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை.
இப்போது கிடைத்திருக்கும் வாழ்க்கை, மிக வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கிறது. நானும் சரோஜும் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்வோம். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எங்களை ஆசீர்வதிக்க என் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நலம்விரும்பிகள் வந்துள்ளனர். இன்று எனது குடும்பமும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது…’’ என பிரமோடினி மகிழ்ச்சி பெருக்குடன் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
Leave a comment
Upload