தொடர்கள்
கதை
நியதி... - மார்ஷல்

20210205170603757.jpeg

எங்கள் வீட்டு மாடியில் உள்ள ஜாடியில் வைத்திருந்த செடியில் செர்ரி பழம் பூத்திருந்தது...

என்ன சொன்னேன்?........ பழம் பூத்திருந்தது.... ஆமாம், செர்ரி பழம் பூத்துத்தான் இருந்தது. அப்படி ஒரு சிகப்பு வண்ணத்தில் சிரிக்கும்.
#f7022a -இதுதான் அந்த வண்ணத்தின் பெயர்.

குட்டியூண்டு ஆப்பிள் சிவந்து இருந்தால் எப்படி இருக்கும்?அப்படி இருந்தது செர்ரி. அதனுடைய பூ சின்னதாய் இருக்கும். கிராமங்களில் சின்ன பிள்ளைகள், செடியிலிருந்து பறித்து காதில் கம்மலாய் ஒட்டிக் கொள்கின்ற பூ மாதிரி இருக்கும். அதை விட செர்ரி பழம்தான் அழகு.
நானும் என் மனைவியும் ஒரு செர்ரி பழ செடி வாங்கி வந்து, பெரிய ஜாடி ஒன்றில் வைத்தோம்.செர்ரி நம்ம நாட்டு பழம் இல்லை என்றார் செடியைக் கொடுத்தவர். அதனால் என்ன... செடிக்கு நேஷனாலிட்டி சர்ட்டிபிகேட் தேவை இல்லைதானே. அறிவுக்குத்தானே நாடு, நகரம், கருப்பு,சிகப்பு என்று பிரிக்கத் தெரியும். அது பாவம், சிவனே என்று எங்களுடன் ஒட்டிக் கொண்டு வந்து விட்டது. வந்து எங்கள் வீட்டு ஜாடியில் அமர்ந்து, நாங்கள் கொடுத்த தண்ணீரை குடித்துக் கொண்டு ஜாடியில் போட்ட புது மண்ணில் உயிர்த்துக் கொண்டது.

செடி சின்னச் செடிதான். நம் நெஞ்சளவு வளர்ந்து ஜூன் மாதத்தில் பூத்து விட்டது. அந்த சமயம்தான் செர்ரி சீசன்... ஜப்பானில் இதை ஹனாமி என்கிறார்கள். புதுப்பித்தல், மறுபிறவி, போன்றவற்றிற்கு, செர்ரியை ஒரு சின்னமாக, இனிமைக்கும், கருணைக்கும் நம்மை அறிமுகம் செய்கின்ற பழமாகச் சொல்வார்கள்.

செடி என்னவோ நிறையத்தான் பூத்தது. ஒரு நாள் கொத்து கம்மல் மாதிரி பூத்திருக்கும்.... மறுநாள் காணாமல் போயிருக்கும் அல்லது உதிர்ந்திருக்கும். ஊதா வண்ணத்தில், அல்லது ஏறக்குறைய “கத்திரிப்பூ கலர்” வண்ணத்தில் பூக்கள் இருக்கும். ஆனால் காய்கள் நிறைய வரவில்லை.

பூக்கள் காய்ந்து உதிர்வது சரி என்று ஒத்துக் கொள்ளலாம் . ஆனால் காணாமல் போனால்..? இதற்கெல்லாம் காரணம் ரேட்டேட்டோ. ரேட்டேட்டோ என்பது அந்த அணில். நான் வைத்த பெயர். நிறைய ரேடேட்டாக்கள் ஓடிக் கொண்டிருக்கும். ரேட்டடோஸ்கர் என்றால் “எலிப்பல்லன்” என்று ஏதோ ஒரு மொழியில் அர்த்தம். அதை சுருக்கி ரேட்டேட்டோ என்று பெயர் வைத்தேன். ரேடேடோஸ்கர் என்ற அணில், யக்ட்ராசில் என்னும் மரத்தின் மேலும் கீழும் ஓடிக் கொண்டிருக்குமாம். அந்த மரத்தின் மேலே இருந்த கழுகிற்கும், கீழே இருந்த பாம்பிற்கும் செய்தி கொண்டு செல்லுமாம். செல்லட்டும்.. செல்லட்டும்...

இந்த அணில், அந்த அணில் என்று அணில்களை அடையாளம் காண எனக்குத் தெரியவில்லை. எல்லா அணில்களும் ஒரே மாதிரித்தான் எனக்கு தெரியும். ஓடும்.ஓடிக் கொண்டே இருக்கும் .உங்கள் கண்ணின் பாப்பா பார்க்கும் வேகத்தை விட வேகமாக ஓடும். இப்போதுதான் இடது பக்கம் பார்த்திருப்பீர்கள், அதற்குள் வலது பக்கத்தில் இருந்து எட்டிப் பார்க்கும். போகிற போக்கில் எதையாவது கடித்து விட்டு ஓடும். செர்ரியின் பூ, கொய்யா காய்,..... என்று எல்லாவற்றையும். செடி ஓடுகிறதா, இல்லை அணில் ஓடுகிறதா என்று சந்தேகமே வரும். எதையும் விடுவதில்லை. கொத்தமல்லி செடி வளர்க்கலாம் என்று விதை போட்டால்... அடுத்த நாள் பறித்து எடுத்து தின்று விடும். கொஞ்சம் சாமர்த்தியமாக, ஒரு ஜாடியில் கொத்தமல்லி விதை போட்டு, அதை ஒரு துணியால் மூடி வைத்தால்... இரண்டு மூன்று நாள் கழித்து முளை விட்டு செடி கண்ணுக்கு தெரியும் போது, துணியை எடுத்து விட... அந்த முளைப் பயிரையும் தின்று விட்டது.

எனக்கு அந்த அழகான செர்ரியை வர விடாமல் செய்து கொண்டிருந்ததை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

விவசாயம் படித்த என் நண்பர் சொன்னார்.... “ஒரு வலை வாங்கிப் போட்டு விடு” என்று. நானும் வலையை வாங்கி அணில் மேல் போட முயற்சித்து தோற்றுப் போய் கேட்டேன்.

“அணில் வலையிலே மாட்டவே மாட்டேங்குது...”

“நீ என்ன படிச்சு இருக்கே?”

“ஏன்? எஞ்சினீரிங், என்ன புதுசா கேக்கறே?”

“மாடு மேய்க்கப் போ. வலையை செர்ரி செடி மேல போடு என்றுதானே சொன்னேன்...”

அணிலைக் காயப்படுத்த பயமாக இருக்கிறது, ராமரின் நண்பன் அல்லவா... பாலம் கட்டும்போது இதுவும் மண் தூக்கி சென்றிருக்கிறது. ராமரும் தடவிக் கொடுத்து பாராட்டி, முதுகில் அழகாக மூன்று கோடுகள் போட்டிருக்கிறார். அணிலை அடித்து, தவறுதலாக ராமர் கை மேல் அடிபட்டால்...? தப்பு.. தப்பு..

வீதியில் எங்கள் வீட்டு முன் ஒரு இலுப்பை பூ மரம் இருக்கிறது. அதன் கிளைகள் விரிந்து எங்கள் வீட்டு மொட்டை மாடிக்கு வரும். சக்கரை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சக்கரை என்பார்களே... அதே இலுப்பை பூ மரம். ரொம்ப நாட்களாக இது தெரியவில்லை. தெரிந்தபின் அந்த மரத்தின் மேல் ஒரு மதிப்பு வந்தது. ஒரு நாள் பூவை ருசி பார்க்க வேண்டும். இந்த அணில்கள் கீழிருந்து மேலே, மேலிருந்து கீழே என்று மரத்தை ஒரு வழி செய்து கொண்டிருக்கும். மரத்தை தூங்க கூட விடாது...
இப்படியான சமயத்தில்...

இந்த மரத்தில் எங்கள் கைக்கு எட்டாத தூரத்தில், வீதியின் நடுப் பகுதிக்கு உயரே இரண்டு காகங்கள் கூடு கட்ட ஆரம்பித்தன. ரொம்ப நுட்பமான கூடு என்று சொல்வதற்கு இல்லை. ஏதோ காக்கைக்கு தன் கூடு பொன் கூடு என்று கட்டிக் கொண்டது. வறண்டு போன குச்சிகள், பிய்ந்து போன தோல் பெல்ட், எங்கள் வீட்டிலிருந்து காணாமல் போன ஒரு நூல் கண்டு...... என்று கலந்து ஒரு வீடு கட்டி கொண்டன. அம்மா காகம் முட்டை வைத்து விட்டது.

மேல்மாடிக்குச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றப் போனால் போதும், பறந்து வந்து தலையில் அடிக்கும், அப்பா காகம். நாம் அதனுடைய கூட்டை கலைத்து விடுவோமோ, அதன் முட்டைகளை அழித்து விடுவோமோ என்று பயம் அதற்கு. என் மனைவி தண்ணீர் ஊற்றப் போனால், காகத்தை விரட்ட கையில் குச்சியுடன் நானும் கூட இருக்க வேண்டும். இருந்தும் ராக்கெட் சைன்ஸ் தெரிந்த காகம் போல் எங்கிருந்தோ வேகமாக வந்து தலையைத் தட்டி விடும். வசமாக மாட்டினால் அலகால் கொட்டி விட்டுப் பறந்து விடும். காகம் தலையை தட்டினால், கொட்டினால் நல்லது இல்லையாமே. உடனே ஒரு குளியல் போட வேண்டும். பதினைந்து இருபது நாட்களாக இதே கூத்துதான் நடக்கிறது. ஒரு பல்லி விழும் பலன் எனக்கு தெரியும். தலை மேல் பல்லி விழுந்தால் மரணம். இந்த கணிப்புக்கள் பலிக்க ஏதேனும் கால அளவு இருக்கலாம். உதாரணமாக, பல்லி தலையில் விழுந்து 50 வருடங்களுக்குப் பின் மரணம் என்பது மாதிரி..

பதினைந்து நாட்களில் செர்ரி பூ விட்டு, காய் காய்த்துப் பழம் வைத்தது. முதலில் பச்சை வண்ணம். பிறகு உதிக்கும் சூரியன் பூத்த மேகத்தைத் தடவினார்ப் போல் ஒரு பாதி சிவப்பு வண்ணம், பிறகு செர்ரி சிவப்பு வண்ணம். அத்தனை பழங்கள்... காஷ்மீரில் சாப்பிட்ட அளவு சுவை இல்லை என்றாலும், நம்ம வீட்டில் வந்த செர்ரி ஆயிற்றே, தனி சுவைதான். இன்னும் நிறைய பூக்கள் செடியில் பூத்திருந்தது. அடுத்த பத்து நாட்களில் மரம் முழுக்க பழமாக இருக்கும் என்று நினைத்தேன்.

அதுதானே, நம்ம அணிலை மறந்து விட்டேனே...என்ன ஆயிற்று நம்ம ரேட்டோடோவுக்கு.? கொஞ்ச நாளாய் பார்க்கவில்லையே.? எதிர்த்த வீட்டில் பார்த்தபோது, அங்கும் நடமாட்டம் தெரியவில்லை. மரத்தில் ஏறி இறங்குமே... யாராவது அடித்து விட்டார்களா என்ன? கக்குவான் இருமலுக்கு அணில் கரி நல்லதாம். சின்ன வயசில் கிராமத்தில் என் பாட்டி சொல்லி இருக்கிறார்கள். நல்ல வேலை எனக்கு கக்குவான் இருமல் வந்ததில்லை. அந்த சின்ன சுறுசுறுப்பான ஜீவனை யாராவது கொல்லுவார்களா என்ன..?

அணில் இல்லாமல் நன்றாக இல்லை. மாடியில் போய் நின்று செடிகளைப் பார்த்தால், காற்று இல்லாத நேரத்தில், வெறுமனே ஒரு ஸ்டில் போட்டோவைப் பார்ப்பது போல இருக்கிறது. உயிர் இல்லை. அணில் இருந்தால் ஓடும். ரகளையாக இருக்கும். அந்த இடத்துக்கே உயிர் இருக்கும். அதை நான் ஏதாவது தப்பாக பேசி விட்டேனா? அதன் மேல் வலை கூட போடவில்லையே!

கடைக்குப் போய் திரும்பும் போது பார்த்தேன், எங்கள் வீதியின் முனையில் ஒரு செடி மீது அமர்ந்து பார்த்தது. நம்ம அனில்தானா..?தெரியவில்லை. சரி கூப்பிட்டுப் பார்ப்போம் என்று “ஹாய், ரெட்டேட்டோ” என்றேன். முகத்தை திருப்பிக் கொண்டது. செர்ரி பழங்களை சாப்பிட்டதால், அதன் மேல் கொஞ்சம் கோபம்தான்... இருந்தாலும், அதைப் பார்க்காமல் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. “வா, நம்ம வீட்டுக்கு... நிறைய செர்ரி பழம் பழுத்து இருக்கிறது” என்று அழைத்தேன். என்னமோ, முகத்தை திருப்பிக் கொண்டு போய் விட்டது. வீதியில் சென்ற கறிக்கடை பெஞ்சமின், நான் செடியுடன் பேசிக் கொண்டிருப்பதை கவனித்து என்னை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டு போனார்.

அணில் வராததால்தான் செர்ரி வந்திருக்கிறது. என்மனைவி சொன்னபடி கொஞ்சம் செர்ரிகளை செடியிலேயே விட்டோம். சிலதைப் பறித்துக் கொண்டோம். கொஞ்சம் செர்ரிகளை தரையில் போட்டேன், ஒரு வேலை இதைப் பார்த்தாவது அணில் வரும் என்று.... வரவில்லை.

அடுத்து ஒரு வாரம் போக... காகம் குஞ்சு பொறித்து விட்டது. மூன்று குஞ்சுகள். இன்னும் அதே கதைதான். காக்கா தலையில் அடிக்கும் கதை. காக்கா வடையைத் தூக்கிய கதையைக் கேட்டிருக்கிறேன், தலையில் அடிக்கும் என்று தெரியாது.

மேல் மாடிக்கு செல்லவே இப்போது பிடிக்கவில்லை. ரெடோடோ இல்லாத சோகம். காகத்திடம் பயம். ஆனால் செடிக்கு தண்ணீர் ஊற்ற வேண்டுமே. கையில் குச்சியுடன் மாடிக்கு சென்றால், ஏதோ வாட்ச்மேன் வேலைக்கு செல்வது மாதிரி ஒரு உணர்வு.

காகங்கள் இரை ஊட்ட.. ஊட்ட... குஞ்சுகளும் வளர்ந்து பறக்க முயற்சித்தன.

நாலைந்து நாட்களுக்குப்பின்...

தலைக்கு புதிதாக தொப்பி எல்லாம் வாங்கிக் கொண்டு, ஒரு குச்சியுடன் மாலை ஐந்து மணிக்கு மாடிக்கு சென்றபோது... செடியில் பாதி செர்ரிகளைக் காணவில்லை. மீதிப் பாதி சொரண்டப்பட்டிருந்தது.

“ஆஹா... நம்ம ரோடோடோ வந்து விட்டான்” என்றேன் மகிழ்ச்சியுடன். ஆமாம் எக்ஸ் ரோடோடோ, ஒரு பக்கம். ஒய் ரோடோடோ ஒரு பக்கம், இஜட் ரோடோடோ ஒரு பக்கம். ஒரே ஓட்டம்தான்.

“என்ன ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல..?” என்றார் என் மனைவி. இயற்பியலில் பட்டம் வாங்கியவர்.

இன்னொரு சந்தோஷம் காகங்களைக் காணவில்லை, தலையில் அடிக்க வரவில்லை. தடுப்பு சுவரின் அருகே சென்று, மரத்தை எட்டிப் பார்த்தேன்... வீட்டை காலி பண்ணி விட்டு, காகங்கள் குடும்பத்தோடு பறந்து விட்டன.

தொப்பியைக் கழற்றி விட்டு, குச்சியைக் கீழே வைத்து அமர்ந்தேன்.
“இதுவரை காகம் நம்மைத் துரத்தியதைப் போல அணிலையும் துரத்தி இருக்கும். அதுதான் அணில் வரவில்லை, ஓடிப் போய் விட்டது. இப்போது காகம் போனவுடன், அணில் வந்து விட்டது” என்று சொன்னார் என் மனைவி.

“அட, ஆமாம்” என்றேன்.

“இப்ப சந்தோஷம்தானே, அணிலைக் காணோம், அணிலைக் காணோம் என்று உளறிக் கொண்டிருந்தீர்களே..”

“சரிதான். ஆனால்...”

“ஆனால் என்ன ஆனால்?”

“செர்ரி போயுடுமே...”

“சரிதான். எல்லாமே வேணும்னா எப்படி? செர்ரியும் வேணும், அதே சமயம் அணிலைப் பார்க்கின்ற சந்தோசமும் வேணும்னா எப்படி.? இயற்பியலில் ஒரு விதி உண்டு, தெரியுமா ?”

“சொல்?”

“பிரபஞ்சத்தில் உள்ள மொத்த ஆற்றல் மற்றும் பொருள் நிலையானது. அதை உருவாக்கவோ அழிக்கவோ முடியாது... ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு மாறலாம்.”

“ஆம்...”

“அதுதான்.... புரிந்தால் சரி.”

வாழ்க்கையில் மாற்றங்கள் மட்டுமே. இறுதியில் பெற்றதும் இல்லை, அழிந்ததும் இல்லை.