டேய் குட்டி கண்ணா, எழுந்திரு... இன்றைக்கு பிறந்தநாள்பா... சீக்கிரமா எழுந்துப்பியாம். இன்னைக்கு சனிக்கிழமை வேறு... பாட்டி உனக்கு எண்ணெய் தேய்த்து விடுவேனாம். குளித்துவிட்டு, புத்தாடைப் போட்டுகிட்டு கோயிலுக்குப் போவியாம், எழுந்திரு... என தாத்தா, பாட்டி இருவரும் சேர்ந்து ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தனது பேரன் விஷ்ணுவை காலை ஆறு மணிக்கு ஆசையாய் எழுப்புகின்றனர்.
“அம்மா, மெனக்கிடாதீங்க. அவன் இன்றைக்கு டியூஷன் லீவு போடற மூட்ல இருக்கான், எழவே மாட்டான் என்றாள் மருமகள் புனிதா.”
இரவு பன்னிரெண்டு மணிக்கு, “நண்பன் ஒருவன் வாழ்த்து சொல்லுவான் என தூங்காமல் விழித்து காத்திருந்தான், அதனல்தான் இன்னும் தூங்குகிறான்” என்றார் முரளி.
அனைவரும் கையில் காபியோடு வந்து சாப்பாட்டு மேசையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். தொலைக்காட்சிப்பெட்டி ஓய்வில் இருந்தது.
வீடு, கல்வி, பக்தி, அரசியல், சங்கீதம், குடியிருப்பிலுள்ள குடிநீர் பிரச்சினை, அதற்கான தீர்வுகள் என பல நல்லவிஷயங்கள் பற்றி கலந்துரையாடினர்.
பேச்சு, பிறந்தநாள் பரிசு பற்றித் திரும்பியது.
“அப்பா! நீங்க வாங்கிக் கொடுத்த அத்தனை பிறந்தநாள் பரிசுகளையும் நான் அப்படியே வைத்துள்ளேன் தெரியுமா?” என்றான் முரளி.
“அப்படியா..? என ஆச்சரியப்பட்டவர் இன்னும் பத்திரமாக வைத்திருக்கியா..? கேட்பதற்கே, ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கு என முரளியை பாராட்டினார்.”
தூக்கம் கலைந்து எழுந்து வந்த விஷ்ணு, தாத்தா - பாட்டியின் காலில் விழுந்து நமஸ்கரித்து, பாட்டியின் கழுத்தைக்கட்டிக்கொண்டு கன்னம் வைத்து கொஞ்சி விளையாடி... அப்பா, அம்மாவின் அன்பான வாழ்த்துகளைப் பெற்றான்.
நீராடி, புத்தாடை அணிவித்து மகிழ்ந்தனர். மரக்கன்று ஒன்றைக் கொடுத்து, அதை நமது குடியிருப்பின் நடைபாதை ஓரத்தில் நடச்சொல்லி, நன்கு இதனைக் கவனிக்கவேண்டும் என்றும் கூறினார் தாத்தா.
பணமாக கொடுத்து, அதை உண்டியலில் சேமித்து தேவைப்படும் பொழுது எடுத்து செலவு செய்துக்கொள் என கொடுத்தார் பாட்டி. இரண்டையும் மகிழ்வோடு பெற்றான்.
தான் வாங்கி வைத்திருந்த தங்கத்திலான பிரேஸ்லெட்டை புனிதாவிடம் கொடுத்து, விஷாலுக்கு அணிவிக்கச் சொன்னான் முரளி. மகிழ்சியில் திளைத்தபடி விஷ்ணு அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று வந்தான்.
நண்பனின் அழைப்பு நள்ளிரவில் வாராதது மட்டுமே வருத்தமாக இருந்த விஷ்ணுவுக்கு, தனது வீட்டிற்கே, அவனுடைய அப்பாவுடன் வந்து வாழ்த்தியது இரட்டிப்பு மகிழ்சியளித்தது.
“ஏன்டா... இரவு பன்னிரெண்டு மணிக்கு கூப்பிடலை?” விஷ்ணு கேட்க...
“நீ தூங்குவேன்னு நினைத்துதான் கூப்பிட்டு வாழ்த்துச்சொல்லலை.
இப்பகூட மணியைப் பாரு மதியம் பன்னிரெண்டுதான் ஆவுது என்று கூறி அனைவரையும் கலகலப்பாக்கினான்” வாழ்த்துச் சொன்ன நண்பன். ஒரு மஞ்சள் கலரில் “பிரண்ட்ஷிப் பேண்ட்” ஒன்றை எடுத்து விஷ்ணுவின் கையில் அணிவிக்க... அதை ஆசையாய் ஏற்றுக்கொண்ட விஷ்ணு, முரளி அணிவித்த பிரேஸ்லெட்டை கழற்றி வைத்துவிட்டு, அவனுடன் பேசியபடி வெளியே விளையாடச் சென்றுவிட்டான்.
அவன் செய்கையால் முரளியும், புனிதாவும் மனத்தளவில் சங்கடப்பட...
விடுங்க, குழந்தைடா என்றாள் பாட்டி. முரளியின் தந்தை மட்டும் சரியாகப் புரிந்துக்கொண்டார் ஒரு தந்தையின் வலியை.
“பாருங்கப்பா. எவ்வளவு ஆசையா காஸ்ட்லியான கிப்ட் அதை கழட்டி வச்சுட்டுப் போறானே?” என்றார்.
“எவ்வளவு விலை இது..?” கேட்டார் அப்பா.
“ஐம்பதாயிரம் ரூபாய்பா” என்றான்.
“அந்த பேண்ட்?”
“என்ன..? ஒரு முப்பது ரூபாய் இருக்கும் என்றான் முரளி.”
அவனது இப்போதைய தேவை அதுவாக இல்லை, அதனால்தான் நீ வாங்கிய தங்கத்திற்கும் மதிப்பில்லை.
“நீ வாங்கிக் கொடுத்தாலும், வெளியவோ, பள்ளிக்கோ அதை போட்டுண்டு அவனால் போக முடியுமா? நீயும் சேமிப்பாக இருக்கட்டுமேன்னுதானே வாங்கினே? அதிலும் ஒரு சுயநலம் உள்ளதுதானே?” அப்படித்தான் நீ புரிஞ்சுக்கனும் முரளி.
ஆமாம்பா என்ற முரளி, “நீங்க ஈஸியா சொல்லி விடுகிறீர்கள், என்னால் முடியவில்லை” என்ற முரளியிடம்..
“நீ சேர்த்து வைத்துள்ளதாக சொன்ன பரிசு பொருட்களையெல்லாம் சென்று பார் உனக்கும் புரியும் என்றார்.”
சிறு வயதில் அப்பா கொடுத்த பரிசைவிட, நண்பர்கள் கொடுத்த பரிசு பொருட்கள்தான் அதில் அதிகமாக இருந்ததைக் கண்டான்.
அதிலும் ஃப்ரெண்ட்ஷிப் பேண்ட்டு ஒன்று இருந்ததைக் கண்டு, வாழ்க்கையில் வயதுகூடி விழுமியங்கள் மாறிக்கொண்டே இருந்தாலும், மாறாது தொடர்ந்து வருவது எதிர்பார்ப்புகளற்ற அன்பு மட்டும்தான் என மனத்தால் தெளிவுற்றான் முரளி.
Leave a comment
Upload