தொடர்கள்
மகளிர் ஸ்பெஷல்
பரதம் ஒரு உடற்பயிற்சி! ஒரு சாதனை!! - காஞ்சனா ஜனார்த்தனன்.

20210206001712496.jpeg

மயூரா நாட்டியப் பள்ளியின் தலைவர் திருமதி.காஞ்சனா ஜனார்த்தனன்

மகளிர் ஸ்பெஷலுக்காக இவரை நேர்முகம் செய்யுமுன்…….

ஒரு சம்பிரதாய அறிமுகம்...

காஞ்சனா ஜணார்த்தனன், வழுவூர் பாணியிலான பரதநாட்டியத்தை குரு கோயம்பத்தூர் ஸ்ரீ P.K. ஜெயசங்கர் அவர்களிடம் தன்னுடைய மூன்றாவது வயதில் இருந்து பயின்றார். கடந்த முப்பத்தைந்து வருடங்களாக, தன் மயூரா நாட்டிய பள்ளி மூலமாக குழந்தைகளுக்கு இக்கலையை பயிற்றுவித்து வருகிறார்.

நாட்டிய வகுப்புகள் பம்மலிலும், ராஜா அண்ணாமலை புரத்திலும், சேலையூரிலும் நடைபெற்று வருகின்றன. காலத்திற்கு ஏற்ப, நவீன விஞ்ஞான முறையில், ஆன்லைன் வகுப்புகளும் இவர் “zoom” மற்றும் “What's app” மூலமும் நடத்தி வருகிறார். மாணவியர்களுக்கு நாட்டுவாங்கமமும் கற்றுகொடுக்கிறார்.

விபஞ்சியால் “நடனகலா சிரோண்மனி” எனும் பட்டம், சலங்கை ஒலி டிரஸ்டால் “நாட்டியகலா சிரோண்மனி” பட்டம், பரதாஞ்சலியால் “பக்திமார்க நாட்டியாசார்ய சுந்தரம்” பட்டம், சத்குருநாதா பாதுகா ஆராதனா சபாவின் சார்பில் “ப்ரதம பரத ஆசார்யா” போன்றவை இவருக்கு வழங்கபட்ட விருதுகளுள் சில.

International Peace University, German இவருக்கு indian டான்சில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. Mahatma Thinkers Forum கலை தென்றல் award வழங்கி பெருமைப்படுத்தியது.

குற்றால குறவஞ்சி, கணேச சரித்திரம், நவரச நாயகி, திருப்புகழ், ராமாயணம், ஓம் நமசிவாய, ஜானகி நவரசம், ஐயப்பன் சரித்திரம், சரவண பவ, மீனாட்சி திருக்கல்யாணம், ஸ்ரீ தாமல் ராமகிருஷ்ணன் அவர்களின் “சென்னையில் திருவையாரு” நிகழ்ச்சியில் “ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம்” போன்றவை இவரின் பெருமைமிகு நாட்டிய படைப்புகள்.

20210206001753751.jpeg

மயூராவின் மாணவியர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நாத நீராஞ்சணம்” நிகழ்ச்சியிலும், கும்பகோணம் ஸ்ரீ ஓப்பிலியப்பன் திருக்கோவிலின் ஸ்ரீ ராமநவமி மகோத்ஸவத்திலும்”, ஸ்ரீரங்கம் திருக்கார்த்திகை உத்ஸவத்திலும் பங்கேற்றுள்ளனர்.

இவரது மாணவியர்களை, சிதம்பரம் - அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் பரதநாட்டியத் தேர்வுகளையும் எழுத வைக்கிறாார். எட்டு நிலைகளை உடைய தேர்வு முடிவில், பட்டயம் வழங்கப்படும்.

இந்தக் கடைசி வரிதான் அவருடன் என்னைப் பேச வைத்தது.

அதாவது எட்டு நிலைகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடனத்தில் தேர்வு எழுதினால் (அல்லது ஆடினால்?) பட்டயம் தருகிறார்களாம். இந்த பட்டயம் வெளிநாடுகளில் எங்கெல்லாம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தை அங்கீகரிக்கிறார்களோ அங்கெல்லாம் நடன பள்ளிகளில் இந்த மாணவிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது. எட்டு நிலைகளை கடந்தா எம்.ஏ. நடனம் வரை கொடுக்கப்படுகின்றன. தியரி, நடனம், பாடல்கள், சப்தம், வர்ணம், எல்லாம் சொல்லிக் கொடுக்கணும். மாணவர்களின் தரம் உயர்கிறது. அரசாங்க அங்கீகாரம் உள்ளது. நாலு வருடமாக மயூராவின் மாணவர்கள் இந்த தேர்வுக்கு செல்கிறார்கள்.

இனி….

கேள்வி: இன்றும் பரதம் கற்றுக் கொள்ள இளம் பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனரா அல்லது பெற்றோர்களின் வற்புறுத்தலில் தான் கற்றுக் கொள்கிறார்களா..?

ஆசிரியர் காஞ்சனா: நிறைய பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். இது ஒரு செம எகர்ஸைஸ். பரதம் கற்றுக் கொள்பவர்கள் எந்த யோகாசனமோ வேறு எதுவுமோ செய்ய வேண்டிய அவசியமில்லை. அது மட்டுமல்லாமல் வருங்காலத்தில் சொல்லிக் கொடுக்கலாம் என்ற வகையில் இது ஒரு தொழிற்கல்வி என்று கூட சொல்லலாம்.

கே: எந்த வயதிலிருந்து பரதம் கற்றுக் கொள்ளலாம்…

ஆ. காஞ்சனா: என்னுடைய மிக இளம் மாணவி 5 வயசு. அந்த வயசுலேர்ந்தே கத்துக்கலாம். ஆனா 7 வயசு அப்படீங்கறது தான் சரியான வயசு. இதுக்கு முக்கியமா ஆர்வம் முக்கியம்.

கே: நேரில் சொல்லிக் கொடுப்பதற்கும், ஜூமில் சொல்லிக் கொடுப்பதற்கும் எப்படியிருக்கிறது? குறிப்பாக நடனம் சொல்லிக் கொடுப்பது கஷ்டமாக இல்லையா..?

ஆ. காஞ்சனா: நான் ஜூமை விட, டுயோவோ அல்லது வாட்சப்லயோ தான் செய்யறேன். இன்னும் சொல்லப் போனால், கரோனாவுக்கு முன்னாடியை விட இப்பத்தான் 80 சதவிகிதம் அதிகமா உழைக்கிறேன். எனக்கு போக்குவரத்து நேரம் மிச்சம். மாணவர்களுக்கும் நேரம் மிச்சம். அவர்களால் அலைச்சல் இல்லாமல் கத்துக்க முடிகிறது. மேலும் படிப்பதற்கும் அவர்களுக்கு நிறைய நேரம் கிடைக்கும். அரங்கேற்றத்துக்கு முன்னாடி கண்டிப்பா நேர்ல வகுப்பு வேணும். ஆனால், மத்த சமயத்தில ஆன்லைனே ரொம்ப சவுகரியம் தான்.

கே: பரதம் என்பது இந்து மதத்திற்கான ஒரு விஷயம் தானே? இதில் மற்ற மத மாணவர்கள் பரதம் கற்றுக் கொள்வதுண்டா..?

ஆ. காஞ்சனா: பரதத்திற்கும் மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது. இலக்கியம் போலத்தான் இதுவும். பக்தி இலக்கியங்கள், தமிழ் கற்றுக் கொள்ளும் போது கற்றுக் கொள்ள வேண்டி வருவது போல, நடனமும் அப்படித்தான். ஒரு வேளை மாற்று மதத்தினருக்கு நடனம் கற்றுக் கொள்வது விருப்பம் என்றால் தாராளமாக கற்றுக் கொள்ளலாம். என்னிடம் ஒன்றிரண்டு பேர் வேறு மதம் சார்ந்தவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் பிற மத வழிபாடுகளுக்கு ஏற்ப ஒன்றிரண்டு நடனங்களும் அமைத்துக் கொடுத்திருக்கிறேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இந்து மதத்தை சேர்ந்தவர்கள் தான் பரதம் கற்றுக் கொள்கிறார்கள்.

கே: ஆண்கள் பரதம் கற்றுக் கொள்வதைப் பற்றி உங்கள் கருத்து என்ன???

ஆ. காஞ்சனா: ஆண்கள் தாராளமாக கற்றுக் கொள்ளலாம். பரதம் கற்றுக் கொண்டால் பெண்கள் போல நளினம் வந்துரும் என்பது தவறான ஒரு கண்ணோட்டம். அவர்களுக்கு ஏற்றது போல பாவங்கள் இருக்கிறது. நளினத்தை தவிர்த்து விட்டு, அதை சொல்லிக் கொடுக்க வேண்டும். அது எங்களுக்கு தெரியும். ஆண்களுக்கும் இது ஒரு நல்ல எக்சர்சைஸ் தானே? அதனால ஆண்கள் கத்துக்கறது ஒரு தப்பும் கிடையாது. எங்கிட்ட கூட இரண்டு மூணு மாணவர்கள் கற்றுக் கொண்டார்கள்.

கே: பரதம் சின்ன வயதில் கற்றுக் கொண்டு நிறுத்தியதும் உடல் பருமனாவது ஏன்..?

ஆ. காஞ்சனா: நான் பரதம் பற்றி பேசப் போகும் இடத்திலெல்லாம் இதைத்தான் சொல்றேன். டயட் கண்ட்ரோல் வேணும். நடனம் ஆடும் போது சாப்பிடும் டயட், நடனம் நிறுத்தியதற்கப்புறம் நிச்சயம் சாப்பிடக் கூடாது. நிறைய பேர் இங்க தான் தப்பு பண்றாங்க. நம்ம அம்மாக்கள் பாவம் குழந்தை டான்ஸ் ஆடறதுன்னு நிறைய டயட் கொடுத்து விடுகிறார்கள். இதான் பிரச்சினை.

இது கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் தான். டயட்ல உறுதியா இருந்தா இதை தவிர்க்கலாம்.

கே: அரங்கேற்றம் என்பது தான் கிளைமாக்ஸா..? அதற்கப்புறம் என்ன?

ஆ. காஞ்சனா: பதினாறு வயது தான் அரங்கேற்றம் செய்ய வேண்டிய வயசு. அரங்கேற்றம் என்பது பணத்திற்காக நாங்கள் ஏற்பாடு செய்வது இல்லை. நிறைய விஷயங்கள் அவர்களுக்கு தெரிந்த பின் தான் அரங்கேற்றம் பண்ணனும். அரங்கேற்றம் என்பது ஒரு சாதனை. ஒரு தடவை தான். 15 வர்ணம் 25 அல்லது 30 பதம், 15 தில்லானா, ஒரு நாலஞ்சு டான்ஸ் டிராமா, இத்தனையும் அவர்களுக்கு வந்தா தான், அரங்கேற்றம் பண்ணும் போது திருப்தியா இருக்கும். அரங்கேற்றம் ஒரு படி. அதுக்கப்புறமும் தொடர்ந்து, அவர்கள் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். இன்னொரு விஷயம் நான் அதிகமாக் சிருங்கார ரசம் கற்றுக் கொடுப்பதில்லை. பக்தி மார்க்கம் தான் சொல்லிக் கொடுக்கிறேன். இருந்தாலும் அரங்கேற்றத்தின் போது அவர்களுக்கு எல்லாம் தெரிய வேண்டும்.

கே: சினிமாவில் பரதம் பார்த்தா கோவம் வருமா..?

ஆ. காஞ்சனா: அது பத்தி காமெண்ட் பண்றதுக்கு எனக்கு தெரியாது. ஏன்னா சினிமா டான்ஸ்களை என் மாணவர்களுக்கு கத்துக் கொடுக்க மாட்டேன். அவர்கள் காட்டும் வேகமான பரதம், சினிமா பரதம் எங்களுடைய டான்ஸ் இல்லை. ஏன்னா, அது அரைகுறையான அவர்களுக்கு தேவையான விதத்தில பண்றாங்க. தில்லானா மோகனாம்பாள் மாதிரி பத்மினி மாதிரியெல்லாம் இப்ப யாரும் சினிமாவுல ஆடறதில்ல. அதுனால சினிமா பத்தி வேணாமே!!

கே: உங்களை நெகிழ வைத்த சம்பவம் இதுவரை..?

ஆ. காஞ்சனா: சென்னையில் ஶ்ரீவில்லிபுத்த்தூர் என்ற நிகழ்ச்சியில் 30 திருப்பாவைகளும் 2 மணி நேரத்தில் பண்ண முடியுமா என்று கேட்டார்கள். ஒரு தைரியத்தில் சரி என்று சொல்லிவிட்டேன். ஆனால் சொன்னது போல இரண்டு மணி நேரத்தில் இரண்டாயிரம் பேர்களுக்கு முன்னால் அதை நடத்திக் காட்டினோம். ரொம்ப நெகிழ்வான ஒரு நிகழ்ச்சின்னா இது தான். ஶ்ரீவில்லிபுத்தூர்லேந்து வந்த கோவிந்த பட்டாச்சாரியார் ரங்கமன்னார் கிட்டேர்ந்து இருந்த ஒரு வஸ்திரத்தை எடுத்து கொண்டு வரச் சொல்லி, எனக்கு போடச் சொன்னார். இதை விட ஒரு பெரிய விஷயம் என் வாழ்க்கையில இருக்க முடியாது. நெகிழ்ந்து போன நேரம்.

கே: உங்களுடைய அடுத்த இலக்கு என்ன..?

ஆ. காஞ்சனா: நான் இரண்டு வருஷத்துக்கு ஒரு தடவை பள்ளி நாள் கொண்டாடுவோம். ஒரு நாள் இல்லை.. பத்து நாள் கொண்டாடுவேன். எனக்கு அடுத்த முறை வசதியில்லாத பசங்களுக்கும் அரங்கேற்றம் பண்ணி, என்னுடைய மாணவர்கள் நட்டுவாங்கம் சொல்ல நான் அதை வெளிய உக்காந்து பாக்கணும். ஆண்டாள் சீன் செட்டிங்க்லாம் பண்ணி பெரிய அளவில அதைப் பண்ணனும் அப்படீங்கறதும் என் ஆசை. பார்க்கலாம்.

(மயூரா பள்ளியின் மாணவர்களின் தொலைக்காட்சி நடனம் ஒரு சாம்பிளுக்கு)

- ராம்