இயற்கை என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பச்சை நிறம். பச்சை நிறம் கண்ணுக்கு குளிர்ச்சி, மனதிற்கு வலிமை.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகாவில், செய்யாறு, கமண்டலநதி, பிரம்பகநதி என மூன்றும் ஒன்றுசேரும் வாழைப்பந்தல் எனும் ஊரை அடுத்த முனுகப்பட்டு எனும் பசுமையான கிராமத்தில் பச்சைநிறத்தில் கம்பீரமான தோற்றத்துடன் அமர்ந்த நிலையில் மூலவராக வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து கொண்டிருக்கிறார். பச்சை நிறமுடைய இவரை ‘பச்சையம்மன்’ என்றே அழைக்கின்றனர்.
இங்கு அன்னை பார்வதி வாழைப்பந்தல் அமைத்து தவம் செய்ய, சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் துவாரபாலகர்களாக விளங்கும் அபூர்வ கோயிலாக திகழ்கின்றது. பல இடங்களில் கோயில் கொண்டுள்ள பச்சையம்மனுக்கெல்லாம் வாழைப்பந்தலில் குடி கொண்டுள்ள பச்சையம்மனே முதன்மையானவர்.
ஸ்தல புராணம்:
ஒரு சமயம், பார்வதிதேவி, சிவபெருமானின் உடலில் சரி பாதி (இடபாகம்) பிடிக்க வேண்டும் என வைராக்கியம் கொண்டு, அன்னை சிவனைப் பிரிந்து பூலோகத்துக்கு வந்து, தவம் செய்ய சரியான இடத்தை தேடி காஞ்சியிலிருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வரும் வழியில் ஓரிடத்தில் வாழைப்பந்தல் அமைத்து, மணலில் லிங்கம் பிடித்து வழிபட எண்ணினார். அதற்கு நீர் தேவைப்பட்டது. தன் புதல்வர்களான விநாயகரையும், முருகனையும் அழைத்து, பூஜைக்கு நீர் கொண்டு வரச் சொன்னார். இருவரும் புறப்பட்டு வெகு நேரமாகியும் வரவில்லை. அவர்கள் வராததால் பார்வதிதேவியே, தன் கையில் உள்ள பிரம்பினால் பூமியை கிளறி, ஓர் நீரூற்றினை ஏற்படுத்தினார். பின் அந்நீரைக் கொண்டு மணலில் லிங்கம் பிடித்தார். அதுவே பிரம்பக நதி என்று பெயர் பெற்றது. அதன் பின்னர் கணபதியின் “கமண்டல நதி”யும், முருகனின் “சேய் ஆறு”ம், என ஆளுக்கொரு நதியோடு அன்னை முன் வந்து நின்றனர். அன்னை உண்டாக்கிய நதியோடு, மூன்று நதிகள் ஆயின. இந்த திரிவேணி சங்கமத்தால் உடலும், உள்ளமும் குளிர்ந்து, அவரது சிவந்த நிற மேனி பச்சை நிறமானது. இந்த மூன்று நதிகளும் ஒன்று சேரும் ஊரான முனுகப்பட்டில் அமைந்த இடத்தை முக்கூட்டு என்றும், இங்குள்ள சிவனை மண்ணாதீஸ்வரன், முக்கூட்டு சிவன், மன்னார்சாமி என்றும் அழைக்கின்றனர். அன்னை சிவபூஜை செய்யும் வேளையில் அருகில் உள்ள கதலிவனத்தில் (வாழைத்தோப்பு) இருந்த ஒரு அரக்கன் இடையூறுகள் பல செய்தான். இதனை முறியடிக்க சிவன் வாழ்முனியாகவும், விஷ்ணு செம்முனியாகவும் அவதாரம் எடுத்து அன்னையின் தவம் நிறைவுபெற உதவினர். இதன்பின் திருவண்ணாமலையில், அன்னை சிவபெருமானிடம் சரிபாதி உடலை அடைந்தார் என ஸ்தலபுராணம் கூறுகின்றது.
ஸ்தல அமைப்பு:
ஆரணி - செய்யாறு சாலையில் கமண்டல நாகநதியின் தெற்கே, பச்சையம்மன் சமேத மன்னார்சாமி கோயில் அமைந்துள்ளது. சாலையின் கீழ்பறம் வாழ்முனி, செம்முனி மற்றும் குதிரை வடிவங்கள் பெரிய வடிவில் உள்ளன. சாலையின் மேற்புறம் பச்சையம்மன் கோயில் சிறிய மூன்று நிலை கொண்ட இராஜகோபுரம் அமைந்துள்ளது. இந்திரனும், எதிரே உள்ள பாறையில் இரட்டை தந்தங்கள் கொண்ட ஐராவதம், ஈசான்ய மூர்த்தி, நந்தி வடிவங்கள் பெரிய அளவில் உள்ளன. அடிவாரத்தில் துவார கணபதி, சந்நிதி தெற்கு முகமாய் இருக்கிறது.
இடதுபுறமாக வலம் வந்தால் அக்னி மூலை எனும் தென்கிழக்கில் அக்னி முனியான அக்னி பகவானும், அதனையடுத்து நவக்கிரகங்களாக நவ முனிகளும், அஷ்டதிக்கு பாலகர்கள் எனும் அஷ்ட முனிகளும், சப்தரிஷிகள் எனும் சப்தமுனிகளும் மேற்கு, வடக்குமுகமாய் பிரம்மாண்ட வடிவில் கம்பீரமாய்க் காட்சி தருகின்றனர். வலமாக வரும் போது மன்னார்சாமி சன்னிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு சிவபெருமானை லிங்க வடிவிற்கு பதிலாக மனித வடிவில் சிலா ரூபத்தில் காண்பது சிறப்பானது. ஈஸ்வரன் நான்கு கரங்களோடு, கீழ் வலது கரத்தில் சூலம், கீழ்இடது கரத்தில் கபாலம், மேல் வலது கரத்தில் மழு, மேல் இடது கரத்தில் மான் தாங்கியுள்ளார். இவரே மன்னார் ஈஸ்வரன் எனும் மன்னார்சாமி ஆவார்.
இவரையடுத்து நடுவில் பச்சையம்மன் சன்னிதி இருக்கிறது. அன்னை பச்சையம்மன், கருவறை முன் மண்டபத்தில் சப்தமாதர்கள், விநாயகர், முருகனும் வாசலின் இருபுறமும் காட்சி தருகின்றனர். இந்த ஆலயத்தின் துவாரபாலகர்களாக, வலதுபுறம் சிவபெருமானும், இடதுபுறம் மகாவிஷ்ணுவும் காட்சி தருவது அபூர்வ அமைப்பாகும். இதனைக் கடந்து கருவறையில் நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் இரு பச்சையம்மன்கள் காட்சி தருகின்றனர். நின்ற அம்மன் கற்சிலையாகவும், அமர்ந்த அம்மன் சுதைவடிவிலும் உள்ளது. அன்னையின் கீழ் வலது கரம் பிரம்பையும், கீழ் இடது கரம் கபாலத்தையும், மேல் வலது கரம் அங்குசத்தையும், மேல் இடது கரம் பாசத்தையும் தாங்கி காட்சி தருகின்றார். இரண்டு அம்மன்களுக்கும் அலங்காரம், தீபாராதனை நடத்தப்படுகிறது. ஆனால் நின்ற கோலத்தில் இருக்கும் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது.
இக்கோயிலின் ஸ்தலவிருட்சமாக வெப்பாலை மரம் உள்ளது. ஸ்தலத் தீர்த்தமாக கோயிலுக்கு வடக்கே செய்யாறு ஓடுகிறது.
விழாக்கள்:
இங்கு பிரமோற்சவம் ஆடி மற்றும் ஆவணியில் வரும் முதல் இருவார திங்கட்கிழமைகளைச் சேர்த்து ஆறு திங்கட்கிழமைகள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 7-வது திங்கட்கிழமையன்று அம்மன் திருவீதியுலா நடை பெறும். பிரசாதமாக வேப்பிலையும், பச்சை நிற குங்குமமும் வழங்கப்படுகிறது. இதை சோமவார விழா என அழைக்கின்றனர்.
பொதுவாக சிவனுக்கு திங்கட்கிழமையும், அம்மனுக்கு ஆடி வெள்ளியும் உகந்ததாகும். சிவனும், சக்தியும் ஒன்றே என்று சொல்லுகிற மாதிரி இந்த கோவில் மட்டும் திங்கள் கிழமை அம்மனுக்கு உகந்த நாள். இது தவிர ஞாயிற்றுக்கிழமையிலும் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.
நேர்த்திக்கடன்:
இந்த அம்மன், திருமணம், மக்கட் பேறு அருளும் தெய்வமாக விளங்குகிறார். மக்கட் பேறு வேண்டுதல் நிறைவேறியவர்கள் 5 அல்லது 7வது மாதத்தில் அம்மனுக்கு வளையல் சாத்தி வழிபட்டுச் செல்கின்றனர். இங்கு பில்லி, சூனியம், கண் திருஷ்டி, சொத்து பிரச்னை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சை பழத்தை நசுக்கி, எதிரில் உள்ள முனிகளுக்கு நடுவில் உள்ள கருங்கல்லில் தேங்காயை வீசி சிதறச் செய்கின்றனர். இதனால், அனைத்துப் பிரச்னைகளும் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது. மற்றும் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தும், பச்சை நிற புடவை சாற்றியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
தினமும் காலை 07.00 மணி முதல் பகல் 02.00 மணி வரையிலும், மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும். ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் காலை 07.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.
கோயிலுக்கு செல்லும் வழி:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் இருந்து கிழக்கே 11 கி.மீ., செய்யாறு நகரில் இருந்து மேற்கே 20 கி.மீ தொலைவில் உள்ளது. ஆரணியில் இருந்து மாநகர பேரூந்து உள்ளது. ஆட்டோ வசதியும் உள்ளது. வாழைப்பந்தலில் இருந்து 2 கிமீ தூரத்தில் இருக்கிறது.
இக்கோவிலில் பச்சைத் திருமேனியராய் அருட்காட்சி தரும் பச்சையம்மனை தரிசித்து, நாம் வேண்டியதை பெறுவோம்!!
Leave a comment
Upload