மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை மிஸ்டர் ரீல் பார்க்கப் போனபோது, அவர் சைக்கிள் விட பழகிக் கொண்டிருந்தார். மிஸ்டர் ரீல் உள்ளே வந்ததை பார்த்ததும், அதை சாக்காக வைத்து “ஒரு பத்து நிமிஷம் முக்கிய விஐபி வந்திருக்கிறார்.. அதனால் பிரேக் எடுத்துக் கொள்கிறேன்” என்று சைக்கிளை பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைத்து விட்டு ஓடி வந்தார்.
“நல்ல வேலை மிஸ்டர் ரீல்.. நீங்கள் வந்து என் மானத்தை காப்பாற்றினீர்கள். சைக்கிள் ஓட்டுறது, ஸ்கூட்டர் ஓட்டுவது இதெல்லாம் ஆட்சியை நடத்துவதை விட ரொம்ப கஷ்டம் என்பது இப்பதான் தெரியுது” என்று மம்தா சொன்னதும்...
“பிரசாந்த் கிஷோர் ஐடியாவா இதெல்லாம்” என்று மிஸ்டர் ரீல் கேட்க... உடனே ஆச்சரியத்துடன் மம்தா பானர்ஜி.. “ஆமாம் உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்” என்று கேட்டார். உடனே மிஸ்டர் ரீல்... “அதுதான் தமிழ்நாட்டில், திமுக தலைவர் ஸ்டாலினை அதை செய்யுங்க.. இதை செய்யுங்க என்று டார்ச்சர் தராரே” என்று சொல்ல... அதற்கு மம்தா... “அப்படியெல்லாம் இல்லை... நம்மகிட்ட வாங்குற கோடிக்கு, கரெக்டா அவங்க வேல பாக்குறாங்க” என்று சொல்ல... அதற்கு மிஸ்டர் ரீல்... இதெல்லாம் ஒரு வேலையா..? இந்தக் கட்சியை விட்டு தினம் ஒரு எம்எல்ஏ, ஒரு எம்பின்னு தாமரை பக்கம் இழுக்கிறாங்க.. அதைநிறுத்த ஏதாவது யோசனை சொன்னாரா.. அதை சொல்லுங்க..” என்று கேட்க... உடனே மம்தா.. “ராத்திரி பேசுவார், நானே கேட்கிறேன்”என்று சொன்னதும்...
மிஸ்டர் ரீல்... “மேடம், நீங்க காங்கிரஸ், காம்ரேட் இவர்கள் எல்லோரையும் சுருட்டி போட்டு முழுங்கினிங்க. நீங்களே 10 பிரசாந்த் கிஷோருக்கு சமம். நீங்க போய் பிரசாந்த் கிஷோர்கிட்ட ஐடியா கேட்டுக்கிட்டு இருக்கிறது சரியாவா இருக்கு... அடுத்து, மூன்று சக்கர சைக்கிள உங்கள ஓட்ட சொல்வார் பிரசாந்த் கிஷோர். அதை ஒட்டுவீங்களா” என்று மிஸ்டர் ரீல் கேட்க... உடனே மம்தா பானர்ஜி.. “அட நல்ல ஐடியாவா இருக்கே.. இதனால கைக்குழந்தைகள் வைத்திருக்கிற தாய்மார்கள் ஒரு கோடியே 12 லட்சத்து 56 ஆயிரத்து 606 பேர் ஓட்டு எனக்கு கிடைக்கும்” என்று சொல்லிவிட்டு... தனது பாதுகாப்பு அதிகாரியை அழைத்து பெங்காலியில் ஏதோ சொல்ல.. அவர் சல்யூட் அடித்து குஷியாக ஓடினார்.
உடனே மிஸ்டர் ரீலை பார்த்து... “என்ன பாக்கறீங்க.. உங்க யோசனையை உடனே செயல்படுத்த தான், நான் ஓட்டுகிறார் மாதிரி ஒரு மூன்று சக்கர சைக்கிள் ரெடி பண்ண சொல்லிட்டேன். நாளை அதில் போய் ஓட்டு கேட்பேன்.. எப்படி ஐடியா” என்று சொல்ல...
அதற்கு மிஸ்டர் ரீல்... “ஆனா, பாரதிய ஜனதா 800 பொதுக்கூட்டம் போடப் போறாங்க.. அதில் 786 கூட்டத்தில் மோடி பேசப் போகிறார், 799 கூட்டத்தில் அமித்ஷா பேசப் போகிறார் என்று எனக்கு தகவல் வருது. இது தவிர, தினம் உங்க கட்சியிலிருந்து யாராவது தாமரைப் பக்கம் தாவிக் கொண்டே இருக்காங்க. இப்ப வரப்போற தேர்தலில் போட்டி போட அவ்வளவு வேட்பாளர்கள் உங்ககிட்ட இருக்காங்களா” என்று மிஸ்டர் ரீல் கேட்க... அதற்கு மம்தா... “என் சித்தப்பா, பெரியப்பா, மாமா, அத்தை, சித்தி என்று எங்க குடும்பம் ரொம்பவும் பெரியது. அவங்க எல்லோரும் எங்க கட்சி உறுப்பினர்கள். அதனால், வேட்பாளர் பிரச்சனை எல்லாம் இல்லை. அது மட்டும் அல்ல... அமித்ஷா, மோடி ரெண்டுபேரும் ஆதார் கார்டு, பால் கார்டு எல்லாத்தையும் கல்கத்தா அட்ரஸ்க்கு மாத்திட்டாங்க. அவங்க பெயரை கூட நரேந்திர பானர்ஜி, அமித்ஷா பாசு என்று மாற்றுகிறதுக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்காங்க. அதன் பிறகு, இந்த மண்ணின் மைந்தர்கள் நாங்கள் என்று பிரச்சாரம் பண்ணவும் ஏற்பாடு நடக்குது என்பதெல்லாம் எனக்குத் தெரியும். ஆனால், தேர்தலின்போது வங்கதேசம் எனக்கு உதவி செய்யும்” என்றும் மம்தா பானர்ஜி சொல்ல... “வங்கதேசம் எப்படி உங்களுக்கு உதவி செய்வார்கள்..” என்று மிஸ்டர் ரீல் கேட்க...
அதற்கு மம்தா பானர்ஜி... “வங்கதேசத்திலிருந்து ஒவ்வொரு தொகுதிக்கும் 20,000 பேர் வந்து கள்ள ஓட்டு போட்டுட்டு போகப் போறாங்க” என்று மம்தா பானர்ஜி சொல்ல... அதற்கு மிஸ்டர் ரீல்.. என்னது “கள்ள ஓட்டா” என்று அதிர்ச்சியோடு கேட்க... அதற்கு மம்தா... “அப்படி சொல்ல முடியாது... இது பெங்கால் வங்காள ஒப்பந்தம். இந்த ஒப்பந்தம் நான் போட்டது, பாரதிய ஜனதாவுடன் கூட்டணி இருந்தபோதுதான்” என்று சொல்லி சிரிக்க...
உடனே மிஸ்டர் ரீல்... “இந்த விஷயம் நரேந்திர பேனர்ஜி, அமித்ஷா பாசுவுக்கு தெரியுமா” என்று கேட்க... உடனே மம்தா பானர்ஜி.. “தெரியாது” என்றார். “அதெல்லாம் இருக்கட்டும்.. காங்கிரஸ், காம்ரேட் இவர்களை எப்படி சமாளிக்கப் போறீங்க” என்று மிஸ்டர் ரீல் கேட்க...
“அந்த கட்சிங்க எல்லாம் இங்க லெட்டர் பேட் கட்சி. அவங்கள பத்தி ஒன்னும் பிரச்சனை இல்லை. இங்கு போட்டியே எனக்கும் தாமரைக்கும் தான்”. ஜோதிபாசு, சித்தார்த்த சங்கர் ரே இவர்களெல்லாம் மிஸ்டர் ரீல் முன்பு தலையில் அடித்துக் கொள்வது போல் அவருக்கு தோன்றவே.. மிஸ்டர் ரீல் கிளம்ப.. அப்போது மம்தாவின் மூன்று சக்கர சைக்கிள் உள்ளே வந்தது.
Leave a comment
Upload