கட்டை கால் கலைஞன்...
இவர் பேர் என்ன என்று எனக்கு தெரியாது. ஆனால், அவரின் ஒவ்வொரு செயலிலும் ஒரு அழகும், கலையும் மிளிர்வதால், அவரை கலைஞன் என்றே சொல்கிறேன். இவரை பெரும்பாலும் என்னுடைய காலை வாக்கிங்கில் பார்ப்பேன். நான் காலை பேப்பர் வாங்கும் கடையில் இவரும் பேப்பர் வாங்குவார். மெதுவாக கடைக்காரரிடம் பேச்சுக் கொடுத்தேன். “அவர் தினத்தந்தி தான் சார் படிப்பார். பேப்பர வாங்கிட்டு போய் படிச்சிட்டு, திருப்பி கொடுத்திடுவார். ஏதாவது சின்ன வேளையாவது செஞ்சிட்டு தான் காசு வாங்கிப்பார்.”
எதனால் அவரின் வலது கால் கட்டை காலாக இருக்கிறது என்று கேட்டேன். “எனக்கு சரியா தெரியாது சார், பஸ்ஸுல அடிபட்டு சாக இருந்த ரெண்டு ஸ்கூல் பசங்கள காப்பாத்த போய், தன் கால இழந்துட்டார்ன்னு சொல்றாங்க.”
“ஜெய்ப்பூர் கால் வாங்கி தரேன்னு சொன்னாங்களாம்... எனக்கு கட்டைகால் போறும் என்று சொல்லி விட்டாராம்” என்றார்.
காலையில் ஒரு டீ, தினத்தந்தி பேப்பர், அப்புறம் யாரும் அவரை பார்க்க முடியாது. மாலையில் ஒரு டீ, மாலை முரசு பேப்பர். இந்த இரு நேரங்களில் மட்டுமே அவர் கண்ணில் படுவார்.
நான் ஒரு நாள் மாலை, அவரிடம் நெருங்கி பேச முயன்றேன். நான் ஒரு டீ வாங்கி கொடுக்க முயன்றேன். முதலில் மறுத்துவிட்டார். பின் என்னோட வண்டியை துடைத்து விட்டு வந்து நின்றார். அதன் பின்னரே டீ சாப்பிட்டார்.
எதுவும் பேசவில்லை....
இரண்டு நாட்களுக்கு பிறகு, நான் அவரையே தொடர்ந்து சென்றேன். அவர் பேப்பர் படித்து முடித்து, பிறகு சென்றது ஒரு ஹோட்டலுக்கு. அங்கு தட்டுகள் கழுவி, பாத்திரம் தேய்த்து கொடுத்தார். வேலை முடிந்தவுடன் ஒரு தட்டில், நாலு இட்லி மற்றும் ஒரு தோசை வைத்து அவரிடம் கொடுத்தார் மாஸ்டர். சாப்பிட்டுவிட்டு தட்டினை கழுவி அவரிடமே திருப்பி கொடுத்து விட்டார். பின்னர் அங்கிருந்து சென்று ஒரு மெக்கானிக்கல் கடையில் நுழைந்து வேலை செய்ய ஆரம்பித்து விட்டார். கடகடவென அவர் செய்த வேகம் என்னை ஆச்சரியப்பட வைத்தது. பகல் உணவு நேரம் அந்த கடை முதலாளி அவருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தார். சாப்பிட்டு விட்டு மிச்சம் இருந்த வேலையை முடித்து விட்டு கிளம்பினார். நேராக ஒரு காய்கறி கடைக்கு சென்றார், அங்கே ஓரமாய் குவித்து வைக்கப்பட்டிருந்த காய்கறி தோல்கள், அழுகிய காய்கறிகள் அடங்கிய ஒரு மூட்டையை எடுத்துக்கொண்டு நடந்தார். அதனை கொண்டு போய் அடுத்த தெருவில் இருக்கும் ஒரு சிறு மாட்டுப்பண்ணையில் போட்டுவிட்டு, அவர்கள் தந்த காசினை வாங்கிக்கொண்டு நேரே பக்கத்தில் உள்ள விநாயகர் கோவில் வாசலுக்கு போனார். சிறிது நேரம் வாசலிலிருந்து பார்த்துக்கொண்டு நின்றார். அவ்வளவு தான். கும்பிடவெல்லாம் இல்லை. அப்போது இரண்டு சிதறுகாய் போட்டார்கள். அதை எடுத்து, ஓடி வந்த சிறு பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டார். கோயில் குருக்கள் ஒரு தொன்னையில் பிரசாதம் (அன்று சங்கடஹர சதுர்த்தி) வைத்து அவரிடம் கொடுத்தார். மற்ற நாட்களில், இரண்டு வாழைப்பழமோ அல்லது என்ன இருக்கிறதோ அதை கொடுப்பாராம்.
“அவன் பேசி நான் கேட்டதேயில்லை” என்றார் குருக்கள். அங்கிருந்து டீ கடை, பேப்பர். அதன் பிறகு காற்றாய் மறைந்து விட்டார். நான் எவ்வளவோ முயற்சித்தும் பின் தொடர முடியவில்லை. ஒரு நாள் என்னிடம் பேசுவாரென்று நினைக்கிறேன். இங்கே கொடுத்திருக்கும் புகைப்படம் அவருக்கு தெரியாமல் நான் எடுத்த படம். அவர் படம் எடுக்க சம்மதிக்கவேயில்லை. இரண்டு முறை மொபைலை தட்டி விட்டார்.
அடுத்தவருக்கு உதவி செய்வதையே தன் வேலையாக, அப்பர் சொன்னதைப் போல... “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று இருக்கும் இந்த கலைஞன், பிள்ளைகளை காப்பாற்ற போய் தன் கால்களை இழந்திருப்பார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அது உண்மையாய் இல்லாவிட்டாலும் கூட... பாலகுமாரன் “மரக்கால்” என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். அது என் மனதினுள் ஓட ஆரம்பித்தது. அவர் டக், டக் என்ற சத்ததோடு நடந்து போய்க்கொண்டிருந்தார். அவருக்கு கால் மட்டும் தான் மரத்துல, பலருக்கு மனசில்ல மரத்து போயிருக்கு....
Leave a comment
Upload