எங்கே இருக்கிறாய் நீ?
அவள் காத்துக் கொண்டிருந்தாள்..
அன்று சென்றவன் இன்னும் திரும்பி வரவில்லை. எங்கே இருக்கிறான் என்ற தகவலும் இல்லை. அவன் வரும் வழி பார்த்து கண்கள் பூத்துக் கிடந்தாள் தலைவி.
“தினமும் கண்ணோடு தீபம் வைக்கிறேன்
வெளிச்சம் தந்தால் என்ன?
மணி சரி பார்த்து, தினம் வழி பார்த்து,
இரு விழிகள் தேய்கிறேன்.
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என (பா .விஜய் )”
என்று அவள் இரு கண்களில் உயிர்ச்சுடரை ஏந்தி, காத்துக் கொண்டிருந்தாள்.
வாயிற் கதவு தட்டப்படும் ஓசை கேட்கிறது...
“தலைவன் வந்து விட்டானோ?” என்ற ஆவல் அலைபாய... அவள் ஓடோடிச் சென்று கதவைத் திறக்கிறாள்.
வந்தது தலைவன் இல்லை, அவளது உயிர்த்தோழி!
தோழியைக் கண்டதும் தலைவியின் கண்கள் பெருக்கெடுக்கின்றன. ஊற்றெடுக்கும் கண்களுடன் சொல்கிறாள்...
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண். (குறள் 1178)
“என் மேல் காதல் இல்லாமலே ஒருவர் காதல் கொண்டது போல இருந்தாரே, அவரைக் காணாமல் என் கண்கள் அமைதி கொள்ளவில்லை தோழி.”
“நான் என்ன செய்வேன்? அவன் எங்கு இருக்கிறான்? எப்போது அவன் திரும்பி வருவான்?” என்று கேள்விகளால் தோழியைத் துளைத்தாள்.
தோழிக்கு தலைவியின் நிலை புரிந்தது.
அவளைத் தோளோடு தழுவிக் கொண்டாள். “நீ கவலைப் படாதே! அவர் எங்குச் செல்ல முடியும்? அவர் எங்கு சென்று இருந்தாலும், அவரைத் தேடி அழைத்து வந்து விடலாம்” என்று கூறி அவளை ஆற்றுப் படுத்தினாள்.
“தலைவி, நம் தலைவர் வரம் பெற்றவரா என்ன? சித்தர்கள் போல் அவர் பூமியைத் துளைத்துக் கொண்டு போய் விடுவாரா? இல்லை ஆகாயத்தின் மேல் ஏறிச் சென்று மறைந்து விடுவாரா? அதுவும் இன்றி பெருங்கடலின் மேல் வெறுங்கால்களால் நடக்கும் வல்லமை பெற்றவரா? இல்லையே, அவர் எங்கும் சென்று ஒளிந்துக் கொள்ள முடியாது.
நீ கவலை கொள்ள வேண்டாம். அவர் எங்கு போய் விட முடியும்? நாம் தூதர்களை அனுப்பி அவரைத் தேடி கொண்டு வந்து உன்னிடம் சேர்ப்பேன். நாடு நாடாக சென்று, ஊர் ஊராக சென்று, வீடு வீடாக சென்று அவரைத் தேடலாம். அவ்வாறு தேடினால் அவர் கிடைக்காமல் எங்கு தப்பித்து செல்ல முடியும், சொல்? நீ கவலை இன்றி இரு” என்று அவளை அமைதிப் படுத்தினாள்.
அழகான இந்த பாலைத் திணைக்குரிய குறுந்தொகைப் பாடலை எழுதியவர் வெள்ளி வீதியார் என்னும் பெண் புலவர். காதலனைக் காணாது தவிக்கும் தலைவிக்கு மிகுந்த கற்பனை வளத்துடன் தோழி ஆறுதல் சொல்லும் இக்காட்சி அழகியலின் உச்சம்.
தன் தோழிக்காக நாடுகள் தோறும், ஊர்கள் தோறும், வீடுகள் தோறும் அலைந்து காதலனைக் கண்டு பிடித்து அழைத்து வருவேன் என்று கூறுதல் நட்பின் உச்சம்.
இதுவே அப்பாடல்.
நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்
விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரிற்
கெடுநரும் உளரோநம் காதலோரே.
(குறுந்தொகை 130 - வெள்ளி வீதியார்).
தொடரும்
Leave a comment
Upload