இந்த வார மக்கள் பேட்டி...
பெண்களுக்கு சம உரிமை கிடைத்திருக்கிறதா? உங்கள் கருத்து என்ன..?
சதீஷ் சாந்தாராம், அமெரிக்கா.
போன தலைமுறை வரை பெண்களுக்கு சம உரிமை இருந்துதான்னு சொல்லமுடியல... ஆனா இந்த தலைமுறையில் நல்ல முன்னேற்றம் தெரியுது. முக்கியமா டிவியில் இந்த கருத்தரங்கம், விவாதங்களை பார்க்கும் போது, இன்றைய தலைமுறை பெண்கள் தங்களோட உரிமைகளை உரத்த குரலில் தெளிவாக வலியுறுத்தி பேசுவதை பார்க்கின்றோம். இளைஞர்களுக்கும், பெண்கள் குறித்த பார்வை நன்றாக மாறி இருப்பதை உணர முடிகிறது.
அது ஒரு பக்கம் இருக்க....
வேலைவாய்ப்புகளில் பார்க்கும் போது சம உரிமை எல்லா துறைகளிலும் வந்துவிட்டது என்று சொல்ல முடியாது.. உதாரணத்திற்கு சினிமா உலகத்தில் கூட ஆண் ஆதிக்கம் தான்.
நல்ல படிப்பும், பொருளாதார ரீதியில் தனிப்பட்ட சுதந்திரம் பெற்ற பெண்களுக்கு சம உரிமை எளிதாக அடைகின்றார்கள் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.
சசிகுமார், சென்னை.
பெண்களுக்கு சமஉரிமை கிடைத்திருக்கின்றதா என்றால் சத்தியமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இன்றும் பல துறைகளில், உதாரணமாக அரசியல், சினிமா, விளையாட்டு, காவல் என ஆண்களின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது.
அரசியலில் பெண்களுக்கு 30% இடம் ஒதுக்கீடு என்ன ஆயிற்று என்று சொல்ல முடியுமா?
தமிழ் நாடு தவிர வேறு எந்த எந்த மாநிலத்தில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கிடைத்திருக்கின்றது? இப்படி பல அடுக்கிக் கொண்டே போகலாம்.
கிருஷ்ணகுமார், வேளச்சேரி.
இது ஒரு பழமையான, 35, 40 வருடங்களுக்கு முன்னாடி கேட்கப்பட வேண்டிய கேள்வி... இப்ப எல்லாம் சம உரிமைக்கு மேல் என்று சொல்லப்படகூடிய அளவிற்கு பல குடும்பத்துல பெண்கள் ஆதிக்கம் தான்.. படிப்பு, விளையாட்டு, வேலைன்னு சம அளவு வந்துட்டாங்க.. நாட்டின் சட்டத்திட்டங்களும் பெண்களுக்கு சாதகமா இருக்கிறது. சம உரிமை எப்போதோ வந்துவிட்டது என்று தான் நினைக்கிறேன்..
பா.சம்பத், வண்டலூர்.
இந்தக் கேள்வியை கேட்கும் போதே தெரியவில்லையா பெண்களுக்கு இன்னும் சம உரிமை கிடைக்கவில்லை என்பது..??
ஆதியிலிருந்தே பெண்கள் இனம், தங்களது சுய மதிப்பை அறியாமல் இருக்கின்றார்கள். ஆண் இனத்தால் மிக புத்திசாலித்தனமாக அவர்களின் மீது சுமத்தப்பட்ட பாரங்களை, சுமந்து வாழ்ந்து வருகின்றனர். குடும்பம், குழந்தைகள், வயதானவர்கள் என அவர்களின் பராமரிப்புக்காக காலம் முழுதும் உடலால் தேய்ந்து, உழைத்து கொட்டும் பெண் இனத்திற்கு, இந்த சம உரிமை என்பதெல்லாம் வெறும் சம்பிரதாய வாய் வார்த்தை தான்..
வ.கோவிந்தராஜன், திருச்சி.
முதல்ல உரிமைன்னு ஏதாவது இருந்தா சம உரிமை பத்தி பேசலாம்.. “ஆணுக்காக படைக்கப்பட்டவள் பெண்"ன்னு விதிகளை வகுத்து, மதங்களை பக்க வாத்தியமா வச்சிக்கிட்டு, சமுதாய ஒழுக்க விதிகளை மொத்தமா அவ கால்ல, இரும்பு சங்கிலிகளாக கட்டி, அவளோட உடல், உடமைகள், உழைப்பு என அனைத்தையும் சுரண்டி அவளை ஆளுகிறது ஆண் வர்க்கம். அதுவும் எப்படி..? வீட்டு மகாலட்சுமி, குழந்தைகளை பெற்றுக் கொடுக்கும் சந்தான லட்சுமின்னு, தெய்வம் லெவலுக்கு உயர்த்தி ஏமாத்துற ஆண் கூட்டம்.. அதுல ஒரு காமெடி வார்த்தை தான் “பத்தினி தெய்வம்”.. இருக்கிறதுலேயே பெண்களுக்கான உயர்ந்த பட்டம்.. நம்ம பாரத்ரத்னா மாதிரி வச்சிக்கிங்களேன்..
“எனக்கும் வாழ உரிமை இருக்கு”ன்னு குடும்ப அமைப்பிலிருந்து விலகறான்னு வச்சிக்கோங்க.. உடனே தெய்வம் லெவலிலிருந்து இறக்கி ஸ்ட்ரெயிட்டா வி***ரி ன்னு பட்டம் கொடுத்துடும் இந்த சமுகம். “ஏன் ஸ்ட்ரெய்ட்டா தெய்வத்திலிருந்து அங்க தான் போகனுமா..? இந்த நடுவாந்திரமா ஒரு “சக மனுஷி”யா எங்களை நடத்த மாட்டீங்களா சார்..?”ன்னு எல்லாம் கேட்கப்படாது..
ம.கணபதி, நாகை.
சம உரிமையா..??
“குடும்பத்துக்கு அடங்கி, அதுக்கு உட்பட்டு நீ எதை செஞ்சாலும் ஓகே.. அது தான் நாங்களா கொடுக்கிற உரிமை.. அதுக்கு மேல நிஜமாவே உரிமை கிரிமைன்னு நீ எடுத்தீன்னா... மவளே நீ அவ்வளவு தான்..!” என்பதே பெண்களுக்கு இந்த சமூகம் கொடுக்கும் உரிமை..
பாஸ்கர், தி.நகர் - சென்னை.
பெண்களுக்கு சம உரிமை இருக்கான்னு, ஆண்கள்கிட்ட எதுக்கு கேக்குறீங்க...? என்னமோ நாங்க தான் அவங்க உரிமையை பர்ஸ்க்குள்ள வச்சிருக்கிற மாதிரி.. ஏன்.. !? நாங்க இழந்துக்கிடடு இருக்கிற ஆண் உரிமையை பத்தியெல்லாம் கேக்க மாட்டீங்களா..? ஏற்கனவே வீட்ல எண்ணெய் கொதிக்கிற மாதிரி எங்க வீட்டுக்காரம்மா இருக்கு... அதுல வந்து சீடையை போடுறீங்களே..! இந்தப் பேட்டியில என் வாயை புடுங்கி நான் ஏதாவது உளறி வச்சேன்னா அவ்வளவு தான்..! ஆள விடுங்க..!
பெயர் சொல்ல விரும்பாதவர், சென்னை.
எனக்கு என்ன ஒரு டவுட்டுன்னா...
“உங்க அப்பா அம்மா இங்க வரக்கூடாது..!”ன்னு சொல்ற உரிமை என் பொண்டாட்டிக்கு இருக்குறப்ப... “ஏண்டி எங்கப்பா, அம்மா என் வீட்டுக்கு வர நீ யாருடி அனுமதி கொடுக்குறது ..??”ன்னு திருப்பி கோவமா கேட்க எனக்கு உரிமை இல்லையா? அப்படியே கேட்டாலும்... உடனே, “ஐயோ..!! என்ன கொல்லுறானே..!”ன்னு தெருவையே கூட்டி, பத்தாததுக்கு என் மாமனாருக்கு வேற ஃபோன் போட்டுறது, அப்புறம் “வரதட்சணை கேஸுல உன்னை உள்ள தூக்கி போட்ருவன் பாத்துக்க..!”ன்னு நம்மளை மிரட்டுறது எல்லாம் இந்த சம உரிமையில வருமாங்க...?
Leave a comment
Upload