நம் அன்றாடம் வாழ்வில் சந்திக்கும் பெண்கள் சிலர் நம்மைக் மிகப்பெரிதும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு என் பாட்டி விஜயவல்லி. சிறு வயதில் மணம் முடித்து, எட்டு குழந்தைகளுக்கு மேல் பெற்று, மஞ்சள் காமாலை நோயில் தன கணவரை இளம் வயதிலேயே இழந்தவள். அத்தனை குழந்தைகளையும், தனது இளம் வயது முதல் தனி ஒருத்தியாக படிக்க வைத்து, பெண் குழந்தைகளுக்கு திருமணம் முடித்து, பேரன், கொள்ளு பேரன் பார்த்து பின் பரலோகம் சென்றார். ஆம். தனி ஒருவராக, கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு மேல், கணவர் இல்லாமல் குடும்பத்தை காப்பாற்றி வருமானத்துக்கு வழிவகுத்து வாழ்வது எல்லாம் சாதாரண விஷயம் அல்ல.
என் பாட்டியை போல் லட்சக்கணக்கான பெண்கள், உலகம் முழுவதும் ஆணாகவும், பெண்ணாகவும் கலந்து தங்கள் வாழ்க்கையையே தனியொருத்தியாக இருந்து வாழ்ந்து வருகிறார்கள். இதில் திருமணமே செய்து கொள்ளாதவர்களும் உண்டு. திருமணமாகி கணவரை இழந்தவர்களும் உண்டு, கணவருடன் வாழாமல் விவாகரத்து வாங்கி தணித்து வாழ்பவர்களும் உண்டு. இது எதிலும் அல்லாமல் திருமணம் மீது நம்பிக்கை இல்லாமல், தனி பெண்ணாக வாழ்பவர்களும் உண்டு. அவர்கள் அனைவருமே மிகவும் போற்றக்கூடியவர்கள்.
சங்க காலம் தொட்டு அவ்வையாரில் தொடங்கி, அன்னை தெரசா முதல் ஜெயலலிதா அம்மையார் வரை சக்தியும் சிவனும் ஒருங்கே கொண்ட அர்தநாரிகளாக வளம் வந்து, தங்கள் ஆளுமையை நிலை நிறுத்தியவர்கள். காலையில் எழுந்து, குளித்து சமைத்து வீட்டை பராமரிக்கும் பெண்களானாலும் சரி, தொழில், வேலை, வியாபாரம், அரசியல் என அலையும் பெண்களானாலும் தனி ஒருத்தியாக சமாளிப்பது என்பது கடினமே.
சமீபத்தில் ஐடி துறையில் பல ஆண்டுகளாக கொடி கட்டி பறக்கும் காம் கேர் புவனேஸ்வரி அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். மிக பெரிய நிறுவனத்தை நடத்தி வருகிறார். பல புத்தகங்களை எழுதியுள்ளார், ஆவண படங்கள் தயாரித்துளளார், பெற்றோர் பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி தொண்டுகள் செய்கிறார். இது நாள் வரை திருமணம் செய்துகொள்ளவில்லை. காரணம் கேட்டேன்... எதார்த்தமாக பதில் சொன்னார். திருமணம் செய்து கொள்ளாததற்கு எந்த ஒரு தனிப்பட்ட காரணமும் இல்லை. வாழ்க்கையில் பல சாதனைகளை செய்ய தோன்றிய எனக்கு, திருமணம் செய்து கொள்ள தோன்றவில்லை என்றார். ஏன் அப்படி இருக்க கூடாதா என்றார். சரி தானே... நாம் இதே கேள்வியை திரு. அப்துல் கலாமிடம் கேட்கவில்லையே. கேட்டிருந்தால் அவரும் இதே பதிலை தான் சொல்லியிருப்பாரோ என்று என்ன தோன்றியது.
ஆண்டாள், இந்திரா காந்தி, சமீபத்தில் மறைந்த சந்தா மேயராக இருக்கட்டும், நாடக உலகை கலக்கி கொண்டிருக்கும் திருமதி பம்பாய் ஞானம் அவர்களாக இருக்கட்டும், சிறுது காலமோ, பல வருடங்களோ ஒரு ஆணின் துணையில்லாமல் ஆணாகவும், பெண்ணாகவும் தங்களை முன்னிறுத்தி, சிந்தித்து, வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தும் ஒவ்வொரு பெண்ணும் போற்றக்கூடியவர்கள் தான். ஒரு ஆண், ஒரு பெண்ணோடு இருந்தால் என்ன பலம் இருக்குமோ... அதை விட பல மடங்கு பலத்தை அந்த பெண்ணிற்கே இரட்டிப்பாக கொடுக்கிறான் ஆண்டவன்.
இந்தக் காலத்தில் தனக்கு சரியான ஒரு ஆணை தேர்நதெடுக்க முடியாமல், திருமணமான பின் அப்படியே அவர்களோடு கடைசிவரை வாழமுடியாமல், குடும்ப சூழல், கள்ள காதல் என பல வகையில் பெண்கள் தனியாக நிற்கிறார்கள். அவர்களுக்காக அனுதாபப்படும் அதே நேரத்தில், அவர்களின் உணர்வுகளை மதிப்பதே உற்றார் உறவினர்களின், நண்பர்களின் எண்ணமாக இருக்க வேண்டும்.
ஆணாகவும், பெண்ணாகவும் ஒன்றாகி வாழும் பெண்கள் போற்றக் கூடியவர்களே.
Leave a comment
Upload