“பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி!”
இது முண்டாசுக்கவியின் சத்திய வார்த்தைகள்.
கல்வியறிவு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி இவை மூன்றுமே ஒரு நாட்டின் வளர்ச்சியை நிர்ணயிக்கின்றன. இவற்றில் முக்கிய பங்கு பெண்களையே சாரும். ஏனெனில் பெண்களின் கல்வியறிவானது, அவள் சார்ந்த வீட்டை மட்டுமல்லாமல், நாட்டையும் உயர்த்தும்.
ஏன், முக்கிய பங்கு, பெரும்பங்காக மாற முடியவில்லை? என்ன தடை?
அனைத்து துறையிலும் பெண்கள் சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்... அரசியல் முதல் தொழில் துறை வரை அனைத்திலும் பல பெண்கள் அசைக்க முடியாத சக்தியாய் உருவெடுத்துதான் இருக்கிறார்கள்.
எனது அருமை சகோதரிகளே, சாதனை படைத்த பெண்களின் சதவிகிதம், இந்திய மக்கள் தொகையில் எத்தனை? யோசித்துப் பாருங்கள்...
அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்த பெண்களை நினைத்து நாம் பெருமைப்படுவது உயர்ந்த எண்ணமே. ஆனால், அது மட்டுமே போதுமா..? வெறும் இந்த ஒரு சதவிகிதத்திற்கு குறைவானவர்கள் மட்டுமேதான் சாதிக்க பிறந்தவர்களா? பெரும்பாலும் பெண்கள், சாதித்தவர்களின் கட்டுரைகளையும், நேர்காணலையும் பார்த்து விட்டு, அத்துடன் முடங்கிவிடுவது ஏன்? எது நம்மை தடுக்கிறது?
சாதனைப் பெண்கள் அனைவரும் எந்த ஒரு சவால்களையும் சந்திக்காமலேயே வென்றார்கள் என்று நினைத்தால், அது அறியாமையே ஆகும். அவர்கள் சந்தித்த தடைக்கற்களை, படிக்கற்களாய் மாற்றியவர்கள். சாதனை புரிந்த அனைத்து பெண்களுக்கும் பெருமை சேர்க்க நினைத்தால், அவர்களைப்போன்றே அனைத்துப் பெண்களும் சோதனைகளை, சாதனைகளாக்கிக் காட்டுவதும், அதற்கு இந்த சமூகம் துணை நிற்பதும் ஆகும். அதுவே சாதனைப் பெண்களுக்கு நாம் செய்யும் கெளரவம்.
கிராமம் மற்றும் நகரம் என பிரித்து பார்க்கும்போது கிராமத்திலுள்ள பல பெண் குழந்தைகளுக்கு, இன்னமும் அடிப்படை கல்வியறிவும், போதிய விழிப்புணர்வும் இல்லாததே இதற்கு காரணம். ஆனால், நகரத்தில் வாழும் பெண்களின் நிலை அவ்வாறு இல்லை. அவர்கள் கல்வியறிவை பெற்றவர்கள். அவ்வாறு இருந்தும், ஏதோ ஒரு விஷயம் பெண்களின் முன்னேற்றத்தில், அவர்களை அடுத்த கட்டத்துக்கு நகர விடாமல் தடுக்கிறது.
ஒரு ஆண் தன்னுடைய குடும்ப வாழ்க்கையிலும், வேலையிலும் மற்றும் தன்னுடைய தொழிலிலும், வெற்றி அடைய ஆணிற்கு தன மனைவியுடைய முழு ஒத்துழைப்பு இருந்தால் போதும். ஆணின் வெற்றி நிச்சயம். ஆனால் ஒரு பெண்ணின் நிலை அவ்வாறு இல்லை. ஒரு பெண் தன் பணியிடத்திலும், தொழிலும் வெற்றி பெற அவளின் குடும்பம் அவளுக்கு துணை நிற்க வேண்டும்.
பெண் குடும்பத்திலுள்ள அனைவரின் தேவைகளையும் பூர்த்திசெய்து, தன்னையும் முன்னேற்றிக்கொண்டு குடும்பத்தையும் அடுத்தநிலைக்கு கொண்டு செல்கிறாள்.
அன்பு சகோதரிகளே, இந்த வெற்றிப்பயணத்தில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நாம் சந்திக்கும் சவால்கள் என்னென்ன?
அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகள் என்ன? தீர்வுகள் என்ன? என்பதை பின்வரும் வாரங்களில் விரிவாக பாப்போம்.
வெற்றி பயணம் தொடரும்....
Leave a comment
Upload