(பயண எழுத்தாளர்களின் முன்னோடி சோமலெவின் நூற்றாண்டு பிப்ரவரி, 2021)
“நடுவிலே இருப்பவர் யார்?”
“சோமலெ..”
“அவருக்கு வலது பக்கம் இருப்பவர் யார்?”
“தெரியலெ..”
இப்படி நகைச்சுவையான உரையாடல் ஆனந்த விகடனில் ஒரு படத்துக்கு விளக்கமாக வெளியாகியிருந்தது. அப்போது சோமலெ தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். அது குறித்த செய்திக்கான படம்தான் அது.
1980ம் ஆண்டு, ஆனந்தவிகடன் பொன்விழாவை முன்னிட்டு, ஐம்பது ஆண்டுகள் வெளியான விகடனின் ஒவ்வோர் ஆண்டு இதழ்களின் சுவையான பகுதிகளை வாரந்தோறும் ஓர் எழுத்தாளர் தொகுத்து வழங்கிவந்தனர். அதில் 1948-ம் ஆண்டு இதழ்களின் சுவையான பகுதிகளைத் தொகுத்துத் தந்தவர் சோமலெ. அந்தத் தொகுப்பில் முன்னுரையாக இந்த நகைச்சுவை உரையாடலை அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் காலத்தில் இலக்கிய மேடைகளில், “சோமலெ என்றால் தெரியலே என்று யாரும் சொல்ல முடியாது” என்ற சொலவடை மிகவும் பிரசித்தம்.
செட்டிநாட்டின் நெற்குப்பை என்ற கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் லெட்சுமணன். இந்தப் பெயரின் சுருக்க வடிவமே ‘சோமலெ’. நெற்குப்பை பெரி. சோமசுந்தரம் – நாச்சம்மை ஆச்சி தம்பதிக்கு 1921 பிப்ரவரி 11ம் தேதி ஆறாவது குழந்தையாகப் பிறந்தவர் சோம. லட்சுமணன்.
சென்னை மாநிலக் கல்லூரியில் பிஏ பொருளாதாரம் படித்தார். பின்னர் மும்பையில் (அப்போது பம்பாய்) ஹாரிமன் இதழியல் கல்லூரியில் படித்தார். குடும்பத்தினர் நடத்தி வந்த ஏற்றுமதி – இறக்குமதி தொழிலில் ஈடுபட்டபோது, ஜெர்மனி, பிரிட்டன், ஸ்வீடன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது அவர் கண்ட காட்சிகள், சந்தித்த நபர்கள், அடைந்த அனுபவங்களையெல்லாம் தொகுத்து எழுதினார். அவை அழகான கட்டுரைகளாக மலர்ந்தன. அவற்றை ஆனந்த விகடன் உள்பட பல இதழ்கள் பிரசுரித்தன. வெளிநாடுகளுக்கு சோமலெ வணிகராகத்தான் பயணத்தைத் தொடங்கினார். திரும்பியபோது, எழுத்தாளராகிவிட்டார். சோமலெ என்ற வணிகர் எழுத்தாளராக முகிழ்த்தார். “வணிகனாகச் சென்றேன், எழுத்தாளனாகத் திரும்பினேன்” என்று அவரே குறிப்பிட்டுள்ளார்.
சோமலெ எழுத்து எல்லா வகையிலும் வித்தியாசமாக இருந்ததே அவரது வெற்றிக்குக் காரணம். எந்த ஊரை, எந்த நாட்டைப் பற்றி எழுதினாலும் சொந்த ஊரை, சொந்த நாட்டைப் பற்றிய தகவல்களை இணைத்து எழுதுவதை வழக்கமாகக் கொண்டார்.
உதாரணத்திற்கு, எத்தியோப்பியாவின் பிரபல வலிபேலா நகரம் பற்றி ஆப்பிரிக்க நாடுகள் குறித்த பயணக் கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார். அதில், “வலிபேலா எத்தியோப்பியாவின் மாமல்லபுரம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பல்லவ மன்னன் நரசிம்ம வர்மனுக்கு மாமல்லன் என்ற பெயர் உண்டு. அதையொட்டியே கடற்கரை நகருக்கு மாமல்லபுரம் என்ற பெயரிடப்பட்டது. அதைப் போலத்தான் எத்தியோப்பாவின் மன்னன் பெயர் வலிபேலாவின் பெயரே நகருக்கும் சூட்டப்பட்டுள்ளது என்று ஒப்புமையுடன் கூடிய தகவல்களை தனது பயண நூலில் பதிவிட்டுள்ளார்.
பயண இலக்கியம் மட்டுமல்ல... இதழியல், நாட்டுப்புறவியல், மொழி ஆய்வு, அரசியல், தொழில், வணிகம், சிறுவர் இலக்கியம், சமயம் என்று பல்வேறு பரிமாணங்களைத் தனது எழுத்தில் கையாண்டார்.
விடுதலைக்குப் பின் தமிழகத்தின் முதல் முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரைப் பற்றி, “விவசாய முதலமைச்சர்” என்ற அவரது நூல், நல்ல வரவேற்பைப் பெற்றது. சொந்த ஊரைப் பற்றி தனது நூல்களில் பதிவிடுவதற்கு சோமலெ தவறுவதில்லை. அது மட்டுமல்ல, தனது ஊருக்கு வங்கிக் கிளை வருவதற்கும், அஞ்சல் அலுவலகம் வருவதற்கும் அவர்தான் செயல்பட்டார்.
தனது பயண நூல்களைத் தமிழில் எழுதுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல், ஆங்கிலத்திலும் ஆறு பயண நூல்களை எழுதியுள்ளார் சோமலெ.
பயண இலக்கியம் என்பது தனிக் கலை. எல்லோரும் சுற்றுலாப் பயணம் செல்வது எளிதுதான். அங்கே கண்டதை, கேட்டதை, உணர்ந்ததை, புரிந்ததை சுவையாக நினைவிலிருந்து ஒவ்வொன்றாகப் பதிவிடுவது எல்லோருக்கும் கை வராது. சில பிரபல எழுத்தாளர்களே கூட சுற்றுலா கையேடுகளைத் தமிழாக்கம் செய்தனர் என்றும், முன்பு சென்று வந்தவர்களை அப்படியே நகலெடுத்தனர் என்ற விமர்சனத்துக்கு ஆளானது உண்டு.
உலகம் சுற்றிய தமிழன் என்ற பெருமை பெற்ற ஏ.கே.செட்டியாருக்குப் பிறகு பல உலக நாடுகளுக்குச் சென்று, பல நூல்களை எழுதிய தமிழ் எழுத்தாளர் சோமலெ.
அந்தக் காலத்தில் பயணக் கட்டுரைத் தொகுப்புகளுக்குத் தலைப்பை வித்தியாசமாகச் சூட்டும் திறனைப் பெற்றவர் சோமலெதான். அவரது முதல் பயண நூலின் தலைப்பே “அமெரிக்காவைப் பார்!”
“அமெரிக்காவைப் பார்!” நூலைப் படித்த பிறகு, டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்திக்கு அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும், அங்கே பணியாற்ற வேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சோமலெ பல நாடுகளுக்குத் தொடர்ந்து பயணம் செய்து எழுதிய நூல்கள் நாற்பதுக்கு மேலே. “என் பிரயாண நினைவுகள்”, “பிரயாணம் ஒரு கலை”, “நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்” - இப்படி அவரது நூல்களின் தலைப்புகளே நம்மைச் சுண்டியிழுக்கும்.
எழுதிய நூல்களின் பட்டியல், நம்மை வியப்பின் உச்சிக்கே இட்டுச் செல்லும். அமெரிக்க நாடுகள் குறித்த வரிசை நூல்கள் 12, உலக நாடுகளைப் பற்றி 10 நூல்கள், மாவட்டங்கள் குறித்து 10 நூல்கள் இன்னும் உள்நாட்டுப் பயண அனுபவங்கள் (கணக்குத் தெரியவில்லை).
சோமலெ 80க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். அவற்றில் பயண இலக்கிய நூல்கள் மட்டுமே 42. அதிலும் 32 நூல்கள் வெளிநாடுகளைப் பற்றியவை.
“சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொண்டிங்கு சேர்ப்பீர்” என்ற பாரதியின் கட்டளையை நிறைவேற்றியவர்களில் முதல் வரிசையில் இருப்பவர் சோமலெ. காரணம், அவர் பிறரைப் போல் நூல்களை மொழிபெயர்ப்பதுடன் நிற்காமல், ஏராளமான ஆங்கிலச் சொற்களுக்கு உரிய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்.
களப்பணி என்பதை எழுத்துப் பணியின் ஓர் அங்கமாகவே ஆக்கிய பெருமை சோமலெவுக்கு உண்டு. தமிழக மாவட்டங்களைப் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்தும் நோக்கத்தில் அவர் தமிழகம் முழுக்க அலைந்திருக்கிறார். பல மாவட்டங்களைப் பற்றிய தகவல்களை ‘கலைக்களஞ்சியம்’ போலத் திரட்டி, பெரிய நிறுவனங்கள் செய்ய வேண்டிய பணியைத் தனிநபராகச் செய்து முடித்திருக்கிறார்.
அந்தக் காலத்தில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தைப் பற்றி சோமலெ தொகுத்து வெளியிட்ட நூல் 478 பக்கங்களைக் கொண்டது என்றால், முனைவர் பட்ட (பிஎச்.டி.) ஆய்வேட்டுக்குச் சமம். (முனைவர் பட்டத்திற்கு இப்போதெல்லாம் 250 பக்க ஆய்வேட்டைச் சமர்ப்பித்தால் போதும்) இப்படி பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இண்டு இடுக்குகளில் எல்லாம் சென்று தகவல்களைத் திரட்டி வெளியிட்டிருக்கிறார். அப்படியானால், சோமலெவுக்கு எத்தனை பிஎச்டி பட்டம் அளித்திருக்க வேண்டும்!
மதுரை மாவட்டத்தைப் பற்றிய சோமலெவின் நூல், 1980ம் ஆண்டு வெளியிடப்பட்டது. பாண்டியர் காலம் தொடங்கி இக்காலம் வரை மொழி, மக்கள் வாழ்க்கை முறை, கோவில்கள் என திரட்டியது மட்டுமல்ல, வட்டார மொழிகளையும் திரட்டிப் பதிவிட்டுள்ளார்.
சோமசுந்தரத்துக்கு இரு புதல்வியர். ஒரே மகனுக்கு சோமசுந்தரம் என்று தந்தையின் பெயர் வைக்கப்பட்டது.
எழுத்தாளராக மலர்ந்த சோமலெ, கல்வியாளர் என்ற புதிய பரிமாணத்தையும் அடைந்தார். 1955 ம் ஆண்டு முதல் மூன்றாண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பக் கல்லூரியின் தாளாளராகவும், 1961ம் ஆண்டு வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவை (செனட்) உறுப்பினராகவும் இருந்தார். அத்துடன், மதுரை பல்கலைக்கழகத்தின் (தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்) ஆட்சிக் குழு உறுப்பினராகவும் செயல்பட்டார்.
அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது, கருத்தரங்கப் பிரிவின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.
எழுத்தார்வம் சோமலெவுக்கு 13வது வயதிலேயே தொடங்கிவிட்டது. அது மட்டுமல்லாமல், ஓர் அற்புதமான பழக்கம் அவருக்குச் சிறு வயதிலேயே அமைந்துவிட்டது. ஏதாவது படித்தால், அதில் உள்ள முக்கியமான, சுவையான பகுதிகளை தாளில் எழுதி தனியாக வைத்துக் கொள்வார். அதைப் போல் செய்தித் தாள்களில் காணப்படும் சுவையான செய்திகளையும் இதைப் போல் கத்தரித்து வைப்பார். இவற்றையெல்லாம் அழகாகத் தொகுத்து வைத்திருப்பார். அவையெல்லாம் அவர் எழுதுவதற்கும் பேசுவதற்கும் பரிதும் கைகொடுத்தன. ஓர் ஆராய்ச்சி மாணவனைப் போன்ற உழைப்பு அவரிடம் எப்போதும் இருந்தது.
சோமலெ எழுதிய பயணக் கட்டுரைகளில் இருக்கும் அரிய தகவல்கள் வேறெங்கும் கிடைக்காது. உதாரணத்திற்குச் சில:
“குஜராத்தில் மணமான பெண்கள் கண்ணாடி வளையலைத்தான் அணிந்துகொள்வர். விதவையர்தான் தங்க வளையலை அணிந்து கொள்வர்”
“ஹிமாசலப் பிரதேசத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைவு என்பதால், குடும்பத்தில் மூத்த மகனுக்கு மட்டுமே திருமணம் செய்து வைப்பார்கள்.”
1986ம் ஆண்டு அமெரிக்காவில் வசிக்கும் தனது மகன் சோமசுந்தரத்திற்கு ஒரு கடிதம் எழுதி, அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் உள்ள பெட்டியில் போட்டுவிட்டு அஞ்சலகத்தில் நின்றவர், மயங்கிக் கீழே விழுந்து உயிரிழந்தார். தன் இறுதி மூச்சு வரையில் அவர் எழுத்துப் பணியை விடவில்லை என்பதன் அடையாளமாக அது அமைந்ததோ தெரியவில்லை!
Leave a comment
Upload