தொடர்கள்
மகளிர் ஸ்பெஷல்
நினைத்ததை நிறைவேற்றித் தரும் பறவைச் சித்தர்... - ஆரூர் சுந்தரசேகர்.

“ஸ்ரீசக்கரை அம்மா”!!

20210204172254910.jpeg

பூமியில் எத்தனையோ சித்தர்கள் இம்மண்ணில் அவதரித்து மக்களின் நலன்கள் ஒன்றையே தமது குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். சித்தர்கள் என்றவுடனே நமக்கு எண்ணற்ற ஆண் சித்தர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால், சர்வ வல்லமை படைத்த பெண் சித்தர்களும் உண்டு. அவர்களில் ஒருவர்தான் ஆனந்தாம்பாள் என்கிற ‘சக்கரை அம்மா’.

சிவபெருமானையும், ஶ்ரீ சக்கரத்தையும் அனுதினமும் பூஜை செய்துவந்ததால், ஆனந்தாம்பாள் என்ற பெயர் மாறி, சக்கரத்தம்மா, சக்கரை அம்மா, சக்கரை அம்மன் என்றெல்லாம் மக்களால் அழைக்கப்பட்டார். பெயரில் மட்டும் இனிமை கொண்டவர் என்றல்லாது, அன்பில், கருணையில், பாசத்தில், நேசத்தில் இனிமை கொண்டவர்.
அஷ்டமா சித்திகளில், உடலை லேசாக்கி வானில் பறக்கும் லகிமா சித்தி அவைகளில் ஒன்று. இவர் தனது அடியவர்களின் பிரச்சனைகளை தீர்க்க வானில் பறந்து சென்று உதவி செய்வார் இதனால் இவரை பறவை சித்தர் என்றும் அழைத்தார்கள்.

இவருடைய ஜீவசமாதி சென்னையில் கலாக்ஷேத்ரா மற்றும் பாம்பன் ஸ்வாமிகள் ஜீவசமாதி அருகில் அமைந்துள்ளது.

சித்தரின் இளமைப் பருவம்:

1854- ம் ஆண்டு இப்போதைய திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் என்னும் சிற்றூரில் வாழ்ந்த சேஷ குருக்கள், சுந்தராம்பாள் என்பவர்களுக்கு மகளாக பிறந்தார். “ஆனந்த” எனும் வருடத்தில் பிறந்ததினால் ஆனந்தாம்பாள் என பெயர் வைத்தார்கள். இவரது தந்தை வீட்டுக்கு மிக அருகிலேயே பெரியநாயகி அம்மன் எனும் கோயிலில் அர்ச்சகராக இருந்தார்.

ஆனந்தாம்பாள் பெரியநாயகி அம்மன் கோயிலின் கருவறையை உற்று நோக்கியபடி மணிக்கணக்கில் சிவமந்திரங்களைச் சொல்லியபடி தியானத்தில் ஆழ்ந்திருப்பார்.

அவருடைய ஒன்பதாவது வயதில் சென்னை கோமளீஸ்வரன்பேட்டை [தற்போது புதுப்பேட்டை] கோமளீஸ்வரன் கோயிலில் மடாதிபதியாக இருந்த சாம்பவ சிவாச்சாரியாருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்.
சிறு வயதானாலும் கணவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடையைச் செய்து விட்டு, கோமளீஸ்வரன் கோயிலில் அடியார்களுடன் நாள் முழுவதும் ஆன்மிகப் பணிகளைச் செய்துவந்தார். ஆனந்தாம்பாளின் 20 ஆவது வயதில் அவரின் கணவர் உடல்நலக் குறைவால் காலமானார். பின்பு தன்னை முழுமையாக ஆன்மீகத்தில் இணைத்துக் கொண்டு வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொண்டார். வீட்டின் அருகில் இருந்த கோமளீஸ்வரர் கோயிலில் அமர்ந்து கொண்டு மணிக் கணக்கில் தியானம் செய்தார்.

‘லஹிமா’ என்ற ஸித்தி:

ஆனந்தாம்பாளின் கணவர் இறந்த சில காலத்துக்குப் பிறகு, தன் சகோதரர் வசித்த போளூருக்கு குடிபெயர்ந்தார். அந்த ஊரில் நட்சத்திரக் குன்று என்ற சிறு மலை இருந்தது. அந்த நட்சத்திரக் குன்றில் குணாம்பாள் என்பவர் வாழ்ந்து வந்தார். ஒருமுறை ஆனந்தாம்பாள் குணாம்பாளை சந்திக்க நேரிட்டது. இனம் தெரியாமல் ஆனந்தாம்பாளுக்கு அவர் மீது ஈடுபாடு ஏற்படவே... அவரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு, அடிக்கடி அவரை சந்திக்கலானார். குணாம்பாளும் அவருக்கு மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சக்கர உபாசனை மந்திரத்தை உபதேசித்தார். இதைதவிர அஷ்டமா சித்திகளில் ஒன்றான ‘லஹிமா’ என்னும் உடலை இலகுவாக்கி கொண்டு வானில் பறவை போல் பறக்கும் சிறப்பு ஆற்றலையும் ஆனந்தாம்பாளுக்கு கற்றுத்தந்தார்.

மகான்களின் சந்திப்பு:

இவருக்கு திருவண்ணாமலையில் உள்ள அடிமுடி சித்தர் இவருக்கு முக்தியை அடையும் வழிமுறைகளை கற்றுக் கொடுத்தார். ஒருமுறை ‘ஶ்ரீ சக்கரை அம்மா’ பறந்தே சென்று திருவண்ணாமலையில் ரமண மகரிஷியைச் சந்தித்ததாகவும் சொல்லப்படுகிறது. இவர் சுவாமி விவேகானந்தர், பாம்பன் சுவாமிகள், சேஷாத்ரி சுவாமிகள், விட்டோபா ஆகியோரைச் சந்தித்து ஆசி பெற்றவர்.

டாக்டர் நஞ்சுண்டராவ் பிரதம சீடரானார்:

நஞ்சுண்டராவ் என்பவர் புகழ்பெற்ற ஆங்கிலமுறை மருத்துவர். சுவாமி விவேகானந்தரின் சீடர். இவர் ஒருமுறை ஆனந்தம்மா வீட்டிற்கு அவரது சகோதரரை சந்திக்க வந்திருந்த போது, மாடியில் இருந்து உரத்த சிரிப்பொலி வருவதைக் கேட்டு திகைத்து நின்றவரிடம்.... மன வியாதி பிடித்த தனது சகோதரி ஆனந்தம்மா தான் அப்படி சிரித்துக் கொண்டு இருக்கிறார் என அவர் கூற.... மருத்துவருக்கோ, ஏதோவொரு பரவசமான வித்தியாச உணர்வு தோன்றியது. சில நாட்கள் கழித்து ஆனந்தம்மாவை, அதே சிரித்த கோலத்தில் கோமளீஸ்வரன் ஆலயத்தில் அவர் சந்திக்க நேரிட்டது. சற்று நேரம் அவரை கவனித்த நஞ்சுண்ட ராவ், அவரிடம் இந்த சிரிப்புக்கு அர்த்தம் என்னவோ எனக் கேட்டார்.

சிரிப்பதை சற்றே நிறுத்திய ஆனந்தம்மா, ‘ஆன்மாவும் உடலும் வெவ்வெறானவை எனும் தத்துவத்தை கூறி, அவளது உடலுக்குள் உள்ள ஆன்மா பேரானந்த நிலையில் இருப்பதினால், அது ஆனந்தமாக உள்ள தனது நிலையை தன் உடல் மூலம் வெளிப்படுத்துகின்றது என்பதான அர்த்தத்தில் ஆன்மாவைக் குறித்து விளக்கினார். அப்போதுதான் அந்த பெண்மணி சாதாரணப் பெண்மணி அல்ல, அவர் தெய்வீக அன்னை என்பதை உணர்ந்து அவர் காலடியில் அப்படியே விழுந்து நமஸ்கரித்தார். ஆனந்தம்மா ஸ்ரீ சக்கர உபாசனை பெற்று பக்குவம் அடைந்தவர் என்பதையும் தெரிந்து கொண்டார். பின்பு நஞ்சுண்டராவ் சக்கரை அம்மாவை மானசீகமான குருவாக ஏற்றுக் கொண்டு அவரின் பிரதம சீடராக மாறிப்போனார்.

டாக்டர் நஞ்சுண்டராவ் அவரை சக்கரத்தம்மா என்றே குறிப்பிட்டு, அவர் பெருமையை எங்கும் பேசலானார். இதனால் மக்களும் இவரை சக்கரை அம்மா என்றே அழைக்கலானார்கள்.

பறக்கும் சித்தரை கண்ட தமிழ்த்தென்றல் திரு.வி.க:

ஆனந்தாம்பாள் பறவை போல் வானில் பறந்து செல்வதைப் பலரும் பார்த்துள்ளனர். தமிழ்த்தென்றல் திரு.வி.க என அழைக்கப்படும் திரு. கல்யாண சுந்தரனார் ‘உள்ளொளி’ என்ற தமது நூலில் ஒருமுறை இன்றைய புதுப்பேட்டை எனப்படும் இடத்தில் இருந்த கல்லூரியின் மேல் மாடியில் நின்று கொண்டு இருந்தபோது, அந்த மொட்டை மாடியில் ஆனந்தம்மா ஆகாய மார்க்கமாய் பறந்து வந்து அமர்ந்ததாக எழுதி உள்ளார். இதனை கேள்விப்பட்ட ஆராய்ச்சியாளர்களில் ஒருவரும் சென்னை மியூசியத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்தவருமான எட்கர் தர்சுடன் (ஐரோப்பியர்) அந்த அன்னைக்கு உடலளவில் பறவைகளின் பறக்கும் சக்தி இருந்ததாகவும், அவர் பறவை இனத்தை சார்ந்த உளவியல் அமைப்பையும், தன்மையையும் கொண்டு இருந்ததாகவும் கூறினார்.

ஜீவசமாதி:

1901 இல் தன் பூவுடலைத் துறக்கும் காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்த சக்கரை அம்மா, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலை தரிசித்து விட்டு வரும் வழியில் ஒரு சவுக்கு மரத்தோப்பைக் காட்டி இந்த தோப்பில் தன்னை அடக்கம் செய்து சமாதி எழுப்புமாறு தன்னுடன் வந்த டாக்டர் நஞ்சுண்டராவை கேட்டுக் கொண்டார். தாம் அங்கிருந்தே தமது பக்தர்களுக்கு அருள்புரியப் போவதாகவும் தன்னுடைய சமாதி ஒரு நூற்றாண்டு கழித்தே மக்கள் கவனத்தை ஈர்க்கும் என்றும் அப்போது மக்கள் அதன் பெருமையை உணர்ந்து நாடி வருவார்கள் என்றும் சொன்னார்.

1901 பிப்ரவரி 28-ஆம் தேதி, தனது 47-வது வயதில் ஜீவமுக்தி அடைந்த சக்கரை அம்மா சொன்னதுபோல், நூறாண்டுகள் கழித்து 2001 இல் மீண்டும் கோயில் புதுப்பிக்கப்பட்டு 2002 இல் குடமுழுக்கு நடைபெற்றது. அதற்கு பிறகுதான், அவர் கூரியது போல் மக்களை ஈர்க்கத் தொடங்கி உள்ளார் ‘ஸ்ரீ சக்கரை அம்மா’.

ஸ்ரீசக்கரை அம்மா கோயில்:

சென்னை திருவான்மியூர் கலாக்ஷேத்ரா சாலையில் சக்கரை அம்மா கோயில் உள்ளது. இதன் அருகிலேயே மகான் பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதி கோயிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றும் இந்த ஜீவசமாதியில் சக்கரை அம்மா நடந்தபடி இருக்கும் காலடி ஓசையை கேட்பதாக கூறுகின்றனர். இங்கு வரும் பக்தர்களுக்கு அளவில்லா அருளாசிகளை வழங்கி வருகின்றார். இங்கு சென்றவர்களின் மன வருத்தங்கள், தீராத வியாதி ஆகியவற்றிற்கு தீர்வு கிடைப்பதாயும் கூறுகின்றனர். மன நிம்மதி வேண்டுபவர்கள், இங்கு வந்து வழிபட்டால், உடனே சரியாகும். பொதுவாக பெண்கள் தம் குறைகளை மட்டுமல்ல, பெண்களின் உடல்சார்ந்த பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு கிட்டுகிறதாம். கோயிலின் பின் கூடத்தில்... சிறுவர், சிறுமிகளுக்கு நீதிக்கதைகள், ஆன்மீக சிந்தனைகளும் போதிக்கப்படுகின்றன. தியானம் செய்ய தியான மடமும் உள்ளது.
இங்கு மாதாந்திர திருவாதிரை, பௌர்ணமி நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இந்தக் கோயில் காலை 06.00 முதல் 10.00 மணி வரையும் மாலை 04.00 முதல் 08.00 மணி வரையும் திறந்திருக்கும்.

இவரது ஜீவசமாதி மிகுந்த அதிர்வுகளுடன், நினைத்ததை நிறைவேற்றித் தரும் திருக்கோயிலாக திகழ்கிறது. இந்த சக்கரை அம்மாவின் கோயிலை தரிசித்து, வேண்டியது நிறைவேறி, ஆனந்தமும் அமைதியும் பெறுவோம்.