மாலை நேரத்தில் ஈசிஆர் சாலையின் கோவளம் பீச்சில் ஹாயாக குழந்தைகள் கடலலைகளோடு போட்டிப் போட்டுக்கொண்டு ஓடி விளையாடுவதை பார்த்து கொண்டிருந்த ஹாசினி, மணலில் ஹாயாக உட்கார்ந்து இருந்த ரம்யா, எஸ்தர், ஸ்ருதியை பார்த்து....
“மகளிர் தினம் கொண்டாட்டம் உலகம் முழுசும் கொண்டாடுறாங்க..
உண்மையிலேயே பெண்களுக்கு அவங்க வாழ்க்கையில் சுதந்திரமா வாழ, நினைத்ததை சாதிக்க, தான் விரும்பியதை படிக்க, தன் கணவனை சுதந்திரமா தேர்ந்தெடுக்க, தனக்கு வசதிப்படும் நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள என தன்னிச்சையாக முடிவுகள் எடுக்க முடியுமா...?
ஸ்ருதி: இப்ப நிறைய மாறிக்கிட்டு வருதுப்பா.. நம்ம அம்மா, பாட்டிக் காலத்துல முடியாத சில விஷயங்களை, இந்தக் காலகட்டத்தின் பெண்கள் சாதிக்கிறாங்களே..
ரம்யா: எஸ்.. ஆனா எல்லாருக்கும் இந்த உரிமை கிடைச்சிருக்குன்னு சொல்ல முடியாது. முற்போக்கான குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கு வேணா இது சாத்தியமாக இருக்கலாம்..
ஸ்ருதி: ம்ம்.. ரைட்டு.. சென்னைல பிறந்து, வளர்ந்த நம்மள அளவுக்கோளா வச்சு பெண்ணுரிமை பத்தி பொதுவா கருத்து சொல்ல முடியாது..
ரம்யா: ரொம்ப சரி.. சில நாடுகளில், பெண்கள் நலனுக்கு எதிரா இருக்குன்னு தெரிஞ்சு கூட சில சட்டங்கள் இயற்றி அதை பின்பற்றுகிறார்கள் தெரியுமா?
எஸ்தர்: அப்படி என்ன சட்டம்பா..?
ரம்யா: ரஷ்யாவுல குடும்ப வன்முறையால், பெண்கள் தாக்கப்பட்டால் அது சட்டப்படி ஒரு கிரிமினல் குற்றம் கிடையாது.. இந்த சட்டத்தை இயற்றி, ரஷ்ய நாடாளுமன்றத்தில் சந்தோஷமா நிறைவேற்றி இருக்காங்க. அதுக்கான காரணத்தை வேற சொல்றாங்க பாரு... குடும்பம் புனிதமானதாம்.. அதிகாரவர்க்கம், ஒரு குடும்பத்தின் உள்விஷயங்களில் தலையிட உரிமை இல்லையாம்.
எஸ்தர்: அட நாய்ங்களா..??!!
பெண்களை தாக்கினால் கூடவா ??
ரம்யா: ஆமா.. கொடுமை என்னன்னா... அதே அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் எடுத்த கணக்கீட்டின்படி, ரஷ்யாவில் 40 நிமிடங்களுக்கு ஒரு பெண் குடும்ப வன்முறையால் உயிர் இழக்கிறாள்.
எஸ்தர்: ச்சே.. எவ்வளவு கொடூரம் பாரு.. அடிச்சு கொல்றவன் இருக்கிறது எல்லாம் ஒரு குடும்பமா...?
கொல்றவனை விட... “அது குடும்பத்தின் தனி விஷயம்”ன்னு சொல்லி சட்டம் போட்டான் பாரு, அவனுங்கள முதல்ல உதைக்கனும்..
ஹாசினி: எஸ்தர்..! என்னடி யோசிக்கிற?
எஸ்தர்: இல்ல.. இந்த “கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்” பழமொழி நம்ம தமிழ்நாட்டிலிருந்து எப்படி ரஷ்யா வரை போச்சு..??
ரம்யா: ரஷ்யா மட்டும் இல்ல.. பல நாடுகளில் இது தான் பெண்களின் நிலைமை..
ஈரான் நாட்டுல பெண்கள் வெளிநாடு போகனும்னா, கணவன் சரின்னு சொல்லி கையெழுத்து போட்டு ஒரு ஸ்லிப் கொடுத்தா தான் ஏர்போர்ட்ல ஃப்ளைட் ஏற முடியும்.. பல வருஷங்களா நடைமுறையில் இருக்கிற சட்டம், சமீபத்துல தான் ஒரு விளையாட்டு வீராங்கனையால உலகத்துக்கே தெரிய வந்தது
ஸ்ருதி: யாருப்பா அது ..?
ரம்யா: ஈரான் நாட்டின் மகளீர் கால்பந்து அணியின் தலைவி சர்வதேச போட்டிக்காக வெளிநாடு செல்ல அவர் கணவர் அனுமதி ஸ்லிப் தராததால், அவரால் வெளிநாடு போக முடியாம போட்டியில் பங்கேற்க முடியவில்லை..
எஸ்தர்: (கோபத்துடன்) கஷ்டம்.. நானா இருந்தேன்னா ஒரு துடப்பத்தை எடுத்து போடுற போடுல கையெழுத்து போடாம விட்ருவானா அவன்..??!!
ஸ்ருதி: நீ வேற.. கணவர்களை எதிர்த்துக்கிட்டா மனைவிகளை தூக்கி ஜெயில்ல போடுற மாதிரி அதுக்கு ஒரு சட்டம் ஏற்கனவே போட்டு வச்சிருப்பானுங்க இந்த வீணாப்போன ஆண்ஆதிக்கவாதிங்க..
ஹாசினி: பாவம்ப்பா..
ரம்யா: இத விட இன்னொரு மோசமான சட்டம் சொல்றேன் கேளுங்க.. அமெரிக்கால... யாராவது ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செஞ்சு, அதன் மூலம் குழந்தை உண்டாகி... பாதிக்கப்பட்ட பெண் குழந்தையை பெத்துக்கிட்டா, அந்த குழந்தைக்கு அந்த பொண்ணை ரேப் பண்ணவனே தகப்பன் என்கிற உரிமையை சட்டரீதியாக கொண்டாட முடியும்.
ஸ்ருதி: அடப்பாவிங்களா..?? ஏன்ப்பா இப்படி..??
ரம்யா: ஆமாம் .. அமெரிக்காவின் பெரும்பான்மையான மாகாணங்களில் கருக்கலைப்பு குறித்து ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு சட்டம் இருக்கிறது.. கருக்கலைப்பை அவ்வளவு எளிதாக செய்துவிட முடியாது.. இந்த விஷயத்தில் மிகவும் பிற்போக்கு கொள்கைகளை தான் அமெரிக்க அரசு பின்பற்றுகிறது.
அடுத்து சூடான் நாட்டுல 3 இல் 1 பெண் 18 வயதுக்கு முன்பே கல்யாணம் செய்து வைக்கப்படுகிறாள். இன்னும் சொல்லப்போனால் 10 வயது சிறுமியை திருமணம் செய்தால் கூட, அந்நாட்டு சட்டப்படி குற்றம் கிடையாது. ஒரு ஜட்ஜ் அனுமதி கொடுத்தாலே போதும்.
எஸ்தர் எழுந்திருக்க..
ஹாசினி: ஏண்டி.. என்னாச்சு..??
எஸ்தர்: நீங்க பேசுங்க .. எனக்கு இதை எல்லாம் கேட்டா ரொம்ப டென்ஷன் ஆகுது.. வர கோபத்துல...
ஹாசினி: என்ன ரஷ்யா, அமெரிக்கா, சூடான் போய் சண்டை போடப்போறியா??
எல்லா நாட்டிலும் பெண்கள் சிறுமிகளுக்கு எதிரா குற்றங்கள் நடந்துக்கிட்டு தானே இருக்கு எஸ்தர்.. ஏன் நம்ம நாட்டுல கூட, போன வாரம் உபியில் ரெண்டு தலித் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செஞ்சு கொன்னுப்போட்டாங்களே..!
ரம்யா: இல்ல ஹாசினி.. நீ சொல்றது தப்பு.. ஒரு வித்தியாசம் இருக்கு.. பாலியல் கொடுமை, குடும்ப வன்முறை போன்றவை இந்தியாவில் சட்ட ரீதியாக கடுமையான குற்றங்கள் ஆகும். ஆனா, இப்ப நாம பேசுறது... அங்க, அரசாங்கமே குற்றங்களுக்கு ஆதரவாக சட்டம் இயற்றி வச்சிருக்காங்க.. அத புரிஞ்சிக்கோ..
ஹாசினி: ..ஓ.. ஆமாம்ப்பா.. சாரி..
ரம்யா: எதுக்கு சாரி.. விடு மச்சி.. எஸ்தர் உட்காரு..
அடுத்து இந்த ஜோர்டான் நாட்டு சட்டப்படி, பெண்கள் தங்கள் குடும்பத்திற்கு எதிராக காதல் திருமணம் செய்றது, ஓடிப்போகுறது, திருமண உறவுக்கு வெளியே பாலியல் தொடர்பு வைக்கிறது போன்றவைகளை செய்யும் போது, அந்த பெண்களை கோபத்துல அவ குடும்பமே கொலை செய்தாலும், அது பெரிய குற்றம் கிடையாது.
ஸ்ருதி: இதை எல்லாம் பார்க்கும் போதும் ஒரு உண்மை நல்லா விளங்குது. உலகம் முழுக்க... பெண்கள் உணர்விற்கு மதிப்பு கொடுக்காம, அவள் உடலை, குடும்ப கௌரவத்தின் அடையாளமா வச்சுத்தான் இந்த சமூகம் மதிப்பிடுது..
ஹாசினி: இந்த அநியாயத்தை கேளு..
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவிலிருந்து, ஜெர்மனியின் ஏஞ்சலா மெர்க்கல் வரை இந்த கோவிட்19 பிரச்சனையை எவ்வளவு திறமையா கையாண்டாங்கன்னு உலகமே பார்த்தது.. இருந்தாலும் சமீபத்தில் எடுத்த ஒரு கணக்கீட்டின்படி, ஆண்களில் பாதிப்பேர்... “என்ன இருந்தாலும் ஒரு பொம்பளை ஆட்சியின் கீழே, நாடு இருக்கிறது எங்களுக்கு மனசார ஒப்புக்கொள்ள முடியல.. சங்கடமா இருக்கு”ன்னு சொல்லியிருக்காங்க.
எஸ்தர்: அட டபரா மண்டையனுங்களா!!! இவனுங்களுக்கெல்லாம் அந்த வைக்கோல் மண்டையன் ட்ரம்ப் தான் லாயக்கு படுவான்.. அமெரிக்காவுல தெனமும் கோவிட்டாலே 3000, 4000 பேர் வரை செத்துக்கிட்டு இருந்தாங்களே...
ஸ்ருதி: எஸ் மச்சி.. அந்தளவுக்கு பெண்கள்னா எதுக்கும் லாயக்கு இல்லன்னு தான் பாதி பேர் நம்புறாங்க..
ஹாசினி: அதே சர்வேயில், ஆராய்ச்சியாளர்கள் குறிப்பாக ரொம்ப ஆச்சரியப்பட்ட விஷயம் என்னன்னா...
உயர்மட்ட பதவிகளில் பெண்கள் இருந்தால், பெண்கள் என்பதாலேயே அவர்கள் மேல் பெரிய மதிப்பு இல்லைனு சொன்னது இளைய தலைமுறையினர்தான்.
எஸ்தர்: அட வயசானவங்களே தேவலை போல..
ஸ்ருதி: உண்மை .. இந்த லட்சணத்துல உலகம் முழுக்க பெண்கள் தினம் கொண்டாடுறாங்களாம்.
ரம்யா: இந்த வாரத்தில...
குஜராத் - அகமதாபாத்துல ஒரு அழகான இளம் முஸ்லீம் பெண் வரதட்சணை கேட்டும், வேறொரு பெண்ணை தொடர்பும் வைத்திருந்த கணவனின் கொடுமையால் சபர்மதி ஆத்துல குதிச்சு செத்து போனா.. அவ கடைசியா பேசினது...
“நான் ஆயிஷா ஆரிஃப் கான். எனது மரணத்திற்கு யாரும் பொறுப்பல்ல... இந்த குறுகிய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அன்புள்ள அப்பா, நீங்களும் எவ்வளவு காலம் போராடுவீர்கள்? வழக்கைத் திரும்பப் பெறுங்கள். நான் ஆரிஃப்பை நேசிக்கிறேன், அதனால் நாம் ஏன் அவரை தொந்தரவு செய்ய வேண்டும்? அவர் சுதந்திரத்தை விரும்பினால், அவர் சுதந்திரமாக இருக்கட்டும். எப்படியிருந்தாலும், என் வாழ்க்கை இங்கே முடிகிறது. நான் அல்லாஹ்வை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் எங்கே தவறு செய்தேன் என்று அல்லாவிடம் கேட்பேன். என்னிடம் என்ன தவறு? என் பெற்றோர் மிகவும் நல்லவர்கள், நண்பர்கள் மிகவும் நல்லவர்கள், ஆனால் ஏதோ குறை இருந்தது... ஒருவேளை என்னில் இருக்கலாம், ஒருவேளை என் அதிர்ஷ்டத்தில் இருக்கலாம். எனக்கு மகிழ்ச்சியே... நான் நிம்மதியாக இறக்க விரும்புகிறேன். மனிதர்களின் முகங்களை மீண்டும் எனக்குக் காட்ட வேண்டாம் என்று நான் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.
ஆனால், நான் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டேன். நீங்கள் நேசிக்க விரும்பினால், அது இரு பக்கமாக இருக்க வேண்டும். ஒருதலைப்பட்ச அன்பில் எதுவும் இல்லை. நிக்காஹ் (திருமணத்திற்கு) பிறகும் சில காதல் கதைகள் முழுமையடையாது.
இது ஒரு அழகான நதி.. இதில் நான் போன பிறகு என்ன நடந்தாலும், தயவுசெய்து இதை பெரிய பிரச்சினை ஆக்காமல் இருந்தால் அது போதும். நன்றி. உங்கள் பிரார்த்தனைகளில் என்னை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நான் சொர்க்கத்தை கண்டுபிடிப்பேனா..? இல்லையா..? என்பது யாருக்குத் தெரியும்...!! இருந்தாலும் எல்லோருக்கும் குட்பை” என்று சொல்லி அந்த வீடியோவை எடுத்து அவங்க அப்பாக்கு அனுப்பிட்டு, சபர்மதி ஆத்துல குதிச்சு இறந்து போயிட்டா..
அதைக் கேட்டு உறைந்து போன ஹாசினியின் கண்களில் நீர் வழிவதை பார்த்த அனைவரது கண்களிலும் நீர் திரையிட்டது .
ரம்யா: “எந்த மதமா, இனமா, நாடா இருந்தா என்ன..? உலகத்தின் எந்த மூலையிலும் ஒரு பெண், தான் பெண்ணாக பிறந்த ஒரே காரணத்திற்காக சாகும்படி நேரிட்டால் கூட... இந்த மகளீர் தின கொண்டாட்டங்கள் எல்லாம் அர்த்தம் இல்லாம போச்சுன்னு அர்த்தம்..” என்று கூறி கண்கள் துடைத்தபடி, அங்கு அலைகளில் விளையாடும் குழந்தைகளை மீண்டும் பார்க்க ஆரம்பித்தாள்.
Leave a comment
Upload