தொடர்கள்
தொடர்கள்
விதுரன் சொல் ... - 2 - சுபஸ்ரீ

20210204080714153.jpg

விதுர நீதி என்பது என்ன?

நமது பெருமைக்குரிய பாரத தேசத்தின் மாபெரும் இதிகாசமான மகாபாரதத்தின் ஒருபகுதியாகிய விதுரநீதி, ஒரு சிறந்த நிர்வாகவியல் (Management book) நூலாக பார்க்கப்படுகிறது. இதை இளம்வயதில் நாம் படிக்கும்போது, இது ஒரு நடந்த கதையாக மட்டுமே தெரியும். ஆனால் வேலை தேடுபவர்களும், வேலையில் உள்ளவர்களும் இதை படிக்கும்போது, விதுரர் நமக்கு சொல்லித்தந்த நிர்வாகவியல் திறனை, எந்த ஒரு மேலாண்மை கல்வி நிறுவனமும் சொல்லித்தருவது கடினம்.

இன்று நாம் எதிர்நோக்கும் பலவிதமான பிரச்சனைகள், சஞ்சலங்கள், சங்கடங்கள் என இவை அனைத்தையும், அக்காலத்தில் ராஜ குடும்பங்களும் எதிர்கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட சூழ்நிலைகளை எப்படி கையாளவேண்டும் என்பதையும், அச்சமயங்களில் எவ்வாறு சொந்த விருப்பு , வெறுப்புகளுக்கு மனதில் இடமளிக்காமல், முடிவுகள் எடுக்கப்படவேண்டும் என்பதையும் விதுரர் விளக்குகிறார்.

ஹஸ்தினாபுரத்தின் அரசன் திருதிராஷ்டிரனிடம் விதுரர் பேசும்போதெல்லாம் தன் அண்ணனிடம் மட்டும் பேசவில்லை, அந்நாட்டு மன்னனிடம் தாம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை எப்பொழுதுமே நினைவில் கொண்டு, அதற்குரிய மரியாதையுடனேயே பேசுவார். விதுரர் மன்னருக்கு ஆலோசனை சொல்லும்போது.... மன்னரின் மனமறிந்து, தன்னுடைய கருத்திற்கு அழுத்தம் கொடுக்காமல் எடுத்துக்கூறினார்.

மஹாபாரதத்தில் உள்ள பகவத்கீதை அனைவராலும் அறியப்பட்டபோதும், அதே அளவுக்கு முக்கியத்தும் வாய்ந்த விதுரநீதி பெருமளவில் அறியப்படவில்லை. இது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம்தான். மஹாபாரதத்தில் மூன்று உபதேசங்கள் மிகவும் முக்கியம். ஒன்று... கண்ணன், அர்ஜுனனுக்கு சொன்னது. இரண்டாவது... பீஷ்மர் அம்பு படுக்கையில், பாண்டவர்களுக்கு சொன்னது. மூன்றாவது... விதுரர், திருதிராஷ்ட்ர மன்னனுக்கு கூறிய விதுரநீதி.

இறை நம்பிக்கை இல்லாதவர்கள், கீதோபதேசத்தை விரும்பாமலும், படிக்காமலும் போகலாம், பீஷ்மர் பாண்டவர்களுக்கு கூறிய அனைத்தும் அரச கடைமைகள் ஆகும். ஆனால், விதுரர் கூறிய நீதிகள், அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் எந்த ஒரு சாமானியர்களுக்கும், ஆஸ்திகர்களுக்கும், நாஸ்திகர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும், என எல்லாருக்கும் பயன் தருபவை.

விதுரநீதியை பின்பற்றுவது ஒன்றும் கடினம் அல்ல!!

விதுரநீதி மனோதத்துவ அடிப்படையிலான ஒரு வாழ்வியல் நூல். உறக்கத்தை இழந்து தவித்த திருதுராஷ்ட்ர மன்னனுக்கு மனஅமைதி பெறவும், தெளிவு ஏற்படவும், நல்ல கருத்துக்களை சொல்லிக்கொண்டே வந்தார். நம்மை போன்றவர்களுக்கு இந்நூல் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைகிறது. நல்ல மனிதனே, நல்ல நிர்வாகியாக இருக்க முடியும் என்பது விதுரரின் நிர்வாகவியல் பார்வை. ஒரு சிறந்த நிர்வாகியாக இருக்க வேண்டிய குணங்கள் எவை, எவை என்றும், அவை மன்னரிடத்தில் இல்லை என்பதையும் கூறுகிறார். இந்த இலக்கணங்கள் என்ன? என்பதை பின்வரும் வாரங்களில் பார்ப்போம்.

எங்கு தர்மம் இருக்கிறதோ.. அங்கு வெற்றி இருக்கும்.