மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள தில்லையடி கிராமத்தை சேர்ந்த நெசவு தொழிலாளியான முனுசாமி முதலியார் மற்றும் அவரது மனைவி மங்களத்தம்மாள், பிரிட்டிஷ் ஆட்சியில் தமிழகத்திலிருந்து தென்னாபிரிக்கா சென்றனர்.
ஜோகன்ஸ்பார்க் நகரில் ஒரு சிறிய வணிகத்தை ஆரம்பித்த முனுசாமி, தனது குடும்பத்தினருடன் அங்கு வசித்து வந்தார். 22.2.1898ல், முனுசாமி தம்பதியினருக்கு ஜோகன்ஸ்பெர்க் நகரில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அவர்கள் அந்தக் குழந்தைக்கு வள்ளியம்மை என பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். வள்ளியம்மை சிறுவயதில் காலனி அரசு பெண்கள் மேனிலை பள்ளியில் பயின்று வந்தார்.
இந்தியாவிலில் இருந்து தென்னாப்பிரிக்கா சென்ற இந்தியர்களுக்கு எதிராக தலைவரி, கிறித்துவ தேவாலயத்தில் நடைப்பெறாத பிற மதத்தினர் திருமணம் செல்லாது, அனைத்து திருமணங்களும் கிறித்துவ தேவாலயத்தில் நடத்தப்பட வேண்டும் என அங்கிருந்த ஆங்கிலேயே அரசு கடுமையான சட்டங்களை பிறப்பித்தது.
தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான சட்டங்களை கண்டு, அங்கிருந்த இந்தியர்கள் இதனை கடுமையாக எதிர்க்கிறார்கள். தென்னாப்பிரிக்காவில் இருந்த காந்தியடிகள், இந்தியர்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்து போரட்ட களத்தில் இறங்குகிறார்.
1913 ஆண்டு, காந்தியடிகள் தென்னாபிரிக்காவின் கடுமையான சட்டத்தினை எதிர்த்து போராட்டம் நடத்திய போது... இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள் அதுவும் பெண்கள், குழந்தைகள் என காந்தியடிகளின் பின்னால் அணிவகுத்து நின்றனர். காந்தியடிகள், தான் தாளில் எழதி கொண்டு வந்த உறுதிமொழி வாசகத்தை வாசிக்க... கூட்டத்தில் இருந்து யாராவது ஒருவர் வர வேண்டும் என்று அழைக்கிறார்.
கூட்டத்தில் இருந்து 15 வயதான சிறுமி வள்ளியம்மை துள்ளி பாய்ந்து, காந்தியடிகளிடம் இருந்த உறுதிமொழி தாளை வாங்கி படிக்க ஒடி வருகிறார்.
காந்தியடிகள் தன் கையிலிருந்த உறுதி மொழி தாளை வள்ளியம்மையிடம் கொடுத்து படிக்க சொல்கிறார்.
“வெள்ளை ஏகாதிபத்தியத்தின் விலங்கொடிப்போம் வாருங்கள்!” என்ற வள்ளியம்மையின் கணீர் முழுக்கத்துடன், போராட்ட பயணம் காந்தியடிகள் தலைமையில் புறப்படுகிறது.
போராட்டம் புறப்பட்ட சில மணித்துளிகளில், தென்னாப்பிரிக்க போலீஸார் காந்தியடிகளை சுட்டுதள்ள தங்கள் கையிலிருந்த துப்பாக்கி மூலம் குறிபார்ப்பதை வள்ளியம்மை கவனித்து விட்டார்.
ஒரு சில விநாடிகள் கூட தமாதிக்காமல், வள்ளியம்மை, காந்தியடிகளுக்கு முன்னால் நின்றுகொண்டு... போலீஸ்காரர்களை நோக்கி, இப்போது சுடுங்கள்… பார்க்கலாம்…. என்று தென்னாபிரிக்கா காவல்துறையினருக்கு வள்ளியம்மை சவால் விடுகிறார்.
காந்தியடிகளை சுட்டு தள்ள வந்த போலீசார், மெல்ல பின் விலகி சென்று தங்கள் திட்டத்தினை மாற்றி கொள்கின்றனர்.காந்தியடிகள் தொடங்கிய போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியர்களை, வள்ளியம்மை ஒழங்குபடுத்தி போராட்டத்தை நடத்துகிறார்.
என்னை சுட வந்த வெள்ளைகார காவல்துறையினர், வள்ளியம்மையின் நெஞ்சுரம் கண்டு, திகைத்து திரும்பி சென்று விட்டனர் என்று காந்தியடிகள் புகழாரம் சூட்டுகிறார்.
போராட்டத்தில் ஈடுபட்டு, நடைப்பயணத்தில் காந்தியடிகளுடன் வந்தவர்கள் அனைவரையும் தென்னாப்பிரிக்கா காவல்துறையினர் கைது செய்து சிறைக்கு அழைத்து செல்கின்றனர்.
போராட்டத்தில் கைதான அனைவரும் தாங்கள் இந்தியர்கள் என்று சிறைத்துறை பதிவேடுகளில் பதிவிடுகின்றனர். இதனை பார்த்த தென்னாப்பிரிக்கா சிறைதுறை அதிகாரி ஒருவர், இந்தியா என்ற ஒரு நாடே இல்லை, ஆப்பிரிக்கர்கள் என்று பதிவு செய்யுங்கள் என்று கேலியாய் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பார்த்து நக்கல் அடித்தார்.
வள்ளியம்மை தான் இந்தியர் என்று சிறைதுறை பதிவேடுகளில் பதிவு செய்ததை பார்த்த தென்னாப்பிரிக்கா ஆங்கிலேயே சிறைத்துறை அதிகாரி, இந்தியா என்ற நாடும் இல்லை, இந்தியாவிற்கான ஒரு கொடியும் கிடையாதே என்று சொல்ல... அடுத்த நொடியில், சிறுமி வள்ளியம்மை தான் உடுத்தியிருந்த ஆடையின் ஒரு பகுதியை கிழித்து, இது தான் என் இந்தியாவின் கொடி, இனி என் கொடிக்கான நாடும் உண்டு தானே என்று சிறைதுறை அதிகாரியை பார்த்து தைரியமாக பதிலளிக்கிறார்.
சிறைத்துறையினர் போராட்டக்காரர்களின் விவரங்களை பதிவு செய்த பின்னர், அனைவரையும் சிறையில் அடைக்கிறார்கள். தென்னாப்பிரிக்கா அரசு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு முன்று மாத சிறைதண்டனை விதித்தது.
சிறுமி வள்ளியம்மை போராட்டத்தை முன்னின்று நடத்தியதால், கைது செய்து சிறையில் அடைக்கப்படுகிறார். சிறையில் சிறுமி வள்ளியம்மைக்கு கடுமையான வேலைகள் தரப்படுகிறது. இதனால் சிறுமி வள்ளியம்மை கடுமையான விஷக்காய்ச்சல் ஏற்பட்டு, சரியான சிகிச்சையும், தூக்கமும் இன்றி உடல்நல கோளாறால் அவதிபடுகிறார்.
சிறுமி வள்ளியம்மை உடல்நிலை மோசமாவதை கண்டு தென்னாபிரிக்கா சிறைதுறையினர், அபராத தொகையை செலுத்திவிட்டு, சிறையிலிருந்து விடுதலை பெற்று செல்லுங்கள் என்றதை ஏற்க மறுத்து... செத்தாலும் சிறையிலேயே சாவேனே தவிர, தென்னாபிரிக்க அரசு விதித்த அபராத தொகையை செலுத்தமாட்டேன் என்று அடம்பிடித்து சிறையில் இருக்கிறார் வள்ளியம்மை.
தென்னாபிரிக்கா அரசுக்கும் காந்தியடிகளுக்கும் போராட்டம் குறித்து ஏற்பட்ட உடன்படிக்கையின்படி போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் சிறையில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
சிறுமி வள்ளியம்மை, எதற்காக போராட்டம் செய்து சிறைக்கு வந்தோமோ... அந்த சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என பிடிவாதமாக சிறையில் இருந்து விடுதலையாக மறுத்துவிட்டார்.
தென்னாப்பிரிக்கா அரசு வேறு வழியின்றி, இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரி ரத்து செய்தபின் தான் வள்ளியம்மை சிறையில் இருந்து விடுதலையானார். சிறையிலிருந்து வீட்டிற்கு வந்த வள்ளியம்மை ,கடும் விஷகாய்ச்சல் பாதிப்பால் அவரின் உடம்பில் ஒரு போர்வை சுற்றப்பட்டு குற்றுயிரும் குலையுறுமாய் கொண்டு வரப்பட்டார். சிறுமி வள்ளியம்மை தனது வீட்டில் படுத்த படுக்கையாகி எழமுடியாமல் படுக்கையிலேயே இருந்தார்.
சிறுமி வள்ளியம்மை உடல் நாளுக்கு நாள் மோசமாகி வருவதை காந்தியடிகள் தெரிந்து கொண்டு, அவரை சென்று அவரது வீட்டில் சந்திக்கிறார்.
சிறைதானே உன் உடம்பை கெடுத்துவிட்டது, சிறை சென்றதற்காக நீ வருத்தப்படுகிறாயா என்று வள்ளியம்மையிடம் காந்தியடிகள் கேட்டதும்... நிச்சயமாக இல்லை.. இன்னொரு தடவை சிறை செல்லவும் நான் தயார், சிறையில் நான் இறந்தாலும் அதைப் பற்றி கவலைபடமாட்டேன். தாய்நாட்டிற்காக உயிரை கொடுக்க விரும்பதாவர்கள் யாராவது இருப்பார்களா? என்று தன் உடல் நிலைபற்றி கவலைபடாமல் பதிலளித்த சிறுமி வள்ளியம்மையின் துணிச்சலையும், வீரத்தையும் கண்ட காந்தியடிகள், அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பி சென்றார்.
அடுத்த சில நாட்களுக்குள் 22.2.1914 அன்று, சிறுமி வள்ளியம்மை பிறந்த நாளன்றே இறந்து போனார். சிறுமி வள்ளியம்மை இறந்த போது அவருக்கு வயது 16.
இந்தியாவின் ஒரு புனித மகளை இழந்துவிட்டோம். ஏன், எதற்கு என்று கேட்காமல் கடமையைச் செய்தவர். மனோபலம், தன்மானம் மிக்கவர். அவரது இந்தத் தியாகம் இந்திய சமூகத்துக்கு நிச்சயம் பலன் தரும் என வள்ளியம்மையின் கல்லறைக்கு சென்று காந்தியடிகள் புகழஞ்சலி செலுத்தினார்.
பல ஆண்டுகளுக்கு பின்பு... காந்திஜி மாயவரம் அருகே இருக்கும் தில்லையாடி கிராமத்திற்கு வந்ததும், கிராமத்தின் நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்தவர், தரையில் இருந்த மண்ணை தன் கைகளால் எடுத்து கண்ணில் ஒற்றிகொண்டு கண்கலங்கினார். பலன் கருதாமல் தியாக உணர்வுடன் போராடி வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை தான், தனக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர் என்று காந்தியடியடிகள் புகழாரம் சூட்டினார்.
காந்தியடிகள் தில்லையாடி கிராம மக்களிடம் அமர்ந்து பேசிய இடத்தில் நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது. இதன் எதிரில் தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. ஒரு பொது நூலகமும் செயல்படுகிறது.
16 வயதில் சுதந்திர வேட்கையுடன் இந்தியாவின் புனிதமகளாக போராடி உயிர்நீத்த சிறுமி தில்லையாடி வள்ளியம்மை, இந்தியாவின் சுதந்திர போராட்ட வீராங்கனை என்ற பட்டத்திற்கு சொந்தகாரர் ஆகிறார்!
சுயநலமில்லாமல் நாட்டிற்கு சுதந்திரம் பெற போராட்ட வேட்கையை தூண்டிய சிறுமி தில்லையாடி வள்ளியம்மை போன்றவர்கள் செய்த தியாகத்தினை, இன்றைய அரசியல்வாதிகள் கேலிகூத்தாக்கி, பாழாக்கி விட்டார்களோ என எண்ணத் தோன்றுகிறது?!
Leave a comment
Upload