“சார்…! சார்…!!” என்று யாரோ வாசலில் கூப்பிட்டபோது, மணி இரவு ஏழாகியிருந்தது. “வாசல் மரக்கதவை, கொசுக்களுக்கு பயந்து, மூடி வைத்திருந்தேன். ஈஸிச்சேரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தபடியே "வாசல்லே, யாருன்னு பாருடி” என்று சவுண்டு விட்டேன்.
“அதான் உன் சம்சாரம் ஊருக்கு போய் ஒரு மண்டலம் ஆச்சே! அப்புறம் யாரை ‘பாருன்னு’ சொல்லி ஊளவுதார் காட்றே? ஈஸிச்சேர்ல இருந்து எழுந்து வரமுடியுமா? இல்லே…நாங்களே உள்ளே வரட்டுமா?” என்ற பதிலைக் கேட்டதும், “எவண்டா அது?” என்று உதடுகளில் முணுமுணுத்தபடியே, எழுந்துபோய் கதவைத் திறந்தேன்.
என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை, காரணம்… மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன், ஆகிய கடவுள்களின் வேஷங்களைப் போட்டுக்கொண்டு, மூன்றுபேர், என் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார்கள்.
“இதென்ன வேஷம்?. நீங்களெல்லாம் யாரு?” என்று நான் கேட்டுக்கொண்டே, வெளியே வந்தேன். நாங்களெல்லாம், நிஜமாவே தெய்வங்கள்தான், என்று “சத்தியம்” செய்தபடியே, பரமசிவனார், கையிலிருந்த புலித்தோலை, எனக்குப் பொன்னாடையாக அணிவித்தார். பாற்கடல் வாசனோ, தன் கையிலிருந்த பாரிஜாத மலர்ச்செண்டை, என் கையில் கொடுத்தார். பிரம்மனோ, ஒரு பிரின்ட்டட் நோட்டீசை, எடுத்து நீட்டினார்.
ஒன்றும் புரியாமல், இதெல்லாம் என்ன என்றேன். அதற்குள், என்னையும் தள்ளிக்கொண்டு வீட்டுக்குள் வந்து, வாசல் கதவை தாளிட்டார் பிரம்மன். மும்மூர்த்திகள் மூவரும் ஆளுக்கு ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு, உட்கார்ந்து கொண்டு, “பரவாயில்லை, நீயும் உட்காருப்பா” என்றார்கள்.
மஹாவிஷ்ணுவே ஆரம்பித்தார். ”வரப்போற, ஏப்ரல் மாசம் ஆறாம் தேதியன்னிக்கு, தமிழ்நாட்டிலே, சட்டசபை எலெக்ஷன்ஸ் நடக்கப்போறதுன்னு, உனக்கு தெரியுமில்லே?” எனக்கேட்டார். “ஆமாம் தெரியும், அதுக்கென்ன?” என்றேன்.
அதாவது, நாங்க எல்லாக் கடவுள்களும் சேர்ந்து, “கடவுள் முன்னேற்ற கழகம்” (“க.மு.க”), அப்படீன்னு தனிக் கட்சி ஆரம்பிச்சிருக்கோம். வரப்போற 2021 எலக்ஷன்ல, “தமிழ்நாட்டிலே, போட்டிபோட்டு, எல்லாத் தொகுதியிலேயும் ஜெயித்து, ஆட்சியை பிடிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். அதான், தேர்தல் பிரசாரத்துக்காக எல்லார் வீட்டுக்கும் வந்திருக்கோம்” என்றார் பிரம்மா.
“உங்க கட்சிக்கு என்ன சின்னம், கொடி, கொள்கை, கூட்டணி, யாரெல்லாம் வேட்பாளர்கள், அவங்களுக்கு என்ன தொகுதி ஒதுக்கியிருக்கீங்க, யார் முதலமைச்சர். ஒருவேளை ஆட்சிக்கு வந்தா என்ன சாதிக்கப் போறீங்க? இதெல்லாம் ஒண்ணுமே சொல்லாம, ஆட்சியைப் பிடிக்கப் போறோம்னு சொன்னீங்கனா எப்படிங்க?” என்றேன்.
“ஓய், பிரம்மா… அவனுக்கு புரியும்படி சொல்லும்” என்றார் பரமசிவனார்.
“பக்தா… நீ உன் மனதில் எழும் சந்தேகங்களை கேள்?” என்றார் பாற்கடல் வாசன்.
“உங்க, “க.மு.க.” கட்சிக்கு என்ன கொடி, என்ன சின்னம்?” என்றேன்.
“யாரு, எந்த சாமியை கும்படறீங்களோ, அந்தந்த சாமியே, பக்தர் விரும்பும் அலங்காரத்தோடயே, சாலையோரப் போஸ்டரிலும், தேர்தலறிக்கைப் புத்தக அட்டையிலும், பூத்-சிலிப்பிலும், வோட்டிங் மெஷினிலும், அந்தந்த பக்தரின் கண்களுக்குத் தெரிவார்”, என்றார் பிரம்மா.
“சாமியே இல்லைங்கிற நாத்திகர்களுக்கு?” என்றேன். “அவங்க, யாரைத் தங்களோட வழிகாட்டியா நினைக்கிறார்களோ, அந்த தலைவர்களே, எங்க கட்சியோட சின்னமாக, அந்த நாத்திகர்களுக்குத் தெரிவாங்க” என்றார் சிவபெருமான்.
“ஒரு கிருஸ்தவருக்கோ, அல்லது, இஸ்லாமியருக்கோ…?” என்று நான் மடக்கினேன்.
மாஹாவிஷ்ணுவோ, “இதிலென்ன சந்தேகம், அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் வழிபடும் தெய்வங்களே, எங்கள் கட்சியின் சின்னமாக, அவர்களுக்குத் தெரிவார்கள்” என்றார்.
“அப்போ, உங்க கட்சியோடக் கொடி?” என்றேன். “யார்-யாருக்கு, எந்த நிறத்தில், எந்த வடிவத்தில் கொடி எப்படி வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அப்படியே அவரவர் கண்களுக்கு, எங்கள் கட்சியின் கொடி தெரியும்” என்றார் விஷ்ணு.
“இந்துக் கடவுள்களான நீங்கள், தேர்தல் பிரசாரத்துக்கு நேரடியாக போவதை, மற்ற மதத்துக்காரர்கள் எப்படி ஒத்துக் கொள்வார்கள்?” என்றேன் நான்.
சிவபெருமானோ, “அடேய், இந்நேரம், எல்லா மதத்துக் கடவுளர்களும், அந்தந்த மதத்தினர் வீட்டில், நாங்கள் உன்னிடம் பேசுவதுபோல், இப்போது, பேசிக் கொண்டிருப்பார்கள்” என்றார்.
“எல்லாம் சரி… ஓவ்வொருத்தரும் ஒவ்வொரு கடவுளுக்குன்னு ஓட்டுபோட்டா, போலிங் நடக்கும்போது, குழப்பத்தை ஏற்படுத்தாதா?” என்றேன்.
“அதெல்லாம் குழப்பமே வராது. நீங்கள், “எலக்டிரானிக் ஓட்டிங் மெஷீனில்” எந்த சாமியை நினைத்து, பட்டனை, அழுத்தினாலும், அது, அந்தத் தொகுதியில் போட்டியிடும், எங்கள் “க.மு.க” வேட்பாளருக்கு, பதிவாகிவிடும். எங்களை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்களுக்கு, ‘நோட்டா’ வோட்டுகள் பிரிந்து பதிவாகும். இதுதான் எங்கள் பூத் பிளான், ஓட்டிங்-டெக்னிக்” என்றார், பிரம்மன்.
“அடப்பாவிகளா? இது உலகமகா அயோக்கியத்தனமாக அல்லவா இருக்கு” என்று மனதில் நினத்துக் கொண்ட நான்... அது சரி, “உங்கள் வேட்பாளர்கள் யார் யார்? எப்படி தேர்ந்தெடுப்பீர்கள்” எனக் கேட்டேன்.
தமிழ் நாட்டிலுள்ள மொத்த ஓட்டுரிமை பெற்றவர்களில், மூன்று பெரிய மதங்களைச் சேர்ந்த, வாக்காளர்களின் லிஸ்ட், எங்களிடம் இருக்கிறது. அதிலுள்ள ஓட்டர்ஸ் பர்சென்டேஜ்படி, அஸெம்பிளி தொகுதிகளை, பிரித்து, ஃபிராக்ஷன் இல்லாமல், மூன்று மத சாமிகளும், பிரித்துக் கொள்ளுவோம்” என்றார் பரமசிவனார்.
“இந்த டேட்டா எல்லாம் எப்படி உங்களுக்கு கிடைத்தது” எனக் கேட்டேன்.
“நாங்கள், சித்ரகுப்தன் நடத்தும், ‘சி-பாக்’ என்ற ‘டேட்டா ஸ்டோரேஜ்’ நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறோம்” என்றார் சிவபெருமான்.
“சரி… நீங்கள் ஆட்சிக்கு வந்தால், இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்வீர்கள்” என்றேன்.
“ரிசல்ட் வந்த அடுத்த அரைமணி நேரத்துக்குள், முதலில், எல்லாக் கோயில் உண்டியல்களையும் திறந்து, அதில் உள்ள பணம், நகை, எல்லாவற்றையும் எடுத்து, குபேரன் வைத்துக் கொள்வார்.
அமைச்சரவை பதவி ஏற்ற நூறு மணி நேரத்துக்குள், கோவிலில் ‘வேண்டுதல்-சீட்டு’ எழுதி, கட்டித் தொங்கவிட்டிருந்தாலோ அல்லது உண்டியலில் போட்டிருந்தாலோ, அவை எல்லாவற்றையும் எடுத்து, படித்து, அதிலுள்ள வேண்டுகோளை நிறைவேற்றி வைப்போம்” என்றார் சிவபெருமான்.
“அதெல்லாம், நடக்கிற காரியமில்லை. சரி, தனிப்பட்டவர்களின் வேண்டுதலை, என்னமோ செய்யுங்க. ஆனால், உங்களுக்கு ஓட்டு போட்ட, வாக்காளர்களுக்கு ‘பொதுவிலே’ என்ன செய்வீங்க?’ என்றேன்.
“எல்லோரும், அன்றாடம் உபயோகிக்கும் மளிகைப் பொருட்களை, அவரவர் வீட்டிலிருந்து, எடுக்க எடுக்க குறையாத வகையில், இலவசமாக தருவதற்கு, அமைச்சர் ‘அன்ன-லட்சுமி’ ஏற்பாடு செய்வார்.
தடையில்லா மும்முனை மின்சாரம், சமையல் எரிவாயு இதெல்லாம் இலவசமாய் வழங்க அக்னி பஹவானுக்கு டெண்டர் கொடுக்கப் போகிறோம்.
எல்லோருக்கும் நல்ல-தண்ணீர் எப்போதும் கிடைக்கும்படி, ஏற்பாடுகள் செய்ய, வருண பஹவானுக்கு, நீர்-மேலாண்மை இலாக்காவை ஒதுக்கவுள்ளோம்” என்றார் லக்ஷ்மிபதி.
“தாங்களே, சமைத்து சாப்பிட விரும்பாதவர்கள், என்னென்ன சாப்பிட, நினைக்கிறார்களோ, அப்போதே அவரவருக்கு தேவைப்படும் அயிட்டங்களை, மணம் மற்றும் சுவையோடு, உடனே, அவர்கள் சாப்பிட விரும்புமிடத்திற்கு வந்து சேரும்படி, பீமன், நளன் மற்றும் முனியாண்டி ஆகியோரின் ‘ஃபாஸ்ட்-ஃபுட்’ சென்டர்கள் பார்த்துக் கொள்ளும்” என்று பிரம்மன் சொன்னதும், “அப்படியா…!” என்றேன் ஆச்சரியமாக.
“அதோடு, பொதுமக்கள், தாங்கள் நினைத்த இடத்துக்கு, நினைத்த போது இலவசமாக போய்-வர, வசதிகள் செய்துகொடுக்க, வாயு பஹவானுக்கு, தனி ‘டிராவல் ஏஜன்சி’ பெர்மிட் கொடுக்கவுள்ளோம்” என்றார் கௌரிமணாளன்.
“எல்லோருக்கும் மொபைல் ஃபோன்கள் இலவசமாக கொடுத்துவிட்டு, ‘டாப்-அப்’ பண்ணாமலேயே, அன்-லிமிட்டடாக இன்டெர்-நெட் கனெக்ஷன் கொடுப்போம்’ என்றார் பிரம்மன்.
“வேலையும், சம்பளமும் எப்படி?” என்றேன். ஶ்ரீஹரியோ, “யாரும் எதற்கும் கஷ்டப்பட்டு வேலை செய்யவேண்டாம். பணம் வேண்டுமென நினைத்ததுமே, அது, அவரவரின் பாங்க் அக்கவுன்டில், உடனே கிரிடிட் ஆகியிருக்கும். எல்லாமே, காஷ்-லெஸ், டெபிட் கார்டு டிரான்ஸ்சாக்ஷன்தான். ஆனால், பணம் உங்களுக்கு தேவைப்படுமா, என்பது சந்தேகமே?” என்றார்.
“விவசாயிகளுக்கு என்ன திட்டம்?” என்ற என்னை, உத்துப் பார்த்தார் முக்கண்ணன். “யாருமே வயல்வெளிக்கு வேலைக்கு போகவேண்டாம். மக்கள் விரும்பும் பயிர்களெல்லாம், அவரவரின், வயல்களிலும், தோட்டங்களிலும், விவசாயிகளின் விருப்பப்படியே விளைவித்து, எங்கள் ‘க.மு.க.” கட்சியினரே, அறுவடை செய்து, விளைபொருட்களை கொண்டு போய்விடுவார்கள். ஆனால், விளையும் பொருட்களுக்கு, விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யலாம். அதற்கான பணமும் அவரவர் அக்கவுன்டில், உடனே கிரடிட் ஆகிவிடும் ” என்றார் பிரம்மன்.
“எல்லாம் சரி… உங்கள் ஆட்சியில், இதுவரை யாருமே செய்யாத புதுமையான திட்டம் என்ன இருக்கு?” என்றேன் நான்.
“எங்கள் ‘க.ம.க.’ அமைச்சரவை, பொறுப்பேற்ற மறு விநாடியே, உலகில் வாழும், ஆண்-பெண் அனைவருக்கும், இயற்கையிலேயே, கருத்தடை ஏற்பட்டு, புதிதாக குழந்தைகளை உருவாக்கும் சக்தியை இழந்துவிடுவார்கள்” என்றார் பிரம்மா.
“ஐய்யோ என்ன சொல்லறீங்க. ஏன் அப்படி ஒரு விபரீத முடிவு?” என்றேன் நான். மஹாவிஷ்ணுவே பதில் சொன்னார்.
“மதங்களால், மொழிகளால், ஜாதிகளால், இனங்களால் உங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்திக்கொண்டு, ‘பணமே’ பிரதானம் என முடிவு செய்து, நிம்மதியும், சந்தோஷமும் இல்லாமல், பாவ மூட்டைகளாக, வாழ்கின்றீர்கள்.
“எனவே, நீங்கள் எல்லோரும் அழிந்த பிறகு, புதிய மனித குலத்தை படைக்கப் போகிறோம். அதனால்தான், கடவுள்களாகிய நாங்களே, நேரடியாக அரசியலில் குதிக்கப் போகிறோம். சரிசரி… எங்களுக்கு, நேரமாகிறது, உனக்கு எதாவது சந்தேகம் இருந்தால் கேட்கலாம் என்றார்”, பரமாத்மா.
ஒரு நிமிடம் யோசித்தேன்…! “எங்க வீட்ல நாலு ஓட்டிருக்கு. இந்த எலக்ஷன்ல உங்க ‘க.மு.க’ நிறுத்தும் வேட்பாளருக்கே எங்க வாக்குகளைப் போடறோம். ஆனா… “ஒரு ஓட்டுக்கு எவ்வளவு காசு குடுப்பீங்க?” எனக்கேட்டேன்.
அடுத்த நொடி, தலையில் அடித்துக்கொண்டே, பிரசாரத்திற்கு வந்த மும்மூர்த்திகளும், “அரசியலே வேண்டாம்” ஆளை உடுறாங்கொய்யாலே…! என்று, கதறியபடியே, காணாமல் போனார்கள்.
Leave a comment
Upload