தொடர்கள்
மகளிர் ஸ்பெஷல்
கமகமக்கும் வேளச்சேரி… - மாலாஸ்ரீ

20210202133827444.jpeg

சைகையில் வரவேற்று உணவு உபசரிக்கும் பெண்கள்...

சென்னை - வேளச்சேரி, பீனிக்ஸ் மால் வழியே 100 அடி சாலையில் காலை செல்லும்போது, கமகமவென வாசனை நம்மை அங்கிருந்து நகரவிட மறுத்தது. நாம் சுற்றும் முற்றும் பார்த்தபோது, ஆர்.ஆர். ரெஸ்டாரண்ட் வாசலில் உள்ள டிபன் கடையில் வெண்புகையுடன் கமகம வாசனை வருவது தெரியவந்தது.

நாம் அந்த டிபன் கடைக்குள் நுழைந்தபோது, 2 பெண்கள் சைகையால் நம்மை உள்ளே வரவேற்றனர். நம்முடன் வந்தவர்கள், சைகையால் டிபன் வகைகளை ஆர்டர் செய்ய, அவர்கள் புரிந்துகொண்டு தலையசைத்துவிட்டு செல்கின்றனர்.

நாம் இருக்கையில் அமர்ந்த சிறிது நேரத்தில், ஆர்டர் செய்த இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவை சைடு-டிஷ்களுடன் சுடச்சுட டேபிளுக்கு கொண்டு வருகின்றனர். அவர்களைப் பற்றி நாம் விசாரித்தபோது.. அந்த 2 பெண்களும் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ரத்னம், மற்றும் பிரமிளா என்பது தெரிய வந்தது. இவர்களுக்கு காது கேட்காது, வாயும் பேச வராது. ஆனால், இவர்கள் இருவரும் சமையலில் எக்ஸ்பர்ட் எனத் தெரியவந்தது.

நாம் சைகையில் ‘பூரி’ கேட்க... அவர்கள் சற்று புரியாமல் தடுமாற... பின்னால் நின்றிருந்த மற்றொரு பெண்ணை அழைத்தனர். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு விவரங்களை கேட்க… அவர், “எனது பெயர் சித்ரா. பட்டினப்பாக்கத்தில் உள்ள காது கேளாதோர் அமைப்பின் மக்கள் தொடர்பு அதிகாரி. இங்கு இவர்கள் இருவருக்கும் சைகை மொழி பெயர்ப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன்.

கடந்த ஆண்டு துவக்கத்தில் பிழைப்புக்காக சென்னை வந்த ரத்னமும் பிரமிளாவும் எங்கள் சங்கத்தை தொடர்பு கொண்டு, தங்களுக்கு நன்றாக சமைக்கத் தெரியும் என்றும் எங்களது பிழைப்புக்கு உதவி செய்யும்படி கேட்டனர். அவர்களை மாற்றுத் திறனாளிகளுக்காக வாதாடும் வழக்கறிஞர்கள் பிரபாகரன் மற்றும் கற்பகத்திடம் அழைத்து சென்றோம்.

அவர்களின் ஆலோசனைப்படி, நாங்கள் மூவரும் சேலம் ஆர்.ஆர். பிரியாணி ரெஸ்டாரண்ட் அதிபர் தமிழ்செல்வனை சந்தித்து பேசினோம். அவர் இவர்களிடம், ‘உங்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும்?’ என தமிழ்செல்வன் கேட்க... இருவரும் ‘எங்களுக்கு தள்ளுவண்டி வாங்கிக் கொடுத்தால், நாங்கள் நடமாடும் உணவகம் ஒன்றை அமைத்து பிழைத்து கொள்வோம்’ என 2 பெண்களும் கூறினர்.

அதற்கு தமிழ்செல்வன், ‘தள்ளுவண்டி வேண்டாமே… அதற்கான கஷ்டங்கள் என்னவென்று எனக்குத் தெரியும். எங்கள் வேளச்சேரி ரெஸ்டாரண்ட்டின் ஒரு பகுதியில் டிபன் கடைக்கு இடமும், அதற்கு தேவையான தளவாட பொருட்களையும் உங்களுக்குத் தருகிறோம்.... நீங்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் கட்டணமின்றி டிபன் கடையை நடத்த பயன்படுத்தி கொள்ளுங்கள்!’ என பெருந்தன்மையுடன் கூறினார்.

இதன் பிறகு, அங்கு டிபன் கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று, கடந்த ஜூலை மாதம் ரத்னம், பிரமிளா ஆகிய இருவரும் இங்கு டிபன் கடையைத் துவங்கி நடத்தி வருகின்றனர். காலை 7 மணி முதல் 10 மணிவரை இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி போன்ற டிபன் வகைகளும், மாலை 5 முதல் 9 மணிவரை இட்லி, தோசையுடன் பரோட்டா, பிரைடு ரைஸ் வகைகளையும் தரமான பொருட்களில் தயாரித்து, நியாயமான விலையில் வழங்கி வருகின்றனர்.

தற்போது இநதக் கடையில், மேலும் 7 மாற்றுத் திறனாளி பெண்கள் இவர்களுடன் இஅணைந்து வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ரெஸ்டாரண்ட் உணவு தயாரிப்பு, பராமரிப்பு மற்றும் வாடிக்கையாளர் தொடர்பு குறித்து ஆர்.ஆர்.ரெஸ்டாரண்ட், எஸ்பிஐ சினிமாஸ் மற்றும் தாய் ஓட்டல் செஃப் வினோத் ஆகியோர் முறையான பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.

என்னை பொறுத்தவரை, காது கேளாதோருக்கு மொழிபெயர்ப்பதைவிட அவர்களுடனே இருந்து உதவுறதுதான் சிறப்பு. ஒரு சைகை மொழி பெயர்ப்பாளராக மட்டுமின்றி, இவர்களை போன்ற இன்னும் பலருக்கு என்னால் எந்தளவு உதவிகள் செய்ய முடியும் என்று தான் நான் யோசிப்பேன்.

காது கேளாத குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ளவர்களுக்கான பயிற்சி தொடர்பாகவோ, வேலைவாய்ப்பு தொடர்பாகவோ என்றென்றும் உதவி செய்ய தயார்!” என்று சித்ரா கூறினார். அவரது முயற்சிக்கு வாழ்த்து கூறி விடைபெற்றோம்.