உன் மாயம் முற்றும் மாயமே!
கண்ணபிரான் திருவாய்ப்பாடியில் உள்ள ஆயர்மனைகளிலெல்லாம் புகுந்து தயிர், நெய், பால் வெண்ணெய் இவற்றை யெல்லாம் சிறிதும் மீதம் வைக்காமல் உண்டிடுவதைக் கண்ட ஆய்ச்சிகள் அனைவரும் யசோதையிடம் வந்து முறையிட அவள் கண்ணனைக் கடிந்து பேச மனமில்லாதவளாக இருந்தாள். முடிவில் அவள் ஆய்ச்சிகளை நோக்கி “வீணாக என்மகன் மீது பழி சுமத்தாதீர்கள். அவன் தீம்பு செய்கிறான் என்பது உண்மைதான். ஆனால் நீங்கள் சொல்லுமளவுக்கு அவன் கள்வனாக இருப்பான் என்பதை என்னாலும் நம்ப முடியவில்லை. நீங்கள் சொல்வது உண்மையானால் அவனைக் கையும் களவுமாகப் பிடித்துக் கொண்டு வாருங்கள்” என்றாளாம். பிடித்துக் கொண்டு வந்தார்கள் என்பது ‘திருடி நெய்க்காப்பூண்டு’ (பெரியாழ்வார் திருமொழி 2-1-5) என்றவிடத்து மாமுனிகள் வியாக்யானத்தில்,
“என்பிள்ளையைக் களவேற்றாதே. உண்டாகில் கொண்டியோடே கண்டு பிடித்துக் கட்டிக் கொண்டு வாருங்கோள்” என்று முன்பே சொல்லி வைக்கையாலே தாயாரான தன் முன்னே கட்டோட அவர்கள் கொண்டுவர...
என்று அருளிச்செய்யப்பட்டுள்ளது.
இப்படிக் கண்ணபிரானைக் கையும் களவுமாகப் பிடித்துக் கொண்டு ஆய்ச்சிகள் யசோதையிடம் வந்தபோது நடந்த ஓராச்சரியத்தை ஸ்ரீபாகவதம் (10-7-34) தெரிவிக்கிறது.
கோப்ய: கதாசந ப்ருதக்ப்ருதகுத்ய
க்ருஷ்ணமேத்யைகதைவகதிதும் ப்ரஸ்ருதாஸ்ததாக:ஞு
த்ருஷ்ட்வா ததந்யதே தமேவாநிஜாநத்ருஷ்ட்வா
ஸர்வாச்ச தா: நிவவ்ருதுஸ்வக்ருஹாந் ஸலஜ்ஜா.ஞுஞு
(ஒரு சமயம் கோபிகைகள் கண்ணன் செய்த அபராதங்களை யசோதையிடம் சொல்லும் பொருட்டு அவனைக் கையும் களவுமாகப் பிடித்துக் கொண்டு ஒவ்வொருவரும் தனித்தனியே யசோதையிடம் வர, அவளருகிலும் கண்ணன் இருப்பது கண்டு வெட்கமுற்றுத் தத்தம் இல்லம் திரும்பினர்.)
இப்படிப்பட்ட சேஷ்டிதங்களைப் பற்றி ஆழ்வார்கள் அருளிச் செயலில் ஒன்றும் காணப்படவில்லை. ஆனால் லீலாசுகர் இயற்றிய க்ருஷ்ணகர்ணாம்ருதம் எனும் நூலில் கண்ணபிரானுடைய வெண்ணெய்க் களவு பற்றியும், இத்தகைய ஆச்சர்யமான செயல்கள் பற்றியும் அற்புதமான சுலோகங்கள் பல உள்ளன. அவற்றில் சில காண்போம்.
திருவாய்ப்பாடியில் ஆயர்கள் விடியற்காலையில் வெளிச்சம் வருவதற்கு முன்னே எழுந்திருந்து விளக்குகளை ஏற்றி வைத்து கொண்டு தயிர் கடைவார்கள்.
ததிமதந நிநாதை: த்யக்த நித்ர: ப்ரபாதே
நிப்ருதபதமகாரம் வல்லவீநாம் ப்ரவிஷ்ட:ஞு
முககமலஸமீரைராசு நிர்வாப்யதீபாந்
கபலித நவநீத: பாது கோபால பால:ஞுஞு (3-87)
தயிர்கடையும் ஓசைகேட்டு விடியற்காலையிலேயே உறக்கம் விட்டு எழுந்தவனான கண்ணபிரான் தன் காலடி ஓசை கேட்காத வண்ணம் மெல்ல நடந்து சென்று வீட்டினுள் புகுந்து செந்தாமரை போன்ற திருவாயினால் விளக்குகளை ஊதி அணைத்துவிட்டு, இருட்டிலே வெண்ணெயை வாரி விழுங்கிவிடுவான்.
அதுமட்டுமா! ‘பின்னும் அகம்புக்கு உறியை நோக்கிப் பிறங்கொளி வெண்ணெயும் சோதிக்கின்றான்’. இவனுக்கு எட்டக்கூடாது என்பதற்காக மிகவும் உயரத்தில் உறிகளில் வைத்திருந்தாலும் எப்படியோ ஏறி எடுத்து விடுகிறான்.
பீடே பீடேநிஷண்ண பாலககலே திஷ்டந் ஸகோபாலகோ
யந்த்ராந்தஸ்திததுக்த பாண்டமபாக்ருஷ்யாச்சாத்ய கண்டாரவம்
வந்த்ரோபாந்த க்ருதாஞ்ஜலி: க்ருதசிர: கம்பம் பிபந் ய: பய:
பாயாதாகத கோபிகா நயநயோர் கண்டுஷபூத்காரக்ருத். (2-97)
மணைமேல் மணையாக அடுக்கி வைத்து அதன் மேல் அமர்ந்த ஒரு சிறுவனுடைய தோளின் மேல் நின்று கொண்டு உறியின் மேல் வைத்திருந்த பானையை எடுத்தான். உறியை அசைத்தால் தெரிவதற்காக அதிலே ஒரு மணியைக் கட்டியிருந்தார்கள் ஆயர்கள். மிகவும் சாமர்த்யமாக மணியின் நாக்கை கைகளால் பிடித்துக் கொண்டு மணியை ஒலிக்கமுடியாதபடி செய்துவிட்டுப் பிறகு பாத்திரத்தை எடுத்தான். அப்பாத்திரத்தில் இருந்த பாலை மிகவும் சந்தோஷமாகத் தலையை ஆட்டிக் கொண்டே குடிக்கையில் அங்கே கோபிகை வந்து விட்டாள். உடனே கண்ணபிரான் தன் வாயிலிருந்த பாலை அந்த கோபிகையின் கண்களில் சிதறி விழும்படி உமிழ்ந்துவிட்டு ஓடி விட்டானாம்.
இன்னொரு சமயத்தில் கண்ணன் களவு செய்து தப்பிய விவரத்தை ‘வைகலும் வெண்ணெய் கை கலந்துண்டான்’ (திருவாய்மொழி 1-8-5) என்கிற பாசுரத்தின் இருபத்து நாலாயிரப்படி வ்யாக்யானத்தில் காட்டியருளுகிறார் பெரியவாச்சான் பிள்ளை. (ஈடுமுப்பத்தாறாயிரப்படி வ்யாக்யானத்தில் கூட அருளிச் செய்யப்படாத விஷயமிது.)
கள்ளன் என்று சிலுகிட்டவாறே அவர்கள் தங்களோடே கலந்து அமுது செய்தானென்னுதல்; “ஒரிளிம்பனும் சதிரனும் களவு கண்டார்கள்” என்ற பட்டர் கதையை ஸ்மரிப்பது.
கண்ணன் வெண்ணெய் திருடியதைப் பார்த்துவிட்ட சிறுவர்களைச் சரிக்கட்டுவதற்காக அவர்களுக்கும் தான் திருடிய வெண்ணெயில் பங்கு கொடுத்து, அவர்களோடு கலந்து உண்டானாம் கண்ணன். இதிலேயும் கண்ணன் தன் சாமர்த்தியத்தைக் காட்டி விட்டான். திருடிய வெண்ணெயை எல்லோரும் சேர்ந்து உண்டு கொண்டிருக்கையில் வெண்ணெய்க்கு சொந்தக்காரர்கள் வந்துவிடவே, ஒருவர்க்கும் தெரியாமல் கண்ணன் மட்டும் ஓடி விட்டான். அகப்பட்டுக் கொண்டவர்கள் அவனுடைய தோழர்களே. இதைத்தான் இளிம்பனும் (இளித்தவாயன் - சாமர்த்யமில்லாதவன்) சதிரனும் (சாமர்த்திய முடையவன்) களவு கண்டார்கள் என்று பட்டர் கதையாக அருளிச் செய்வாராம். கண்ணன் தன் தோழனுடைய முகத்தில் வெண்ணெயைப் பூசிவிட்டு ஓடிவிடுவான். இளித்த வாயனான தோழன் அகப்பட்டுக் கொள்வான் என்பது பட்டருடைய விளக்கம் போலும்.
அந்தர்க்ருஹே க்ருஷ்ணமவேக்ஷ்ய சோரம் பத்வா கவாடம் ஜநநீம் கதைகாஞு
உலூகலே தாமநிபத்தமேநம் தத்ராபி த்ருஷ்ட்வா ஸ்திமிதா பபூவஞுஞு (2-51)
தன் வீட்டில் வெண்ணெய் திருடிக் கொண்டிருந்த கண்ணனைக் கண்ட கோபிகை ஒருத்தி, அவனை வீட்டிற்குள்ளேயே வைத்துக் கதவைப் பூட்டிவிட்டு அவன் தாயான யசோதையிடம் இதுபற்றிச் சொல்வதற்காகச் சென்றாள். ஆனால் அங்குக் கண்ணன் உரலோடு கட்டுண்டு கிடப்பதைக் கண்டவுடன் ஆச்சர்யம் அடைந்தாள்.
இதையே இன்னும் சற்று அழகாகப் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் பேசுகிறார்.
உன்னைக் களவிலுரலோடு கட்டிவைத் துன்னுடைய
அன்னைக்கொருத்தி அறிவித்தபோது அலையாழிமங்கை
தன்னைப் புணர்ந்தருள் தாரரங்கா! அவள்தன் மருங்கில்
பின்னைக் கொடு சென்றபிள்ளை மற்றாரென்று பேசுகவே!
(திருவரங்கத்து மாலை)
கண்ணபிரான், தன் வீட்டில் திருடுவது கண்ட ஓர் ஆய்ச்சி அவனைத்தன், வீட்டிலேயே உரலில் கட்டிப் போட்டு விட்டு தன்னுடைய குழந்தையையும் இடுப்பில் சுமந்து கொண்டு வேகமாக வந்து யசோதையிடம் “உன் மகனைக் கையும் களவுமாகப் பிடித்து என் வீட்டில் உரலோடு கட்டிப் போட்டிருக்கிறேன்” என்று சொன்னாளாம். உடனே யசோதை அந்த ஆய்ச்சியின் இடுப்பிலுள்ள குழந்தையைப் பார்த்து சிரித்தாளாம். ஆய்ச்சியும் வியப்புடன் திரும்பிப் பார்க்க, அவள் இடுப்பில் இருந்தது கண்ணபிரானே! அவள் குழந்தையல்ல! உடனே வீட்டிற்கு ஓடிச் சென்று பார்த்தால் உரலில் கட்டுண்டு கிடந்தது அவள் குழந்தையே!
இப்படி மாயங்களெல்லாம் செய்து தப்பித்துக் கொண்டே வந்தாலும், பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவானன்றோ! ஒரு நாள் யசோதையே கண்ணனைக் கையும் களவுமாகப் பிடித்து உரலோடே கட்ட முயன்றாள். கயிற்றினால் கண்ணனைக் கட்ட முயன்றபோது கயிறு நீளம் போதாமல் இரண்டு விரற்கிடை குறைவாக இருந்தது. இப்படி எத்தனை கயிறுகளைச் சேர்த்த போதும் கயிறு போதாமல் குறைவாகவே இருந்தது கண்டு யசோதை திகைத்தாள். நெற்றியில் வியர்வை அரும்பிக் கைதளர்ந்தாள். பார்த்தான் கண்ணன். தன்னைக் கட்ட முடியாது என்று நினைத்து யசோதை திரும்பி விட்டாளாகில், தான் இவ்வுலகில் பிறந்ததன் பயனே வீணாகிவிடும் என்று நினைத்தான். ஒரு சுற்றுக்குக் கூட போதாததாக இருந்த கயிறு பல சுற்றுக்களுக்குப் போரும்படியாகத் தன் திருமேனியை மிகவும் சிறியதாக சுருக்கிக் கொண்டான். உடனே யசோதை கண்ணனை உரலோடு சேர்த்துக் கட்டிவிட்டாள்.
என்ன ஆச்சர்யம்! இத்தனை கயிறுகளைச் சேர்த்தும் கண்ணனைக் கட்டுவதற்குப் போராதிருந்தது ஏன் என்று யோசிக்கவில்லை யசோதை! இப்போது திடீரென்று அதே கயிறு எப்படிப் பல சுற்றுக்களுக்கு போரும்படி இருக்கிறது என்பதையும் யசோதை நினைத்தும்கூடப் பார்க்கவில்லை. தன் ஸங்கல்பத்தாலே திருமேனியைப் பெருக்கவும், சுருக்கவும் வல்ல ஸர்வேச்வரனே தன்மகனாக அவதரித்திருக்கிறான் என்பதை உணராமல் உரலோடு சேர்த்துக் கட்டி விட்டு ‘முடிந்தால் இப்போது செல் பார்க்கலாம்’ என்றும் சொன்னாள் ஆம்! கண்ணபிரான் தன் திருமேனியைப் பெருக்கிக் கொண்டிருந்ததனால் எவ்வளவு கயிறுகளைச் சேர்த்து முடிந்தாலும் நீளம் போராதிருந்தது என்பதையே யசோதை மறக்கும்படி பண்ணி, முடிவில் தன்னை அவள் கட்டும்படி பண்ணிக் கொடுத்தான். இதுவும் அவனுடைய மாயங்களில் ஒன்று. அதனால் தான் மதுரகவி ஆழ்வாரும் கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணின பெருமாயன் என்றார்.
Leave a comment
Upload