தொடர்கள்
கவர் ஸ்டோரி
சூடு பிடிக்கும் தமிழக அரசியல்! மாறும் காட்சிகள்... - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

20201020182059409.jpeg

தமிழக தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில், தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. தொகுதிப் பங்கீடு பற்றி எல்லாம் கூட விவாதம் வரத் துவங்கிவிட்டது.

திமுக தமது உயர்நிலைக் குழு கூட்டத்தை கூட்டுகிறது.

இந்த முறை அகில இந்திய கட்சியான காங்கிரஸ் கட்சியை பின்னுக்குத் தள்ளிவிட்டு, பாரதிய ஜனதா தமிழ்நாட்டில் தனது செல்வாக்கை காட்ட மெனக்கெட்டு முயற்சி செய்கிறது. அதற்காகத்தான் வேல் யாத்திரை நடத்த துவங்கியிருக்கிறது.

இந்த யாதிரையினை நீதிமன்றம் கண்டித்தது, தமிழக அரசு அனுமதி மறுத்தது. தமிழக பாரதிய ஜனதா தலைவர் முருகன், வேல் யாத்திரை தொடங்கும் இடத்திலேயே கைது செய்யப்படுகிறார். இருந்தாலும் யாத்திரை தொடரும் என்று ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சி நிரல் வெளியிடுகிறார்.

ஆக, அதிமுக - பாரதிய ஜனதா இரண்டும் தெரிந்தே இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை ஆடுகிறது.

20201020181558593.jpeg

சமீபத்தில் அகில இந்திய பாரதிய ஜனதா மகளிர் அணி தலைவியாக நியமிக்கப்பட்டுள்ள வானதி சீனிவாசன் ‘வேல் யாத்திரையை முடக்க நினைப்பது எதிர்விளைவுகளை உண்டாக்கும்’ என்றார்.

இதற்கு பதிலடியாக அதிமுக அதன் அதிகாரபூர்வ நாளேடான ‘நமது அம்மா’ இதழில் ஒரு கட்டுரை மூலம் தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது. ‘மதங்களின் பெயரால், வாக்கு வங்கி அரசியலுக்கு வழி தேடுவதை அதிமுக அனுமதிக்காது. இதனை வேல் யாத்திரை செல்பவர்கள் உணர வேண்டும். மனிதத்தை வெளிப்படுத்தவே மதம், வெறிப்படுத்த அல்ல என்பதை திராவிட தொட்டில் ஆன தமிழக மக்கள் நிரூபித்திருக்கிறார்கள். ஒருமைப்பாட்டை உணர்ந்து நடக்க வேண்டும். அது கருப்பர் கூட்டம் ஆனாலும் சரி, காவி கொடி பிடிப்பவர்கள் ஆனாலும் சரி’ என்று இடித்துரைத்தாற் போல குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

20201020181623225.jpeg

அடுத்த அதிரடி, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை கமிஷன் அமைத்தது. துணைவேந்தர் சூரப்பா பாரதிய ஜனதாவின் சிபாரிசால் நியமிக்கப்பட்டார். அந்த நேரத்தில் அதிமுக ஒன்றும் பேசாமல் வாய்மூடி மௌனமாகவே இருந்தது.

பொதுவாக ஆளுங்கட்சியால் சிபாரிசு செய்பவர்கள்தான் முக்கிய பலகலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால் பாரதிய ஜனதா இதில் மூக்கை நுழைத்து, அண்ணா பலகலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் தங்கள் செல்வாக்கை காட்டியது. இதனால் இணை வேந்தரான தமிழக உயர்கல்வி அமைச்சரை புறக்கணித்துவிட்டு, பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரின் தலையாட்டி பொம்மையாகவே மாறினார் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா. இது அதிமுகவை மிகவும் எரிச்சலடைய செய்தது. அதன் விளைவுதான் சூரப்பா மீது இன்று விசாரணை கமிஷன்! இதை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினும் ஆதரிக்கிறார்.

அதிமுகவை பொறுத்தவரை தேர்தல் வேலை ஜரூராக தான் நடந்து வருகிறது. முதல்வர் எடப்பாடி, தினம் ஸ்டாலினை விமர்சிக்கிறார். அறிக்கை நாயகன் என்று ஸ்டாலினை வர்ணித்து கேலி பேசுகிறார். ‘ஸ்டாலின் விவசாயியா, நான் விவசாயியா?’ என எளிய மக்களிடம் நேரடியாக பகிரங்க கருத்து கேட்கிறார்.

இதுவரை சசிகலா பற்றி எந்த கருத்தும் சொல்லாத எடப்பாடி, ‘சசிகலா விடுதலை அதிமுகவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது’ என்று உறுதியான குரலில் தெரிவிக்கிறார். அவரைப் பொருத்தவரை, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை மெல்லக் கரைத்து விட வேண்டும் என்று ஒரு பெரிய திட்டமே போட்டிருக்கிறார். சசிகலா விடுதலை ஆவதற்கு ஒரு வாரம் முன்பு, மாவட்ட அளவில் உள்ள முக்கிய பொறுப்பாளர்களை அதிமுகவில் இணைப்பதற்காக அந்தந்த மாவட்ட அமைச்சர்களை சம்பந்தப்பட்டவர்களுடன் பேசச் சொல்லி இருக்கிறார்.

இதையெல்லாம்விட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு, முதல்வர் எடப்பாடிக்கு நல்ல பெயரை வாங்கித் தந்து விட்டது என்பதும் உண்மை. அதிமுக மண்டல பொறுப்பாளர்கள் கூட்டத்தை கூட்டி தொகுதி பங்கீடு பற்றி (குறிப்பாக கூட்டணிக் கட்சிகள் பற்றிய முடிவு) அமித்ஷா வரும் சமயத்தில் முடிவு செய்ய இருக்கிறார் எடப்பாடி.

சனிக்கிழமை அமித்ஷா வருகிறார். அவர் தமிழகம் வந்ததும் தமிழக காட்சிகள் எல்லாம் மாறும் என்கிறார்கள் பாரதிய ஜனதா தலைவர்கள்.

20201020182339390.jpeg

தமிழகத்தைப் பொருத்தவரை, பாரதிய ஜனதாவில் முருகன், அண்ணாமலை இருவர் மட்டுமே டெல்லியில் செல்வாக்குடன் இருக்கிறார்கள்.

சிபி ராதாகிருஷ்ணன், கேரள பொறுப்பாளர் ஆகிவிட்டார். வானதி சீனிவாசன், அகில இந்திய மகளிர் அணி தலைவர் ஆகிவிட்டார். மற்ற பாரதிய ஜனதா தமிழக தலைவர்கள் சற்று ஒதுங்கி விட்டார்கள் அல்லது ஒதுக்கப்பட்டு விட்டார்கள். இதுதான் இன்றைய தமிழக பாரதிய ஜனதாவின் நிலைமை.

கூட்டணி ஆட்சி, 60 தொகுதிகள் ஓதுக்கீடு என அண்ணாமலையும், முருகனும் அமித்ஷாவை நன்றாகவே உசுப்பேற்றி விட்டிருக்கிறார்கள்.

சென்ற பாராளுமன்றத் தேர்தலின் போது அமித்ஷாவை அதிமுக ரொம்பவும் அலைக்கழித்தது. அதனால் இந்த முறை தான் நினைத்ததை இப்போதே முடிவு செய்ய வேண்டும் என்று முருகன், அமித்ஷாவை வற்புறுத்துகிறார். அது எந்த அளவு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை. இப்போதைக்கு அமித்ஷாவின் சென்னை நிகழ்ச்சி நிரலில் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அவர் தனியார் நட்சத்திர ஓட்டலில் ஓய்வு எடுத்துவிட்டு, மறுநாள் காலை 10 மணிக்கு டெல்லி திரும்புகிறார் என்பது மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த இடைப்பட்ட ஓய்வு நேரத்தில்தான் அதிமுக தலைவர்களுடன் அமித்ஷா பேசவேண்டும். அதிமுகவை பொறுத்தவரை 10 முதல் 15 இடங்கள் வரை என்பதில் உறுதியாக இருக்கிறது. அமித்ஷா அதை ஏற்பாரா அல்லது வேறு ஏதாவது அதிரடி முடிவு செய்வாரா என்பது தெரியவில்லை. அவர கூடுதலாக இன்னொரு நாள் தங்கி பேரம் பேசவும் முனையலாம் என தற்போது செய்திகள் கசிகின்றன.

இதன் நடுவே ரஜினியை, பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரை ரஜினி யாரிடமும் பிடி கொடுத்து பேசாமல் நழுவி வருகிறார். அமித்ஷா நேரடியாக பேசி வற்புறுத்தினால், ஒப்புக்கொள்வார் என்று அமித் ஷாவிடம் சிலர் சொல்லி வருகின்றனர்.

ஆனால் அமித்ஷாவோ, “அவரது ஆதரவு நமக்கு உறுதி என்று தெரிந்தால், நான் அவரை சந்திக்கத் தயார். அப்படி உறுதியாக இல்லாதபோது அவரை எதற்கு நான் சந்திக்க வேண்டும்?” என்று கேட்கிறார்.

இதன் நடுவே மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசனும் ரஜினியை தனக்கு ஆதரவு தெரிவிக்குமாறு வற்புறுத்தி வருகிறார். அவருக்கும் எந்த வாக்குறுதியையும் ரஜனி தரவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமித்ஷா - ரஜினி சந்திப்பு நடக்குமா என்பதே நிச்சயமாகத் தெரியவில்லை.

20201020181716196.jpeg

பீகாருக்கு பிறகு அமித்ஷாவின் பார்வை மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு பக்கம் திரும்பியிருக்கிறது என்கிறார்கள் பாரதிய ஜனதா தரப்பினர். மேற்கு வங்கத்தில், இடதுசாரிகள் - காங்கிரஸ் இரண்டுமே தங்கள் செல்வாக்கை இழந்து விட்டது. அந்த இடத்தை பாரதிய ஜனதா மெல்ல நிரப்பி வருகிறது. அதற்கு ஏற்றபடி அமித்ஷா வியூகம் அமைத்து வருகிறார்.

ஆனால், தமிழ்நாட்டில் அப்படி இல்லை. இரண்டு திராவிடக் கட்சிகளுமே வலுவாக இருக்கிறது. இங்கு அமித்ஷாவின் அரசியல் எப்படி எடுபடும் என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது.

இதன் நடுவே மு.க. அழகிரியை தங்கள் பக்கம் இழுக்க பாரதிய ஜனதா முயற்சிக்கிறது. அழகிரியை தனிக்கட்சி ஆரம்பிக்கச் சொல்வது அல்லது பாரதிய ஜனதாவுடன் இணைத்துக் கொள்வது என இரண்டு யோசனைகள் அவருக்கு சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் திமுகவை விமர்சனம் செய்ய அழகிரியை பயன்படுத்த பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது. ஆனால் அழகிரியின் நம்பகத்தன்மை, அவர் செல்வாக்கு இதைப்பற்றியெல்லாம் பாரதிய ஜனதா யோசிக்கவில்லை.

மு.க.அழகிரி ஆதரவாளர்களாக இருந்த பலர் ஏற்கனவே ஸ்டாலின் ஆதரவாளர்களாக இன்று ஆகிவிட்டனர். மதுரையில் இப்போது அழகிரி இல்லாமலே திமுக வலுவாக இருக்கிறது. எனவே தமிழகத்தில் பாரதிய ஜனதாவின் நரித்தனம் இப்போதைக்கு எடுபடுமா என்பது கேள்விக்குறிதான்.

20201020181807529.jpeg

திமுகவை பொருத்தவரை, உதயநிதி ஸ்டாலின் வருகை அங்கு கட்சிக்குள் ஏகப்பட்ட புகைச்சலை கிளப்பி விட்டிருக்கிறது. இளைஞர் அணி என்பது மாவட்ட திமுக-வின் கிளை அமைப்பாக, அது மாவட்ட திமுகவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக இருந்து வந்தது. ஸ்டாலின் இளைஞரணித் தலைவராக இருந்தபோது கூட இதே நிலைமை தான். இப்போது அது உல்டாவாக, இளைஞரணி கட்டுப்பாட்டில் மாவட்ட திமுக என தலைகீழாகவே மாறிவிட்டது.

அமைப்புச் செயலாளர் கே.என். நேரு தனது பிறந்தநாளுக்கு உதயநிதி ஸ்டாலினுக்கு சால்வை அளித்து மரியாதை செலுத்தும் அளவுக்கு உதயநிதி ஸ்டாலினின் செல்வாக்கு வளர்ந்துவிட்டது. உதயநிதி ஸ்டாலினின் நண்பர் மகேஷ் பொய்யாமொழி அவரை இயக்குகிறார். தைரியமானவர் என்று பெயர் பெற்ற கே.என். நேரு கூட மகேஷ் பொய்யாமொழியிடம் பம்முகிறார்.

மூத்த தலைவரான ஆலடி அருணாவின் மகள் பூங்கோதை ஆலடி அருணா, கண்ணீர் மல்க காலில் விழும் அளவுக்கும் மனமுடைந்து தற்கொலைக்கு முயற்சிக்கும் அளவுக்கு திமுகவில் கோஷ்டிப் பூசல் அதிருப்திகள் வளர்ந்துவிட்டது. இந்த முறை 50 சதவிகித வேட்பாளர்கள் இளைஞர் அணி பொறுப்பாளர்களாகவே இருக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் திமுக தலைவர் ஸ்டாலினை வற்புறுத்துகிறார்.

இதற்கிடையே அழகிரியை சமாளிக்க அவரது புதல்வர் தயாநிதி அழகிரிக்கு, உதயநிதி ஸ்டாலினுக்கு சமமான அந்தஸ்தினை கட்சியில் ஏற்படுத்தித் தருவதான பேச்சு வார்த்தைகளும் அறிவாலயம் தரப்பில் தற்போது வலுவாக நடந்து வருகிறது.முதல் கட்டமாக தயா.அழகிரிக்கு திமுக டிரஸ்ட்டில் பெரிய பதவி ஒன்றினை தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அறிவாலய தகவல்கள் அழுத்தமாக தெரிவிக்கின்றன. இதன் மூலம் அழகிரியை அமைதிப்படுத்துவதே நோக்கம்!

உதயநிதி ஸ்டாலின் தனது 100 நாள் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி விட்டார். கனிமொழி 29ஆம் தேதி, சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்குகிறார். திமுக தலைவர் ஸ்டாலின் ஜனவரி முதல் வாரம் தேர்தல் பிரச்சாரத்தை துவக்குகிறார்.

20201020182540247.jpeg

இதற்கிடையே ‘அமித்ஷா சனிக்கிழமை வந்தால், அதிமுக தலைவர்களுடன் தொகுதிப் பங்கீடு பற்றி பேசினால், என்ன பேசலாம்?’ என்பதை வெள்ளிக்கிழமையன்றே மண்டல பொறுப்பாளர்கள் கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் முடிவு செய்து விட்டதாகத் தெரிகிறது.

தங்கள் கட்சியின் ஒருமுகப்பட்ட முடிவையும் தயக்கமின்றியே அமித் ஷாவிடம் அவர்கள் சொல்லிவிடுவார்கள் என நிச்சயமாகத் தெரிகிறது.

ஆக...இப்போதைக்கு அதிமுகவிற்கு பாரதிய ஜனதா பற்றிய பயம் குறைந்து இருக்கிறது என்பது மட்டும் உண்மை!