தொடர்கள்
Daily Articles
வாசி யோசி - 14 - வேங்கடகிருஷ்ணன்

20201026200333556.jpg

வெற்றிக்கு சில புத்தகங்கள்...

வாருங்கள் வாசிப்போம்; வாசிப்பை நேசிப்போம்...

2020102620044987.jpg


பஞ்சாயத்து... இரண்டு கட்சியும் காரசாரமாக பேசுகிறார்கள். எங்கே அடிதடியில் போய் முடிந்து ரணகளம் ஆகிவிடுமோ என்று எண்ணும்போது, ஒருவர் உள்ளே நுழைந்து நாலு வார்த்தை பேசுகிறார். இரண்டு தரப்பினரும் ஏற்றுக்கொள்கிறார்கள். தலையாட்டி பிரிகிறார்கள், என்டு கார்டு.. சுபம். ஏதோ படத்தில் பார்த்த மாதிரி இருக்கிறதா? உண்மையில் அங்கே நடந்தது என்ன? அதைத்தான் இப்போது விரிவாகப் பார்க்கப் போகிறோம். பேச்சுக்கு அவ்வளவு மரியாதை, விசேஷம் இருக்கிறதா..? என்றால், ஆமாம் பேசித் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை. இரண்டு பேருக்கு இடையேயான சண்டை முதல், இரு நாடுகளுக்கிடையேயான சண்டை வரை அனைத்தையும் பேசித் தீர்க்கலாம். இதை விரிவாக ஒரு புத்தகமாக எழுதினார்கள் ஜெபிரி போர்ட், லாரி போர்ட் தம்பதி. அது தான் “தி ஃபோர் கான்வர்சேஷனஸ்”.

இது சொல்லும் விஷயம், நாம் மற்றவர்களிடம் ஒரு விஷயத்தை சாதிக்க,பேசவேண்டும்போது எல்லா சூழ்நிலைகளிலும் தொடர்ந்து ஒரே மாதிரியாக பேசினால், அது எடுபடாமல் போகலாம். நான்கு விதமான பேச்சுக்கள் இருக்கின்றன.

துவக்க பேச்சு (initiative conversations)

இருவரும் புரிந்து கொள்ளும் பேச்சு (Understanding conversations)

வேலை செய்ய வைக்கும் பேச்சு (Performance conversations)

என்ன செய்தோம்? பேச்சு (Closure conversations)

வள்ளுவர் சொன்னது போல “இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்”

இன்னும் புரியிற மாதிரி சொன்னா, ஒரு வேலையை தொடங்குவதற்கு முன்னால், என்ன? எப்படி? யார்? எங்கே? என்ன பிரச்சனை? யாரை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்? இப்படி எல்லாவற்றையும் யோசித்து கால் வைப்பது புத்திசாலித்தனம்.

துவக்க பேச்சுக்கள் இதைத்தான் செய்யும். சம்பந்தப்பட்ட அனைவரையும் கலந்துகொண்டு எல்லாவற்றையும் பேசிய பிறகு, வேலையை துவக்க உதவும் பேச்சு. இதை செய்யாமல் வேலையை துவங்கினால் பல பிரச்சனைகள் துவங்கிய உடனேயே வரும்.
சரிப்பா... ஆரம்பிச்சாச்சு.. அடுத்தது, அதற்குத்தான் புரிந்துகொள்ளும் பேச்சு. உதாரணமாக வீடு மாற வேண்டும் என்பது பிரச்சனை என்றால் குடும்பத்தலைவர் எல்லோரையும் உக்காரவைத்து ஏன் மாற வேண்டும், உங்கள் கருத்து என்ன என்னவெல்லாம் நமக்குத் தேவை. புதிய வீட்டில் அமைய வேண்டியது என்ன போன்ற விஷயங்களை கேள்வியாக கேட்டு, பதில் பெற்றுக் கொண்டால் மிகவும் சுலபமாக இந்த வேலை முடிந்துவிடும். இவர்களை கேட்காமல் கூட அவர் இந்த முடிவை எடுக்கலாம். ஆனால், பின்னர் புது வீட்டில் ஒவ்வொருவரும் ஒரு பிரச்சனையை கிளப்பும்போது, ஏண்டா... இதை செய்தோம்? என்று அவருக்கு தோன்றிவிடும். இவை எல்லாவற்றையும் தவிர்த்து, அனைவரின் கருத்துக்களையும் கேட்டுக்கொண்டால்... எடுக்கும் முடிவு நிச்சயம் பெரிய அளவில் சொதப்பலாக முடியாது. எல்லோருடைய விருப்பமும் ஓரளவுக்காவது பூர்த்தியாகிவிடும்.

சரி. மூன்றாவது, இங்குதான் வேலை நடைபெறுவதற்கான பேச்சும், அதை எப்படி? எப்போது? எதற்குள் செய்ய வேண்டும்? என்பது பற்றியும் விளக்க முடியும். இந்த வீடு மாறுதல் உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம். எல்லோர் கருத்தையும் கேட்டபிறகு, குடும்பத் தலைவர் அந்தப் பொறுப்பை தன் மகன் மற்றும் மருமகளிடம் ஒப்படைக்கிறார். அப்போது அவர் சொல்வது சரி... நமது குடும்பத்திற்கு 20 ஆயிரம் ரூபாய்க்குள் எளிதாக எல்லா போக்குவரத்து வழியிலும் அடையக் கூடிய ஒரு வீடு தேவை. அட்வான்சாக 5 மாத வாடகை தர முடியும். நமக்கு இன்னும் இரண்டு மாதத்திற்குள் இந்த வீடு வேண்டும் என்று சொல்லிவிட்டால், அவர்கள் தங்கள் வேலைக்கு நடுவே இதையும் திட்டமிட்டு, பல இடங்களில் அலைந்து பேசி முடித்து விடுவார்கள். ஆக வேலை சரியான முறையில் நடந்துவிடும்.

கடைசியாக என்ன செய்தோம் பேச்சு. இது முடிந்த வேலையைப் பற்றி சம்பந்தப்பட்ட அனைவரின் கருத்துக்களையும் மீண்டும் ஒரு முறை கேட்டு, எல்லோருடைய ஒப்புதலையும் பெற்றிட வழி செய்யும். வேலை நன்றாக முடிந்து இருக்கும்பட்சத்தில் அதைக் கொண்டாடவும் செய்து, எல்லோர் மனதிலும் நல்லெண்ணத்தையும் மகிழ்ச்சியையும் விதைக்க முடியும். அதுவே ஏதாவது தவறு நேர்ந்திருந்தால், அதை சரி செய்ய முடியுமா? என்பதை பற்றி யோசித்து விட்டு, அதே சமயம் மீண்டும் அத்தவறு நிகழாதவாறு எச்சரிக்கையுடன் இருப்பதற்கும் இது உதவும்.
உண்மையில் சொன்னால், இந்த நான்கு வகையான பேச்சுக்களையும் நீங்களும், நானும் ஒவ்வொரு நாளும் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால், அது எந்தவித யோசனையும் திட்டமிடலும் இல்லாமல் நடக்கிறது. ஆனால், எல்லா முறைகளிலும் அது பயன் அளிப்பதில்லை. யோசித்துப் பார்க்கையில் சிறிது சிரமம் எடுத்து இந்த நான்கு வகைப் பயிற்சிகளையும், சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்தும்போது அதனுடைய முடிவு நமக்கு வேண்டிய வகையில் அமைகிறது.

நாம் சந்திக்கும் எந்த ஒரு பிரச்சனைக்கும் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இந்த நான்கு வகை பேச்சுக்களை சரியான முறையில் சிறப்பாக பயன்படுத்தி நிச்சயம் நம்மால் பலன் பெற முடியும். அதனை இந்த புத்தகம் பலவகையான உதாரணங்களுடன் விளக்குகிறது. இந்த வகையில் தான் பேச்சு அமையவேண்டும் என்கிற கட்டாயம் ஏதுமில்லை. அப்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் இவை நான்கையும் சரியான விகிதத்தில் கலந்து உபயோகப்படுத்தினால், உங்களது பேச்சு திறமை மற்றும் செயல் முடிக்கும் திறமை இரண்டும் அதிக அளவில் உயர்ந்து, சமூகத்திலும் குறிப்பாக உங்கள் குடும்பம் மற்றும் அலுவலக நண்பர்கள் மத்தியில் உங்களுக்கு மிக நல்ல பேரும் புகழும் கிடைக்கும்.

அப்படி கிடைத்து நீங்கள் நாலு பேருக்கு நன்றி சொல்லும்போது மறக்காமல் விகடகவியையும் என்னையும் சேர்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். (வேலை முடிக்கும் பேச்சு😉😄)