தொடர்கள்
Daily Articles
மாண்புமிகு மனிதர்கள்...!. - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

20201024184337571.jpeg

ஜால்ரா சத்தம் கேட்கட்டும்...

“அவன் சரியான காக்காப்பா”..... “அவன் ஜால்ரா அடிச்சு பிழைச்சுப்பான்” இப்படி சிலர் பற்றி கருத்து சொல்வார்கள். ஆனால் அப்படி செய்வதில் என்ன தப்பு, அதனால் என்னவாகும், இதனால் யாருக்கு என்ன நஷ்டம், இப்படி யாரும் யோசிப்பது இல்லை.

குழந்தைகளுக்கு சாதம் ஊட்டும் தாய்மார்கள் குழந்தையை புகழ்ந்து பேசி, நைச்சியம் பண்ணி சாதம் போடுவார்கள். நான் இதை எங்கள் தெருவிலேயே பார்த்திருக்கிறேன். குழந்தைக்கு சாதம் ஊட்டுவது என்பது ஒரு கலை, அதற்கு மிகவும் பொறுமை வேண்டும். முதல் வாய் நல்லபடியாக மென்று அந்தக் குழந்தை முழுங்கி விட்டால், அடுத்து அடுத்து எல்லாம் ஈசிதான். அந்த முதல் கவளம் உள்ளே போகத்தான் படாதபாடு படவேண்டும்... “செல்லம், சமத்து, எப்பவும் என் குழந்தை மடமடன்னு சாப்பிடும்” என்று தாய் எதிரேயிருந்த நாயிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். “உன்ன மாதிரி என் செல்லம் அம்மாவை படுத்தாது” என்று அந்த நாயுடன் பேச்சுக் கொடுத்துக்கொண்டே அந்த குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுவாள். இந்த அப்பாவி நாய் குழந்தைக்குப் போக மீதம் ஆகும் சாதத்தை போடுவாள் என்று வாலை ஆட்டிக்கொண்டு காத்துக் கொண்டிருக்கும். “பாப்பா சமத்து தானே... அந்த ஜூஜூகிட்ட சொல்லு, நான் பிடிவாதம் பிடிக்காமல் சமத்தா சாப்பிடுவேன். உன்னை மாதிரி அசடு கிடையாது..” பேச்சு வராத அந்தக் குழந்தைக்கு, தாய் பேசியபடியே ஊட்டி விடுவாள். அந்தக் குழந்தையும் ஏதோ புரிந்தது போல போ என்று கையை ஆட்டி சொல்லும். அந்த சந்தர்ப்பத்தில் ஒரு கவளத்தை, தாய் வாய்க்குள் தள்ளி விடுவாள். இதன் நடுவே சில கவளம் துப்பி விடும். அதை ஆவலாக அந்த நாய் சாப்பிட்டு விடும். அந்த குழந்தை மீண்டும் எப்போது துப்பும் என்று இந்த நாய் பார்த்துக் கொண்டிருக்கும். அப்போதும் அந்த அம்மா “நீ சாதம் போட்டதற்கு தேங்க்ஸ் சொல்லி அந்த ஜூ ஜு எப்படி வாலை ஆட்டுது பார்த்தாயா என்று பேச்சை மாற்றி சாதம் ஊட்டுவார். இது எப்படியும் ஒரு மணி நேரம் இந்த பாசப் போராட்டம் நடக்கும். ஒருவழியாக முடிந்ததும், அந்தக் கிண்ணத்தை குழந்தை முன் மூன்று முறை சுற்றி திருஷ்டி கழித்து, மிச்ச மிதி சாதத்தை அந்த நாய்க்கு போட்டுவிடுவார்.” அப்பாடா “ஏதோ பெரிய சாதனை செய்தது போல், குழந்தையை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு உள்ளே போவார். இந்தக் கால குழந்தைக்கு ஜால்ரா கொஞ்சம் சற்று ஓவராக அடிக்க வேண்டும். ஹோம்வொர்க் எழுத, குளிக்க, தூங்க இவையெல்லாவற்றிற்கும் சமத்து, செல்லம் என்று கொஞ்சிதான் சாதிக்க வேண்டும். அந்தக் குழந்தை சொல்வதற்கெல்லாம் தலையாட்டி, அதன் வழியில் போய்தான் நாம் காரியத்தை சாதிக்க வேண்டும். பிடிவாதமாக முடியாது என்றால் நம்மால் எதுவுமே செய்ய முடியாது. ஒரே ஒரு குழந்தையை பெற்று வளர்க்கும் ஒரு தாயின் கருத்து இது. இது என் வீட்டுக்கும் பொருந்தும். என் மகள் கல்லூரியில் படிக்கும்போது கூட என் மனைவி அவளுக்கு ஊட்டி விடுவாள்.

நான் முதன் முதலில் அலுவலகத்தில் சேர்ந்த அன்று எனது சீனியர் ராமாமிர்தம் எனக்கு சொன்ன யோசனையை, நான் அப்படியே கெட்டியாக பிடித்துக் கொண்டேன். ஏ.ஒ. என்று அழைக்கப்படும் அட்மினிஸ்ட்ரேஷன் ஆபீசருக்கு வேலையே தெரியாது. ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ரொம்பவும் தெரிந்தவர் போல் பந்தா செய்வார். அவர் எது சொன்னாலும், “சரி சார். நீங்க சொல்றத அப்படியே செய்யறேன், நீங்க சொன்னா சரியா இருக்கும்.” இதை மட்டும் சொல்லிட்டா உன்ன கண்டுக்கவே மாட்டார் என்றார். அதை நான் ஓய்வு பெறும் வரை கெட்டியாக பிடித்துக் கொண்டேன். அவர் வெள்ளை காக்காய் பறக்கிறது என்றால்... ஆமாம் சார் என்பேன். ஒரு முறை அவர் ஒரு கோப்பில் 'yours faithfully' என்பதற்கு கீழே கையெழுத்து போடுவதற்கு பதில் மேலே கையெழுத்து போட்டு விட்டார். அந்த முட்டாள்தனத்தை நான் சுட்டிக்காட்டாமல், “சார் ஆபீஸ் டென்ஷனில் எல்லா வேலையும் ஆபீஸ்ல உங்களையே வாங்குவதால் டென்ஷனில் yours faithfullyக்கு கீழே கையெழுத்துப் போடுவதற்கு பதில் மேலே கையெழுத்துப் போட்டு விட்டீர்கள் என்றேன். “அடடா ஆமாம்” என்று வேறு ஒரு காப்பி டைப் செய்து கீழே கையெழுத்து வாங்கினேன். இதை நான் ராமாமிருதம் சாரிடம் போய் சொன்ன போது... இது அடிக்கடி நடப்பதுதான் என்று சொல்லி சிரித்தார்.

ஒரு முறை recevied the cheque என்பதற்கு பதில் recevied the check என்று எழுதி கையெழுத்துப் போட்டார். நான் அதை வேறு விதமாக சமாளித்தேன். சார் செக் என்பதற்கு ஸ்பெல்லிங் இதுநாள் வரை நான் cheque என்று தான் நினைத்திருந்தேன், நல்ல வேளைஎன்னை கரெக்ட் செய்தீர்கள் என்றேன். உடனே உஷாரான அவர், திருத்தி சரி செய்தார். கூடவே “யார்கிட்டயும் சொல்லிடாத” என்றார். நான் உடனே “நீங்க என் குருநாதர். உங்ககிட்டதான் நான் எல்லாத்தையும் கத்துகிறேன், அப்படியிருக்கும்போது இதையெல்லாம் நான் வெளியில் சொல்வேனா” என்றேன். அவரும் பெருமையாக “அதானே” என்று அனுப்பி வைத்தார். ஆனால், மதியம் சாப்பிடும்போது டைம்பாஸ் எங்க பாஸ் தான். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு முறையும் என்ன நடந்தது என்று சொல்லி சிரிப்போம். நான் செக்கு ஸ்பெல்லிங் மேட்டரை சொல்ல சிலருக்கு சிரித்து புரை ஏறி விட்டது.

ஒரு முறை அண்ணாதுரை என்ற கடைநிலை ஊழியரின் மனைவி, என்னிடம் வந்து தனது கணவர் சம்பளத்தை வீட்டுக்கு தராமல், குடித்துவிட்டு செலவு செய்கிறார். நான் மூன்று குழந்தைகளை வைத்துக்கொண்டு பட்டினியாக இருக்கிறோம் என்று சொல்ல.... நான் அவரிடம் நூறு ரூபாய் தந்து வைத்துக்கொள்ளுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அவரை அனுப்பி வைத்தேன்.. இரு தினம் கழித்து கடைநிலை ஊழியர் அண்ணாதுரை பிஎஃப் லோன் போட்டிருப்பது தெரிந்தது. காசாளரிடம் சென்று அந்தப் பணத்தை அப்படியே வைத்திருங்கள்... அண்ணாதுரையிடம் தரவேண்டாம். கேட்டால் இன்னும் வரவில்லை என்று சொல்லி அனுப்புங்கள் என்றேன். அவரும் அப்படியே சொன்னார். நான், இன்னொரு கடைநிலை ஊழியரை அழைத்து, அண்ணாதுரை மனைவியை அழைத்து வரச் சொன்னேன். அவர் மனைவியை கையெழுத்து போட சொல்லி, அந்த பணத்தை அவரிடம் கொடுத்தேன். அந்தப் பெண்மணி கையெடுத்து கும்பிட்டு “உங்களுக்கு புண்ணியமா போகும். என் குழந்தைகள் பட்டினி இல்லாமல் சாப்பிட்டு, பள்ளிக்கூடம் போவார்கள்” என்று சந்தோஷமாக புறப்பட்டாள். காசாளர், சார் “அண்ணாதுரை குடிச்சிட்டு வந்து எங்கிட்ட சண்டை பிடிப்பான்” என்று பயந்து கேட்டபோது... “என்னிடம்தான் பணம் இருக்கிறது என்று சொல்லி, அவரை என்னிடம் அனுப்புங்கள்..” நான் பார்த்துக் கொள்கிறேன் என்றேன்.

ஆனால், விஷயமே வேறு மாதிரி ஆகிவிட்டது. இந்த கடைநிலை ஊழியர், எங்கள் எல்லோருக்கும் மேலான உயரதிகாரியிடம் போய், அவர் பணத்தை நான் கையெழுத்து போட்டு எடுத்துக் கொண்டுவிட்டேன் என்று புகார் சொன்னார்.. நான் அதற்காக அழைக்கப்பட்டேன். உயர் அதிகாரி என்னை பார்த்ததும்... “என்ன சார் இப்படி பண்ணிட்டீங்களே” என்று உரக்கப் பேச ஆரம்பித்தார். என் நிர்வாக அதிகாரி, எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். நான் “சார் இவர் என்ன சொன்னார் என்பதை நான் மறுபடியும் இவர் மூலம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” என்று அந்த கடைநிலை ஊழியரை பார்த்து கேட்டேன்.

“என் பிஎஃப் பணத்தை நீங்க எடுத்துக்கிட்டீங்க, அந்தப் பணம் எனக்கு வேண்டும்” என்றார். உயர் அதிகாரி, “என்ன சொல்ல போறீங்க... பணத்தை நான் வாங்கல அப்படின்னா” என்று கேட்டார். நான் உடனே, “பணத்தை நான் வாங்கினேன், அது உண்மை. அந்தப் பணம் இப்போது என்னிடம் இல்லை. அது அவர் மனைவியிடம் தரப்பட்டுவிட்டது” என்று சொல்லி... அவர் மனைவி வந்தது உள்பட எல்லாவற்றையும் சொன்னேன். அவர் மனைவிதான் கையெழுத்துப் போட்டு, பிறகு பணத்தை நான் வாங்கி அவர் மனைவியிடம் தந்தேன் என்றேன். உடனே மேலதிகாரி அவரைப் பார்த்தார்.

“என் பணத்தை என்கிட்ட தராம என் பொண்டாட்டிகிட்ட தர என்ன ரூல்ஸ் இருக்கு..? அதெல்லாம் முடியாது, எனக்கு என் பணம் வேண்டும்” என்றார் அந்தக் கடை நிலை ஊழியர். மறுபடியும் அந்த உயர் அதிகாரி என்னை பார்க்க... “ரூல்ஸ் இருக்கு சார், மனிதாபிமான ரூல்ஸ். அது ஆபீஸ் ரூல்ஸ் புஸ்தகத்துல தேடினா கிடைக்காது. ஒருத்தர் சம்பாதிக்கிறது, குடும்பத்த காப்பாத்த, குழந்தைகளே பசி இல்லாமல் வளர்க்க... அதை இவர் செய்யவில்லை. அதனால், அதை செய்வதற்காக... அதாவது இவர் செய்ய வேண்டிய கடமைக்காக, அந்தப் பணத்தை நான் வாங்கிக் கொடுத்தேன், இதில் எந்த விதி மீறலும் இல்லை என்றேன். இது எல்லாம் என் குருநாதர் கத்துக்கொடுத்தார் சார் என்று நிர்வாக அதிகாரியை காட்ட... உடனே உயர் அதிகாரி, அந்த நிர்வாக அதிகாரியை “சபாஷ் கரெக்டா தான் செஞ்சி இருக்கீங்க” என்று பாராட்ட... அந்த கடைநிலை ஊழியரை பார்த்து, “நீ பொய் சொன்னதற்காக, உன்னை நான் சஸ்பெண்ட் செய்யப் போறேன்” என்று சொல்ல... நான் உடனே அந்த உயரதிகாரியிடம், “வேண்டாம் சார். இதை விட ஒரு பெரிய தண்டனையை நீங்க மனசு வெச்சா தரலாம்” என்றதும்... “சொல்லுங்க.. அதையே செய்யலாம்” என்று சொல்ல... “ஒரு ஆறு மாதம், இவருக்கு நம் ஆபீஸ் தரவேண்டிய எல்லா பணத்தையும், இவர் மனைவிய அழைச்சு அவங்ககிட்ட தந்ததுடலாம் சார். அதற்குப் பிறகு அவர் தானாக திருந்துவார்” என்றேன். “சபாஷ்” என்று எனக்கு கைகொடுக்க அந்த அதிகாரி எழுந்துக்கொள்ள... “எல்லா புகழும் எங்கள் அட்மினிஸ்ட்ரேஷன் ஆபீஸருக்கே சேரும்” என்று அவரைக் காட்ட... எங்கள் நிர்வாக அதிகாரி, குஷி ஆகிப் போனார். கூடவே அந்த கடைநிலை ஊழியரை பார்த்து, “இனிமே நீதான் எனக்கு பியூன், எங்க போற, என்ன பண்றேன்னு நான் பார்க்கிறேன்” தைரியமாக பேச... உயர் அதிகாரி, அவரைப்பார்த்து கை தட்ட ஆரம்பித்து விட்டார், எங்கள் பாஸ் குஷியாகிவிட்டார். அப்போது விஷயம் கேள்விப்பட்ட ஒரு கடைநிலை ஊழியர், அவர் மனைவியை போய் அழைத்து வர... மனைவியும் உள்ளே வந்து, “பணத்த அவர் எடுத்துக் கொண்டு போகவில்லை, என்னிடம்தான் தந்தார். இன்னிக்கு என் பசங்க, நான் பட்டினி இல்லாமல் இருக்கிறதுக்கு இவர்தான் காரணம். இவர் அடகு வைத்த, காது தோடு, மூக்குத்தி கூட இப்ப திர்ய்ப்பிட்டேன்” என்று அதையும் காண்பித்து, என்னை பார்த்து கையெடுத்து கும்பிட... “இதற்கெல்லாம் நான் காரணமல்ல... இவர்கள் சொன்னார்கள், நான் செய்தேன்” என்று இரண்டு அதிகாரிகளையும் காண்பிக்க... அவர்களை பார்த்து, பெரிய கும்பிடு போட்டு “நீங்க நல்லா இருப்பீங்க” என்று அவர்கள் காலில் விழப் போக, இருவரும் எழுந்து அதை தடுத்து, என்னை பெருமையாக பார்த்தார்கள். இருவரும் குஷி ஆகி விட்டனர்.

இரு தினங்களுக்குப் பிறகு அந்த கடைநிலை ஊழியர் என்னிடம் வந்து, சாரி சார், மன்னிச்சுக்கோங்க. “இப்ப என் குழந்தைங்க வயிறார சாப்பிடறத பார்த்தா எனக்கே சந்தோஷமா இருக்கு” என்றார். “நீ பாராட்ட வேண்டியது நம்ப அட்மினிஸ்ட்ரேஷன் ஆபீஸரை தான்” என்று சொல்ல...

“எனக்கு எல்லாம் தெரியும் சார். நீங்கதான் துணிச்சலா பண்ணி இருக்கீங்க, உங்களுக்குத்தான் இந்த விவரமெல்லாம் தெரியும். அவருக்கு ஒன்னும் தெரியாது, அது எனக்கு தெரியும். ஆனால், எல்லா பெருமையும் அவங்ககிட்ட நீ வாரி வழங்கிய வள்ளல் சார்” என்றார். அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ‘ஜால்ரா’ அடிப்பதால் நல்லது நடக்கும் என்றால் அதை அடிப்பதில் தப்பேயில்லை.