தொடர்கள்
Daily Articles
சேனல் டாக்

20201024064535767.jpg

சன் நிறுவனத்தை விட்டு விலகியதும் விகடன் டெலிவிஸ்டாஸ் தனது அடுத்த பாய்ச்சலுக்கு முதல் அடி எடுத்து வைத்திருக்கிறது. தனது லட்சக்கணக்கான யூடியூப் வாடிக்கையாளர்களை மனதில் வைத்து முதல் கட்டமாக ‘வல்லமை தாராயோ’ எனும் பெயரில் ஒரு குறுகிய கால சீரியலை தொடங்கியிருக்கிறது. கதை அவர்களது வெற்றிகரமான கோலங்கள் தொடரை இயக்கிய இயக்குநர் திருச்செல்வம் கைவண்ணம். ஒரு சராசரி டவுன் பெண்ணின் ஏக்கங்களும், அவள் தன் கனவைத் துரத்த மேற்கொள்ளும் முயற்சிகளுமே கதையின் விதை. இப்போது வரையிலும் 20 எபிசோடுகளை தாண்டிப் போயிருக்கிறது. 80 எபிசோடுகளில் கதை முடியும் என விகடன் பத்திரிகைச் செய்தி சொல்கிறது.

இது தவிர ஹாட்ஸ்டார் எனும் டிஸ்னி நிறுவன OTT தளத்திற்கு நடிகை தமண்ணாவை வைத்து ஒரு வெப் சீரீஸ் செய்திருக்கிறது வி.டெலிவிஸ்டாஸ். இது விரைவில் வெளிவரவிருக்கிறது. இதே சமயத்தில் தாங்களே தனியானதொரு OTT தளம் தொடங்கவும் விகடன் முயற்சி செய்து வருகிறது. இதற்கான முதலீட்டிற்கு நிறைய பேர் உதவ வெளியில் தயாராகவே இருந்தாலும் இது தனது முழு முதலீட்டாக இருக்கவே விகடன் எண்ணுகிறது. அதிகபட்சம் இது ஒரு வென்ச்சர் கேபிடலிஸ்ட் முதலீடாக இருக்கலாம்.

இதுவும் தவிர, சன் டிவியை விட்டு விலகிய வி.டெவை விஜய் மற்றும் ஜீ தமிழ் நிறுவனங்கள் தங்கள் சேனலுக்கு வந்து தொடர்கள் செய்யும்படி கேட்டு வருகிறது. அநேகமாக ஜீ தமிழ் சேனலுக்கு லக் அடித்தாலும் அடிக்கலாம் என தெரிகிறது. இந்த சேனலின் அப்பாடக்கர் தொடரான செம்பருத்தி சமீப காலமாக சற்று டல் அடித்து வருவதால் அந்த 9 மணி ஸ்லாட்டிற்கு விகடனின் புதுத் தொடர் வரலாம் என சொல்லப்படுகிறது.

20201024064656700.jpg

விகடன் விலகிய அதே காலகட்டத்தில் சன் டிவியின் ஆஸ்தான நிறுவனமான ‘ராடான்’ நிறுவனமும் அந்த சேனலிலிருந்து விலகி விடும் என கிசுகிசுக்கப்பட்டது. காரணம், விஜய் சேதுபதியின் திரைப்படம். இலங்கை கிரிக்கெட்டரான முத்தைய்யா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றினை ஒட்டி எடுக்கப்படும் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, முத்தைய்யா முரளிதரனாக நடிக்கவிருந்தார். ஆனால் அவர் இலங்கை போர் சமயத்தில் இலங்கை தமிழர்களுக்கு எதிராக இருந்ததாகச் சொல்லி விடுதலைபுலி ஆதராவாளர்கள் விஜய் சேதுபதி அந்த படத்தில் முத்தைய்யா முரளிதரனாக நடிக்கவே கூடாது என நிர்பந்தம் செய்தனர். அப்போது நடிகையும் ராடான் அதிபருமான ராதிகா சரத்குமார் ஒரு நியாயமான டீவீட் போட்டிருந்தார்.

‘ஒரு நடிகரை அந்த கதாபாத்திரத்தில் நடிக்கக் கூடாது என நிர்பந்தம் செய்யும் எவரும் அதே முத்தைய்யா முரளிதரனை தங்களது ஐ.பி.எல் டீமுக்கு (சன் டிவியின் சன் ரைஸர்ஸ் டீம்) பயிற்சியாளராகவே வைத்திருக்கும் நிறுவனத்தை எந்தக் கேள்வியும் கேட்கவில்லையே..அவர்களது அரசியல் பின்புலம் பற்றிய பயத்தினாலா?’ என பொருள் படும் வகையில் அந்த ட்வீட் சுரீர் என கேள்வி கேட்டது. இது போன்றதொரு துணிச்சலை கமல், ரஜினியிடம் கூட பார்க்க முடியாது. கலாநிதியின் உற்ற தோழியாக இருக்கும் ராதிகா சரத்குமார்தான் தைரியமாக இந்த கேள்வியியினை பொது அரங்கில் முன் வைத்தார். உடனேயே அவரை சன் டிவியிலிருந்து தூக்க வேண்டுமென சன் நிறுவனத்தில் உட்கட்சி கூக்குரல்கள் எழுந்தன. அவரது ‘சித்தி 2’ தொடர் நிறுத்தப்படும் சூழ்நிலை கூட எழுந்தது. ஆனால் இம்முறையும் தனது நீண்டகால நட்புக்கு ஆதரவாகவே கரம் கொடுத்தார், கலாநிதி மாறன். விகடன் விலகியிருக்கும் இந்த நேரத்தில் ராடான் தன்னால் விலக்கப்பட்டால் அது சேனல் மார்க்கெட்டில் வேறு விதமான எதிர் விளைவுகளை உருவாக்கலாம் என சன் டிவி அதிபர் நினைத்தாரோ என்னவோ?! அது மட்டுமின்றி துணிச்சலான கருத்து ஒன்றிற்காக தான் நடவடிக்கை எடுத்தால் அது தனக்கே எதிர் வினையாகலாம் எனவும் அவர் நினைத்திருக்கலாம். என்ன காரணமோ, ராடான் தனது ‘சித்தி2’ தொடரை கண்டின்யூ செய்து விட்டது. இதற்கு முக்கிய இன்னொரு காரணம், அதே வாரத்தில்தான் மிக அதிக டிஆர்பியினை ‘சித்தி2 ஸ்பெஷல் எபிசோடுகள்’ வென்றிருந்தது. எப்படியோ ராடான் - சன் டிவி உறவு மீண்டும் இறுகி விட்டது!

டிவி வட்டாரத்தில் உலா வரும் ஒரு வம்புச் செய்தி இது !

20201024064808621.jpg

ஜீ தமிழ் சேனலின் பரபரப்பு கதாநாயகர் அவர். மகா அலட்டல் பேர்வழியான இவர் தான் நினைத்தபடியும், தன் சொல்படியும்தான் சீரியல் வசனங்கள் இருக்க வேண்டுமென நிர்பந்தம் செய்கிறாராம். தனக்கு துணையாக நடிக்கும் நாயகி என்ன பேச வேண்டுமென இவரே தீர்மானிக்கிறார். சமீபகாலமாக இவருக்கு தாயாக நடிக்கும் பிரபல சினிமா நடிகையின் வசனங்களிலும் கழித்தல் செய்யத் தொடங்கியுள்ளாராம்! இவரது பெயரைக் கூட படப்பிடிப்பு தளத்தில் யாரும் உச்சரிக்கக் கூடாது என கண்டிஷன் வேறு உள்ளதாம்.

இவர் நடித்திருக்கும் ஒரு வெப் சீரீஸ் ஜீ 5 ஓ.டி.டி தளத்தில் விரைவில் வெளியாகிறது. இதன் ப்ரோமோவை வெளியிட்ட இயக்குநர் அமீர் இதனை வெளியிட்ட மேடையிலேயே மிக நன்றாக கழுவி ஊத்தி விட்டார். இருப்பினும் இந்த வெப் சீரீஸ் தனக்கு மாபெரும் வரவேற்பை பெற்றுத்தரும்...தான் வெள்ளித்திரையில் நாயகர் ஆகும் அளவிற்கு பெயர் பெற்றுத்தரும் என அந்த சின்னத்திரை நடிகர் பாவம் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறார்! ஹூம்..சீரியலுக்கும் வெப் சீரீஸுக்கும் வித்தியாசம் தெரியாத ஆசாமி! வேறென்ன சொல்ல?!

(தொடரும்)