அமெரிக்கா
கடவுள் ஒரு கதவைத் மூடினால் இன்னொரு கதவைத் திறப்பான் என்று சொல்வார்கள்.
கரோனா காலத்தில் கொத்து கொத்தாக வேலையிழப்பு ஏற்பட, சத்தமில்லாமல் இன்னொரு துறையில் வேலை வாய்ப்பு ஏகத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் / ஸ்பெயினில் / டென்மார்க்கில் சமீபத்தில் மிகப் பெரிய ‘கிராக்கி’ பயனீட்டாளர்கள் அனுபவம் இருக்கும் ஆட்களுக்கு. புரியவில்லை இல்லையா??
அதாவது கரோனா காலத்தில் யாரும் கடைக்கு போய் எதுவும் பொருட்கள் வாங்க தயங்குவதால், வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் கடைக்குள் போவது போல், துணிகளை செலக்ட் செய்வது போல் இப்படி ஒரு அனுபவம் ஏற்படுத்தி துணி மணிகளை வாங்க வைக்க மென்பொருள் தயாரிக்க தெரிந்தவர்களுக்கு செம டிமாண்டாம்.
அதிலும் இப்படியாக ஷாப்பிங் செய்பவர்களின் தரவுகளை தேர்ந்தெடுத்து அலசி என்ன வாங்குகிறார்கள் எப்படி வாங்குகிறார்கள் என்று விலாவாரியாக அலசி ஆராய்ந்து சொல்லத் தெரிந்தவர்களுக்கு இன்னமும் வரும்படி அதிகம் என்கிறார்கள்.
ரால்ஃப் லாரன் என்ற பெரும் ஆயத்த ஆடை பிராண்ட். தங்களுடைய கடைகளில் 15 சதவிகிதம் குறைத்து விட்டு இனி எல்லாம் ஆன்லைன் தானாம்.
நல்ல வித்தை தெரிந்த மென்பொருள் ஆசாமிக்கு ஒரு நாளைக்கு 800 அமெரிக்க டாலர் வரை சம்பளம் கொடுக்கப்படுகிறதாம்.
சொக்கா.. எவ்வளவு…
ஹூம் கம்ப்யூட்டர் ஒழுங்கா படிச்சிருக்கலாம். !
சொல்ல மறந்து விட்டேனே. கடவுள் திறக்கும் இன்னொரு கதவு யாருக்கு என்பது தான் சஸ்பென்ஸ்.
உத்தா பாலைவனம்.
மோனோலித் என்று சமாச்சாரம் படித்திருக்கிறீர்களா ???
அமெரிக்காவின் உத்தா பாலைவனத்திற்கு வேறு ஏதோ தேடுவதற்காக சென்ற ஒரு ஹெலிகாப்டர் குழு அத்துவான பாலைவனத்தில் கண்டு பிடித்தது ஒரு மோனோலித். அதாவது செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட ஒரு ஒற்றைக் கல்.
இதில் என்ன செய்தி என்றால் பளபளவென்று இருக்கும் இத்தாம் பெரிய உலோகத்திலான கல்லை யார் அங்கு கொண்டு வைத்திருக்க முடியும் ??
வேறு கிரக மனிதர்களாக இருக்க வேண்டும். அல்லது பண்டைய காலத்தில் யாரேனும் நிறுவியிருக்க வேண்டும்.
அந்த ஒற்றை உலோகக் கல்லை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியாகி விட்டனர் அந்த குழுவினர்.
எங்கு இருக்கிறது என்ற தகவலை இன்னமும் வெளியிடவில்லை. விட்டால் இது தான் சாக்கு என்று அதைத் தேடி வரும் கூட்டம் அதிகமாகிவிடும் என்பதால் அடக்கி வாசிக்கிறார்களாம்
சயன்ஸ் ஃபிக்ஷன் சினிமாக்களில் அல்லது வரலாற்று திரைப்படங்களில் வருவது போலத் தான் இருக்கிறது என்று இந்த செய்தியைப் பற்றி வலைஞர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே அமெரிக்க நில மேலாண்மைத் துறை டிவீட்டியிருக்கிறார்கள் இப்படி.
அரசு பொது இடங்களில் இப்படி அனுமதியில்லாமல் ஆக்கிரமிப்பது, அல்லது உபயோகிப்பது நிச்சயம் தடை செய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் வேற்றுக்கிரக வாசியாக இருந்தாலும் சரி, இதற்கு அனுமதியில்லை.
ஐரோப்பா
லண்டன்
அப்பாடா இந்த ஜூம் காலுக்கு ஒரு விடி மோட்சம் வந்து விட்டது போல.
அலுவலகம் இல்லாத இந்த கரோனா காலத்தில் ஜூம் ஒரு வரம் என்பது இப்போது ஒரு சாபம் என்ற அளவில் பலருக்கு மாறி விட்டது. இதற்கு காரணம் போரடித்தது தான்.
ஒரே சூழலில் ஒவ்வொருவர் ஒவ்வொரு இடத்தில் இருக்க அதே நேரம் அதே மேசை, அதே மனைவி.. சட்…
அலுவலக சூழலில் ஒரு கூட்டம் நடப்பதும் வீட்டுக்குள் சட்டை டை கட்டிக் கொண்டு கீழே லுங்கி கட்டிக் கொண்டு அல்லது அண்டிராயருடன் மீட்டிங்கில் கலந்து கொள்வதும் இரு வேறு துருவங்கள்.
அந்த அலுவலக சூழலை இனி விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடிகள் பூர்த்தி செய்யும்.
நீங்கள் இதை அணிந்து கொண்டால் உங்களுடன் பேசுபவர்களும் இந்த கண்ணாடியை அணிந்து கொண்டால் நீங்கள் எல்லாம் ஒரே அறையில் அல்லது அலுவலகத்தில் இருப்பது போல செயற்கை காட்சிகள் உருவாக்கப்பட்டு உடனிருக்கும் ஆசாமிகளுடன் டேபிள் டேபிளாக நடந்து போய் பேசலாம். காபி அருந்தலாம்.
அப்படியே உங்களை இன்னொரு இடத்திற்கு மாயாஜாலம் போல பயணிக்க வைக்கும் இந்த வி.ஆர். கண்ணாடிகள்.
இது வெறும் ஜூம் மீட்டிங்குடன் நிற்காது இனி வருங்காலத்தில் திறந்த வெளிப் பல்கலைக் கழகங்கள் கூட கல்வித் துறையில் பெருமளவில் உபயோகப்படுத்தக் கூடும்.
செக்கஸ்லோவாக்கியா (தமிழ்ல எழுதறது எவ்வளவு சுலபமா இருக்கு )
பிராக் நகரில் போலீசுக்கு வந்த வித்தியாசமான புகார்.
“என்னுடைய துப்பாக்கியை மான் தூக்கிக் கொண்டு போய் விட்டது”
பிராக்கில் ஒரு காட்டுக்குள் வேட்டையாட போன ஒருவர் கொஞ்சம் அசந்திருந்த நேரத்தில் ஓடி வந்த மான் கூட்டத்தில் ஒரு பலே கெட்டிக்கார மான் ஒன்று அவரிடமிருந்த ரைஃபிலை கவ்விக் கொண்டு ஓடி விட்டது.
(பாவம் திருடிய மான் இதுவல்ல.. சும்மா. ஒரு படத்திற்காகத் தான்.)
நல்ல வேளையாக அதில் புல்லட் எதுவும் இல்லையாம். இருந்தாலும் மானுக்கு சுடத் தெரியுமா என்ன ??
அதை இன்னொரு வேட்டைக்காரர் கொஞ்ச தூரத்தில் பார்த்திருக்கிறார். என்னடா மான் துப்பாக்கியை கவ்விக் கொண்டு ஓடுகிறது என்று ஆச்சரியம் அவருக்கு
மொத்தத்தில் அந்த மானை கண்டு பிடிக்க முடியவேயில்லையாம்.
அது சாதா மான் இல்லை. மஹா புத்திமான். சூப்பர்டா கண்ணா !!!
ஆஸ்திரேலியா
மெல்போர்னில் சுரங்க நிறுவனங்கள் பாதுகாக்கப்பட்ட புனித இடங்களில் வெடி வைத்து தகர்த்தது அதிர்ச்சியை அளிக்கிறது என்று முதலீட்டாளர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
இரும்புத் தாதுக்காக வெடி வைத்து தகர்க்கப்பட்ட சுரங்கங்களில் சில பாதுகாக்கப்பட்ட இடங்களும் இருந்ததால் இந்த எதிர்ப்பு முதலீட்டாளர்களிடையே வலுத்துள்ளது.
சுரங்க நிறுவனங்கள் உலகம் முழுவதுமே இப்படிதான் இயங்குகின்றன.
பூமியை திருடி பூமியில் வாழத் தகுதியற்றவர்கள் தான் இப்போது பெருகிக் கிடக்கின்றனர்.
இதற்கு ஆஸ்திரேலியாவும் விதிவிலக்கில்லை போலும்.
நம்மூர்ல கண்ணுக்கு எதிரேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் மலை முழுங்கி மகாதேவன்கள்.
என்ன செய்ய முடியும் ?? சுரங்கங்கள் விஷயத்தில் உண்மையிலேயே பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்பது தெரிகிறது.
தென்னமரிக்கா
கொலம்பியா
பகோட்டா..
அதிபர் இவான் டுகேவின் மனைவி நாட்டின் முதல் பெண்மணி மரியா ஜூலியானா ரூயிஸ் க்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
(கொஞ்சம் சமந்தா சாயல் இருக்கோ ?)
இந்த சோதனையைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்.
உலகம் முழுவதும் பல தலைவர்களுக்கு கரோனா வந்து குணமாகவில்லையா ?? கொலம்பியா அதிபரின் மனைவி மேல் மட்டும் என்ன கரிசனம். பிரத்யேக செய்தி ??
மரியா ஜூலியானா ரூயிஸ் பார்க்க மூக்கும் முழியும் லக்ஷ்ணமாக இருப்பதால் தான் இந்த செய்தியை சொல்லியிருக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால் நான் என்ன செய்ய முடியும் ???
ஆசியா
பாகிஸ்தான்.
புது கூத்து.
இந்தியா பாகிஸ்தானைப் பற்றிய புகாரை ஐக்கிய நாடுகளுக்கு அளிக்க, புதிதாக பாகிஸ்தான் இந்தியாவைப் பற்றிய புகாரை அளித்திருக்கிறது.
இந்தியா பாகிஸ்தானுக்குள் தீவிரவாதத்தை வளர்க்கிறது. சமீபத்தில் நடக்கும் பாகிஸ்தான் தீவிரவாதங்களுக்கு இந்தியா தான் பொறுப்பு என்பது தான் அது.
பாகிஸ்தானின் முனீர் அக்ரம் இந்தியா தீவிரவாதத்தை வளர்ப்பதன் மூலம் சர்வதேச சட்டங்களை மீறிகிறது என்று புகார் அளித்திருக்கிறார்.
இந்தியாவின் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சகம் இதற்கு பதில் சொல்கையில் கூரை மீது நின்று கொண்டு பாகிஸ்தான் கதறினாலும், தீவிரவாதத்தின் மையமே பாகிஸ்தான் தான். என்ன பொய் சொன்னாலும் உலகம் கேட்கப் போவதில்லை என்று சொல்லியிருக்கிறார்.
பாகிஸ்தானுக்குள் தீவிரவாத கலவரங்களா என்று யோசித்தால் ஒரு வேளை கரோனா காலத்தில் உங்காட்கள் “வொர்க் ஃபரம் ஹோம்” பண்றாங்க போல என்று யாரேனும் முனீர் அக்ரத்திடம் சொல்ல வேண்டும்.
அனேகமாக தமிழக தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களிடமிருந்து , இந்த புகார் விஷயத்தில் இந்தியாவுக்கு கண்டனம் எழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மீண்டும் பாகிஸ்தான்.
சில வாரங்களுக்கு முன் காவண் என்ற யானை கம்போடியாவுக்கு அனுப்பபடும் செய்தியை பகிர்ந்திருந்தோம்.
இந்த வாரம் பயணம் செய்யவிருக்கும் காவணுக்கு பாகிஸ்தானில் பிரமாத வழியனுப்பு விழா நடந்து முடிந்தது.
கம்போடியாவிற்கு விமானத்தில் சுமார் பத்து மணி நேரம் பறந்து செல்லவிருக்கிறது காவண்.
அத்தாம் பெரிய யானை எப்படி விமானத்தில் பத்து மணி நேரம் தேமேயென்று உட்காந்திருக்குமா என்று என்னைப் போலவே நீங்களும் யோசிக்கலாம்.
அதற்காகவே அதற்கு சிறப்பு பயிற்சியெல்லாம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.
(காவண் சுவற்றில் தலையை இடித்துக் கொள்ளும் இந்த படம் வெளியாகித் தான் காவணுக்கு ஒரு விடிவுகாலம் பிறந்தது.. சமூக ஊடகத்தின் அபாரசக்தி)
தன்னுடைய தோழி சஹேலி இறந்ததிலிருந்து தனியாளாக நொந்து போயிருந்த காவணுக்கு கம்போடியா சரணாலயத்தில் தான் ஓய்வெடுக்கப் போகிறது.
நல்ல படியாக கம்போடியா வந்து சேருங்கள் காவண். காத்திருக்கிறோம்.
ஹாங்காங்
சென்ற வாரத்தில் ஒரு நாள்.
ஷாடின் என்ற இடத்திற்கு செல்லும் அதிவேக சாலையில் காரில் சென்று கொண்டிருக்கும் போது நடு ரோட்டில் குரங்கு படுத்திருப்பது போல தெரிந்தது.
அந்த வேகத்தில் கடந்து செல்லும் போது அருகே பார்த்தால் குரங்கே தான். நெடுஞ்சாலையில் யாரோ அடித்துப் போட்டு விட்டு போயிருக்கிறார்கள்.
அந்த பகுதியில் ஹாங்காங்கின் மலையோர காடுகள் இருப்பதால் ஏராளமான குரங்குகள் இருக்கும். ஆனால் நெடுஞ்சாலையில் வந்து அடிபடும் என்று இது வரை நான் கேள்விப்பட்டதேயில்லை.
ஒரு கணம் கண்கள் கலங்கி விட்டன. அதற்கு குரங்குகளின் மரணத்தைப் பற்றி படித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இயற்கையாக வயதாகி இறக்கும் குரங்குகளின் மரணத்தை யாரும் பார்க்க முடியாதாம்.
இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அதற்குத் தெரிந்துவிடுமாம்.
அன்றிலிருந்து அந்தக் குரங்கானது ஒரு பாதுகாப்பான இடத்தை தேர்ந்தெடுத்து உணவு, நீர் எதுவும் அருந்தாமல் அமைதியாக அமர்ந்துவிடுமாம். அதனுடைய முடிவு காலம் வந்தவுடன் பூமி பிளந்து கொள்ள, குரங்கு அதில் அமர்ந்து கொள்ளுமாம்.
பூமி மூடிக் கொள்ளும் என்கிறார்கள்.
அந்த ஒருவாரமும் அது தவம் செய்யுமாம்.
இந்த தகவலைப் பற்றி எண்ணுகிற போது மற்ற எல்லா அதிசயங்களையும் விட, அது ஒரே இடத்தில் ஒருவாரமாக அமர்ந்திருக்கும் என்பதே பேரதிசயமாகப்படுகிறது.
இது உண்மையா பொய்யா என்பது தெரியாது. விலங்கியலாளர்கள் யாரேனும் தெரிந்தால் சொல்லலாம்.
ஆனால் குரங்குகள் மனிதர்களைப் போலவே குடும்பத்தோடு வாழ்பவை.
அடுத்த முறை ஹாங்காங்கில் மலையேற்றத்தின் போது ஏதேனும் ஒரு குரங்கு கூட்டத்தை சந்திக்க நேரலாம்.
அதில் நெடுஞ்சாலையில் அடிபட்டு இறந்து போன குரங்கின் குடும்பத்தை எப்படி கண்டு பிடிப்பது ?
அப்படியே தெரிந்தாலும் வழி தவறி சாலையில் வந்த உங்க வீட்டு ஆள் இனி திரும்ப வரமாட்டார் என்பதை எப்படி சொல்வது ???
என்னுடைய நம்பிக்கையின் படி ஆஞ்சனேயா என்று உள்ளுக்குள் கண் மூடி ஒரு நிமிடம் கண்ணீருடன் வருந்துவதை தவிர வேறொன்றும் செய்வதறியேன் பராபரமே !!!
ராம்
Leave a comment
Upload