உடலை பொன்னாக்கும் பொன்னாங்கண்ணி கீரை....
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிட்டு வந்தால் உடல் பொன்னாகும் என்பது சித்தர்களின் வாக்கு. சித்தர்களின் வாக்குப்படி இந்தக் கீரையினை தொடர்ந்து உட்கொண்டால் மேனிக்கு பொன் போன்ற மினுமினுப்பையும், அழகையும் தரக்கூடியது. அதனால் தான் இதனை பொன்னாங்கண்ணி என்று கூறினார்கள். பெயரிலேயே பொன்னை வைத்திருக்கும் “பொன்னாங்கண்ணி”, தங்கத்தைவிட மதிப்புமிக்கது. இதனை ஏழைகளின் தங்க பஸ்பம் என்றே அழைக்கலாம்.
கீரையைப் போன்ற உணவு வேறு எதுவும் இல்லை, கீரையைப் போல் நோய் தீர்க்கும் வைத்தியனும் இல்லை என்றார்கள் சித்தர்கள். உன்னதமான கீரை வகைகள் நம் மண்ணில் விளைகின்றன. கீரை வகைகளிலேயே அதிக அளவு மருத்துவத் தன்மை கொண்டது பொன்னாங்கண்ணி கீரை.
பொண்ணாங்கண்ணியானது பண்டைய காலத்தில் இருந்து இந்திய நாட்டில் மிகவும் பயன்பாட்டில் உள்ள மருத்துவ குணம் கொண்ட கீரையாகும். பொன்னாங்கண்ணியை கீரையை தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பகலிலும் நிலவை பார்க்கலாம் என்பது பழமொழி. அந்த அளவிற்கு கண் பார்வை மிக துல்லியமாக தெரியம் என்கிறது சித்த மருத்துவம்.
பொன்னாங்கண்ணி பற்றி சித்தர் தேரையர் குணபாடம்:
“காசம் புகைச்சல் கருவிழிநோய் வாதமனல்
கூசும் பீலீகம் குதாங்குர நோய் பேசி வையால்
என்னாங் காணிப்படிவம் எமம் செப்ப லென்னைப்
பொன்னாங்கண்ணிக் கொடியைப் போற்று.”
கண்காசம், கருவிழி நோய், கண் புகைச்சல், வாதம், பித்தம், கூச்சமுண்டாக்கும் கோழை, வாயில் உண்டாகும் நோய்கள் போவதோடு பொன்னிறமான உடலையும் கொடுப்பதால் பொன்னாங்கண்ணியைப் போற்றியுண்ணல் வேண்டும் என்பது மேற் கூறிய பாடலின் பொருளாகும்.
கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படும் பொன்னாங்கண்ணிக் கீரை பலவித நோய்களை குணப்படுத்த உதவும் அற்புத உணவாகவும் மூலிகையாகவும் திகழ்கிறது.
பொன்னாங்கண்ணி கீரையை எவ்வகையிலாவது அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் மனிதர்கள் நூற்றாண்டு வாழ இயலும். ‘கண் பார்வை தெளிவு பெறும்’ என்று வள்ளல் பெருமான் ராமலிங்க சுவாமிகளும் பொன்னாங்கண்ணியைப் பற்றி கூறியுள்ளார்.
பொன்னாங்கண்ணி அல்லது பொன்னாங்காணி என்ற இக்கீரைக்கு கொடுப்பை, சீதை, சீதேவி என்னும் வேறு பெயர்களும் உண்டு.
பொன்னாங்கண்ணி கீரையின் வகைகள்:
பொன்னாங்கண்ணி கீரையில் சீமை பொன்னாங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி என்று இருவகை உண்டு. இதில் சீமை பொன்னாங்கண்ணி அழகுக்கு வளர்க்கப்படுகிறது. மருத்துவ குணம் குறைவு. பச்சையாக கிடைக்கும் நாட்டுப் பொன்னாங்கண்ணியில் தான் பலவித சத்துகள் நிறைந்துள்ளன. நாட்டு பொன்னாங்கண்ணி சிறந்த சுவை உள்ளதால் உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்தக் கீரை நீர்வளம் நிறைந்த எல்லா பகுதிகளில் படர்ந்து காணப்படும். வயல் வரப்புகளிலும், கிணற்று மேடுகளிலும், குளம் குட்டைகளில் கரைகளிலும், வாய்க்கால் கரைகளிலும் இயற்கையாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். இது சிறு செடி வகையைச் சேர்ந்தது. இலைகள் பச்சை அல்லது மஞ்சள் நிறத்தோடு காட்சியளிக்கும். எதிர் அடுக்குகளில் சற்று நீண்ட, சிறு இலைகளைக் கொண்டது. சாதாரணமாக கீரையின் காம்புகளை கிள்ளி வைத்தாலே எந்த சூழலிலும் வளரக்கூடிய கீரைதான்
பொன்னாங்கண்ணி கீரையின் அற்புதங்கள்:
பொன்னாங்கண்ணி கீரை மண்ணில் உள்ள பொன் சத்தை உறிஞ்சி நீரான நிலையில் தன்னுள் பெற்று இருக்கிறது. இக் கீரை எதிர்-ஆக்ஸிகரணி (ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ்) கூறுகள் நிறைந்த கற்ப மூலிகையாகும்.
பொன்னாங்கண்ணிக்கீரை குளிர்ச்சியை தரவல்லது. இதில் செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள், பல ஸ்டிரால்கள், அமிலங்கள் உள்ளன. சிட்ரோஸ்டிரால், சிட்சுமோஸ்டிரால், கெஃம்பெஸ்டிரால், ஓலியனோலிக் அமிலம், லுபியால் போன்றவை பொன்னாங்கண்ணி கீரையில் காணப்படுகின்றன.
100 கிராம் பொன்னாங்கண்ணி கீரையில் நீர்ச்சத்து - 80 கிராம், எரிசக்தி - 60 கலோரி, புரதச்சத்து - 4.7 கிராம், கொழுப்புச்சத்து - 0.8 கிராம், மாவுச்சத்து - 11.8 கிராம், நார்ச்சத்து - 2.1 கிராம், சுண்ணாம்புச்சத்து - 14.6 மி.கி. பொட்டாசியம் - 45 மி.கி அடங்கியுள்ளது.
புத்துணர்ச்சி வருவதற்கும், உடலுக்குச் சோகையை நீக்கி இரத்த உற்பத்தி செய்வதற்கும் தேவையான ‘கரோட்டீன்’ ஆகியனவும் அபரிமிதமாக உள்ளன. பலவித நோய்களையும் தீர்க்கும் இந்த ஒரே கீரை போதும் உங்கள் உடல் எடையை கூட்டவும், குறைக்கவும் முடியும். பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். பொன்னாங்கண்ணி கீரையை துவரம் பருப்பு, நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடைக்கூடும். பொன்னாங்கண்ணி கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால், உடல் வலிமை பெரும்.
பொன்னாங்கண்ணி கீரையின் மருத்துவ குணங்கள்:
பொன்னாங்கண்ணி கீரையை கூட்டாகவோ, பொரியலாகவோ சமைத்து சாப்பிடலாம். இந்தக் கீரையை பகலில் உண்பதுதான் நலன் தரும்.
பொன்னாங்கண்ணி கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய் துர்நாற்றம் போகும். இதயம் மற்றும் மூளை புத்துணர்வு பெறும்.
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிட மூலநோய் மற்றும் மண்ணீரல் நோய்கள் குணமாகும்.
சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு கசாயமாகவோ, உணவாகவோ பயன்படுத்தி வர நல்ல பலன் கிட்டும். சிறுநீரகத்தில் அதிகரிக்கும் யூரியா மற்றும் கிரியாட்டினின் அளவைக் கட்டுக்குள் வைக்கும்.
இக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டால் கண் எரிச்சல், கண் மங்கல், கண் கட்டி, கண்ணில் நீர்வடிதல், போன்ற கண் நோய்கள் குணமாகும். கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும். கண்களில் எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும். இவர்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சினை நீங்கும்.
தூக்கம் வராமல் அவதி படுபவர்கள் இந்த கீரையை சாப்பிட்டால் நன்கு துக்கம் வரும். மத்திய நரம்பு மண்டலத்தை சீர்செய்து அனைத்து விதமான நரம்பு பிரச்சனைகளையும் குணமாக்குகிறது. இந்த கீரை ஞாபக சக்தியை தூண்டக் கூடியது, எனவே படிக்கும் குழந்தைகளுக்கு தொடர்ந்து கொடுத்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
பொன்னாங்கண்ணி தாய்ப்பாலை பெருக்கக்கூடிய ஒன்று, பித்தப்பையை சீர் பெற இயங்கச் செய்யக் கூடியது.
ஆண்களின் மலட்டுத் தன்மையை போக்க கூடிய அற்புதமான மருந்தாக செயல் படுகிறது.
பொன்னாங்கண்ணிச்சாறு பாம்புக்கடி விஷத்தை முறிக்கும் தன்மை உடையது.
பொன்னாங்கண்ணியை மேற்பூச்சி மருந்தாப் பயன்படுத்தும்போது முகப் பருக்களும், கரும் புள்ளிகளும் மறைந்து முகமும் பொலிவுடன் திகழும்.
இக்கீரையின் சாறு எடுத்து நல்லெண்ணையுடன் சேர்ந்து தைலம் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வர கண் எரிச்சல், உடல் உஷ்ணம்- போன்றவைகள் நீங்கி உடல் குளிர்ச்சி பெறும்.
பொன்னாங்கண்ணி செடியை வீட்டில் வளர்க்கலாம்:
இதனை வீட்டின் தோட்டத்தில் இதை வளர்க்கலாம். பூந்தொட்டியில் கூட வளர்க்கலாம். பொன்னாங்கண்ணி கீரையின் தண்டுகளை கிள்ளி மண்ணில் ஊன்றி வைத்தாலே கீரை செடி நன்றாக வளர்ந்து விடும்.
அடுத்தவாரம் அரைக் கீரையைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்!!
Leave a comment
Upload